Towards a just, equitable, humane and sustainable society

நம்மைச் சுற்றிப் பறவைகள்

0
No votes yet
0
Post a comment

ஜீன் மாதம் 5 ஆம் தேதி “நம்மைச் சுற்றிப் பறவைகள்” என்பதைப் பற்றி கதை கூறலாம் வாங்க என்ற தலைப்பில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. அந்த உரையாடலைப் பற்றி தான் நான் இங்கு கூறப்போகின்றேன். இந்தத் தலைப்புக்கும் கதை நடந்த தேதிக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா? இருக்கும் என்று தான் நினைக்கின்றேன். அன்று தான் உலகச் சுற்றுச்சூழல் தினமாம்.

“சுற்றுச்சூழலுக்கும் பறவைக்கும் என்னங்க தொடர்பு?” என்று கேட்டால், “இது என்னங்க கேள்வி? உலகமே பல்லுயிர்களின் தொகுப்புத் தானே? மனிதன் மட்டும் வாழுமிடமா இந்தப் பூமி? அப்படி வாழத்தான் முடியுமா? முடியாதில்ல. வெறுமனே ஸ்டேடஸ் போடறுதும், பேஸ்புக்கில் லைக் போடறதோட நம்முடைய அந்த நாளுக்கான கடமை முடிஞ்சுவிடுகிறதா என்ன?” என்ற வினாவோட கதையை அசை போட தொடங்குகிறார் தொகுப்பாளர்.

சமூகத்தின் மேலும், இயற்கையின் மேலும் அக்கறைக் கொண்டவர்களுள் இவரும் ஒருவர் என்று நினைக்கிறேன். இவர் நம்மிடையே மண்ணில் விதைகளைத் தூவுவதுபோல் சிந்தனைகளைத் தூண்டும் கேள்விகளைத் தூவுகிறார். இவைகளைச் செடியாக மாற்றுவதும் விதையாகவே மண்ணில் புதைப்பதும் நமது கையில் தான் இருக்கிறது?

தற்போது இவைகளைப் பற்றி யோசிக்க வேண்டிய தருணமும் கூட. ஒற்றை வைரசால் வீட்டில் அடைபட்டு இருப்பது மனிதர்களின் உடல் மட்டும்தானே? மனம் இல்லையே! அதனால், கதை கேட்ட எனக்கு, ‘கொஞ்சம் சிந்திக்கலாமே!’ என்று
தோன்றியது.

அவர் விதைத்த விதைகள் இவைகள் தான்

  • எதற்காக இந்தத் தினம்?
  • நம்மைச்சுற்றி என்னென்ன உயிர்கள் இருக்கின்றது?
  • பல்லுயிரிகளில், ஒன்றான புல்லினங்கள் பற்றி நமக்கு என்னவெல்லாம் தெரியும்? அவைகளின் குணங்கள் என்னென்ன? நமக்கு அவைகளால் ஏற்படும் நன்மைகள் யாவை?

இப்படி நிறைய கேள்விகளைக் கேட்டார். பதில் சொல்லாமல் கேள்வி மட்டும் கேட்டா எப்படி? என்று கேட்டால், பதிலை நீங்கள் தேடுங்கள் என்கிறார். அது நமக்குக் கஷ்டம்தான்.

வேகமாக சுற்றிய இந்த உலகத்தில் கொரோனா ஒரு ‘பாஸ்’(Pause) கொடுத்தமாதிரி இப்போது இருக்கிறது. இந்தக் காலக்கட்டத்திலாவது இவைகளைப்பற்றி யோசிக்க வேண்டும்.

இத்தனை ஆண்டுகள் வாழ்ந்துவிட்டோம். ஆனால், பறவைகள் பற்றி அப்படி ஒன்றும் தெரியாதே என யோசிக்கின்ற தருணத்தில், பறவைகளைப் பற்றி அறிந்த, அவைகளை நேசிக்கும் நபரான மற்றொருவர் கதைக்குள் நுழைகிறார்.

பறவைகளின் உடல், அமைப்பு, அசைவுகள், உணவுமுறை, வாழிடம், எழுப்பும் ஒலிகள் பற்றி தெரியுமா? என்று கேட்கும்போது, ‘பறவைகளைப் பற்றி இவ்வளவு இருக்கான்னு’ ஆச்சரியமாக இருக்கிறது.

இந்தக் கதைக்கூறலில் கிட்டத்தட்ட 30 பறவைகள் பற்றிய தகவல்களை ஸ்கீரீன்பிளேவாக (screenplay) காட்டியது கூகுள் கேமரா (Google camera).

முதலில் காது கொடுத்துப் பறவைகளின் ஒலிகளைக் கேளுங்கள். அப்புறம் அது என்ன பறவை என்று பாருங்கள், என்கிற மாதிரி நகர்கிறது இக்கதை. பறவைகளின் ஒலிகளைக் கொண்டு அவைகளுக்கு அறிமுகமும் அளிக்கப்பட்டது. இச்செயல் கதை கேட்பவர்களின் கவனம் சிதறாமலும் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் இருந்தது. இச்செயலில் ஒரு சில பங்கேற்பாளர்கள் பறவைகளின் சத்தங்களைக் கேட்டு ‘அது என்ன பறவையாக இருக்கும்’ என ஊகித்துக் தகவல்களை பலகையில்
பரிமாறிக்கொண்டனர். இது ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இருந்தது.

