Towards a just, equitable, humane and sustainable society

ஏலேலோ ஐலசா

0
No votes yet
0
Post a comment

ஏலேலோ ஐலசா என்ற பாடத்தை மாணவர்கள் எளிமையாகக் கற்கும் வண்ணம் மாணவர்களில் முன்னறிவு, மொழிச்செயல்பாடுகள் மதிப்பீட்டுச் செயல்பாடுகள் போன்றவற்றை ஆசிரியர் தன் பாடத்திட்டத்தில் வடிவமைத்துள்ளார்.

திறன்கள்:

  • எளிய பாடல்களைப் பாடுதல்
  • சொற்களைத் தொடராக்கி எழுதவும், அதற்குரிய ஒலியுடன் வாசிக்கவும் செய்தல்
  • படங்களைப் பார்த்து அதிலுள்ள பொருட்களைப் பற்றிப் பேசுதல்

துணைக் கருவிகள்: சொல் பட அட்டைகள், எழுத்து அட்டைகள், பட அட்டைகள், கைப் பேசி, வானொலி, வண்ணம் தீட்டுவதற்கு ஏற்ற படங்கள்.

ஈடுபடுதல்: மாணவர்கள் கற்றலில் உற்சாகமாகப் பங்கேற்கும் விதமாக பல்வேறு பாடல்களை ஆசிரியர் பாடிக் காட்டி, மாணவர்களையும் பின்பற்றிப் பாடச் செய்தல்.

ஆராய்தல்:

பேச்சாற்றல் திறன் – ஆசிரியர் பல்வேறு பட அட்டைகளைக் காட்டி, அதிலுள்ள மரங்கள், விலங்குகள், பறவைகள், பொருள்களைப் பற்றிப் பேசச் செய்தல். படங்களைப் பார்த்து தங்கள் கற்பனைகளையும் சேர்த்து தங்கு தடையின்றிப் பேசுவதன் மூலம் பேச்சாற்றல் திறனை வளர்த்தல்.

கவனிக்கும் திறன் - மாணவர்கள் படங்களைப் பார்த்து அதிலுள்ள விலங்குகள், பறவைகள், மரங்கள் ஆகியவை பற்றிக் கதை கூறச் செய்தல். ஆசிரியரும் மாணவர்களுக்குச் சில கதைகளைக் கூறுதல். (எ.கா) முயலும் ஆமையும், வேடனும் புறாவும், ஆலமரமும் குருவியும்… மேலும், பறவைகள், விலங்குகள் பற்றிய பல்வேறு பாடல்களை ஆசிரியர் பாடிக் காட்டுதல். ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்கள் பாடுதல். (எ.கா) சிவப்புத் தக்காளி, எங்கள் வீட்டுப் பூனை… இவ்வாறு மாணவர்களுக்குத் தெரிந்த கதைகள், பாடல்கள் ஆகியவற்றைக் கூறச் செய்வதன் மூலம் வகுப்பறையில் கவனச்சிதறல் இல்லாமல் கவனிக்கும் திறன் வளரும்.

கொக்கரக்கோ சேவலே

கொண்டையாட்டும் சேவலே

நித்தம் என்னைக் காலையில்

நேரத்திலே எழுப்புவாய்

தூங்குகின்ற உலகையே

குரல் கொடுத்து எழுப்புவாய்

கொக்கரக்கோ சேவலே

வாழ்க உந்தன் சேவையே!

உற்றுநோக்கும் திறன் – ஆசிரியர் காட்டும் பட அட்டைகளை நன்கு உற்றுநோக்கி அதில் எ,ஏ,ஐ வரிசையில் தொடங்கும் பொருள்களின் பெயர்களைக் கண்டுபிடித்துக் கூறுவதன் மூலம் உற்றுநோக்கும் திறனை வளர்த்தல்

விளக்குதல்:

