Towards a just, equitable, humane and sustainable society

நடந்தது என்ன? - தமிழ்ப்பாடமும் நடந்தவைகளும்

0
No votes yet
0
Post a comment

சிறப்பம்சங்கள்:

  1. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஆசிரியர் வெவ்வேறு முயற்சிகளை எடுக்க முடியும். அம்முயற்சிகளைப் பாடத்தின் மூலமாகவும் கொண்டு செல்ல முடியும்.
  2. குழந்தைகளுடன் உரையாடுதல், பெற்றோர் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தல், குழந்தைகள் பாதுகாப்பு மையம் போன்ற சிறப்பு அழைப்பாளர்களுடன் பேசவைத்தல் மற்றும் பள்ளி அளவில் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தல் எனt தொடர் நிகழ்வுகளைச் செய்ய முடியும்.
  3. ஆசிரியர் கற்றலுக்குக் கமலாபாசின் அவர்களின் “யாரேனும் இந்த மவுனத்தைத் தகர்த்திருந்தால்”என்ற புத்தகம் பேருதவியாக இருந்தது..

பாடம் பற்றி:

வீட்டிற்குச் சீக்கிரமாக ஓடிப்போக ஆசைப்படும் குழந்தையிடம் அந்நியர் ஒருவர், என்னுடன் சைக்கிளில் வா! என்று அழைக்கிறார். அக்குழந்தை என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியோடு முடியும். மலர் என்ன செய்திருப்பாள்? என உரையாடலைத் தொடங்க வேண்டும்.

பாடத்திட்டம்:

1) மாணவர் பாடத்தில் வரும் பாத்திரமாக மாற சூழலை ஏற்படுத்துதல்,

    கதை சொல்லல் மற்றும் பின் பாடத்தை வாசித்தல்.

2) உரையாடல்:

விருந்தாளி அல்லது வித்தியாசமான மனிதர்கள் யார்?

புது இடம் – மறைவான இடம் – உணரவைத்தல்

நாங்கள் இருவரும் இப்பாடத்தைப் பற்றி ஒன்றாகத் திட்டமிட்டோம். ஆனால் வெவ்வேறு மாதிரி செயல்படுத்தியுள்ளோம்.   இரு வேறு அனுபவங்களும் உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் சேர்ந்து பகிர்ந்து கொள்கிறோம்

வகுப்பறையில் கலந்துரையாடல் ( சுபாஷினி):

முதல் பகுதியை மாணவர்களுக்கு நான் திட்டமிட்ட படி செய்து முடித்து உரையாடலைத் தொடங்கும் பொழுது குழந்தைகளின் பதிலில் வித்தியாசங்களைப் பார்க்க முடிந்தது.

  • திருடிட்டு போய்டு வாங்க.
  • கொல பன்னிடுவாங்க.
  • கடத்திடுவாங்க
  • தொலைஞ்சி போயிடுவோம் – என்ற பதில்களைக்கூறினர்.

செல்வி:  தப்பா நடந்துக்குவாங்க - சைல்ட்லைன்ல (Child Line) சொன்னது மாதிரி என்று கூறினாள்.

கண்ணம்மா: தோப்புல ரெண்டு பேரயும்  (பெயர்களைக் குறிப்பிட்டு)  கூட்டிட்டுப் போயி தப்பா செஞ்சாங்க. நான் அவுங்க அம்மாகிட்ட போயி சொன்னேன். அவுங்க அம்மா அவள அடிஅடின்னு அடிச்சி வீட்ட விட்டே போகக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க.   

வகுப்பறையில் இப்பாடம் முடிவடையாமல் இடையில் நின்றது. கண்ணம்மா குறிப்பிட்ட அந்தப் பெண்ணைக் கூப்பிட்டு பேசுவதா? அப்படிப் பேசினால் அடி வாங்கிய அவள் என்ன செய்வாள் என்ற கேள்வியுடன், இதைப்பற்றி உரையாடினேன். கமலாபாசின் அவர்களின் “யாரேனும் இந்த மவுனத்தைத் தகர்த்திருந்தால்”புத்தகம் கிடைத்தது;  நானும் நாதனும் சேர்ந்து படித்தோம். புரிதல் உரையாடலில் விரிவானது. சென்ற ஆண்டு இது தொடர்பாக நான் பார்த்த படம், சைல்டு லைன் உரையாடல் என எல்லாவற்றையும் சேர்த்து ஒரு முடிவுக்கு வந்தேன். பெற்றோர் ஆசிரியர் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தேன்.

