Towards a just, equitable, humane and sustainable society

எனக்கு இறக்கைகள் முளைத்தால்

எனக்கு இறக்கைகள் முளைத்தால்

வகுப்பு 5, பாடம் – 2 தமிழ், சமச்சீர் கல்வி

சு.கவிதா,வா.வீரப்பன்,ரா.கார்த்திகேயன்,நல்.கருணாநிதி

நோக்கம்:

  • குறித்த தலைப்பில் பேசுதல்
  • அகர முதலியைப் பயன்படுத்துதல்
  • கற்பனைத் திறன் வளர்த்தல்
  • இயற்கை வளங்களைப் பாதுகாத்தல்

 

 ஈடுபடுதல் :

  • ஒரு அட்டைப்பெட்டியில் ஆசிரியர்  ஆறு, குளம், பட்டாசு, காற்று, உனக்குப் பிடித்த வாகனம், ஒலிபெருக்கி  என சிறுசிறு குறிப்புகளை எழுதி வைக்க வேண்டும். வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும் தாங்கள் எடுத்த குறிப்பைப் பற்றிப் பேசலாம் அல்லது நடிக்கலாம்.

சொல் விளையாட்டு:

            மாணவர்களை நான்கு குழுக்களாகப் பிரித்தல். ஒவ்வொரு குழுவிற்கும் (சூரியன், கரும்பு, செங்கல், குதிரை, பதர்,  திணை) என்ற சொற்களைக்  கொடுத்து அகரமுதலியைப் பயன்படுத்தி சொல்பொருள் கண்டறியச் செய்தல். முதலில் கண்டுபிடிக்கும் குழு வெற்றி பெற்றவராவர்.

  • வகுப்பறையில்/, வீட்டுப்பாடமாக ஆசிரியர் பழைய செய்தித்தாள்களை மாணவர்களுக்கு வழங்கி அதிலுள்ள சுற்றுச்சூழல் பற்றிய செய்திகளைத் தேடி கண்டுபிடிக்கச் செய்தல்.அவர்கள் கண்டுபிடித்த செய்திகளை வகுப்பறையில் வாசிக்கச் செய்து உரையாடி பாடத்துடன் தொடர்புப் படுத்துதல். 

மேற்கண்ட செயல்பாடுகளை ஆசிரியர் பாட நோக்கோடு பொறுத்திச் செயல்படுத்தும்பொழுது கற்றலை நோக்கிப் பயணிக்க உதவியாக இருக்கும். முதல் செயல்பாட்டில் மாணவர்களின் கருத்துக்கள் பாடப்பொருளுடன் இணைந்து இருக்கும்படியும், ஒரு மாணவர் கூறியதையே மற்றவர்கள் திரும்பக் கூறாமலிருக்கும் வகையில் கவனமாக இருத்தல் நல்லது. அதேபோல அகரமுதலியின் பொருளறியும் பணியில் ஈடுபடும்பொழுது, ஒரு வார்த்தைக்கான பல பொருளை எழுதவும், வெவ்வேறு வார்த்தைகளைக் கண்டுபிடித்து உருவாக்கவும் உதவ வேண்டும். கடல் என்ற வார்த்தைக்கு 200 தமிழ் அர்த்தங்கள் இருப்பது போன்ற தகவல்களைக் குறிப்பிடலாம். செய்தித்தாளில் அவர்கள் கண்டுபிடித்து வாசித்ததை அடுத்த நிலையில் தொடர்புப்படுத்தும்பொழுது ஏற்புடையதாக இருக்கும்.

ஆராய்தல்:

            மாணவர்களை மூன்று குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவிற்கும் ஒவ்வொரு படத்தைக் கொடுத்து, குழுவில் கலந்துரையாடச் செய்தல். நாம் தேர்ந்தெடுக்கும் படம் கீழ்காணும் காட்சியுடன் இருத்தல் வேண்டும்.  

 1:  நீர் மாசுபடுதல் (குளம்/ ஆறு) ,  குழு-2: ஒலி மாசுபடுதல் (திருவிழா)   குழு-3:  காற்று மாசுபாடு, (நகரம்)

  • நீர் மாசுபடுதல் (குளம்/ ஆறு): குளத்தைச் சுற்றிலும் நெகிழிப் பைகள், நெகிழிப் புட்டிகள் கலந்த குப்பை மேடு, வெட்டப்பட்ட மொட்டையான மரங்கள் கழிவுநீர் குளத்தில் கலப்பது. ஆறு: சாக்கடையாக, மாசுபட்ட, வேதிக்கழிவுகள் மற்றும் சாயப்பட்டறை கழிவுகள் கலந்தது போன்ற ஆறாக இருத்தல்.
  •  காற்று மாசுபடுதல் (நகரம்):தொழிற்சாலைப் புகை காற்றில் கலப்பது, வாகனங்கள் வெளிவிடும் புகையால்  நச்சுக் கலத்தல் 
  • ஒலி மாசுபடுதல் :கோவில்திருவிழா, கல்யான ஊர்வலம், பட்டாசு வெடிச்சத்தம், வாகனங்கள் எழுப்பும் ஒலி …

கீழ்கண்ட வினாக்களை படத்துடன் அளித்து கலந்துரையாடச் செய்தல் .

