Towards a just, equitable, humane and sustainable society

படங்களைப் பார்! படைப்பாளியாகு!

0
No votes yet
0
Post a comment

சிறப்புக்கூறுகள்:

  • கதைகேட்கும் மாணவர்களுக்குக்கதையைக்கூறவாய்ப்பளிக்க வேண்டும்.
  • படங்களைக் கொண்டு கதைகூறினால், மாணவர்களால் அப்படங்களில் உள்ள சொற்களின் துணைக்கொண்டு கதையைக்கூற இயலும்.
  • படைப்பாற்றல் திறனும் கற்பனைத்திறனும் வளர்கிறது.
  • கதைகளின் வாயிலாகச் சொற்களையும் எழுத்துக்களையும் கற்பித்தல் எளிமையடைகிறது.... ஆழமாகிறது.... அர்த்தமுள்ளதாகிறது.

நாங்களும் கதை சொல்லுவோம்:

கதை என்றால் எல்லோர்க்கும் பிடிக்கும்.அதுவும் மழலை மொழியில் கேட்பது என்றால், ஒரு அலாதியான பிரியம். நம் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குப் பல்வேறு கதைகளை நாம் கூறி இருப்போம். அவர்களும் அதைக்கேட்டு....அசைபோட்டு...ஆனந்தத்தில் மூச்சுமுட்டித் திளைத்து இருந்திருப்பார்கள். அவர்களுக்கு நாம் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தால் அவர்களும் கதை சொல்லுவார்கள் என்பது தான் எம் எண்ணம்.என் முதலாம் வகுப்பு மாணவர்களுக்குக் குட்டிக்குட்டிக் கதைகளைக் கூறுவதுண்டு. பாடப்புத்தகத்திலுள்ள படங்களை வைத்துக்கதை கூற முயற்சித்தேன். அப்படத்தில் உள்ள சொற்களை அவர்களால் எளிதில் நினைவில் வைத்திருக்க முடிந்தது. மேலும்,அக்கதையை அவர்களாகவே எடுத்தியம்ப முடிந்தது. நானும் மாணவர்களும் இணைந்து சில படங்களைக் கொண்டு கதை மற்றும் பாடல்களை உருவாக்கினோம். இப்பொழுது என் மாணவர்களுக்குச் சில படங்களைக் காண்பித்துக் கதை உருவாக்கக் கூறினால் அவர்களும் அப்படங்களைக் கொண்டு கதைகளைக் கூறும் இயல்பை அடைந்துள்ளனர்.

நம் சிறுவயதில் ‘ஒரு ஊர்ல’ என்று தொடங்கும் பொதுவான கதைகளை, நாம் எல்லோரும் கேட்டு திளைத்திருப்போம். இன்றைய குழந்தைகளுக்கு நாம் கதை சொல்கிறோமா? என்பதை சுய அலசலுடன் அணுக வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கின்றோம். ‘கதைசொல்லுதல்’ என்பது வெறும் கதை சொல்லுதல் மட்டுமல்ல, கதைகளின் வழியாகக் குழந்தைகள் பெறவிருக்கும் மொழி அறிவு, அன்பு,ஈகைக்குணம் போன்ற பலப்பரிணாமங்களில் குழந்தைகளைப் பயணிக்கவைத்தலாகும்.

வெறும் அறிவுரை மட்டும் கதைகளில் இருந்தால் அவற்றை இன்றைய குழந்தைகள் எளிதாகப் புறந்தள்ளிவிட்டுப் போய்விட வாய்ப்புகள் அதிகம். கதைசொல்லுதல் என்பது சிறப்பான கலை. அப்படிக் கதைசொல்லும் கலையை மாணவர்கள் வளர்த்துக் கொண்டால், மாணவர்களின் கற்பனைத் திறன் மற்றும் மொழி ஆற்றல் வளரும் அல்லவா!

எம் பள்ளி சிறார்களின் ஒலி வண்ணத்தில் உருவான சிறுகதைகள் இதோ உங்கள் வாசிப்புக்கு.