பெற்றோர் ஆசிரியர் கூட்டம்:

பெற்றோர்களுக்கான கூட்டம் அடிக்கடி ஏதேனும் ஒரு விஷயத்தை முன்னிட்டு தொடர்ந்து நடந்து வருவதால் பெற்றோர்கள் இந்தக் கூட்டத்தை முக்கியமானதாகக் கருதி வந்திருந்தனர். குழந்தைகளின் பாதுகாப்பைப் பற்றிப் பேச அழைத்திருப்பதாகக் கூறி உரையாடத் துவங்கினேன்.  விளையாடும் பொழுது அடித்துக்கொள்கின்றனர். ரோட்டில் அலட்சியமாக நடந்து செல்கின்றனர், அவர்களை வீட்டில் தனியாக விட்டு விட்டுப் போகிறோம், சமூகத்தில் ஏதேதோ நடக்கிறது, பாதுகாப்புடன் இருக்காங்களா பாதுகாப்பு இல்லாம இருக்கங்களா? என்று துவங்கினேன்.

-    நான்காம் வகுப்பும் கிழவியின் அம்மா பேசத் துவங்கினார். “எங்கள் வீட்டிற்கருகில் குழந்தைக்கு ஒரு பிரச்சனை நடந்துச்சி. (அதை லேசாகக் குறிப்பிட்டு) போலீஸ் ஸ்டேஷன் வரை போயிருக்கோம். என் மகளும் அவ கூட தான் இருப்பா... விளையாடுவா. ஆனா நீங்க பள்ளிக்கூடத்துல இதெல்லாம் சொல்லித்தறீங்கன்னு என் மகள் சொன்னாள்’என்று முடித்தார்கள்.  அதற்காகச் சிலர் சிரித்தனர்.

மீண்டும் குறுக்கிட்டேன் “இது முக்கியமானதாக இருந்தால் பேசலாம். இதைப் பேசுவது தப்பு என்று நினைக்கிறீர்களா? என்றதும் அமைதியாகினர்.  சிறு அமைதிக்குப்பின் மீண்டும் உரையாடத்துவங்கினர்.

-    இரண்டு பேர் அப்பகுதியில் நடந்த சம்பவங்கள் சிலவற்றைக் குறிப்பிட்டனர். குழந்தைகள் காணாமல் போனது, வேலைக்கு நிம்மதியா போக முடியாதது எனச் சிலவற்றைக் குறிப்பிட்டனர்.

-    அப்பாக்கள் – அமைதியாவே இருந்தார்கள் ஆனால் நன்றாக கவனித்தார்கள்.

-    முக்கியமானது தான் நாங்கள் இது பற்றி வீடுகளில், தெருக்களில் பேசுகிறோம். குழந்தைகளைக் கண்காணிக்கிறோம் என்று முடித்தனர்.

கூட்டம் முடிந்ததும் பவானியின் அம்மா – அவ குண்டா இருக்கிறதாலயும் சுத்தி பிரச்சனையா இருப்பதாலயும் பேசுங்க மிஸ். எனக்குப் பயமாவே இருக்கு என்று தனியாக வந்து பேசிவிட்டுச் சென்றார்கள்.

அனைத்து மாணவர்களுடனும் உரையாடல்:

மாணவர்கள் என்னிடம் பெற்றோர் கூட்டத்தில் என்ன பேசினீர்கள்? என்று கேட்டார்கள். அச்சமயம் எல்லா மாணவர்களையும் ஒரு இடத்தில் உட்கார வைத்து, மூன்றாம் வகுப்புப் பாடத்தைப் படித்து உரையாடலுக்குச் சென்றோம்.   

பாதுகாப்பு என்றால் என்ன?

தனிப்பட்ட பாதுகாப்பு என்ன என்பதைப் பற்றிக் கேட்டோம்.

5 – ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே சிரிப்பு.

மூன்றாம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் மட்டும் முறையாகப் பதிலளித்தனர். மொத்த வகுப்பிற்கும் பாதுகாப்புப் பற்றிப் பேசியதோடு, சக மாணவர்களின் பாதுகாப்புப் பற்றிப் பேசியதோடு என்ன செய்ய வேண்டும் என விவாதத்திற்குப் பின் விவரித்தோம்.

