Towards a just, equitable, humane and sustainable society

ஆடிப்பாடி மகிழ்வோம்........

ஆடிப்பாடி மகிழ்வோம்

 சமச்சீர் கல்வி தமிழ், வகுப்பு 1 பாடல் 1

  ஆடிப்பாடி மகிழ்வோம்…… ஆனந்தமாய் கற்போம்…..

அ.தனமேரி,சே.கேசவர்த்தினி,த.கஜலட்சுமி,அ.சுபாஷினி

டம் டம்…..டும் டும்…..கச்சேரி

காக்கா அந்தப்பக்கம் கா, கா, கா…..

கிளி இந்தப்பக்கம் கீ கீ கீ……

குயில் மரத்தில் கூ கூ கூ….

கோழி கூரையில் கொக் கொக் கொக்……

பசுவும் கன்றும்ம் மா மா மா….

பதுங்கும் பூனை மியாவ், மியாவ், மியாவ்……

மேயும் ஆடு மே மே மே

காக்கும் நாய் லொள் லொள் லொள்….

டம் டம் ….. டும் டும்…. கச்சேரி

நடக்குது பாரு ஊருக்குள்ளே……

கற்பித்தல் துணைக்கருவிகள்

முகமூடிகள்

படங்கள் அடங்கிய மின்னட்டைகள்

சொற்கள் அடங்கிய மின்னட்டைகள்

பொருத்து கடிகாரம்

பணித்தாள்கள் / வரைபடட்த்தாள்கள்

கொட்டாங்கச்சி, அரச இலை

ஒலி-ஒளி நாடா பதிவுகள்

குறிக்கோள்கள்

  1. உற்றுநோக்கும் திறனை வளர்த்தல்
  2. ஓசையோடு பாடக்கூடிய திறனை வளர்த்தல்
  3. தன்னைச்சுற்றி இருக்கும் உயிரினங்களையும் அவற்றின் ஒலிகளையும் அறிதல்
  4. கண் மற்றும் விரல்களின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல்

ஈடுபடுதல்

ஒரு காட்டில் ஒரு குரங்கு மரம் விட்டு மரம் தாவி தாவி விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது ஒரு முள் மீது குரங்கு தெரியாமல் அமர்ந்து விட்டது. அதன் வாலில் ஒரு பெரிய முள் தைத்தது. குரங்கு வலியால் அழுதுக்கொண்டே சிங்கத்திடம் சென்றது. சிங்கத்திடம் முள்ளை எடுத்துவிடுமாறு உதவி கேட்டது. சிங்கம் தான் ஓய்வெடுக்கப்போவதாகவும் வேறு ஒருவரிடம் முள் எடுக்க உதவி கேட்கும்படியும் கூறியது. அவ்வழியே சென்ற யானையிடம் உதவி செய்யுமாறு குரங்கு கேட்டது. யானையும் குரங்கிற்கு உதவி செய்வதாகக் கூறி தனது முதுகில் குரங்கினை ஏற்றிக்கொண்டு, அவ்வழியே சுள்ளி வெட்டிக்கொண்டிருந்த மனிதனிடம் அழைத்துச் சென்றது. அந்த மனிதன் குரங்கின் வாலில் இருந்த முள்ளை கத்தியால் எடுத்துவிட்டான். எடுக்கும்போது முள்ளுடன் சேர்ந்து வாலும் நறுக்கப்பட்டுவிட்டது. குரங்கு தனது வால் வேண்டுமென்று ஓவென அழுதது. அம்மனிதன் பயந்துபோய் வெட்டிய வாலையும் கத்தியையும் குரங்கின் கையில் கொடுத்துவிட்டு ஓடிவிட்டான்.

குரங்கு “வாலு போயி கத்தி வந்தது டும் டும் டும் டு” என பாடிக்கொண்டே வந்தது. சற்று தூரத்தில், வேறொரு மனிதன் விறகு பிளப்பதற்காகக் கத்தியைத் தேடி கொண்டிருந்தான். அவ்வழியே வந்த குரங்கிடம் அவன் கத்தியைக் கேட்டான்.

