Towards a just, equitable, humane and sustainable society

முதல் வகுப்பு தமிழ்ப் புத்தகம் – ஒரு பார்வை

0
No votes yet
0
Post a comment

இராஜதிலகம், அ. தொ. ப செம்பியபாளையம்

  • முதல் வகுப்பு பாடப்புத்தகம் குழந்தைகளுக்கு ஏற்புடையதாக மாற்றப்படுதல் அவசியம்.
  • குழந்தைகளுக்குக் கதைகளும் பாடல்களும் ஏற்புடையதாக இருப்பதால் பாடப்புத்தகத்தில் அவற்றை அதிகம் சேர்க்க வேண்டும்.
  • குழந்தைகளுக்குக் கடினமான இருக்கிற, அவர்களின் பயன்பாட்டில் இல்லாத சொற்களைத் தவிர்க்க வேண்டும்.

அறிமுகம்

ஒன்றாம் வகுப்புத் தமிழ்ப்பாடநூலில் உள்ள பாடப்பகுதிகளுக்கு நான் பாடத்திட்டம் எழுதும் போது ‘அவர்களுக்கான திறன்கள் என்னென்ன? அத்திறன்களுக்கு ஏற்ற பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதா? அப்பயிற்சிகள் மாணவர்களின் கற்றல் திறனுக்கு ஏற்றாற்போல் இருக்கின்றனவா? ஏதேனும் பயிற்சிகள் சேர்க்க வேண்டியுள்ளதா? ’என்றெல்லாம் கவனத்தில் கொண்டு தான் எழுதுவேன்.

அவ்வாறு மேற்கொள்ளும் திட்டமிடலில் உண்டான போதாமை மற்றும் வேண்டாமைகள் பற்றியே நான் இங்குக் கூறப்போகிறேன்.

பாடநூல்:

முதல் வகுப்புத் தமிழ்ப்பாடநூலில் ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு பாடல், ஒரு படம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும். பாடத்தில் எழுத்துக்களுக்கும் சொற்களுக்கும் படத்துடன் அதனைச் சார்ந்த பயிற்சிகள் கொடுக்கப்பட்டு இருக்கும்.

குழந்தைகளின் பங்கு - சிறுகுழந்தைகள் எப்போதும் கதையை விரும்பி கேட்கக்கூடியவர்கள். பாடல் பாடுதல் பிடிக்கும் என்றாலும் படத்தைக்காட்டி கூறப்படும் கதைகளை விரும்பி கற்கின்றனர். படத்துடன் இருக்கக்கூடிய சொற்களை மிக எளிமையாகவும் உணர்வுப்பூர்வமாகவும் கற்கின்றனர். படமின்றி கொடுக்கப்பட்டிருக்கும் சொற்களைப் புரிந்து கொள்வது அவர்களுக்குக் கொஞ்சம் கடினமாகவே உள்ளது. பாடநூலில் கொடுக்கப்பட்டுள்ள எழுத்துப்பயிற்சியைப் பாடப்புத்தகத்தில் மட்டுமல்லாது சுவடியிலும் எழுதுவது கூடுதல் சுமையாகவே கருதுகின்றனர். புத்தகத்தில் ஏழுதியதை ஏன் மீண்டும் சுவடியில் எழுத வைக்க வேண்டும் என்ற மிக உணர்வோடு என் மாணவர்கள் எழுதுவதைக் கண்டு இருக்கிறேன். அவர்களைக் கஷ்டப்படுத்துவது போலவே உணர்கிறேன்.

சேர்க்க வேண்டியவை :

ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு பாடல் கற்பிக்கும் படியாக உள்ளது. அவ்வாறு இல்லாமல் ஒன்றுக்கு மேற்பட்ட புதிய பாடல்கள் இணைத்தால் நன்றாக இருக்கும். அதே தலைப்புகளில் பாடல்கள் கண்டுப்பிடித்துப் பாட வைத்தால், அதைச் சுமையாக கருதாமல் சுலபமாகப் பாடுவதைப் பார்க்கிறேன். ஒரு எழுத்திற்கு ஒரு படம் ஒரு சொல் என்று இருப்பதை மாற்றி மூன்று நான்கு சொற்களோடு படங்களைக் கொடுக்கலாம். மாணவர்கள் நிலைக்கு ஏற்ற எளிமையான பயிற்சிகளை அதிகப்படுத்தலாம். மேலும், படங்களுடன் கூடிய நன்னெறி கதைகளையும் இணைக்கலாம்.