என் வகுப்பு: (நாதன்)

முதல் அனுபவம் என்பதால் யோசித்து யோசித்துச் செயல்பட்டேன். வகுப்பில் பெரும்பாலும் மாணவிகள் என்பதால் கட்டாயம் பாதுகாப்புக் குறித்துப் பேசியாக வேண்டும் என்ற உறுதி இருந்தது. எண்ணமும் திட்டமிடலும் வகுப்பறைக்கு உதவியது.

இப்பாடத்தைக் கதை போல சொல்லி முடித்து பேசத்துவங்கினேன். தெரியாதவர்கள் கூப்பிட்டால் போகக்கூடாது, “என்னாது!” என்று ஒரு மாணவி சிரிக்கத் துவங்கினாள். சிரிப்பைக் கடந்து உரையாடலுக்கு இழுத்து வர பொறுமை தேவைப்பட்டது. ஏனென்றால்  ‘அவங்க கெட்டவங்களாக் கூட இருக்கலாம், ஏதாவது பன்னுவாங்க. ஆம்பள கூட பத்திரமா இருக்கனும்ன்னு சொல்லி முடித்ததும், ஆண்களுடன் கவனமா இருக்கிறதுன்னா என்ன?’ என்று கேட்ட பொழுது, ‘அவுங்க கிட்ட தனியா போகக்கூடாது' -  என்று கூறினர்.

“நீங்கள் சொன்னது சரி தான். உங்களுக்குத் தெரிஞ்சவுங்க, தெரியாதவுங்க யாராக இருந்தாலும் தனியா வரச் சொன்னா போகக்கூடாது. நீங்கள் தனியா இருக்கும் பொழுது மடியில் உக்காரு என்றாலோ, முத்தம் தருகிறேன் என்றாலும் கூட அனுமதிக்கக்கூடாது. கட்டிப்பிடித்துக் கொஞ்சுவது, சட்டை, ஜட்டிக்குள் கை விடுவதையெல்லாம் அனுமதிக்கக் கூடாது என்று விளக்கினேன்.” குழந்தைகள் சில கேள்விகளெல்லாம் கேட்டனர்.

“அண்ணன் சடையைப் பிடித்து இழுத்தாலும் அனுமதிக்கக்கூடாதா?” என்று கேட்டனர். உங்களுக்கு அது பிடிக்காவிட்டால், வலித்தால், ரகசியமாகச் செய்தால்... அம்மாவிடம் சொல்லி அதை நிறுத்த வேண்டும் என்று முடித்தேன்.

ஆனால் நான்காம் வகுப்புடன் இது பற்றிப்பேசுவது என்று பேசத்துவங்கினேன். இரண்டு மாணவிகள் வெட்கப்பட்டுக் கொண்டே சிரித்தனர், தலைகவிழ்ந்து, குனிந்து சிரித்துக்கொண்டனர். அதனால், மூன்றாம் வகுப்புப் பாடப்புத்தகத்தைக் கொண்டு வந்து அவர்களிடம் கொடுத்து வாசிக்கச்சொன்னேன், அவர்களும் வாசித்தனர். வாசிப்பு முடிந்ததும் உரையாடல் தொடர்ந்தது.   கேள்விகளுக்குப் பதில் சொல்லாவிட்டாலும் கவனிக்கத்துவங்கினர். நல்ல தொடுதல் கெட்ட தொடுதல் பற்றிக் கூறினேன். “வெளியிலுள்ளவர்கள் வீட்டில் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் தனியாக அழைத்தால் யோசிக்க வேண்டும். அம்மா அப்பாவிடம் சொல்ல வேண்டாம் என்று சொன்னால் அவர்கள் ஏதோ தப்பு செய்கிறார்கள் என்று எடுத்துக்கூறினேன்.”

ஐந்தாம் வகுப்பிற்கும் மூன்றாம் வகுப்புப் புத்தகத்தை எடுத்துச் சென்று, நான்காம் வகுப்பு மாதிரியைப் பின்பற்றினேன். ஆனால் ஐந்தாம் வகுப்பு மாணவிகள் கெட்ட மனிதர்கள் என்பதற்கு நிறைய விளக்கம் அளித்தனர்.