குரங்கும் அம்மனிதனுக்குச் கத்தியைக் கொடுத்தது. அவன் விற்கைப் பிளக்கும்போது கத்தி உடைந்துவிட்டது குரங்கு தன் கத்தி வேண்டுமென கத்தி அழுதது. அந்த விறகுவெட்டி கத்திக்கி பதில் சில விறகுகளைக் குரங்கிடம் கொடுத்தான்.

இப்போது குரங்கு “ வாலு போயி கத்தி வந்தது டும் டும் டும் டும் கத்தி போயி விறகு வந்தது டும் டும் டும் டும்” என பாடிக்கொண்டே சென்றது.

அங்கோர் இடத்தில் ஓர் ஆயா ஆப்பம் சுட்டு விற்றுக்கொண்டிருந்தாள். அங்கே சென்ற குரங்கு ஆயாவிடம் “ எனக்கு பசிக்குது பசிக்கு ஆப்பம் தா” எனக் கேட்டது. ஆயா குரங்கினை அடித்து விரட்டினார். குரங்கு அமைதியாக ஒரு மூலையில் சென்று அமர்ந்து விட்டது. ஆயா அடுப்பெரிக்க விறகு (போதாததால்) தேவைப்பட்டதால் குரங்கிடம் விறகு கேட்டார். குரங்கு தனக்கு ஆப்பம் தந்தால் விறகு தருவதாக ஆயாவிடம் கூறியது. ஆயா அதற்கு ஒப்புக்கொண்டு குரங்கிடமிருந்து விறகினைப் பெற்றுக்கொண்டு ஆப்பம் சுட்டு விற்றுக்கொண்டு இருந்தார்.

குரங்கு பொறுமையாக ஆப்பத்திற்காகக் காத்திருந்து விட்டு ஆயாவிடம் ஆப்பம் கேட்டது. ஆயா ஆப்பம் தர மறுத்ததால் குரங்கு விறகைக் கேட்டு ஓவென அழுதது. ஆயா பயந்துபோய் குரங்கிற்கு ஆப்பம் கொடுத்தார்.

ஆயாவிடம் ஆப்பம் வாங்கித் தின்ற குரங்கு, ஆப்பத்தையும் தின்று ஏப்பம் விட்டது .பின்பு

வாலு போயி கத்தி வந்தது

டும் டும் டும் டும்

கத்தி போயி விறகு வந்தது

டும் டும் டும் டும்

விற்கு போயி ஆப்பம் வந்தது

டும் டும் டும் டும்

ஆப்பம் போயி ஏப்பம் வந்தது

டும் டும் டும் டும்

என பாடலைப் பாடி ஆடி மகிழ்ந்து கொண்டே சென்றது.

ஆசிரியர் இக்கதையை கூறிய பின் மாணவர்களிடம் வினாக்கள் கேட்டு விடைகளைப்பெறுதல்.

மாணவர் செயல்பாடு: மாணவர்கள் வட்டமாக அமர்ந்து கதையைக் கவனமாகக் கேட்டல். இடையிடையே ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு விடையளித்தல். ஆசிரியர் பாடலைப் பாடும்போது மாணவர்களும் அவரோடு சேர்ந்து உரிய செய்கைகளோடும், முகபாவங்களோடும் ஆசிரியரைப் பின் தொடர்ந்து பாடுதல்.

மதிப்பீடு:

மாணவர்களால் ஆசிரியர் கூறுவதைக் கவனித்து பதிலளிக்க முடிகிறதா மற்றும் ஆசிரியரின் செய்கைகளையும் அவர் பாடும் பாடலையும் பின்பற்ற முடிகிறதா என்று உற்று நோக்கல்.

ஆராய்தல்

செயல்பாடு 1:

ஆசிரியர் செயல்பாடு: ஆசிரியர் மாணவர்களைத் தங்கள் வீட்டிச் சுற்றியுள்ள விலங்குகளையும், அவர்கள் நாள்தோறும் பள்ளிக்கு வரும் வழியில் பார்க்கும் விலங்குகளையும் பற்றி கூறச்செய்தல்

மாணவர் செயல்பாடு: ஆசிரியர் கேட்ட வினாவிற்கு ஏற்ற விடைகளை மாணவர்கள் கூறுதல் (எ-டு) நாய், பூனை, ஆடு, மாடு போன்ற வீட்டு விலங்குகளின் பெயர்களை மாணவர்கள் கூறுதல்.

