Towards a just, equitable, humane and sustainable society

எண்களோடு என் மாணவர்கள்- ஒரு பயணம்

0
No votes yet
0
Post a comment

மழலைப் பருவத்தில் குழந்தைகள் எண்களை ஓர் ஓவியம் போல் வரைந்தும் படித்தும் பழகிக் கொள்கிறார்கள். அவற்றிக்கு உயிரோட்டம் செய்த முயற்சியில் எனது பயணம்.

ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு எண்களை அதன் மதிப்போடு அறிமுகப்படுத்திக் கற்க வைப்பதுதான் சிறப்பு என, நான் எண்ணுகிறேன் என் மாணவர்கள் முன் மழலை வகுப்பிலே ( 1 - 100) எண்களை எழுதவும் சொல்லவும் அறிந்திருந்தனர். ஆனால் அவர்களிடம், உதாரணமாக 25 என்ற எண்ணை எழுதச் சொன்னால்  2, 5, 25 என்றுதான் எழுதுவார்கள்.

25-ல் எத்தனை ஒன்று அல்லது பத்துகள் இருக்கும் என்பது தெரியாது. அதன் மதிப்பும் தெரியாது, எவ்வாறு 25 என்று கூறுகிறோம் என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் எண்களைப் புரிந்து எழுதவில்லை. அதை, ஓர் ஓவியம் போல் வரைந்தும் படித்தும் பழகிக்கொள்கிறார்கள். எனவே நான் அவர்களுக்கும்  எண்களைப் பற்றிய புரிதலைக் கொடுக்க விரும்பினேன்.

எண்களைப்  பொருட்களோடு சேர்த்து அறிமுகம் செய்தல்:

எண்களை வடிவமாக எழுதுவதற்கு முன்பு, அவர்கள் தொட்டு உணரும் வகையில் சில பொருட்களைக் கொடுத்து எண்ண வைத்தேன். எ.கா. மணி, பந்து குச்சி, எழுதுகோல் ……………அவர்களிடம் சில எண்களைக் கூறி அதற்கான பொருட்களைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் இருந்து கொண்டு வரச்சொல்வேன் (எ.கா.) 6 என்று நான் சொன்னால் என் மாணவர்கள் ஓடிப்போய் 6 இலை, 6 குச்சி, 6 கல், 6 பூ என எண்ணி எடுத்துக்கொண்டு வருவார்கள்

குழுக்களாகப் பிரித்துக் கட்டும் செயல்பாடு:

ஒன்றுகளை(ones) அறிந்து கொண்ட பின்னர் நான் பத்துகளையும் பொருட்களைக்கொண்டு கற்பிக்கத் தொடங்கினேன். என் மாணவர்களைக் குழுக்களாகப் பிரித்து ஐஸ்கீரிம் (ice cream sticks) மற்றும் நூலினைக் கொடுத்துப் பத்துப்பத்தாக எண்ணி, கட்டு கட்டச் சொல்லி பத்துகளை உருவாக்கிக்கொண்டேன். பின்பு ஒவ்வொரு மாணவர்களிடமும் இரண்டு பத்துகளைக் கொடுத்துவிட்டு நான் கூறும் எண்ணிற்கு ஏற்ப குச்சிகளை எடுத்து வைக்கச் சொன்னேன்.

(எ.கா) 12 என்றால் என் மாணவர்கள் ஒரு பத்து கட்டையும், 2-க்கு இன்னொரு கட்டைப்பிரித்து அதில் இருந்து 2-ஐ எடுத்து வைப்பர்.

20 முதல் 30 வரை எண்களை அறிய வேண்டுமானால் மூன்று கட்டுகளை அவர்களிடம் கொடுத்துப் பயிற்சி செய்வோம். மாணவர்கள் கட்டுகளைப் பிரித்தும் கட்டியும் இப்பயிற்சியைத் திரும்ப திரும்ப செய்வதன் மூலம் அவர்கள் மிக எளிமையாக எண்களின் இடமதிப்பை உணர்ந்து கொள்ள முடிகிறது.

சிறிய எண்- பெரிய எண் கண்டறிதல்:

    சிறிய எண்கள், பெரிய எண்கள் போன்ற பகுதிகளை நான் கற்பிக்காமலே என் மாணவர்கள் தானே அதை புரிந்து கொண்டனர். (எ.கா) 26, 44, 35 என்று நான் கரும்பலகையில் எழுதி இதில் எது சிறிய எண்? என்று நான் கேட்டால் 26, என்று விடையை உடனே கூறிவிடுவார்கள். எப்படி? என்ற வினாவிற்கும் மிக அழகாக, என் மாணவர்களே கொடுக்கபட்டுள்ள எண்களில் 26 என்ற பொருட்களே மிகக்குறைந்த பொருட்கள் இதன் மூலம் எண்களைப் பொருட்களோடு ஒப்பிடும் விளக்கமும் அளித்தது எனக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது.

புள்ளி அட்டையைப் பயன்படுத்திய விளையாட்டு: (Dominos)

     அவர்கள் எண்களை வரைந்து எண்ணி புரிந்து கற்க நான் சில விளையாட்டு முறைகளையும் அடிக்கடி செய்வேன். அவற்றில் ஒன்று, எண் அட்டைகளைக் கொண்டு விளையாடுவது எண் அட்டைகள் மற்றும் அவ்வெண்ணிற்குப் பொருத்தமான புள்ளி அட்டைகளையும் (Dominos) கொடுத்து பொருத்த சொல்லுவேன்.

வெறும் புள்ளி அட்டைகளை மட்டும் மாணவர்கள் நடுவில் கொட்டி வைத்துவிட்டு நான் கூறும் எண்ணிற்குப் பொருத்தமான அட்டையைத் தேடி எடுக்கச் சொல்லுவேன், அல்லது ஒரு குறிப்பிட்ட எண்ணைக் கூறி யார் அதிகம் அட்டைகளைச் சேகரிக்கிறார்களோ அவர்களுக்கு கைத்தட்டல் கொடுத்து மாணவர்களை ஊக்குவிப்பேன். இவ்விளையாட்டு மூலம் மாணவர்கள் தங்களையே மறந்து எண்களைக் கற்கிறோம் என்ற சுமையின்றி கற்றல் நடைபெறுவதை நான் உணர்ந்தேன்.

இவ்வாறு என் வகுப்பு மாணவச் செல்வங்களுக்கு எண்களைப் புரிதலோடு மிக எளிமையாகக் கற்பித்தேன் என்பதை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

Grade: 
9

Subject: 
Upper Primary Maths

Term: Term 3

0
No votes yet
0
Post a comment