Towards a just, equitable, humane and sustainable society

கல்விக் கண்ணோட்டம் – எண் ஐந்தும் - நானும்

0
No votes yet
0
Post a comment

சிறப்பம்சங்கள்;

  • மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் பணிச்சுமை குறையும் என்பதை விட பொறுப்புணர்வு அதிகம் என்பதை உணர முடிந்தது.
  • முறைப்படி எழுத்தையோ அல்லது சொல்லையோ அறிமுகம் செய்ய வேண்டியது இல்லை. முழு சொற்றொடராகவே அறிமுகம் செய்து ஆங்கிலத்தை எளிமையாகக் கற்பிக்க முடியும் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.
  • விளையாட்டுகள் மூலமாகவும் கற்றல் நிகழும், சுற்றுப்புறத்தில் உள்ள இலைகள், குச்சிகள் மூலமும் கணிதம் கற்பிக்க முடியும் எனப் புரிந்தது.

இக்கல்வியாண்டில் நான் கண்ட சவால்களுக்கு எவ்வாறு தீர்வு கண்டேன் என்பதையும் கற்றல் கற்பித்தல் முறைகளையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.    எனக்குப் பெரும் சவாலாக அமைந்தது என் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை தான். ஏனென்றால், முதன் முறையாக மிகக்குறைவான எண்ணிக்கை கொண்ட மாணவர்களோடு இக்கல்வியாண்டு தொடங்கியது.

கோகுல், பிரசன்னகுமார், சுஜித் ஹரிஷ்குமார் மற்றும் ஹேமா ஆகிய ஐந்து மாணவர்களைக் கொண்ட ஒன்றாம் வகுப்பு பொறுப்பாசிரியர் நான். ஐந்து மாணவர்களும் ஐந்து விதமான கற்றல் திறன்களைக் கொண்டவர்கள். ஒவ்வொரு முறையும் நான் பாடத்திட்டம் எழுதும் போது இத்திறன்களை எவ்வாறு கொண்டு சேர்ப்பது, எம்முறைகளை நான் பயன்படுத்த வேண்டும், எந்த அளவிற்கு என் கற்பித்தல் இருக்க வேண்டும் என்றெல்லாம் சிந்தித்து அவர்கள் ஐவருக்கும் ஏற்ற வகையில் அமைத்துக்கொள்வேன்.

சில சமயங்களில் என் திட்டமிடல் கூட வகுப்பறையில் கற்பித்தல் செயலில் தோற்றுப்போய்விடும். அச்சமயம் எனக்குப் பெரும் சவாலாகவே அமைந்தது.  உ.தா. ‘0’ முதல் ‘9’ வரை எண்களை அறிமுகம் செய்த பின்னர் அவ்வெண்களைக் கொண்டு கூட்டல் கற்பித்தேன். ஐந்து மாணவர்களுக்கும் 5 விதங்களில் புரியவைத்துக் கற்பிக்கும் படியான நிலையே என் சவால்.

30 மாணவர்கள் கொண்ட வகுப்பறையாக இருந்திருந்தால் கற்பித்த உடனே குறைந்தது 20 மாணவர்களாவது நன்றாகக் கூட்டல் செய்யும் திறனைப் பெற்று விடுவர். ஆனால், என் 5 மாணவர்களில் ஹேமா என்ற மாணவி மட்டுமே புரிந்து கொண்டு கற்பித்த உடனே கூட்டல் கணக்குகளைச் சரியாகப் போட ஆரம்பித்துவிடுவார். ஆனால், மற்றவர்களுக்கு வேறு ஏதாவது செய்ய வேண்டி இருந்தது.

மறுநாள் மாணவர்களிடம் குச்சி, கூழாங்கற்கள், இலைகள் என என் பள்ளியில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு வரச்சொன்னேன். மாணவர்களும் மிக மகிழ்ச்சியோடு சென்று ஆளுக்கொரு பொருட்களைக் கொண்டு வந்தனர். கொண்டு வந்த பொருட்களைச் சுற்றி நாங்கள் அனைவரும் வட்டமாக அமர்ந்தோம். மூன்று காகிதத் தட்டை வைத்து முதல் தட்டில் 4 இலையும், இரண்டாம் தட்டில் 2 இலையும் எடுத்து வைத்தேன். பிறகு மாணவர்களை எண்ணுமாறு கூறினேன்.