  • ‘ஏலேலோ ஐலசா’ என்ற இப்பாடலை ஆசிரியர் அதற்குரிய அங்க அசைவுகளுடனும் செய்கைகளுடனும் பாடிக் காட்டுதல்; மாணவர்கள் பின்பற்றிப் பாடுதல்.
  • மாணவர்களை இரு குழுக்களாகப் பிரித்து ஒரு குழு ஒரு அடியைப் பாட மற்றொரு குழு அடுத்த அடியைப் பாடக் கற்றுத் தருதல். இதற்கு ஆசிரியர் உதவி செய்தல். இவ்வாறு பலமுறை பயிற்சி செய்த பின்னர், தனித்தனியாக ஒரு அடியைப் பாட அடுத்த மாணவன் மற்றொரு அடியைப் பாடக் கற்றுத் தருதல்
  • சரியாகப் பாடாத மாணவர்களை இனம்கண்டு ஆசிரியர் அவர்களுக்கு மேலும் பலமுறை இப்பாடலைப் பொறுமையாகச் சொல்லித்தருதல் வேண்டும். கைப்பேசியில் இப்பாடலைப் பதிவுசெய்து திரும்பத் திரும்ப அவர்கள் கேட்குமாறு செய்ய வேண்டும். இப்பாடலைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருப்பதால் அனைத்து மாணவர்களின் மனதிலும் இப்பாடல் மிக ஆழமாகப் பதிந்து விடும்.

பாடலைக் கற்பிப்பது மட்டும் அல்லாது மேலும் சில செயல்பாடுகள் செய்து அவர்களின் மொழித்திறன்களை வளர்த்தல். அவை,

  • படங்கள் ஒட்டிய சொல் அட்டைகளை மாணவர்களிடம் கொடுத்து அவ்வட்டைகளில் உள்ள படங்களைப் பார்த்துப் பெயரினைக் கூறச்செய்தல். அவ்வட்டைகளில் எழுதப்பட்டுள்ள சொற்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துதல். அச்சொற்களை அதற்குரிய ஒலிநயத்துடன் வாசிக்கவும் கற்றுத் தருதல்.
  • தனித்தனியாக எழுதப்பட்ட எழுத்து அட்டைகளைக் கொடுத்து புதிய எழுத்துக்களை அறிமுகப்படுத்துதல். அவ்வெழுத்துக்களை அதற்குரிய வடிவத்துடன் எழுதுவதற்குப் பயிற்சி அளித்தல்.
  • எழுத்துக்கள் நன்கு அறிமுகமாகிய பிறகு அவ்வெழுத்துகளிலிருந்து புதிய சொற்களைக் கூறவும் பயிற்சியளித்தல்
  • சொற்றொடர் அட்டைகளை மாணவர்களிடம் கொடுத்து வாசிக்கக் கற்றுத் தருதல்

விரிவாக்குதல்:

 

  • தனித் தனியாக பல்வேறு சொற்கள் எழுதப்பட்டிருக்கும் சொல் அட்டையை மாணவர்களிடம் கொடுத்துப் படிக்கச் செய்தல்
  • ஒரு மாணவனிடம் ஒரு சொல் அட்டையைக் கொடுத்து வாசிக்கச் செய்தல். அச்சொல்லின் இறுதி எழுத்தைக் கரும்பலகையில் எழுதச் செய்தல்   
  • மற்றொரு மாணவனை அந்த இறுதி எழுத்தை முதலாவதாகக் கொண்டு தொடங்கும் புதிய சொல் அட்டையைக் கண்டுபிடித்து வாசிக்கச்செய்தல். இவ்வாறு வகுப்பறையில் உள்ள அனைத்து மாணவர்களையும் இதில் பங்கேற்கச் செய்தல்
  • காய்கறிகள், விதைகள், தானியங்கள் இவற்றைக் கொண்டு புதிய உருவங்களை உருவாக்கச் செய்தல். ஆசிரியர் கொடுக்கும் பட அட்டைகளைப் பெற்று அதற்கேற்ற பொருத்தமான வண்ணங்களைத் தீட்டி மகிழ்தல்.

மதிப்பீடு:

  1. ஏலேலோ என்ற பாடலைத் தனித்தனியாகவும் குழுவாகவும் பாடச் செய்தல்
  2. படங்களைப் பார்த்துப் பெயரினை எழுதுதல், சொல்வது எழுதுதல் பயிற்சி
  3. எழுத்து அட்டைகளை வரிசையாக அடுக்கிக் கூறும் பயிற்சி
  4. சொற்றொடர் அட்டைகளை வாசித்தல், எழுதுதல் பயிற்சி
  5. படங்களுக்குப் பொருத்தமான சொற்களையும், சொற்களுக்குப் பொருத்தமான படங்களையும் இணைக்கும் பயிற்சி

இச்செயல்பாடுகளின் வாயிலாக இப்பாட்த்திற்கான கற்றல் நோக்கங்களை மாணவர்கள் அடைவர் என்பது எனது எண்ணம்.   

Author: ரேவதி – அ. ஆ. தொ.ப., வில்லியனூர்

Subject: 
Tamil

Term: Term 3

0
No votes yet
0
Post a comment