“கறுப்பாக இருப்பார்கள்”

“போதையில் இருப்பார்கள்”

“பாலத்தின் குட்டைச்சுவரின் மேல் அமர்ந்து கிண்டல் செய்வார்கள்”

என விவரித்தனர். கெட்ட மனிதர்கள் சிகப்பாகவும் இருப்பார்கள்...  படித்தவர்களாகவும் இருப்பார்கள் என்று அங்கு நான் சொல்லவில்லை, சொல்லியிருக்க வேண்டும் என்று மட்டும் எண்ணினேன். குழந்தைகளிடம் எப்படி நினைப்பதையெல்லாம் பேச முடியும்?

முதல் முறையாகக் குழந்தைகளிடம் பாலியல் துன்புறுத்தல், நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் பற்றிப்பேசியது, ஒரு நல்ல வேலையைச் செய்தது போல் இருந்தது. அடுத்தமுறை இன்னும் சிறப்பாகத் திட்டமிட்டு செயல்பட முடியும் என்ற நம்பிக்கையைத் தந்தது. சமீபத்தில், ஒரு நாள் “இப்புத்தகத்தில் உங்களுக்கு எந்தப்பாடம் பிடித்தது?’ என்று அசிம் பிரேம்ஜியிலிருந்து வந்தவர்கள் என் வகுப்பில் கேட்டார்கள். அனைத்து மாணவர்களும் இப்பாடத்தைத் திறந்து இப்பாடம்தான் என்றனர். எனக்கு அது இன்னும் உந்துதலாக இருந்தது.

குறிப்பு:

-    இப்பாடம் முதல் பருவத்தில் வந்திருந்தால் இன்னும் நிறைய தொடர் செயல்பாடுகளைச் செழுமையாக எடுத்துச் சென்றிருக்க முடியும்.

-    இப்பாடம் நடத்தும் பொழுது, பாடத்தில் உள்ள மனிதர்களைப் புரிந்து கொள்ளுதல் பயிற்சியைக் கவனம் செலுத்த முடியவில்லை.

-    பாடத்தில் நாம் உரையாட வேண்டிய விஷயம் பொதுமைப்பட்டு இருப்பதால் எந்தக் குறிப்பிட்ட பாதுகாப்புப் பற்றி ஆசிரியர் பேச வேண்டியுள்ளது என்பது தெளிவாக இல்லை.

-    எங்கள் பள்ளியிலுள்ள பகுதியில் 2 குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர், ஒரு குழந்தை காணாமல் போனது, குழந்தைகளுக்கிடையேயான சண்டையில் ஏற்படும் காயங்கள் எனப்பலவற்றை ஆசிரியராக உற்றுப்பார்க்க முடிந்தது.  பல பெற்றோர்கள் இதைப்பற்றி உரையாடத் தயாராக இருந்தனர். இவையெல்லாம் ஆசிரியராக, நாம் பாடத்தின் மூலமாகவும் குழந்தைகளின் வெவ்வேறு சிக்கல்களைப் புரிந்து கொண்டு செயல்படவும் முடியும்... அது நம் கடமையாகவும் உள்ளது.

-    இப்பாடம் மற்றும் இது தொடர்பான உரையாடலுக்குப் பிறகு மாணவர்கள் எங்களை நெருக்கமானவர்களாக உணர்ந்ததைக் கவனிக்க முடிந்தது.

-    இப்பாடம் எப்படி நடத்தினீர்கள் என்று சில ஆசிரியர்களிடம் கேட்டோம். “வாசித்துவிட்டு விட்டுவிட்டோம், பெண்பிள்ளைகளைத் தனியாக அழைத்துப் பேசினேன்”என்பது போன்ற பதில்கள் மட்டுமே கிடைத்தது.

-    வெவ்வேறு பள்ளி மாணவர்களிடம் கேட்ட பொழுது, “எங்களுக்கு இப்பாடம் நடத்தவில்லை, நாங்களே படித்தோம்”என்று குறிப்பிட்டனர்.

உதவியவைகள்:

-    அசிம் ப்ரேம்ஜியில் நடந்த ஆசிரிய உரையாடல் .

-    கமலாபாசின் அவர்களின் “யாரேனும் இந்த மவுனத்தைத் தகர்த்திருந்தால்” புத்தகம்.

-    கடந்த ஆண்டு சைல்ட்லைன் மூலம் நடந்த நிகழ்வு.

Author

ஜி. சுபாஷினி, அ.தொ.ப , நோணாங்குப்பம், புதுச்சேரி.

அ. நாதன், அ.தொ.ப, சின்னகரையாம்புத்தூர், புதுச்சேரி.

Subject: 
Tamil

Term: Term 3

0
No votes yet
0
Post a comment