வகுப்பறையில் மாணவர்கள்:    

படம் பார்த்துக் கதை கூறுதல்:

எழுத்து, சொற்கள், வார்த்தைகளைக்கற்பித்தல் போன்ற போதனா முறைகளில் பல குழப்பங்கள் எனக்கு உள்ளன.ஒவ்வொரு மாணவர்களும் தனித்திறன் பெற்றவர்கள். அவ்வாறிருக்க நாம் ஒரு பொருளையோ அல்லது சொற்களையே காண்பித்து அல்லது சொல்லி, அதனை இவ்வாறு தான் கூற வேண்டும் என்று சொல்வதை விட, பிடித்தக் கதைகள், விளையாட்டுகள், படங்கள் மூலம் சொல்லிக்கொடுக்கும்போது அது அதிகமான கற்றல் விளைவுகளைத் தந்தது.

கதை பிறந்த கதை:

நான் முதலில் ட, ப, ம, ர, ழ எழுத்துக்களில் இருக்கும் சொற்களைப் படம், பட்டம், மரம், பம்பரம், பழம்போன்ற படங்களைக்காண்பித்துக் கூற வைத்தேன். ஆனால் மாணவர்களுக்கு அது கடினமாக இருந்தது என்பதை உணர்ந்தேன். மாற்று வழிக்கான தேடலில்‘இச்சொற்களைக் கொண்டு ஒரு கதையை உருவாக்கலாமே’என தோன்றியது.  ஒரு கதையை உருவாக்கி, மாணவர்களுக்குக் கூறினேன். அவர்களும் ஆர்வத்துடன் கேட்டனர்.

என் மாணவர்கள் புத்தகத்தில் உள்ளசொற்களுக்குத்தாங்களாகவே ஒரு கதையை உருவாக்கினார்கள்(கப்பல், கண், பலா, வயல், வானம், மான்). முதலில் மாணவர்கள் ஒவ்வொரு படத்துக்கும் ஒரு நிகழ்வுகளைக் கூறினர். பின்பு நான் சில கேள்விகளைக் கேட்டு, அவர்களின் கருத்துகளைச் சேர்த்து ஒரு கதையாக உருவாக்கினோம்.

கதை:

ஒரு ஊர்ல ஒரு வயல் இருந்தது. அந்த வயல்ல மான் ஒன்று அங்கும் இங்கும் நடந்துனு இருந்தது. அங்க ஒரு பெரிய பலா மரத்துல பலா பழம் காய்திருந்தது. வயலுக்கு மேல வானம் இருந்தது. அதுல இருந்த மேகம் ஒன்னு கப்பல் மாதிரி இருந்தது.

வரிசை சொற்களுக்குக் கதை மற்றும் பாடல் உருவாக்கினோம்:

அ வரிசை முதல் ஔ வரை உள்ள சொற்கள் (அணில், ஆமை, இறகு, ஈ, உழவர், ஊசி, எறும்பு, ஏழு, ஐந்து, ஒன்று, ஓநாய், ஔவை).

கதை கதையாம் காரணமாம்:

மாணவர்கள் முதலில் ஒவ்வொரு படத்தையும் பார்த்து ஒரு நிகழ்வை கூற ஆரம்பித்தனர். அந்நிகழ்வுகள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாமல் இருந்தது. எனவே வரிசையாகச் சொற்களை எடுக்காமல் எந்தப் படச் சொற்களை வேண்டுமானால் பயன்படுத்தலாம் என்றேன்.