இரண்டு தட்டுகளிலும் உள்ள இலைகளை மூன்றாம் தட்டில் சேர்த்துக் கொட்டச் சொன்னேன், கொட்டிய பிறகு அதை எண்ணச்சொன்னேன். மாணவர்கள் எண்ணி 6 இலைகள் மிஸ் என்று கூறினார்கள்.    உடனே நான் கரும்பலகையில் 4 + 2 = 6  என்று எழுதினேன். பின்பு இதேபோல் மற்ற பொருட்களையும் எடுத்து வைக்கச்சொல்லி, ஒவ்வொரு மாணவர்களாகச் செய்ய அவ்வெண்ணிக்கைகளையும் கரும்பலகையில் எழுதினேன். இம்முறையான கற்பித்தல் ஐவருக்கும் ஏற்றதாக இருந்தது.

இரு நாட்களுக்குப் பிறகு எண்களை எழுதி எண்ணிற்கான புள்ளிகளை வைத்துப் பின்பு கூட்டும் முறையைக் கற்பித்தேன். இம்முறையிலும் என் வகுப்பில் உள்ள மூன்று மாணவர்கள் மட்டுமே எளிதில் புரிந்து கொண்டனர். மீதம் இரண்டு மாணவர்கள் புள்ளியை வைக்கும் போதே தவறு செய்தனர். எ.கா. 6, ஆறு புள்ளிகளை வைக்க வேண்டும் என்றால் அம்மாணவன் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு எனக்கூறிக்கொண்டே ஐந்து புள்ளி, வைத்திருப்பான் இது போன்ற சவாலைத் தீர்க்க அவன் அருகே அமர்ந்து கொண்டு கூடுதல் கவனம் செலுத்திக் கற்பிக்கும் நிலை ஏற்பட்டது. தொடர்ந்து இது போன்ற வெவ்வேறு முயற்சிகளை எடுக்க பழகிக் கொண்டேன்.

தமிழைப் பொறுத்தவரை ஒவ்வொரு பாடத்திற்கும் பாடல், படக்காட்சி, எழுத்து மற்றும் சொற்களை மாணவர்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும். அது எனக்குக் கூடுதல் பொறுப்பாக அமைந்தது. பாடலை ஓசையோடு மட்டும் பாடி நான் அறிமுகம் செய்வதில்லை. அப்பாடல் அடிகளுக்கு ஏற்ற நடனம், அப்பாடலில் வரும் பாத்திரங்களுக்கு(mask) மாஸ்க் செய்து அவர்களுக்கு மாட்டி பாடலைக்கற்பிப்பேன். அவ்வாறு செய்யும் போது எம்மாணவர்கள் மிகுந்த ஆனந்தத்தோடும் ஆர்வத்தோடும் பாடுவார்கள்.

மாணவர்களோடு வட்டமாக அமர்ந்து படக்காட்சிகளைக் காட்டி வார்த்தைகளை அறிமுகப்படுத்துவேன். பின் அதில் இருக்கும் சொற்களைக் கொண்டு ஒரு கதையை உருவாக்குவோம். மாணவர்களோடு திரும்பத் திரும்ப அச்சொற்கள் விடையாக வரும் வரை அவர்களோடு உரையாடுவேன். இடையிடையே வினாக்களையும் கேட்டு வருவேன்.பின்பு அச்சொற்களின் படங்களைக் கரும்பலகையில் வரைந்து மாணவர்களையும் வரையச் சொல்லி ஈடுபடுத்துவேன். பிறகு அச்சொற்களின் முதல் எழுத்தை மட்டும் படங்களோடு அறிமுகம் செய்வேன்.

