Towards a just, equitable, humane and sustainable society

சிறப்புத் திறன் குழந்தைகளுக்கான சிறப்பானக் கல்வி

0
No votes yet
0
Post a comment

சிறப்புக்கூறுகள்

  1. சிறப்புத்திறன் உடைய குழந்தைகளுக்கு மொழி கற்பித்தலில் எடுக்கவேண்டிய முயற்சிகள்.
  2. செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கு மொழி கற்பிக்கும் முறைகள் மற்றும் நுட்பங்கள்.
  3. செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகள் மற்றவர்களிடமிருந்து எவ்வாறு வேறுபடுகின்றனர்?.

என் பெயர் ஸ்ரீ ஜெயஸ்ரீ. நான் தற்போது ஆனந்த ரங்கப்பிள்ளை அரசு சிறப்புப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிகிறேன். நான் முதன் முதலில் சிறப்பாசிரியராக என் பணியைத் தொடங்கும் போது எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் சாதாரணப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் ஒவ்வொரு ஆசிரியரும் தன் பணிக்காலத்தில் குறைந்தது இரண்டு, மூன்று செவித்திறன் குறையுடைய மாணவர்களுக்காவது பாடம் கற்பிக்க வேண்டியுள்ளது. அத்தகைய ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் என்னுடைய இந்த  அனுபவம் பயன் தரும் என்று நம்புகிறேன்.

நான் 2005ஆம் ஆண்டு முதன் முதலில் ஒரு தனியார் பள்ளியில் சிறப்பாசிரியராகப் பணியில் சேர்ந்தேன். எனக்கு 10 மாணவர் கொண்ட வகுப்பு வழங்கப்பட்டது.

நானும் புதிதாக ஆசிரியர் பயிற்சி முடித்த உற்சாகத்தில் ஆர்வமாகப் பணிபுரியத் தொடங்கினேன். வரைபடங்கள், மின்னட்டைகள் என  உணவு இடைவேளை உட்பட கூடுதல் நேரம் உழைத்தேன். ஆனாலும் மாணவரின் மொழி மற்றும் தொடர்பு கொள்ளும் திறனில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை. என்னுடைய உற்சாகமும் நாளடைவில் குறையத் தொடங்கியது. இந்த நிலையை உடனே மாற்றவேண்டும் என்று தோன்றியது. ஆனால் என்ன செய்யவதென்று தெரியாமல் பல நாள் சிந்தித்து என்னுடைய கற்றல் கற்பித்தலைச் சுயப்பரிசோதனை செய்து கொள்ள முடிவு செய்தேன். அதன் விளைவாக செவித்திறன் குறையுடைய குழந்தைகளிடம் முன்னேற்றம் ஏற்பட்டது.

குறையின் அளவு, தன்மை,  குறை கண்டறியப்பட்ட வயது,  குறையினால் ஏற்படும் பாதிப்பு, தீவிரம், பெற்றோர் ஒத்துழைப்பு செவித்துணைக் கருவி, பள்ளியில் சேர்க்கப்பட்ட வயது, குழந்தைகளுக்கு இடையேயான வேறுபாடு போன்றவற்றினைச் சார்ந்தே கற்பித்தல் அமையும் என்பது எனக்குப் புரிந்தது. பின் மேற்கண்டவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு மாணவர்களைப்பற்றி அறிந்து கொண்ட பின்னர் மீண்டும் புதிதாக என்னுடைய பணியைத் தொடங்கினேன். மாணவரும்  ஆர்வமுடன் கற்கத் தொடங்கினர்.

சாதாரணப் பள்ளியில் செவித்திறன் குறைபாடு உடைய குழந்தைகளுக்குக் கற்பிப்பது பற்றிய சில முக்கியக் கருத்துகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

செவித்திறன் குறையுடைய குழந்தைகளுக்கு மொழி கற்பிக்கும் நுணுக்கங்கள்:

மனித இனத்திற்கு கிடைத்துள்ள வியக்கத்தக்கப் பரிசுகளில் ஒன்று மொழி. இது தகவல் பரிமாற்றத்திற்கான கருவி ஆகும், எண்ணங்களை, உணர்ச்சிகளை, யோசனைகளைப் புரிந்துகொள்ளவும், வெளிப்படுத்தவும் உதவுகிறது. பொதுவாக சாதாரண அல்லது செவித்திறன் உடைய குழந்தைகள் ஒரு குறுகிய காலத்திற்குள் தனது தாய் மொழியை எவ்வித முயற்சியுமின்றி நன்றாகக் கற்கின்றனர். இது அவர்களின் கேட்டல் திறன் நன்றாக இருத்தலால் மட்டுமே சாத்தியமாகிறது. ஆனால் செவித்திறன் குறையுடைய குழந்தைகளுக்குச் சுற்றுச்சூழல் ஒலிகளையும், பிறரின் பேச்சு ஒலிகளையும் கேட்க இயலாததால் மொழியைப் புரிந்துகொள்வதிலும் வெளிப்படுத்துவதிலும் இடர்ப்பாடுகள் உருவாகிறது. இத்தகைய குழந்தைகள் இயல்பாக மொழி வளர்ச்சி பெறுவதில் நிறைய சாவல்களை எதிர்கொள்கின்றனர். எனவே பெற்றோர்கள், சிறப்பு ஆசிரியர் மற்றும் சிறப்பு வல்லுநர்கள் செவித்திறன் குறையுடைய குழந்தைகளுக்கு மொழி கற்பிக்கும் பின்வரும் மொழி கற்பித்தல் நுணுக்கங்களைப் பின்பற்றுகின்றனர்.

