Towards a just, equitable, humane and sustainable society

பாடம் படமானது

0
No votes yet
0
Post a comment

சிறப்பம்சங்கள்:

  • பாடங்களைப் படைப்பாக மாற்றுவதால் மாணவர்களிடையே கற்றல் எளிமையாகிறது.
  • பாடப்புத்தகத்திற்கும் சுற்றுச்சூழல்களுக்குமிடையே முரண்கள் இருப்பதாக உணர்கின்றனர்.  படைத்தல் நிகழ்வு முரண்களை முறியடிக்க முற்படுகிறது.
  • பாடல்கள், கதைகள், களப்பயணம் போன்ற செயல்பாடுகளினால் கற்றல்  ஆழமானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் உள்ளது.

பணிசார்ந்த ஆர்வங்கள்:

ஆசிரியப்பணி நான் மிகவும் விரும்பி ஏற்ற பணி. என்னுடைய பார்வையில் கற்பித்தல் என்பது மாணவர்களுக்கு அனுபவங்கள் மூலம் கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாகும். நுட்பமான வித்தியாசமான கற்பித்தல் முறைகளையே அதிகம் விரும்புவேன்.

படைப்பு:

மாணவர்களுக்கு சூழ்நிலையியல் பாடம் தொடர்பான குறும்படம் ஒன்று தயாரித்தோம். இதில் முழுக்க முழுக்க மாணவர்களை ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் நடிக்கச் செய்து தயாரித்துள்ளோம். இப்படம் உருவான கதை மற்றும் மாணவர்களின் செயல்பாடுகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நோக்கம்:

நான்காம் வகுப்பு சிபிஎஸ்இ சூழ்நிலையியல் பாடத்தில் Busvas’s Farm என்ற பாடத்தில் விவசாயம் செய்யும் வழிமுறைகள் மற்றும் அதற்காகப் பயன்படுத்தப்படும் கருவிகள் போன்றவை விளக்கப்பட்டிருந்தது. அந்தப் பாடத்தை மாணவர்களுக்கு அனுபவப்பூர்வமாக அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென நினைத்தேன்.

களப்பணி:

மாணவர்களை எங்கள் பள்ளிக்கு அருகில் உள்ள மாதூர் வேளாண் பண்ணைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு மாணவர்கள் நேரடியாக விவசாயிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினார்கள். இந்தக் கலந்துரையாடலின் வாயிலாக விவசாயம் செய்யும் முறை, விவசாயக் கருவிகள், உரம் தயாரிக்கும் முறை போன்றவற்றை உற்றுநோக்கி அறிந்துகொண்டனர். மேலும் நீர் பற்றாக்குறையினால் விவசாயிகள் அடையும் இன்னல்களையும், அவர்களின் வாழ்வாதாரம் நலிவடைவதையும், அதனால் விவசாயம் நலிவடைந்து வருவதையும் விவசாயிகள் எடுத்துக்கூறினர். இதனால் ஏற்படும் எதிர்கால பாதிப்புகளையும், விவசாயத்தை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும் என்றும் எடுத்துக் கூறினர். அது மாணவர்களுக்கு மட்டுமின்றி எங்களுக்கும் மனதளவில் நெகிழ்ச்சியையும் பாதிப்பையும் ஒருசேர ஏற்படுத்தியது மாணவர்களுக்கு விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் அதற்கு நீர் சேமிப்பு இன்றியமையாதது என்பதையும் உணர்த்த திட்டமிடலை மேற்கொண்டோம்.

அனுபவங்கள் நாடகமாக உருப்பெறுதல்:

மாணவர்கள் நேரடி அனுபவம் மூலம் கற்றதை மேலும் வலுப்படுத்தும் வகையில் விவசாயம் மற்றும் நீரின் இன்றியமையாமையை உணர்த்தும் விதமாக ஓர் இசை நாடகம் தயாரிக்கலாமென முடிவெடுத்தோம். நாடகத்திற்குத் தொடர்புடைய வரிகளைக் கொண்ட பாடல்களைப் பதிவுசெய்து மாணவர்களையும் நடிக்கச் செய்து அதை வகுப்பறையில் இசை நாடகமாக நிகழ்த்தினோம்.மாணவர்கள் நடித்ததோடு மட்டுமல்லாமல் கற்றலில் மிகுந்த ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் ஈடுபட்டனர்.