செயல்பாடு 2:

ஆசிரியர் செயல்பாடு: ஆசிரியர் மின்னட்டையைக்காட்டி படத்திலுள்ள உயிரினங்கள் என்னென்ன செய்யும் என்பதைக் குறித்து குழந்தைகளை உற்றுநோக்குச் செய்தல்.

மாணவர் செயல்பாடு: மாணவர்கள் படத்தைப் பார்த்து, விலங்குகளின் பெயர்களையும் அவை என்ன செய்யும் என்பதையும் கூறுவர்.

மதிப்பீடு:

மாணவர்களால் ஆசிரியர் கேட்கும் கேள்விகளைப் புரிந்து கொள்ள முடிகிறதா என்பதையும் தன் வீட்டைச் சுற்றியுள்ள விலங்குகளையும் பறவைகளையும் மீட்டுணர முடிகிறதா என்பதையும் ஆசிரியர் தெரிந்து கொள்ளுதல்.

விளக்குதல்

செயல்பாடு 1:

ஆசிரியர் செயல்பாடு: ஆசிரியர் விலங்கு, பறவை ஆகியவைகளின் ஒலிகளை எழுப்பி மாணவர்களை அந்த ஒலிகளுக்குரிய விலங்குகளையும் பறவைகளையும் கூறச்செய்தல்.

மாணவர் செயல்பாடு: மாணவர்கள் ஆர்வத்தோடு உரிய விலங்குகளின் பெயர்களைக் கூறுவதோடு, ஆசிரியர் எழுப்பிய ஒலிகளையும் ஒலித்துப் பழகுதல்.

மதிப்பீடு:

மாணவர்களால் ஆசிரியர் எழுப்பும் ஒலிகளைக் கொண்டு விலங்குகளின் பெயர்களைக் கூறு முடிகிறதா என்பதை ஆசிரியர் தெரிந்து கொள்ளுதல்.

செயல்பாடு: 2

ஆசிரியர் செயல்பாடு: ஆசிரியர் மாணவர்களை அவர்கள் திருவிழா, கல்யாணம் போன்ற விழாக்களில் கேட்ட ஒலிகளைப் பற்றி கூறச் செய்தல், பின் ஆசிரியர் மேள நிகழ்ச்சியில் என்னென்ன இசைக் கருவிகளைப் பார்த்திருக்கிறீர்கள் என்று கேட்டல்.

மாணவர் செயல்பாடு: அனைவரும் பேசும் சத்தம், சிறுவர்கள் விளையாடும் சத்தம், மேள சத்தம் என்று மாணவர்கள் கூறுவர். அடுத்த கேள்விக்கு மாணவர்கள் அவரவருக்குத் தெரிந்த கருவிகளின் பெயர்களைக் கூறுதல்.

மதிப்பீடு: இச்செயல்பாட்டின் மூலம் ஆசிரியர் மாணவர்கள் தங்கள் வாழ்வில் பார்த்த நிகழ்வுகளை நினைவுகூற முடிகிறதா என்பதை உற்று நோக்குதல்.

குறிப்பு: இது போல், ஆசிரியர் பாடலில் உள்ள புதிய சொற்களை உரையாடல் மூலம் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவார்.

செயல்பாடு:3

ஆசிரியர் செயல்பாடு: “டம் டம் டும் டும் கச்சேரி” பாடலை ஆசிரியர் உரிய இராகத்தோடும், பாவனைகளோடும் சரியான உச்சரிப்போடும் மாணவர்களுக்குப் பாடிக்காட்டுதல் (அதற்குரிய சுவரொட்டியை மாணவர்களுக்குப் காட்டுதல்)

மாணவர் செயல்பாடு: ஆசிரியரைப் பின்பற்றி உரிய இராகத்தோடு பாட முடிகிறதா என்பதை ஆசிரியர் தெரிந்து கொள்ளுதல்.

செயல்பாடு:4

ஆசிரியர் செயல்பாடு: ஆசிரியர் மாணவர்களை இரு குழுக்களைப் பிரிப்பார். ஒரு குழு விலங்குகள் மற்றும் பறவைகள் பெயர்களைக் கூறுவர். அடுத்த குழு, முதல் குழு கூறிய பெயருக்கு ஏற்ற செய்கையோடு ஒலியையும் எழுப்புவர். அனைத்து பெயர்களும் முடிந்தவுடன், குழுக்களை இடம் மாற்றி இதே விளையாட்டைத் தொடருவார்.

