Towards a just, equitable, humane and sustainable society

மொழிவிளையாட்டு

0
No votes yet
0
Post a comment

நாள் :                         9.5.2020

நோக்கம்:         மொழிவகுப்பில் மொழி விளையாட்டின்  உத்திகளும் அதன் பயன்களும்

கருத்துரையாளர்:  ரெ.சிவக்குமார், ஆசிரியர்,  ஊராட்சி ஒன்றியபள்ளி, வலையப்பட்டி,

                                    மதுரை.

கலந்துரையாடியவர்: அருண்பாண்டியன்

 

ஆசிரியர் சிவக்குமார் அவர்கள் மொழி விளையாட்டுகள் பற்றி ஆசிரியர்களுக்குச்  சில  உத்திகளைப் பரிந்துரை செய்தார். அதைப்பற்றி இங்கு  சுருக்கமாகக் காணலாம்.

விளையாட்டுக்கும் மொழிவிளையாட்டுக்கும் என்ன வித்தியாசம் எனில், விளையாட்டில் முறைப்படுத்தப்பட்ட (கிரிக்கெட், கால்பந்து) மற்றும் முறைப்படுத்தப்படாத (கிராமங்களில் சிறுவர்கள் விளையாடுவது) விளையாட்டு என இரண்டு உண்டு.  மொழி விளையாட்டு என்பது சற்று வேறுபட்டது. இது திறனடிப்படையில் மட்டுமல்லாது மொழி அறிவையும் வளர்ப்பது. இதனை மற்ற பாட வகுப்புகளுக்கும் பயன்படுத்தலாம்.

பரிந்துரைக்கப்பட்ட உத்திகள்:

  • குறுக்கெழுத்து
  • விடுகதைகள்
  • புதிர்கள்
  • சொல்வதை எழுதுதல்
  • சுடோகு
  • மணிகள் மற்றும் மணலைப் பயன்படுத்துதல்
  • வார்த்தை விளையாட்டு
  • பாட்டுக்குப் பாட்டு
  • செயல்முறை
  • ஊகித்தல்
  • சிரிப்புக் கேள்விகள்

 

 