1.படத்தில் நீங்கள் பார்ப்பது என்ன?

2.இந்த சூழல் சீர்கேட்டிற்கு எவையெல்லாம் காரணமாக இருக்கிறது?

3. இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள்/ நோய்கள் என்னென்ன?

4.இதனை சரி செய்ய நாம் என்னென்ன செய்யலாம்?

குழு- 1 : குளம்/ ஆறு ,  குழு-2: ஒலி மாசுபாடு ,  குழு-3: நகரம் காற்று மாசுபாடு.

மாணவர்கள் கலந்துரையாடி கண்டுபிடித்த தகவல்களை தெளிவாக பகிர்ந்துகொள்ள உதவ வேண்டும். அன்றாட வாழ்வில், வாழும் பகுதியில் பரவிவரும் மாசு பாடுகளை மாணவர்கள் உற்று நோக்கவும் அவற்றைப் பற்றி கலந்துரையாடிய கருத்துக்களை முன்வைக்கவும் ஆசிரியர் உதவ வேண்டும். இவ்வுரையாடல் விளக்குதல் பகுதியோடு இணைக்கப்படவும் வேண்டும்.

விளக்குதல்: 

குழு-1: குளம் அல்லது ஆறு

குளத்தின் தோற்றம் பற்றி விவரித்தல்.குளம் மாசடைய காரணங்களை விவரித்தல்.மாசற்ற குளத்தின் நன்மைகளை எடுத்துரைத்தல் நெகிழி மேலாண்மை./ ஆற்றின் தோற்றம் பற்றி விவரித்தல்./ ஆறு மாசடைய காரணங்களை விவரித்தல் , தூய்மையான ஆற்றின் நன்மைகளை எடுத்துரைத்தல்.

  • குழு 2: ஓலிமாசுபடுதல் ஒலிமாசுபாட்டிற்கான காரணங்கள் மற்றும் அவற்றைத் தவிர்க்கும் முறை பற்றி எடுத்துரைத்தல். இவை அவர்கள் வாழும் பகுதி சார்ந்த அனுபவத்தைக் குறித்தும இருந்தால் நல்லது.
  • குழு-3: காற்று மாசுபடுதல்: நகரத்தின் தோற்றம் பற்றி விவரித்தல். காற்று மாசடைய காரணங்களை விவரித்தல். வாகணம், தொழிற்சாலைப் புகை என குறிப்பிட்ட விஷயத்தை முன் வைத்தும் பேசலாம் தூய்மையான காற்றின் நன்மைகளை எடுத்துரைத்தல்.
  •  ஒவ்வொரு குழுவிலுள்ள மாணவர்களும் இரண்டு அல்லது மூன்று கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும். இதில் குழுவிலுள்ள அனைத்து மாணவர்களும் பங்கேற்கும் வகையில் ஆசிரியர் வழி நடத்த வேண்டும். மாணவர்கள் விட்ட கருத்துக்களை எடுத்துக் கூறுவதோடு தொகுத்தளிக்க வேண்டும்.
  • ஆசிரியர் பாடப் பகுதியைப் படிக்க மாணவர்கள், புத்தகத்தில் விரல் வைத்து கவனிப்பர்.
  • இப்பாடப் பகுதியை குழுக்களுக்கு பிரித்துக் கொடுத்து வாசிக்கச் செய்தல். ஒவ்வொரு மாணவரும் வாசிக்கும்பொழுது தனக்குப் புதிய வார்த்தைகளாகத் தோன்றுவதை அடிக்கோடிட வேண்டும். அகரமுதலியைப் பயன்படுத்தி புதிய சொற்களுக்கு பொருள் தேடச்செய்தல். அவற்றை வரிசையாக குறிப்பேட்டில் எழுதுதல். எழுதியதை அனைவர் முன்னிலையிலும் ஒவ்வொருவரும் பகிர்ந்து கொள்வர்.
  • மாணவர்கள் முழுப் பாடப் பகுதியை தனித்தனியாகவும் பொதுவிலும் வாசிக்க வேண்டும்.  இருவர் கொண்ட குழுவாகவும் படிக்க வைக்கும்பொழுது மெதுவாக வாசிக்கும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். வாசிப்புத்திறன் குறைபாடுடைய குழந்தைகளின் வாசிப்பில் அக்கறை கொண்டு அதை முன்னேற்ற வாசிப்பு நுட்பங்களைக் கையாளுதல் நல்லது.

