Towards a just, equitable, humane and sustainable society

அறிவியல் பாடம் உண்டாக்கிய சமூகப் பொறுப்புணர்வு

0
No votes yet
0
Post a comment

அரியூர் குளம்:

தன் ஊரில் உள்ள பாரம்பரிய நீர்நிலைகளின் தற்போதைய நிலைமையை மாணவர்களை அறியச் செய்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. பாடத்தோடு உள்ளூர்ச்சூழலை தொடர்புப்படுத்தி அறியச்செய்ய மேற்கொண்ட களப்பயணம் மாணவர்களை உத்வேகம் அடையச்செய்தது.​அதன் முந்தைய வரலாறு குறித்து மாணவர்கள் ஊர்ப்  பெரியவர்களிடம் கேட்டறிந்தது,  அவர்கள்  ஊர்க்குளம் பற்றி அவர்களே அறியாத பல விஷயங்களை ஆச்சரியத்துடன் தெரிந்துகொள்ளும் வண்ணமாக அமைந்தது.  குளத்தின் தற்போதைய வறண்ட நிலையும், கழிவுநீர்க் குட்டையாக மாறுவதன் காரணங்களையும் அறிந்து மாணவர்களை  மனம் வருந்தினர். வரும் காலத்தில் குளத்தைச் சீர்செய்து மேம்படுத்துவது பற்றி விவாதித்து செயல் திட்டமொன்று உருவாக்கி, செயலாற்ற மாணவர்களும் ஊர் மக்களோடு தங்களால் ஆன உதவி செய்ய முன்வந்தது சிறப்பானதாக அமைந்தது.

நிகழ்வுகள்:

மாணவர்களுக்கும் ஊர் பெரியவர்களுக்குமிடையே  நடந்த உரையாடல்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்தன. அதில் சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

மாணவர்கள்: இந்தக்குளம் இப்பொழுது உள்ளது போல் கழிவுநீர் குட்டையாகத்தான் முன்பும் இருந்ததா?

பெரியவர்கள்: இல்லை. முன்பு இக்குளம் தெப்பக்குளமாக இருந்தது. திருவிழாக்காலங்களில் முக்கியத்துவம் வாய்ந்த குளமாகவும், தாமரைப்பூக்கள் நிறைந்த ஒன்றாகவும், சுற்றிலும் மரம் சூழ்ந்து இயற்கை வனப்பாகவும் இருந்த ஒன்று. நாங்கள் சிறு வயதில் இப்படித்துறையில் நடந்த ஞாபகங்கள் இப்பொழுதும் பசுமையாக உள்ளன.

மாணவர்கள்: ஓ அப்படியா ! பின்பு எதனால் இப்படி வறண்ட நிலைக்குச் சென்றது?

பெரியவர்கள்: தானே புயலின் போது இங்கிருந்த மரங்கள் வேரோடு  வேரோடு சாய்ந்துவிட்டன. அதன்பின்பு மரம் நட்டுப் பராமரிப்பதில் ஊர் பெரிதாக ஆர்வம் காட்டாததால் இங்கு பசுமை அற்ற சூழல் உருவானது. மேலும், மழையும் பொய்த்துப் போனதால் குளம் வறண்ட நிலைக்குச் சென்றுவிட்டது. இருந்த சிறிதளவு நீரும் கழிவுநீர் சேர்வதால் உபயோகப்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது.

மாணவர்கள்: இதைச் சீர்செய்ய என்ன செய்ய வேண்டும்?

பெரியவர்கள்: குளத்தை ஆழப்படுத்தும் பணி தற்பொழுது நடைபெற உள்ளது. மேலும், மண் அரிப்பு நிகழாமல் தடுக்க தெப்பக்குளம் கட்டும் யோசனையும் உள்ளது.

மாணவர்கள்: இங்கே கழிவுநீர் ஏன் கலக்கிறது?