சில உதாரணங்கள்

  • கரும்பலகையில் சில சொற்களை எழுதிப்போட்டு மாணவர்களைப் பார்க்கச்சொல்ல வேண்டும்.  ஒருசில விநாடிகள் கொடுக்கப்பட்டுப் பின் சில சொற்களை அழித்து விடவேண்டும். இப்போது மாணவர்களிடம் காணாமல் போட சொற்கள் எது என்று கேட்கவேண்டும். சில சொற்களில் உள்ள சில எழுத்துக்களை அழித்து விட்டு ஓடிப்போன எழுத்தைக்  கண்டுபிடி என்று சொல்லி நினைவூட்ட வேண்டும்.
  • லேசர் லைட்டைப் பயன்படுத்தி நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடம்  சொற்கள் அல்லது எழுத்துகள் மீது அடித்து அது என்ன சொல், எழுத்து என்று கேட்கலாம்.
  • கெ, கே, கொ, கோ வாசிக்கத் தெரியாத குழந்தைகளுக்குச்  சுடோகு  பயன்படுத்தி கற்றுக்கொடுக்கலாம்.
  • இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மணிகளையும், மணலையும் பயன்படுத்தி எழுதவைக்கலாம். வண்ண வண்ண மணிகளைக்கொடுத்து எழுத்து மாதிரி அடுக்கச்சொல்லலாம். அதனைப் புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு பின் அதனைக் குழந்தைகளிடம் காட்டிப் புரியவைக்கலாம். மணலில் வெறும் தண்ணீர் ஊற்றி எழுதும் பயிற்சியும் கொடுக்கலாம்.
  • சிறு குழந்தைகளுக்குச் சொற்கோபுரம் விளையாட்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பரசுராமன் அவர்களின் ‘மொழி விளையாட்டு’ புத்தகத்தில் இதைப் பற்றி நிறைய உதாரணங்கள் இருக்கும். அதனை எடுத்துப் பயன்படுத்தலாம்.
  • கேள்விகள் அமைக்க கற்றுக்கொடுக்க வேண்டும். உதாரணமாக -இராமன் வில்லை வளைத்தான் என்பதில் யார்? எதை? என்ன? என்பதுப் போன்ற கேள்விகளைக் கேட்டு ஊக்கப்படுத்தவேண்டும்
  • லட்டு, முட்டை, தேன் – இவற்றுடன் ‘ஐ’ சேர்த்துச்  சொல்லச் சொல்லலாம்.
  • மூன்று சொற்கள் கொடுத்து அதற்கு பொதுவான ஒரு சொல்லைக் கண்டுபிடிக்கச் சொல்லலாம். உதாரணம் – வட்டம். இரவு, வானம் – நிலா
  • மூன்று சொல் வாக்கியத்தைக் கொடுத்து ஒவ்வொரு சொல்லின் முதல் எழுத்தைச்சேர்ந்து ஒரு புதிய சொல் உருவாக்க வேண்டும். எ-கா  மாலா லட்டு தின்றாள் - மாலதி
  • நெடுங்கணக்கு வரிசைப்படி சொற்களை எழுத அல்லது சொல்ல பழகப்படுத்துதல்
  • இரண்டு சொல் வாக்கியத்தை எழுத சொல்லலாம். எ-கா, அதுவே வேண்டும், எங்கே கமலா, வாணி வந்தாள்.
  • ஒரு சொல்லிருந்து படிப்படியாக அதன் வர்ணனைகளை சேர்த்துக்கொண்டே செல்லுதல். எ-கா பூ, ஒரு பூ, ஒரு அழகான பூ, ஒரு அழகான சிவப்புப்பூ, ஒரு அழகான சிவப்பு வாசனைப்பூ ஒரு அழகான சிவப்பு வாசனை ரோஜாப்பூ..
  • வாசனை உடைய எழுத்து எது? – பூ, விலகி செல்லும் எழுத்து எது? – போ இப்படியும் விளையாடலாம்.
  • ஒரு சொல்லில் எத்தனை எழுத்து அடங்கி இருக்கிறது என்று கண்டுபிடிக்கச்சொல்லலாம். எ-கா கோவலன் – கோ, வ, ல, ன்
  • ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு குழந்தைகளிடம் அவரவர் பெயரை எழுதி ஒரு பெட்டிக்குள் போட்டுவிட வேண்டும். சோதிடம் பார்க்கும் கிளி போல் ஒரு குழந்தையை அழைத்து ஒரு சீட்டு எடுத்து இது யாருடைய பெயர் என்று கேட்டு வார்த்தைகளை ஓவியமாக கற்றுக்கொடுக்கலாம்.
  • வட்டமாக மாணவர்களை உட்கார சொல்லி ஒரு எழுத்திலிருந்து சொல்லை உருவாக்கிக்கொண்டே போகவேண்டும். அந்த சொல்லை முடியவிடக்கூடாது. எ-கா: ப ழ க் க மா கி ப் போ ன வ ர் க ளை க் கூ டனா ம்
  • ஒரு எழுத்து அல்லது ஒரு சொல்லைச் சொல்லி அதே எழுத்தில் பாடல் பாடவேண்டும்.
  • செயல்முறையாக குறிப்பிட்ட சில நாட்களில் செய்தித்தாளில் வந்த சினிமா விளம்பரங்களைச் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். பின் அதை மாணவர்களிடம் காட்டி இந்தப் படத்தின் பெயர் என்ன என்று கேட்பதன் மூலம் அவர்களின் நினைவாற்றலைப் பெருக்கலாம். மாணவர்களும் ஆர்வமாக பங்கேற்பர்.
  • தாயம், பரமபதம் மூலமாக எழுத்துகள், சொற்கள் விளையாட்டு விளையாடலாம். எதிர்சொல், பொருள் தருகவும் கற்றுக்கொடுக்கலாம். ஒளிச்சேர்க்கை, நிறமாலை போன்ற கடினமான சொற்களுக்கு அர்த்தங்களை கண்டுபிடிக்கும் வகையிலும் பயன்படுத்தலாம். தாயக்கட்டைகளை நம் நோக்கத்திற்கு ஏற்றாற்போல் தயார் செய்ய வேண்டும்.