மாணவர் செயல்பாடு: மாணவர் ஆசிரியர் கூறுவதைக் கவனித்து அவரின் வழிகாட்டுதலோடு குழுவாக விளையாடுவர்.

மதிப்பீடு: மாணவர்களால் குழுவாக ஒருங்கிணைந்து செயல்படமுடிகிறதா என்பதை ஆசிரியர் உற்று நோக்குதல்.

விரிவாக்குதல்

செயல்பாடு 1:

ஆசிரியர் செயல்பாடு: பாடலில் உள்ள விலங்குகள், பறவைகள் ஆகியவற்றின் பெயர்களைத் தவிர்த்து மாணவர்களுக்குத் தெரிந்த வேறு சில விலங்குகள். பறவைகளை பெயர்களையும் ஒலிகளையும் மாணவர்கள் தங்கள் வாயிலாகவே கூறச் செய்தல்.

உ.ம்

குதிரை அந்தப்பக்கம்-------

யானை இந்தப்பக்கம்-------

சிங்கம் அந்தப்பக்கம்-------

வாத்து இந்தப்பக்கம்-------

என புத்தகத்தில் இல்லாத புதியனவற்றைச் சிந்தித்தல்.

மாணவர் செயல்பாடு: மாணவர்கள் ஆசிரியர் கூறும் விலங்குகள் எழுப்பும் ஒலிகளை ஒலித்தல்.

செயல்பாடு 2:

ஆசிரியர் செயல்பாடு: ஆசிரியர் மாணவர்களிடம் பல வன்ணப் பொடிகளைக் கொடுப்பார். மாணவர்கள் அவரவருக்குப் பிடித்த இரு வண்ணங்களை ஒன்றாகக் கலந்து புதிய புதிய வண்ணங்கள் உருவாக்குவதைக் கவனிக்கச் செய்தல்.

மாணவர் செயல்பாடு: மாணவர்கள் அவரவருக்குப் பிடித்த இரு வண்ணங்களை ஒன்றாகக் கலந்து புதிய புதிய வண்ணங்கள் உருவாக்குவர்.

செயல்பாடு: 3

ஆசிரியர் செயல்பாடு: ஆசிரியர் ஒரு பெரிய கோலம் வரைந்து கொடுத்தல், குழந்தைகளை அதன் மேல் சிறு இலைகள், பூக்கள், சோழிகள், விதைகள், மணல், சிப்பி, வண்ணப்பொடிகள் போன்றவற்றை கொண்டு அழுகுபடுத்தச் சொல்லுதல்.

மாணவர் செயல்பாடு: மாணவர்கள் அவரவருக்குப் பிடித்த பொருட்களைக் கொண்டு, அவர்களுக்குப் பிடித்த வகையில் கோலத்தை நிரப்புவர். நிரப்பப்படும் பொருட்களை கோட்டை விட்டு வெளியே சிதறாதவாறு பார்த்துக் கொள்வது வேண்டும்.

செயல்பாடு:4

ஆசிரியர் மாணவர்களை விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச் சென்று மணலில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு வளைகோடுகள், நேர்க்கோடுகள், உருவங்கள் போன்றவற்றை வரவை வைத்தல்.

செயல்பாடு: 5

ஆசிரியர் சிறுவர் மலர் போன்ற இதழ்களில் வருகின்ற வழியைக் கண்டுபிடி போன்ற விளையாட்டு படங்களைக் கொடுத்து கண்டுபிடிக்கச் செய்தல்.

செயல்பாடு: 6 ஆசிரியர் மாணவர்களிடம் விலங்குகள், பறவைகள் போன்ற சிலவற்றைப் போல் நடித்துக் காட்டுதல். மாணவர்கள் அவ்விலங்கின் பெயரைக் கண்டுபிடித்து அவற்றின் ஒலியை எழுப்புதல்.

செயல்பாடு: 7

ஆசிரியர் மயில் குரங்கு போன்ற மின்னட்டைகளைக் காண்பிக்க மாணவர்கள் ஓவ்வொருவரும் ஒன்றினை நடித்துக் காட்டுதல்

செயல்பாடு: 8

ஆசிரியர் மாணவர்களிடம் இரு படங்களை ஒப்பிட்டுப் பார்த்து விடுபட்டதை வரைந்து வண்ணம் தீட்டச்செய்தல்.