பிறகு தேவைப்படும் போது கேள்விகள் கேட்டு மாணவர்கள் சொல்ல சொல்ல உருவான மற்றொருகதை இதோ…

“ஒரு ஊர்ல ஒரு அணில் இருந்தது. அந்த அணில் மாமரத்துல ஐந்து மாம்பழம் பறிச்சிட்டு இருந்தது. நான்கு மாம்பழம் சாப்பிட்டு ஒரு மாம்பழத்தை ஔவைக்காக  வைத்திருந்தது. கீழே போட்ட மாங்கொட்டையில் ஈக்கள் மொய்த்தன. ஏழு எறும்பு மரத்தின் மேல ஏறியது. மாமரத்துக்குப் பின்னாடி ஒரு குளம் இருக்கு. அதுல ஒரு ஆமை வாழ்ந்து வந்தது. அவ்வழியே உழவர் ஒருவர் வருகையில் அவர் காலில் ஊசி குத்தி விட்டது. அதனை எடுப்பதற்காக மாமரத்தின் அடியில் உட்கார்ந்தார். அவ்ஊசியை எடுத்தார். இரத்தம் வழிய,இரத்தத்தை அங்குக் கிடந்த இறகு மூலம் துடைத்தார். உழவர் அங்குக் கிடந்த மாமரத்து விதையை வீட்டிற்கு எடுத்துச் செல்லும் போது வழியில் ஒரு ஓநாயை பார்த்து வேகமாக வீட்டிற்குப் பயந்து ஓடிச் சென்றார். அந்த விதையை மண்ணில் புதைத்து வைத்து தண்ணீர் ஊற்றினார்.

  

பாரதியாக எம் முத்துக்கள்:

நானும் மாணவர்களும் சேர்ந்து ஒரு பாடல் உருவாக்கினோம். (க வரிசை சொற்கள்)

முதல் வரியை நான் பாட ஆரம்பித்தேன்.

கரடியே கரடியே எங்கிருக்க

காட்டுக்குள்ள நானிருக்கேன்.

அடுத்ததாக மாணவர்களைக் கேட்டேன். ‘கி’ எழுத்தில் தொடங்கும் சொற்களைக் கூறச் சொன்னேன்.

மாணவர்கள் கிளி, கீரி, கிருஷ்ணா என்று கூறினர்.

கிளியே கிளியே எங்கிருக்க

கீற்று மேல நானிருக்கேன்.

‘கு’ எழுத்தில் தொடங்கும் சொற்கள்

மாணவர்கள்: குரங்கு, குரு, குயில்

குயிலே குயிலே எங்கிருக்க

கூரை மேல நானிருக்கேன்.

‘கெ’ எழுத்தில் சொற்களைக் கண்டறிய மாணவர்களுக்குச் சிரமமாக இருந்தது. எனவே, நானே

கெண்டை மீனே எங்கிருக்க

கேணிக்குள்ள நானிருக்கேன்.

கைத்தட்டி நாமும் பாடிடுவோம்.

‘கொ’ எழுத்தில் மாணவர்கள் ‘கொக்கு, கொரங்கு’ என்றனர்.

கொக்கே கொக்கே எங்கிருக்க

கோயில் வெளியே நானிருக்கேன்.

கௌதாரியே எங்கிருக்க

நீயே பார்த்துத் தெரிஞ்சிக்கோ.

பின்னர் மாணவர்களை இப்பாடலைப் பாட வைத்து அதற்கான படங்களை இணையத்தில் தேடி ஒரு காணொளி உருவாக்கினோம்.

SSA புத்தகத்தைப் பார்த்துக் கதை கூறுதல்:

மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு பள்ளியிலும் ‘Reading corner’ அமைக்கப்பட்டது. எங்கள் பள்ளியின் ஒன்றாம் வகுப்பிலும் ‘ Reading corner’ உள்ளது. அதில் நிறையப் படக்கதைப் புத்தகங்களும் SSA படக்கதைப் புத்தகங்களும் உள்ளன. அவற்றை மாணவர்கள் அவ்வப்போது எடுத்துப் படித்துச் சில நேரங்களில் கிழிப்பதும் உண்டு. படங்கள் உள்ள ஆங்கில புத்தகங்களை மாணவர்களுக்குக் கொடுத்துக் கதைகூற சொன்னேன். தமிழ்ப் படப்புத்தகங்களை மாணவர்களை எழுத்துக்கூட்டியும், படத்தைப் பார்த்தும் கதைகளைப் புரிந்து கொள்வார்கள். ஆனால் ஆங்கில புத்தகத்தைப் படத்தைப் பார்த்து மட்டுமே நிகழ்வுகளையோ, கதைகளையோ யூகிப்பார்கள். சில சமயம் அவர்களின் யூகிப்புக் கதைக்கு ஒத்துப்போகும். சில சமயம் அவர்களாகவே ஒரு புதுக் கதையை உருவாக்குவார்கள். புத்தக வாசிப்பின் போது குழுவாக மாணவர்களைச் செயல்பட வைத்தால் அவர்களது கற்பனைத் திறனில் புதுப் புது நிகழ்வுகள் மற்றும் கதை உருவாகும் என்பதில் ஐயமில்லை. ஒவ்வொரு மாணவ மாணவிகளும் ஆர்வத்தோடு படத்தைப் பார்த்துக் கதையைக் கூறினார்கள். அதில் ஒரு புத்தகத்தில் உள்ள கதை அவர்கள் தமிழ்ப் பாட புத்தகத்தில் ஏற்கனவே படித்து, நடித்தக் கதை என்பதால் அவர்கள் அக்கதையை நடித்து கதை கூறினார்கள்.

கதையைக் கேட்டு வரைதல்:

மாணவர்களுக்குப் பிடித்தச்  செயல்களுள் ஒன்று படம் வரைதல். ஏதோ ஒரு படத்தை வரைவதற்குப் பதிலாக, ஏன் ஒரு கதைக்குப் படம் வரைய வைக்கலாமே என்ற எண்ணம் தோன்ற,மாணவர்களுக்கு அவர்கள் ஆங்கில புத்தகத்தில் உள்ள ஒரு கதையைக் கூறினேன்…

அப்புவும் அவன் நண்பனும்:

அப்பு என்ற யானை அவன் தையல்கார நண்பன் குறும்புச் செய்யும் போது, அதற்கு யானை தனது புத்திக் கூர்மை மற்றும் நினைவாற்றல் மூலம் பதிலடி தந்தது.

மாணவர்கள் நான் கூறிய கதையைக் கேட்டு, அதற்குப் படத்தை வரைந்து பின்னர் அவர்களின் மழலை மொழியினில்  கதையைக் கூறினர்.

கதை அனுபவம்:

மொழிப் பாடத்திற்குக் கதை கூறுதல் என்பது இன்றியமையாத ஒரு கற்பிக்கும் முறை. ஆசிரியர்கள் கதை, உரையாடல், பாடல் மூலமாகக் கற்பிக்கும் போது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கற்பித்தல் மகிழ்ச்சியைத் தரும்.

இவ்வாண்டு கதை மற்றும் பாடல்கள் மூலம் சில பாடங்களைக் கற்பித்தேன். அதற்கு மாணவர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு இருந்தது. வருகிற கல்வியாண்டில் அனைத்துப் பாடங்களுக்கும் இதனை முயற்சிக்க உள்ளேன். நாம் மாணவர்களோடு இணைந்து உருவாக்கும் கதை மற்றும் பாடல்கள், கற்றல் கற்பித்தலுக்கு மிகவும் உதவும்.

குறிப்பு:

  • மூன்றாம் பருவத்தில் முயற்சித்தது.
  • இதன்இணைப்பாகமூன்று வீடியோக்கள் புகைப்படங்கள் உள்ளன.

உதவிய நூல்கள்:

  1. பாடப்புத்தகம்
  2. ‘புத்தகப்பூங்கொத்து’ புத்தகங்கள்
  3. கதைக்குள் கதை

Author: சசிகுமார், தொ.ப.அ, அ.ந.ப.,மணப்பட்டு புதுச்சேரி.

Subject: 
Tamil

Term: Term 3

0
No votes yet
0
Post a comment