Towards a just, equitable, humane and sustainable society

மொழி கற்பித்தலில் கதை கூறல்

0
No votes yet
0
Post a comment

கதை கற்பனையின் அடித்தளம்:

வகுப்பறைச் செயல்பாட்டில் பொதுவாக மாணவர்களைப் பெரும்பாலும் கவரும் செயல்பாடுகளில் ஒன்று கதை சொல்லல். கதை கேட்பது என்பது மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் மொழி இனம் தாண்டி வேறுபாடற்று பிடித்தமான ஒன்று. ஏனெனில், கதை என்பது நம் கற்பனையை எந்த  அளவீடுகளும் இல்லாமல் நீட்ட உதவக் கூடியது. கதையில் எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. நான் ஒரு நாள் வகுப்பறையில் மாணவர்களிடம் உங்களுக்குக் குதிரையைப் பற்றி ஒரு கதை சொல்லப் போகிறேன். அவரவருக்குப் பிடித்தமானக் குதிரையை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள் என்றேன். கதையைக் கூறி முடித்தப் பின் மாணவர்களிடம் கேட்டேன். உங்கள் குதிரை என்ன நிறம் என்று?. ஒவ்வொருவரின் குதிரையும் ஒவ்வொரு நிறத்தில் இருந்தது. ஒரு மாணவன்  மட்டும் அவன் குதிரை பச்சை நிறம் என்றான். எப்படி உன் குதிரை மட்டும் பச்சை நிறத்தில் இருந்தது என்று அந்த  மாணவனிடம் கேட்டேன். “கதை தான சார்! என் இஷ்டத்துக்கு நான் நினச்சுக்கிட்டேன்,” என்றான்.

கதையின் ஆளுமை இதுதான். ஒருவகையில் குதிரையின் நிறத்தைக் கூட நாம் பெரும்பாலும் கற்பனையில் வரையறைக்குள் கொண்டு வந்துவிட முடியும். இதையே ஒரு காட்டைக் கற்பனை செய்யுங்கள், மலையைக் கற்பனை செய்யுங்கள் என்றால் ஒவ்வொருவரின் காடும், மலையும் அமைப்பில் மாறுபடும். இது நம் எண்ணத்தின் வலிமை. எனவே, கதை என்பது வெறும் கதையல்ல. அதைத் தாண்டி அது மனத்தின் ஆழத்தையும், அறிவின் செழுமையையும் தீர்மானிக்கக் கூடியதும் தான். ஆகவே, ஒரு கதையின் மூலம் ஒரு மாணவனிடம் சமூகச் சிந்தனையை ஏற்படுத்திவிட முடியும் என்பது சாத்தியமே.

பகுத்தறிவோம் பழங்கதையை:

இந்த அடிப்படையில் தான் நான் வகுப்பறையில் கதை கூறும்போது வெறும் கதையை மட்டுமே கூறி நேரம் போக்கும் கலையாக அதை மாற்றாமல் அந்தக் கதையில் எவ்வகையான சமூக எண்ணத்தை மாணவர்கள் உள்வாங்கிக் கொள்கிறார்கள் என்பதைப் பரிசோதனை செய்வதாகவே மாற்றி, அவர்களின் சிந்தித்தல் திறனை மேம்படுத்தவே முயற்சி செய்கிறேன். அதன் பலம் அபரிமிதமாகவே உள்ளது. ஒரு நாள் இப்படித்தான் பத்தாம் வகுப்பு மாணவர்கள் நிரம்பிய வகுப்பில் “ஏகலைவன் கதை” கூறப்போகிறேன் என்றேன். ஆர்வமானார்கள் மாணவர்கள். வழக்கமான ஏகலைவனின் கதையான, துரோணரிடம் வில் வித்தை கற்க விரும்பி அவரிடம் ஏகலைவன் கற்க சென்றான். ஆனால் துரோணர் அவனுக்கு ஆர்வமும், திறமையும்  இருந்தும் அன்றைய காலச் சூழலுக்கு ஏற்ப வர்ணப் பாகுபாடு காரணமாக வில்வித்தை கற்றுக் கொடுக்க மறுத்துவிட்டார். இருந்தாலும் துரோணரையே மனதில் குருவாக எண்ணி ஏகலைவன் வில்வித்தையை தானே முயன்று கற்றுத் தேர்ந்தான். இதை அறிந்த துரோணர் ‘ஒரு வேடன் எப்படி அரசனுக்கு இணையானக் கலையைக் கற்றுத் தேரலாம்’ என்று எண்ணி, அவனுடைய கட்டை விரலையே குரு தட்சணையாகக் கேட்டாராம். இந்த இடத்தில் கதையை நிறுத்தி நீங்கள் ஏகலைவனாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என்று கேட்டேன். கதைப்படி கட்டை விரலை அறுத்துக் கொடுத்துவிடுவேன் என்றே பெரும்பாலான மாணவர்கள் கூறினார்கள். அதுதானே இயல்பு. இதோடு நிறுத்திவிட்டோம் என்றால் இது கதை சொல்லி வகுப்பறை நேரத்தைக் கடத்துவது ஆகும்.

நமது பங்கு என்ன?

சிந்தனையை நாம் தூண்டினோமா? இல்லை. அதைத் தூண்ட வேண்டும் என்று இப்படி மாற்றினேன். ஏகலைவன் கதை இன்று நடக்கிறது. நீ இன்று கட்டை விரல் அறுத்துத் தருவாயா? என்றேன். மாணவர்களிடத்தில் ஒரு சின்ன குழப்பம். இப்போது சிலர் இல்லை இல்லை அறுத்துத் தரமாட்டேன் என்றனர். ஏன்? என்றேன். குருவாக இருந்தாலும் தவறான ஒன்றை செய்யச் சொன்னால் செய்ய மாட்டேன் என்றனர். இந்தக் காலத்திலும் இப்படி கேட்பார்களா சார் என்றனர்?. பின்ன… ஏன் அனிதா தற்கொலை செய்து கொண்டார்? என்றேன். அன்றைக்கு துரோணர் ஏகலைவன் கட்டை விரலைக் கேட்டார். கொடுத்தான் ஏகலைவன். இன்றைய  அனிதாவுக்கு மதிப்பெண் பெற்றும் மருத்துவப் படிப்பு படிக்கச் சமூகம் மறுத்தது, உடனே அனிதா தற்கொலை செய்து கொண்டது, இந்தக் காலத்து ஏகலைவன் அல்லவா? நாம் அப்படி செய்து கொள்ளலாமா? இதற்கானத் தீர்வை நாம் யோசிக்க வேண்டாமா? என வினாக்கள் அடுக்கும் போது மாணவர்களிடம் ஒரு சிறு சிந்தனைத் தெளிவு ஏற்படத்துவங்கியது.

விளைவு வெற்றியே:

இதுதான் கதையின் வெற்றி. ஒரு கதை கதைக்கேற்பப் புரிதலையும், தெளிவையும் ஏற்படுத்துவதாக அமைகிறது. இதில் சமூகப் புரிதலை மாணவனிடம் ஏற்படுத்துவது ஆசிரியரின் கடமையாகின்றது. இந்த அடிப்படையில் அந்த வகுப்பு நேரம் கடந்தும் வகுப்பாக அமையாமல் நேரத்தைப் பயன்படுத்தும் வகுப்பாக மாறியது. ஆசிரியர், மாணவர் இருவருக்குமே பயனுள்ளதாக அமைந்தது.

Author: இ. கலைக்கோவன், செங்குந்தர் மே.நி.பள்ளி, ஈரோடு

Subject: 
Tamil

Term: Term 3

0
No votes yet
0
Post a comment