பட அட்டை, எழுத்து அட்டை,  சொல்லட்டை என மூன்று விதமான அட்டைகளையும் கொண்டு பல்வித பயிற்சிகளைக் கொடுப்பேன். விளையாட்டுகள் மூலம் மாணவர்களின் திறன் அடைவை அறிவேன். விளையாட்டுகளும் கற்றலை மையப்படுத்தியதாக அமையுமாறு சில புது உத்திகளைக் கையாளத் தொடங்கினேன் (எ.கா)

குளம் கரை விளையாட்டு,    சொற்களை எழுதி மடித்து ஒரு பெட்டிக்குள் போட்டுக் குலுக்கி விளையாடும் விளையாட்டு என விளையாடுவோம். சொற்களை எழுதி மடித்து ஒரு பெட்டிக்குள் போட்டுக் குலுக்கி விளையாடும் விளையாட்டில் மாணவர்களை அழைத்து ஆளுக்கொரு சீட்டை எடுக்கச் சொல்லி, அச்சொல்லைப் படித்துவிட்டு மாணவர்கள் அச்சொல்லை வைத்து குளமா அல்லது கரையா என முடிவு செய்து, அதற்குள் போய் அமரவேண்டும்.

ஐந்து மாணவர்களும் அமர்ந்த பின்னர் அவர்களிடம் உள்ள சொல்லைப் படிக்கச் சொல்லுவேன். அச்சொற்களை நான் கரும்பலகையில் எழுதிய பின் அடுத்தச் சுற்றுக்குப் போய்விடுவோம்.    இவ்விளையாட்டு மூலம் மாணவர்களின் படித்தல் திறனைக் கண்டறிய முடியும், மாணவர்களுக்கு நான் உதவி செய்வேன். அதுமட்டுமல்ல நாம் மறந்து வரும் மரபு விளையாட்டுகளையும் என் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி விளையாடி வந்தோம். எ.கா. பல்லாங்குழி, நேர்ப்பழம், குச்சி சேகரித்தல் முதலியன.

இரண்டாம் மொழியாகிய ஆங்கிலம் கற்பித்தலுக்கு மிகவும் உறுதுணையாக இருந்ததது ACE பயிற்சிப்பட்டறை. இதில் பன்னிரெண்டு நாட்கள் தொடர்ந்து ஈடுபட வைத்ததே என் மாணவர்கள் தான். பயிற்சிக்கு முன் ஆங்கிலம் கற்பித்தல் ஒரு பெரும் சவாலாக இருந்தது.

ACE பயிற்சிக்குப் பின் முறைப்படி எழுத்தையோ அல்லது சொல்லையோ அறிமுகம் செய்ய வேண்டியது இல்லை. முழு சொற்றொடராகவே அறிமுகம் செய்து ஆங்கிலத்தை எளிமையாகக் கற்பிக்க முடியும் என்பதை அறிந்து கொண்டு அதை செயல்படுத்தி வெற்றியும் கண்டேன்.

தற்போது என் மாணவர்கள் எது வரைந்தாலும் அதைப் பற்றி ஒன்று அல்லது இரண்டு சொற்றொடர்களை ஆங்கிலத்தில் எழுதும் அளவிற்கு உள்ளனர். சில சமயங்களில் ஆங்கிலமும் தமிழும் கலந்து எழுதுவார்கள். அவ்வாறு எழுதுவதையும் ஊக்கப்படுத்தினோம். காலப்போக்கில் கற்றலில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியது.

நானும் அதை என் வகுப்பறையில் அனுபவப்பூர்வமாகக் கண்டுள்ளேன். அணில் வரைந்த மாணவன் “this is அணில்” என்று எழுதி வந்தான். நானும் சரி என்று கூறி பாராட்டி அணில் என்பது தமிழ் வார்த்தை என்று கூறினேன். அடுத்த நிமிடமே அவன் ஓடிப்போய் “reading corner” – இல் உள்ள animals name –என்ற புத்தகத்தை எடுத்து வந்து காட்டி ‘இதான் வருமா மிஸ்’ என்றான்.

நானும், “ஆமாம்” அணிலுக்கு ஆங்கிலத்தில்  squirrel என்று கூறினேன் உடனே அவன் “ This is a sqirrel” என்று கூறியதே என் கற்பித்தலுக்கான வெற்றியாகக் கருதினேன்.

குறைவான மாணவர்களைக் கொண்டு கற்பிக்கும் போது நமது பணிச்சுமை மிக அதிகம் என்பதை என் அனுபவத்தால் அறிந்து கொண்ட கல்வியாண்டு தான் 2017-18. மிகவும் சவாலாக அமைந்த இக்கல்வியாண்டு என் பணி அனுபவக் காலங்களில் மறக்க முடியாத நினைவுகளாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Author: Rajathilagam

Subject: 
Tamil

Term: Term 3

0
No votes yet
0
Post a comment