 

விரிவுபடுத்துதல்:

  1. மாணவர்களைக் கொண்டு சுற்றுச் சூழல் பற்றிய நாடகம்  மற்றும் பாடல்கள் தயாரித்து வகுப்பறை/ பள்ளிக் காலைச் சபை/ பெற்றோர் ஆசிரியர் கலந்துரையாடல்/ ஊர்ப் பொதுவெளி என தேர்ந்தெடுத்த இடங்களில் அரங்கேற்றச் செய்து  அதன் முடிவில் பள்ளியில்/ தெருவில்/ வீட்டில்  மரக்கன்றுகள் நடுவதற்கு  ஏற்பாடு செய்தல்.

 

  1. பள்ளியில் உள்ள  பசுமை இயக்கத்தின் செயல்பாடாக மாணவர்கள் பள்ளி வளாகத்தைத் தூய்மையாக வைத்திருக்க ஏற்பாடு செய்தல். தங்கள் பகுதியிலுள்ள சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வெவ்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுதல் இவர்களே சுத்தப் படுத்துதல், துண்டறிக்கை அளித்தல். ஊர்த் தலைவர்/ சுய உதவி குழுக்களுடன் பேசுதல். (எல்லா நிலையிலும் ஆசிரியர் உடனிருத்தல்.)
  2. அருகில் உள்ள ஏரி / குளம் / ஆறு / தொழிற்சாலைக்குச் சென்று பார்வையிட்டு  கலந்துரையாடுதல்.

இப்பயணத்தைப் பற்றி எழுதத் தூண்டுதல்.

இம்மூன்று செயல்பாடுகளிலும் மாணவர்கள் ஆர்வமாக ஈடுபடும்பொழுது அவர்களை தான் கற்றதை ”கற்றபின் நிற்க”என்ற வாக்கிற்கு ஆசிரியர் துணை இருப்பது என்பதாக அமையும்.

  1. சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றிய வாசகங்கள் எழுதி வரச் செய்தல்.
  2. கீழ்க் கண்ட  தலைப்புகளைக் கொடுத்து எழுதச் செய்தல். ஒரு தலைப்பை நான்கு மாணவர்களுள்ள குழுவிற்கு வழங்கலாம். ஆனால் ஒவ்வொருவரும் தனித்தனியாக எழுதவும் எழுதியதை பொதுவில் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பையும் ஆசிரியர் ஏற்படுத்த வேண்டும்.
  • நான் சுகாதார அமைச்சர்// அலுவலர்  ஆனால்…
  • நான் சொந்தமாக தொழிற்சாலை நிறுவினால்…
  • புதிய உலகை படைக்கும் ஆற்றல் எனக்கிருந்தால்…

     3.மாணவர்களிடம் செயல்பாட்டு தாளைக் கொடுத்து விடுபட்ட சரியான சொற்களை புத்தகத்தைப் பார்த்து  நிரப்பச் செய்தல்.   

1.சிறகடித்து ______________________ பறக்கிறேன்.(விண்ணில்)

2. சாலைகள் ______________________ தெரிகின்றன. (கருங்கோடுகளாய்)

3. குளம் கழிவு நீர் போல விரும்பத்தகாத __________________________ வீசுகிறது.

4. என் கண்கள் _______________ எரிகின்றன. ____________________ மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.

5. மலையில் _______________ மணம் கலந்த தூய காற்று வீசுகிறது.

6.பறவைகள் _______________ பறந்து செல்கின்றன.

7.பல வண்ணங்களில் அழகழகாய்  _____________________ சிறகடித்து பறக்கின்றன

8.ஆரவாரத்துடன் அருவிகள் _______________________ விழுகின்றன.

 

மேற்கண்ட படிநிலைகளுடன் மாணவர்களை கற்பித்தலில் ஈடுபடுத்திப் பார்க்கும்பொழுது முழுமையான கற்பித்தல் கற்றல் நிகழ்வை நோக்கிய பயணம் நிகழும் என்ற உணர்தல் எங்களுக் கிருக்கிறது. இச்செயலில் பொதுவான நாம் எதிர்பார்த்த நிகழ்வுகளை வெளிப்படுத்திய மாணவர்களை நாம் பாராட்டுவதோடு, வெவ்வேறு முயற்சிகளில் தங்களை ஈடுபடுத்த முயலும் மாணவர்களையும் அடையாளங்கண்டு பாராட்டுதல் அவசியம்.

 

கற்றல் கற்பித்தல் பொருள்கள்

 

 

 

 

 

 

Grade: 
5

Subject: 
Tamil

Term: Term 1