  • ஒரு வெள்ளைத்தாளில் சோப்பைக்கொண்டு எழுத வேண்டும். பின் அதை மாணவர்களிடம் கொடுத்துத் தண்ணீரில் மூழ்கி எடுக்கச்சொல்லி அதில் என்ன தெரிகிறது படியுங்கள் என்று சொல்லலாம். குழந்தைகள் இதை மிகுந்த ஆர்வத்துடன் ஆசையாக கற்றுக்கொள்கிறோம் என்பதை தெரியாமலேயே கற்றுக்கொள்வர்.
  • கொஞ்சம் வளர்ந்த மாணவர்களுக்கு விடுகதை கேட்டு சிந்திக்கும் திறன் விளையாட்டை விளையாடலாம். சிறு பிள்ளைகளாக இருந்தால் எளிதான விடுகதைகளைச் சொல்லலாம். வீட்டில் தாத்தா பாட்டிகளிடம் கேட்டு வரச்சொல்லி வகுப்பில் மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டு விளையாடலாம்.
  • குறுக்கெழுத்துப்போட்டியில் எளிதான கேள்விகளுக்குப் பதில் சொல்லும் முறையில் அமைத்துக்கொடுக்கலாம்.
  • வாக்கியத்தைக் கண்டுபிடி விளையாட்டில் ஒரு சிறு கதையை அல்லது வாக்கியங்களை மாற்றிப்போட்டோ அல்லது சிறு சிறு துண்டுகளாகவோ கொடுத்து வரிசைப்படுத்தச் சொல்லலாம்.
  • வீட்டிலுள்ள பொருட்களின் பெயர்களை எழுதிவரச்சொல்ல வேண்டும். பின் அவரவர் எழுதி கொண்டுவந்ததை வகுப்பில் உள்ள மேசைமீது வைத்துவிட வேண்டும். அதை ஆசிரியர் ஒரு துணிப்போட்டு மூடிவிடுவார். பின் ஒரு மாணவரை அழைத்து நீ என்னென்ன பொருள்கள் பெயரை எழுதி வந்தாயோ அதை கரும்பலகையில் எழுது என்று சொல்லி எழுதவைத்து தவறுகளைக் கற்றுக்கொடுக்கலாம். இதை குழந்தைகள் ரசித்து விளையாடுவர்.
  • வகுப்பில் நிறைய டப்பாக்களை மளிகை சாமான் பொருட்களின் பெயர்களை எழுதி வைத்துவிடவேண்டும். பின் அதன் பெயரைச் சொல்லி மாணவர்களை எடுத்துவரச்சொல்லி எழுதவும் படிக்கவும் ஊக்கப்படுத்தலாம்.
  • நூலகத்திற்கு அழைத்துச்சென்று முதலில் புத்தகங்களைக் கொடுத்துப் படிக்கச்சொல்லாமல் , வாங்க நூலகத்தை அழகாக அடுக்கிவைப்போம் என்று சொல்லி பெரிய, சிறிய, படக்கதை, அறிவியல், தமிழ், ஆங்கில, விளையாட்டு..என புத்தகங்களைப் பிரிக்கச்சொல்லி அடுக்கும்போது அதன் பெயரைச்சொல்லி எடுக்கச்சொல்லுதல். இப்போது அந்தப் புத்தகத்தைத் தேடுவதன் மூலம் படிக்க முயற்சி மேற்கொள்வர். இதனால், புத்தகங்களில் பல வகையுண்டு என்பதையும் அறிந்து கொள்வர்.
  • அம்மா, அப்பா, அத்தை – இதில் யார் ஆண்? தண்ணீரில் வாழாதது எது? ஆண் உடை எது? பெண் உடை எது? – போன்ற சிரிப்புக் கேள்விகளைக் கேட்கலாம்.
  • வடைசுடுவதை போட்டுக்காட்ட வேண்டும். பின் நான்கு வார்த்தைகள் சொல்லி இதில் எது இந்தச் செயலுக்குப் பொருத்தமானது என்றும், விடுகதையாகவும் கேட்கலாம்.
  • செய்தித்தாளில் யாருக்கு என்ன பிடிக்கிறதோ அதை படிக்கலாம். அவரவருக்குப் பிடித்ததைப்  படித்து முடித்தப்பின் அதை ஒரு தாளில் எழுத வேண்டும். பின் எழுதிய செய்தியை ஒரு பெரிய பலூனில் ஒட்டவேண்டும். எல்லோரும் ஒட்டியபின் ஒருவரை அழைத்து அவர் எழுதியதைக் கண்டுபிடித்துப் படிக்கச்சொல்ல வேண்டும். இதனால், அவர்கள் தேடும்போது அனைத்துச் செய்திகளையும் தங்கள் கண்களால் தேடி படித்துத் தனது செய்தியைக் கண்டுபிடிப்பர். வாசிக்க வைக்க இது ஒரு சிறந்த வழிமுறையாகும்.
  • கேரளா.இராஜேந்திரனின் ‘தாமரை புறா’ புத்தகத்தில் நிறைய விளையாட்டுகள் இருக்கும். இதனையும் பயன்படுத்தலாம்.
  • கதைப் புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
  • நான், நாங்கள், அவன், அவள், அது, அவை போன்ற சொற்களுக்கு விளக்கம் அளிக்க நான் இன்று படித்தேன், நாங்கள் இன்று படித்தோம், அவன் இன்று படித்தான், அவள் இன்று படித்தாள், அது படித்தது, அவைகள் படித்தன என்பன போன்ற வாக்கியங்களை உருவாக்க கற்றுக்கொடுக்க வேண்டும். இதையே இன்று என்பதற்குப் பதிலாக நாளை / நேற்று என மாற்றியும் எழுதச் சொல்லலாம். இவ்வாறு ஒவ்வொரு நாளும் குழந்தைகளுக்கு 30 வார்த்தைகள் சொல்லிக்கொடுக்கலாம்.