நாடகம்  குறும்படமானது:

வகுப்பறை நாடகத்தைப் பார்வையிட்ட பள்ளித் தலைமையாசிரியர் திரு.ச. விஜயராகவன் அவர்கள் இதைக் குறும்படமாகத் தயாரிக்கத் திட்டமிட்டார். பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் திரு. ஊ. சுரேஷ்குமார் ஆகியோரின் பெரும் முயற்சியாலும் பங்களிப்பாலும் எங்கள் நாடகம் குறும்படமானது.

மாணவர்கள் மற்றும் பெற்றோர் மனநிலை:

வகுப்பறையில் நடித்த மாணவர்களைக் களத்திற்கு அழைத்துச் சென்று படப்பிடிப்பை நடத்தினோம். இதில் மாணவச் செல்வங்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர் மேலும் ஈடுபாட்டுடன் நடித்தனர். பிள்ளைகள் குறும்படத்தில் நடிப்பதை எண்ணி பெருமிதம் கொண்ட பெற்றோர்களும், பொதுமக்களும் படப்பிடிப்பில் பெரும் பங்களிப்புக் கொடுத்தனர்.

உதவிக்கரங்கள்:

‘பொத்தனூர் தபால் நிலையம்’ என்ற படத்தில் துணை இயக்குநராக பணியாற்றிய திரு. விக்னேஷ் அவர்கள் வெற்றிகரமாக இக்குறும்படத்தை இயக்கினார். இவ்வாறு எங்கள் முயற்சியைக் குறும்படமாக்கிய பெருமை படக்குழுவினர், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள், பெற்றோர், பொதுமக்கள், மாணவர்கள் என அனைவருக்கும் உண்டு.

வலுவான கற்றல்:

இந்தக் குறும்படத் தயாரிப்பு அனுபவம் மாணவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாத இனிய அனுபவத்தை ஏற்படுத்தித் தந்ததாக மாணவர்கள் கூறினர். இதில் மாணவச் செல்வங்கள் நடித்தனர் என்பதை விட வாழ்ந்தனர் என்பதே பொருத்தம்.

மாணவர்கள் களத்திற்கே சென்று நடித்ததால் விவசாயம் எப்படி நடைபெறுகின்றது, அதற்குத் தண்ணீரும், காலமும் சூழ்நிலையும் எவ்வாறான பங்குகள் வகி(கு)க்கின்றன என்பதைத் தங்களுடைய அனுபவமாக்கினர்.

விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் விவசாயிகளின் உழைப்பையும் மதித்துப் பெருமிதப்பட்டனர். மேலும் ஒரு சிலர் எதிர்காலத்தில் விவசாயிகளாக இருக்க விருப்பம் தெரிவித்தனர்.

“நீரின்றி அமையாது உலகெனின் யார் யார்க்கும்

            வானின்றி அமையாது ஒழுக்கு.”

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்

                 தொழுதுண்டு பின் செல்பவர்.”

- என்ற வள்ளுவரின் வரிகளை உணர்ந்து மழைநீர் சேகரிப்பின் இன்றியமையாமையையும், விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் நிலையாக மாணவர்கள் உணர்ந்து கொண்டனர்.

சிறப்பு:

இக்குறும்படத்தை நாங்கள் பள்ளி ஆண்டு விழாவில் வெளியிட்டபோது பல உயரதிகாரிகள், முக்கியப் பிரமுகர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரின் பாராட்டுக்களையும் பெற்றுத்தந்தது. மேலும் தூய்மை இந்தியா திட்டத்தில் எங்கள் பள்ளி தேசிய விருதினைப் பெறுவதற்கு இப்படம் முக்கிய காரணியாக அமைந்தது.

பிரதிபலிப்பு:

இதுபோன்ற செயல்பாடுகள் மூலம் மாணவர்களுக்கு அனுபவப்பூர்வமான நிலையான கற்றல் நடைபெறுகிறது. குழுச்செயல்பாடு, சமூகப்பங்கேற்பு போன்ற மனப்பான்மைகள் வளர்கிறது. மாணவர்களிடையே இயற்கையைப் பாதுகாக்கும் மனப்பான்மையை வளர்க்கிறது. மாணவர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் ஒரு புதுவித கற்பித்தல் அனுபவத்தைப் பெற்றுத்தந்தது.

நன்றி!

Author: ஐ. விஜயலட்சுமி அ.தொ.ப, கோட்டுச்சேரி பேட், காரைக்கால்.

Subject: 
Tamil

Term: Term 3

0
No votes yet
0
Post a comment