தவிர்க்க வேண்டியவை:

முதல் பருவத்திலேயே எழுத்துகளைக் கொண்டு நூல் உருவாக்கவைத்திருக்கும் சூழல் மற்றும் அதை ஒட்டிய  பயிற்சியைத் தவிர்க்கலாம்.

‘நானே படிப்பேன் நானே எழுதுவேன்’ போன்ற பகுதிகளில் கொடுக்கப்படும் சொற்கள் பெரும்பாலும் மாணவர்கள் நிலையைத் தாண்டியுள்ளது. அதாவது அவர்களுக்குப் பொருள் உணர்ந்து கொள்ள சிரமமாக உள்ளது. முதல் பருவம் முழுக்க சுலபமாக இருப்பது நல்லது. சங்கம், நாற்றம், பண்டம், கெண்டி, பௌத்தம் போன்ற குழந்தைகளின் பயன்பாட்டில் இல்லாத இது போன்ற கடினமான சொற்களை ஆரம்பப் பள்ளிக்குத் தேவையா? என்று நாம் சிந்திக்க வேண்டும். இது போன்ற சிரமங்களைத் தவிர்க்கலாம். எழுத்துப் பயிற்சிக்கென்று தனியாக ஒரு புத்தகம் தரலாம். அதிலும் குழந்தைகள் மகிழ்வோடு செயல்படக்கூடியதாக இருத்தல் நல்லது. பாடநூலில் உள்ள எழுத்துப்பயிற்சிகளைத் தவிர்த்துவிட்டுக் கூடுதல் பாடல்களோ கதைகளோ கொடுக்கலாம்.

 

குறிப்பு: முதல் பருவத்தில் முதல் நான்கு பாடங்கள் வரைக மற்றும் ‘கா’ வரிசைகள் இரண்டாம் பருவத்தில் கி ‘கீ’, ‘கு’,’ கூ’ வரிசைகள் வரையும், மூன்றாம் பருவத்தில் ‘கை’, ‘கெ’, ‘கொ’ என மீதம் உள்ள மொத்த வரிசைகளையும் அடுத்து உள்ள பாடங்களில் கொடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி நாட்கள், மாதங்கள், சுவைகள் மற்றும் நிறங்கள் எனக்கூடுதல் பகுதிகளையும் கொண்டுள்ளது. இரண்டாம் பருவம் வரை மாணவர்கள் கற்றலில் எந்த வித குழப்பங்களும் இன்றி நன்றாக எழுத்துக் கூட்டி கற்கும் மாணவர்கள் கூட மூன்றாம் பருவ இறுதியில் தமிழ் எழுத்துகளை அடையாளம் காணுவதில் தங்களுக்குள் குழப்பிக்கொள்கின்றனர். இது போன்ற சிரமங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க ஒட்டுமொத்தமாகத் திணிப்பதைத் தவிர்க்கலாம்.

முடிவுரை :

முன் தொடக்க நிலையில் மாணவர்கள் ஆயுத, உயிர் மற்றும் மெய்யெழுத்துகள் என மொத்தம் 31 எழுத்துகளை மட்டுமே கற்கின்றனர். அதன்பின் அடுத்த நிலையிலே 216 எழுத்துகளைப் படிக்கவும் எழுதவும் அவ்வெழுத்துகள் சார்ந்த சொற்களையும் படித்தாக வேண்டும் என அமைக்கப்பட்டிருப்பது என்பது மாணவர்களுக்கு ஒரு சுமையா அல்லது இந்த நிலைக்குச் சரியானதா? என்பதைப் பற்றி அனைவரும் சிந்திப்போம் வாருங்கள்!

Subject: 
Tamil

Term: Term 3

0
No votes yet
0
Post a comment