 

ஆசிரியர் கேள்விகளும் பதில்களும்:

  1. குழந்தைகள் தேவையில்லாமல் துணைக்கால் சேர்த்தோ, நீக்கியோ படிப்பதை எப்படி மாற்றுவது? 

வாய்விட்டு படிக்கும் வாய்ப்புகளை நிறைய உண்டாக்க வேண்டும்.

  1. குறில் நெடில் பிரச்சனையை எப்படி தீர்ப்பது?

பத்மா பாடம் படித்தாள், சொக்கன் சோறு தின்றான், கெட்டவன் கேணியில் விழுந்தான், ஓடியது நரி ஒரு பூ பறி, அம்மா இலை ஈரமான தலை – போன்று எதை வேறுபடுத்த வேண்டும் என்று நினைக்கிறோமே அதற்கு இம்மாதிரி சொற்கள் விளையாட்டை விளையாடி கற்றுக்கொடுக்கலாம்.

 

  1. தங்கள் ஆசிரியர் அனுபவத்தில் சுவாரசியமான அல்லது இடர்பாடான விஷயங்கள் ஏதாவது இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

தாவரங்கள் தாம் தயாரித்ததை தாங்களே உணவாக உட்கொள்கின்றன என்பதை வகுப்பில் ஒருமுறை கூறியபோது பப்பாளி மரத்தின் பழத்தை காக்கா, குருவிகள் தான் உண்ணுகின்றன. அந்த மரமே சாப்பிடுவதில்லையே என்று ஒரு மாணவர் வினவினார். அப்போதுதான் தாவரங்களின் உணவு என்றால் என்ன என்பதைப்பற்றி தேட ஆரம்பித்தேன்.

 

மனுநீதி சோழன் ஒரு பசுவிற்கு நீதி வழங்குவதற்காக தன் மகனைக் தேர்க்காலில் இட்டு கொன்றான் என்று பாடத்தை நடத்திவிட்டு மாணவர்களிடம் நீங்கள் மனுநீதி சோழனாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என்று கேட்டேன். அதற்கு மாணவர்கள். உங்கள் மகன் இவ்வாறு ஒரு கன்றை கொன்றால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று சொல்லுங்கள் என்றனர். இம்மாதிரி பேய் இருக்கிறதா இல்லையா, கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று நிறைய கேள்விகள் கேட்பார்கள். அதில் பதிலைத்தேடித் தேடித்தான் சொல்லுவேன்.

 

  1. எழுத்துகள் மாணவர்களுக்கு நன்குத் தெரிகிறது. ஆனால் சொந்தமாக எழுதும்போது நிறைய தவறுகள் செய்கின்றனர். இதற்கு சொல்வதெழுதுதல் தவிர வேறு ஏதேனும் வழி இருக்கிறதா?

 

கதை எழுதச்சொல்லலாம். அந்தக் கதையில் வரும் முக்கிய சில பாத்திரங்களை ஆசிரியர் கரும்பலகையில் தப்புத் தப்பாக எழுத வேண்டும். இதைப் பார்த்த குழந்தைகள் சார் இது தப்பு, இது வராது என்று கூறுவர். அப்போது நம்மை நாம் திருத்திக்கொள்வதுப்போல் விளையாட்டு விளையாட வேண்டும். இந்த வாய்ப்பைப் பலமுறை செய்ய வேண்டும். இதிலிருந்து கேட்டு, கவனித்துப், பார்த்து எழுத எளிதாக கற்றுக்கொள்வர். இப்படி தினமும் அவர்கள் செய்யும் வீட்டு செயல்களை எழுதச்சொல்லலாம். டைரி எழுதும் பழக்கத்தை ஊக்கப்படுத்தலாம். வினையடி மட்டும் வைத்துக்கொண்டு சொற்களை உருவாக்கக் கற்றுக்கொடுக்கலாம். உதாரணமாக வா- வந்தார், வந்தாள், வந்தனர், வந்தது, வருவார்..என எழுத வைக்கலாம்.

குறிப்பு: இவ்விளையாட்டுகளில் பெரும்பாலானவை இராஜேந்திரன் தாமரபுறா, கோகிலா தங்கசாமி, பேரா.பரசுராமன் ஆகியோரின் மொழி விளையாட்டுக்கான புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவை.

முகநூல் பக்கம்: https://www.facebook.com/rajendran.thamarapura

Grade: 
Pre-Primary, 1, 2, 3, 4, 5

Term: Term 1

Subject: 
English, Tamil

0
No votes yet
0
Post a comment