Towards a just, equitable, humane and sustainable society

பாரம்பரிய உணவுத் திருவிழா

0
No votes yet
0
Post a comment

பெரும்பாலான மாணவர்கள் ஆசிரியர் சொல்வதைக் கவனித்து நடந்துகொண்டால் படித்துத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறமுடியும்  என்ற மனநிலையோடு மட்டுமே இருக்கிறார்கள். ஆனால் இதனைத் தாண்டி ஆசிரியர்-மாணவர்கள் உறவு மேம்படவேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை  மேற்கொண்டேன். இதன் முதல் கட்டமாக வகுப்பில் பெரும்பாலும் செயல் வழிக் கற்பித்தலை செயல்படுத்தினேன். மாணவர்களுக்கு எழுதுவதில் மற்றும் வாசிப்பதில் உள்ள குறைகளை நீக்க அகராதிகளைப் பயன்படுத்தித் தெரியாத வார்த்தைகளுக்கான பொருளைத்  தெரிந்துகொள்ள அறிவுறுத்தினேன். மேலும், வகுப்பறையில் அவர்களை  வாசிக்கத்தூண்டுவதால் மாணவர்களின் கற்றலும் மேம்பாடு அடைந்தது. ஒரு நாள் குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்றவுடன் மருத்துவரைக் காணச் சென்றேன். அங்கே எனக்கு சில புரிதல்கள் ஏற்பட்டன. நாம் எடுத்துக்கொள்ளும் ஆங்கில மருந்துகளை ஓர் அளவிற்கு மேல் எடுத்துக்கொள்ளக் கூடாது ஏனெனில் அதில் உள்ள வேதிப்பொருட்கள் பக்க விளைவை விளைவிக்க வல்லன என்பதுடன் இயற்கையில் கிடைக்கும் உணவுகளைச் சரியாக எடுத்துக் கொண்டாலே நலமாக வாழலாம் என்பதையும் புரிந்து கொண்டேன். மேலும், சமைக்காமல் எப்படி உணவு தயாரிப்பது என்று யோசிக்கையில் பழச்சாறு மற்றும் முளைக்கட்டிய தானியங்கள் ஆகியவற்றைத் தயார் செய்யவும் ஆயத்தமானேன். அதிலிருந்து முளைக்கட்டிய தானியங்களை உணவோடு எடுத்துக்கொள்வதோடு மாணவர்களுக்கும் எடுத்துச்செல்வது  வழக்கம். ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மாணவர்களையே செய்யத் தூண்டினால் என்ன என்ற யோசனை தோன்றியது. மேலும் நொறுக்குத் தீனி உண்ணாதீர்கள். உடல் எடை கூட்டும் சத்தான உணவுகளை உண்ண வேண்டும் என்றும்  மேலும், முளைக்கட்டிய தானியங்களை உண்பதால் அதில் நிறையச் சத்துக்கள் உள்ளன என்றும் கூறி மாணாக்கர்களையே தானியங்களை முளை கட்டி எடுத்து வரச்செய்ய வேண்டும்.

செயல்பாடு:

  • எட்டாம் வகுப்பு மாணவிகளைக் குழுக்களாகப் பிரித்தேன். முதலில் என்னென்ன தானியங்களை முளைக்கட்டலாம் என்று பட்டியல் தயாரிக்கச் செய்தேன். (எள், கேழ்வரகு, கம்பு, பச்சைப்பயிறு, கடலை, சோளம், உளுந்து).
  • ஒரு வாரம் விவாதம் நடந்தது. பின் அவர்களாகவே ஒரு தேதி முடிவு செய்து அனைத்துக் குழுக்களும் முளைக்கட்டிய தானியங்களை எடுத்து வந்தனர்.
  • முளைக்கட்டிய தானியங்களைப் பார்த்து மாணவியர்கள் ஒரு சில தானியத்தில் முளையானது நன்கு வந்துள்ளது. ஒரு சில தானியத்தில் முளை சரியாக வரவில்லை ஏன்? எனக் கேட்க அதற்கு மாணவியரே பதில் கூறினர். தானியங்களின் தோலைப் பொருத்து முளைப்புத்தன்மை காலம் மாறுபடும்.
  • ஒரு சில மாணவியர் அதனை அப்படியே உண்பதைவிட அதில் தேங்காய், வெல்லம் போட்டுக் கொண்டு வந்திருந்தனர். ஏன்? எனக் கேட்க சுவை மற்றும் சத்துக்கள் அதிகம் கிடைக்கும் என்று மாணவியரே பதில் கூறினர்.
  • ஒரு மாணவி, எங்கள் வீட்டுப் பக்கத்தில் உள்ள கோவிலில் முளைக்கட்டிய உளுந்தில், வெல்லம் தேங்காய் போட்டு பிரசாதமாக இதனைக் கொடுப்பார்கள் என்றாள். மற்றொரு மாணவி நம் முன்னோர்கள் என்ன செய்தாலும், சொன்னாலும் அதில் அறிவியல் உண்மை இருக்கிறது. நாம் தான் அதனைக் கண்டுபிடிக்க வேண்டும் எனக் கூறினாள்.
  • ஒரு சில மாணவிகள் அனைத்து முளை வந்த தானியங்களிலும் ஒவ்வொரு கரண்டி எடுத்து ஒன்றாகக் கலந்து, கொத்தமல்லித் தழை, எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்த்து சுவையான சிற்றுண்டி தயாரித்து விட்டாள்.
  • முளை கட்டிய தானியத்தில் வைட்டமின்கள், தாது உப்புக்கள் அளவு அதிகரிக்கிறது என்பதையும் தாண்டி அவர்களாகவே அதை எப்படி உண்ணலாம், முளை வரும் காலம், எந்த தானியங்களை அதிக நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும் போன்ற தகவல்களை உணர்ந்து கொண்டனர்.
  • இதில் பங்கேற்ற சக ஆசிரியர்கள், மாணவர்கள் தயாரித்த  உணவின்  சுவை கண்டு மிகுந்த பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
  • அவர்கள் என்னிடம் கடைசியாகக் கேட்ட கேள்வி முளைக்கட்டிய தானியத்தில் வைட்டமின் ஏ இருமடங்காகும், வைட்டமின் பி, சி, ஐந்து முதல் பத்து மடங்கு அதிகரிக்கும் என்கிறீர்களே இதை நிரூபிக்க முடியுமா?

Author: Revathy, Ariyankuppam

Subject: 
Science

Term: Term 3

0
No votes yet
0
Post a comment