குறிப்பு: இந்த வயதில் மாணவர்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பர். அவர்களின் ஆற்றலுக்கு ஈடுகொடுக்க, நாம் அவர்களைப் பல செயல்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டும். ஆதலால் விரிவாக்குதல் நிலையில் படம் சார்ந்த பல விளையாட்டுகளை வடிவமைத்துச் செயல்படுத்துவது அவசியம்.

மதிப்பிடல்

செயல்பாடு 1 பொருத்துக்கடிகாரம்

ஆசிரியர் செயல்பாடு:

மாணவர்கள் விலங்குகள்/ பறவைகள் பெயர்களோடு அவற்றின் ஒலிகளைப் பொருத்துதல்.

மாணவர் செயல்பாடு: மாணவர்கள் கடிகார முட்களைச் சுழற்றி, விலங்குகளின் பெயர்களை அவை எழுப்பும் ஒலிகளோடு பொருத்துவர்.

செயல்பாடு:2

ஆசிரியர் செயல்பாடு: மாணவர்கள் ஆசிரியர் உதவியின்றி, விலங்குகளின் முகமூடியைப் பயன்படுத்தி பாடலை நடித்துக் காட்டுதல்.

மாணவர் செயல்பாடு: மாணவர்கள் குச்சி முகமூடியைப் பயன்படுத்தியவாறே பாடலை நடித்துக் காட்டுதல்.

மதிப்பீடு: மாணவர்கள் தாங்கள் கற்றதை வெளிப்படுத்துகின்றனரா என்று ஆசிரியர் உற்றுநோக்குதல்.

செயல்பாடு:3

ஆசிரியர் மாணவர்களிடம் கொட்டாங்குச்சியில் காகிதத்தை ஒட்ட வைத்து மேளம் செய்து வரச்சொல்லுதல். மற்றும் இலைகளைக் கொண்டு பீ….பீ….(ஊதல்) செய்து வரச் சொல்லுதல்.

செயல்பாடு: 4

விலங்குகள் பறவைகள் உருவங்களை அதன் நிழலோடு பொருத்தச் செய்தல்.

பொருத்துக் கடிகாரம் – செய்முறை

  1. சதுர வடிவ அட்டையையோ அல்லது பெரிய நோட்டின் அட்டையையோ எடுத்துக் கொண்டு பிடித்த வண்ண சார்ட் பேப்பரைக் கொண்டு ஒட்டி ஓரங்களில் வண்ண (கோல்டன்) பேப்பர் கொண்டு அலங்கரிக்கவும்.
  2. அலங்கரித்த அட்டையை இரண்டு சம பாகங்களாகப் பிரிக்கவும்.
  3. பக்கத்துக்கு 5 ஆக சம இடைவெளி விட்டு Velcro ஒட்டி தயார் செய்யவும்.
  4. அட்டையின் நடுவில் சிறியதாக பஞ்ச் மெஷின் கொண்டு ஓட்டை போடவும்.
  5. வேறு அட்டை கொண்டு பெரிய கடிகார முள், சிறிய கடிகார முள் வரைந்து வெட்டி வண்ண காகிதம் கொண்டு ஒட்டி அழகுபடுத்தி இரண்டையும் சேர்த்து பஞ்ச் மிஷின் கொண்டு ஓட்டை போடவும்.
  6. ஏற்கனவே அட்டையின் நடுவில் ஓட்டை போட்ட இடத்தில் முட்களை வைத்து மூன்றையும் ஆணி கொண்டு சுழலுமாறு முடுக்கவும்.
  7. கற்பிக்க வேண்டிய சொற்களையும் படங்களையும் மின் அட்டைகளில் நமது படைப்பாற்றல் திறனுக்கேற்றவாறு தயார் செய்து பின்பக்கத்தில் ஒட்டி பயன்படுத்த வேண்டும்.
  8. இந்த பொருத்து கடிகாரத்தை ஒருமுறை செய்துவிட்டால் மற்ற பாடங்களுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

    To Download the Teaching Learning Material(TLM), Please click the link:  கற்றல் கற்பித்தல் பொருள்கள்

Grade: 
1

Subject: 
Tamil

Term: Term 1