Towards a just, equitable, humane and sustainable society

எண்ணங்களின் வண்ணங்கள்

0
No votes yet
0
Post a comment

சிறப்புக்கூறுகள்:

  • ஓவியம் வரைதல் போன்ற செயல்பாடுகளில் மாணவர்கள் அதீத ஆர்வம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.
  • ஓவியங்கள் மாணவர்களின் பேசும் மொழியாகவும் அமைகிறது.
  • மாணவர்களின் கற்பனைத்திறம் ஓவிய செயல்பாடுகளின் பொழுது அதிகமாகிறது.

ஓவிய வகுப்பு என்றாலே மாணவர்களுக்கு மகிழ்ச்சியான வகுப்பாகவே இருக்கும். கற்றலில், மிக முக்கியமாக மாணவர்களின் ஓவியம் கற்றல் முயற்சிகளுக்காக ஓவிய ஆசிரியர்களின் நிலைப்பாடு, முயற்சி மற்றும் திட்டமிடல் போன்றவற்றிக்கு விடையளிக்க சில உதாரணங்களோடு இக்கட்டுரையைப் படிக்கிறேன். மாணவர்களுடைய திறன்களை வளர்த்தெடுப்பதில் அவர்களுடைய மனநிலை அளவில் நாமும் நமது அணுகுமுறையும் இருத்தல் அவசியம். இவ்வகையில் ஓவியம் கற்றல் மற்றும் கற்பித்தல் எளிய முறையில் சாத்தியம்.

நடைமுறை பாடத்திட்டங்கள், வகுப்பறையை ஒரு குறிப்பிட்ட அளவில் கட்டுப்பட்டுள்ளதாக்குகிறது என்பது என்னுடைய கருத்து. பாடத்திட்டத்திலிருந்து ஓவியக்கண்காட்சியை நோக்கி ஆசிரியர்களின் செயல்திட்டம் அமைந்தால் சிறப்பாக இருக்கும். பின்தங்கிய நிலையிலிருந்து வரும் எம் பள்ளி மாணவர்களைக் கல்வியில்

ஊக்கப்படுத்த ஓவியம் பெரிதும் பயன்படுகிறது. அதோடு தொடக்கப்பள்ளி மாணவர்கள் மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒரே இடத்தில் படிப்பதால் அவர்களை இணைக்கும் புள்ளியாக ஓவியம் உள்ளது. இருவரும் சேர்ந்து ஓவியங்களை வரைந்தார்கள், இதுபோன்ற நிகழ்வுகளில் மெழுகுவண்ணம், வண்ண பென்சில், நீர்வண்ணங்கள், ஆயில் பேஸ்டல், போன்ற பொருட்களை ஆசிரியர்கள் தயார்ப்படுத்தி மாணவர்களின் தன்மைக்கேற்ப பயன்படுத்தி ஊக்கப்படுத்துதல் அவசியம் ஆகிறது.

ஓவியக்கண்காட்சி தயாரிப்பில் ஆசிரியர்களாகிய நாம், நம் மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, முயற்சி மற்றும் திட்டப்பயன் அறிய சில உதராணங்கள் மற்றும் சில மாணவர்களின் செயல்களைக் குறிப்பிட்டுள்ளேன்.

1. 2-ஆம் வகுப்பில் பயிலும் மதன் என்ற மாணவன் பேச முடியாத நிலையில் உள்ள மாணவன். சாதாரணமாக அவனது கிறுக்கலில் முழுமை பெறாத படங்களை, கட்டைவிரல் ஓவியம் மூலம் படங்கள், காட்சிகளாக செயல்வடிவம் பெற்ற நிகழ்வு அந்த மாணவனுக்கு மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவனுடைய கண்களில் பெருமிதத்தைக் காண முடிந்தது.

2. 3-ஆம் வகுப்பினில் பயிலும் ஆரியா என்ற மாணவியின் ஓவியங்கள், மனிதர்களின் குச்சி வடிவங்கள் மூலம் மாணவர்களின் செயல்பாடுகள் அடிப்படையிலான படங்களாக அமைந்தன. இதில் அந்த மாணவியின் கற்பனைத்திறனை அறிய முடிந்தது.