பறவையைக் காட்டாமல் வெறும் ஒலிகளை மட்டும் எழுப்பி ‘இது என்ன பறவை என்று கண்டுபிடியுங்கள்?’ என்று சொல்லும்போது, அவரவருக்கு தெரிந்த பறவைகளின் பெயர்களைக் கூறினோம். பெரும்பாலான பறவைகளின் பெயர்கள் அவற்றிற்கு பொருத்தமாக இல்லை அல்லது கண்டுபிடிக்கவே முடியவில்லை. ‘என்னடா இது எல்லா ஒலியும் ஒரே மாதிரியா தான் இருக்கிறது, நாம் நினைத்துபோல கண்டுபிடிக்க முடியவில்லையே!’ என்று உணர்ந்தோம். ‘பறவைகள் எழுப்பும் ஒலிகளை இன்னும் கொஞ்சம் கவனிக்க வேண்டுமோ’ என்று மேலும் தோன்றியது.

இயற்கையின் படைப்பில் ஒவ்வொன்றும் தனித்துவம் வாய்ந்தவையே.

  • உருவத்தில் சிறிய தையல்சிட்டு எங்குச் சென்று தையல்பயிற்சியைப் பணம் செலவு செய்யாமல் கற்றதோ?
  • மிமிக்கிரி வகுப்புப் போகாமல் தன் கூட்டைக் காக்க எப்படி 13-க்கும் மேற்பட்ட ஒலிகளை இந்த இரட்டைவால் குருவி எழுப்புகிறதோ? அப்பா அம்மா என்றால் சும்மாவா? ஆனால், இவை என்னைப்போல் சேம்பேறியாம். நம்மைப்போல
  • அங்கேயும் ஒரு ஆள் இருக்கான்....பலே.
  • நமது தேசியப்பறவையான மயிலை Peacock (அ) Peahen என்று எண்ணி இருக்கிறோம். ஆனால், இந்த இரண்டும் இல்லையாம். Peafowl என்று தான் பொதுவாக அழைக்கவேண்டுமாம். Peacock என்பது ஆண், Peahen என்பது
  • பெண்ணாம். இது தெரியாம இருக்கோமே இத்தனை நாளா? எதுக்கு வம்பு ‘மயில்’னு தமிழ்ல சொல்லிடுவோம்.
  • சிட்டுக்குருவியிடம் வண்ண மாற்றங்களைக் கொண்டே ஆண் பெண் பாலின வேறுபாட்டை அறிந்து கொள்ளலாமாம். சாம்பல் மார்பகம் கொண்டது பெண் இனமாம்.
  • பறவைகள் ஒலி எழுப்பும் தெரியும். தொனதொனனு பேசுமா? பேசுமாமே நம்ம தவிட்டுக்குருவி. ஆச்சரியமா இருக்கு. அதனால தான் ஆங்கிலத்தில் Babblerனு சொல்றாங்களாம்.
  • “நான் தேன் தான் விரும்பிச் சாப்பிடுவேன்! பூக்கள் இருப்பது தான் நான் இருக்கும் இடம்” என்று சொல்கிறது இந்தத் தேன்சிட்டு.
  • கழுகும் கரும்பருந்தும் தோற்றத்தில் நம்மைக் குழப்பினாலும், கரும்பருந்தின் ‘வி’ வடிவ வாலால் அதனை அடையாளம் காண முடியுமாம். நம் குப்பையைக் கிளறும் துப்பறிவாளனாம் இவன்.
  • என்ன பிராமினி கைட்டா(Brahminy Kite)? எங்கடா வந்தது இந்தச் சாதி பறவைகளிடமும், செம்பருந்தைத்தான் அப்படி அழைக்கிறார்கள். மனிதத்தை மறக்கச் செய்யும் சாதி வேண்டாம் பறவைகளிடம்.
  • பறவைகள் இனத்திலும் ஆள்காட்டி உண்டாம். இந்தச் செம்மூக்கு ஆள்காட்டி, மற்றவர்களின் நடமாட்டத்தைச் சத்தம் போட்டே தம் இனத்தை எச்சரிக்கை செய்து விடுமாம். என்ன ஒரு புத்திசாலித்தனம்?
  • ஒற்றுமைக்கு உதாரணமாம் காகம். மற்ற பறவைகளைக் வம்புக்கு இழுக்குமாம் (Bullying).

அப்பாடா, இவ்வளவு விஷயங்களான்னு ஆச்சரியத்தோடா பார்த்துக் கிட்டு இருக்கறப்போ, “அது சரி இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டீங்க அடுத்தக் கட்டம் என்ன?” என்று கேட்கும்போது என் மையிண்ட் வாஸ், “நேரம் ஆகிடுச்சு, போய் டீ சாப்பிட வேண்டியது தான்னு” சொல்றப்ப, அவரோ “நமக்குத் தெரிந்த தகவல்களை அடுத்தச் சந்ததினருக்குச் சொல்ல வேண்டும்” என்று சொல்கிறார். யோசிக்க வேண்டிய விஷயம்தான்.

அதுதான் சரி, அதுதானே கடமையும் கூட.. பறவைகளின் தகவல்களைக் கற்றவர்களுக்குக் குறிப்பாகக் குழந்தைகளுக்கு அறியச் செய்வதும், அதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதும் நமது கடமை தானே?

இது தொடர்பான ஆர்வத்தைத் தூண்டுவதே அதற்கான முதல்படி என நான் நினைக்கிறேன். அதை முதலில் நான் என்னில் இருந்தே தொடங்கலாம் என முடிவு எடுத்தேன். இறுதியாக படக்கத முடிந்தது. என் சிந்தனை, பறவைகளை அறிய ரசிக்க
ஆரம்பமானது. இக்கதைக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி.

Grade: 
3

Subject: 
EVS

Term: Term 1

0
No votes yet
0
Post a comment