பெரியவர்கள்: பாதாளச்சாக்கடைத் திட்டம் இல்லாததால் தான் கழிவுநீர் குளத்தில் கலக்கும் அவலம் உள்ளது.

மாணவர்கள் :இதற்கு  மாற்று வழி ஏதேனும் உள்ளதா?

பெரியவர்கள்: பாதாளச்சாக்கடைத் திட்டம் முடியும்வரை, கழிவுநீர் பாதையை வேறு பக்கம் திருப்பிவிட வேண்டி ஊர்மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. இந்த விழிப்புணர்வை நடத்த இந்த ஊர் ஆசிரியர் முன்வந்துள்ளார்.

Eco-Walk- ஒரு தொடக்கம்:

ஆசிரியர் வகுப்பறையில் நடத்திய பாடங்களைக் கண்கூடாகக் கண்டு புரிந்து கொள்ள இவ்வகையான Eco-Walk (களப்பயணம்) மாணவர்களுக்குப் பயனுள்ளதாக அமைவதோடு ஆச்சரியமூட்டும் விதத்திலும் அமையும். மேலும், இப்பயணமானது மாணவர்கள் தங்களைச் சுற்றியுள்ள சமூகத்தின் சூழலை நேரிடையாக ஆராய்ந்து அறிந்து பாதுகாத்தல், பண்படுத்துதல் ஆகியவற்றை அறிவதோடு அவற்றை அறிவியல் கண்ணோட்டத்தோடு கண்டு கற்கவும் பயன் படுகிறது.​

குளத்திற்குச் சென்று நீர் மேலாண்மை பற்றி அனுபவ ரீதியாகக் கற்றுணர்ந்த மாணவர்கள் தங்களுடைய  கிராமச் சுற்றுச்சூழலை ஆழமாகவும் விரிவாகவும் புரிந்துணர  Eco-walk ஒன்றைத் திட்டமிட்டுள்ளேன்.

இனிவரும் பயணம்:

பள்ளியிலிருந்து அரியூர் குளம் வரைக்கும் ஒரு நாள் பயணமாக இருக்கும். வழியில் தென்படும் தொட்டாச்சிணுங்கி, காளான் வகைகள், ஒட்டுண்ணிகள், மூலிகைகள் அதன் பயன்கள் போன்றவற்றைப் போகும் வழியிலேயே மாணவர்களுடன் விவாதித்துக் கொண்டே செல்லலாம். மேலும், மட்கிய நிலையில் உள்ள சாணத்தின் வெப்பம், வாசம் போன்றவற்றை ஆராய்ச்சி செய்யவும் வாய்ப்பு தரலாம்.

வழியில் காணப்படும் மரங்களில் மகரந்தச் சேர்க்கைக்கான நடப்புகளை விவாதித்தல் மிகவும் உபயோகமான ஒன்றாகும். காற்று மூலமாக மகரந்தச் சேர்க்கை நடைபெறும் மரங்களுக்கும், பூச்சிகளின் உதவியுடன் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் மரங்களுக்கும் உள்ள வித்தியாசங்களை மாணவர்கள் நேரே பார்த்து அறிந்து கொள்ள முடியும்.

பட்டாம்பூச்சிகளின் தடமறிதல் அவர்களுக்கு உற்சாகம் தரும் ஒன்றாகும். இதன் மூலம், எவ்வகையான தாவரங்களைப் பட்டாம்பூச்சிகள் விரும்பி தேர்ந்தெடுக்கின்றன என்பதையும், எதனால் அவற்றைத் தேர்ந்தெடுக்கின்றன என்பதையும் விரிவாகக் கூற முடியும்.

முடிவாக அரியூர் குளத்தில் பலவகையான பூச்சி இனங்கள் காணப்படும். அவற்றின் வாழ்க்கை சுழற்சிகளை அவர்கள் நேரடியாகப் பார்த்து கற்றுக் கொள்ள முடியும். பயணம் தொடரும்......................................

Author: Suresh

Subject: 
Science

Term: Term 3

0
No votes yet
0
Post a comment