3. 4-ஆம் வகுப்பு ஜெகதீஸ் என்ற மாணவன் கவனச்சிதறல்களால் புரிதலில் சிரமமடையும் மாணவராகக் கருதினேன். ஓவியம் வரைதலில் சிரமம் கொள்ளாமல் அவரின் பங்கு அமைய, Creative Work என்ற முறையில் மெழுகு கோட்டு வண்ணம் தயார்செய்து கருப்பு நிற வண்ணம் கொண்டு ஓவியங்களை நிறைவுசெய்தது அந்த மாணவனின் பங்களிப்பை அதிகரித்தது.

4. 6-ஆம் வகுப்பில் பயிலும் துர்கா என்ற மாணவி, கவனம் மற்றும் நினைவு சிதறல் கொண்ட மாணவி. சக மாணவர்களின் குழு ஒத்துழைப்புடன் அவளை ஊக்கப்படுத்தியதால், ஓவியக் கண்காட்சியில் பங்குபெற செய்தல் சாத்தியமானது.

5. முகேஷ் என்ற மாணவன், ஓவியங்களில் வண்ணம் தீட்டுதலில் திறமையான மாணவர். இந்த ஓவியக்கண்காட்சி திட்டத்தில் Modern Art என்று சொல்லக்கூடிய கண்கவர் ஓவியம் மூலம் மாணவரின் ஓவியம் வரைதலில் உள்ள பரிணாம வளர்ச்சி, மற்ற மாணவர்களின் சிந்தனையைத் தூண்டும் விதமாக அமைந்தது.

6. 7-ஆம் வகுப்பினில் பயிலும் சேதுராம் மெதுவாக கற்கும் திறனுடைய மாணவர் என்று கருதப்பட்ட நிலையில், எதிர்பாராத விதமாக அறிவியல் விழிப்புணர்வு படம் வரைந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி விட்டார்.

7. 8-ஆம் வகுப்பு தமிழ்ச்செல்வன் ஓவியம் வரைதலில், தேசிய நீர் மேலாண்மை ஓவியப் போட்டியில் புதுவை மாநில அளவில் பரிசு பெற்ற மாணவர் ஆவார். தொடர்ந்து அந்த மாணவனின் ஓவியங்களில் நுணுக்கம் நிறைந்த கருத்துப்படங்களாக சிறந்து விளங்கியது.

8. சுவேதா கடந்த ஆண்டு வரை ஓவியம் வரைதலில் பின் தங்கியிருந்தார். இந்த ஆண்டு ஓவியம் வரைதலில் ஆர்வம் ஏற்பட்டு அவளுக்கே உரித்தான பாணியில் ஓவியங்கள் வரைந்து அவருடைய படைப்புகள் சிறப்பு செய்தன.

ஓவியங்கள் வரைதல் வாயிலாக எளிய முறையில் கற்பித்தல் என்பது நமது பண்பாட்டு நிகழ்ச்சிகளை ஒட்டி அமைவது இன்னும் சிறப்பு.

தீபாவளி காட்சிகள், ஊர் திருவிழாக் காட்சிகள், மழைக்காலம் அதை ஒட்டிய ஓவிய காட்சிகள், பொங்கல் நிகழ்ச்சிகள், புத்தாண்டு ஒட்டிய வாழ்த்து அட்டைகளைத் தயாரித்தல் போன்றவை எளிய முறையில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஓவிய வகுப்புகள் அமைவது கற்றல் எளிதாக நடக்க உதவுகிறது.

Author: க. லிங்கேஷ்வர்.,, நுண்கலை ஆசிரியர், Dr. B.R. அம்பேத்கர் நடுநிலைப்பள்ளி,, பிச்சைவீரன்பேட்.

Subject: 
Tamil

Term: Term 3

0
No votes yet
0
Post a comment