  1. உரையாடல்
  2. செய்திகள்
  3. பாட்டு
  4. திட்டமிட்ட செய்முறை
  5. கதை
  6. உதட்டு வாசிப்பு
  7. நேரில் சென்று கற்றல்
  8. படக்கட்டுரை
  9. பேச்சுப்பயிற்சி
  10. ஒலிக்கேட்டல்

உரையாடல்

செவித்திறன் குறையுடைய குழந்தைகள் இயல்பான சூழலில் மொழியைக் கற்றுக்கொள்ள இந்த உரையாடல் முறை பயன்படுகிறது. இங்கு ஆசிரியர் தாய் தன் குழந்தைகளுடன் உரையாடுவது போல இயல்பாக இயற்கையான சூழலில் உரையாடி, குழந்தைகள் சைகை, அல்லது ஓரிரு வார்த்தைகளில் வெளிப்படுத்தும் செய்திகளுக்கு முறையான மொழிவடிவம் கொடுத்து அதை கரும்பலகையில் எழுத வேண்டும். பின்னர் அதிலிருந்து பயிற்சிகள் அளிக்கப்படும். மொழி வளர்ச்சியில் சற்று உயர்நிலையில் உள்ள மாணவர்களுக்கு உரையாடலைத் தொடர்ந்து, உரையாடல் தொகுப்பு எழுதப்பட்டு அதில் இருந்தும் பயிற்சிகள் அளிக்கப்படும்.

உதாரணம்:

ஒரு குழந்தை வானத்தில் ஓர் வானூர்தியினைப் பார்க்கின்றது. ஆசிரியர் அதைப்பற்றி மாணவரை உரையாட ஊக்குவிக்கின்றார்.

ரோஹித் -    ஆஹா! விமானம்

மீனா    -    இதற்கு சிறகுகள் உள்ளது

ரூபா    -    இது மேலே வானத்தில் உள்ளது

நேஹா-    நான் அதில் உட்கார்ந்து இருக்கிறேன்

ஆசிரியர்    -    இது ஒரு அதிவிரைவு வாகனம்

உரையாடல் தொகுப்பு:

விமானம்

    வானத்தில் விமானம் செல்வதைப் பார்த்த ரோஹித் ஆஹா! விமானம் என்று கூறினாள். உடனே ரூபா இது மேலே வானத்தில் உள்ளது என்றாள். இதைப்பார்த்த நேஹா நான் அதில் உட்கார்ந்து இருக்கிறேன் என்று மகிழ்ச்சியாகக் கூறினாள். நாம் தினமும் பயன்படுத்தும் வாகனங்களுள் விமானம் மிகவும் விரைவாக செல்லும் வாகனம் ஆகும் என்று ஆசிரியர் கூறினார்.

பயிற்சிகள்

1. புதிய வார்த்தைகள்

2. பொருள் கூறுக

3. பிரித்து எழுதுக

4. சேர்த்து எழுதுக

5. வார்த்தைகளைக் கட்டத்தில் எழுதுக

6. எழுத்துக்களை எண்ணி எழுதுக

7. யார் கூறியது?

8. கோடிட்ட இடங்களை நிரப்புக

9. வாக்கியத்தை வினாத்தலைப்புகளுக்குக் கீழ் எழுதுக

எ.கா:

1. யார்? எப்பொழுது? எங்கு? வினைச்சொல்

    மீனா நேற்று கோவிலுக்குச் சென்றாள்.

2. யார்? யாருடைய? எங்கு? எதற்கு? வினைச்சொல்

    இராமன் குமரன் வீட்டிற்கு விளையாடச் சென்றான்

10. பொருத்துக. (வார்த்தைகள். படங்கள்)

11. பேச்சுப்பயிற்சி

12. ஒலிக்கேட்டல்

செய்திகள்

    நாள்தோறும் முதல் பாடவேளையில் ஆசிரியர் மாணவர்களுடன் உரையாடி மாணவர் கூறும் தகவல்களைச் செய்திகளாகக் கரும்பலகையில் எழுதுவார். பின்னர் அதிலிருந்து பயிற்சிகள் அளிக்கப்படும்.

எ.கா:

1. நேற்று    -    ஆம்தேதி    -    கிழமை

2. இன்று    -    ஆம் தேதி    -    கிழமை

3. நாளை    -    ஆம் தேதி    -    கிழமை

4. சென்ற மாதம்.......................

5. இந்த மாதம்.......................

6. அடுத்த மாதம் .......................

7. இன்று வானம் .......................

8. இன்று மூன்றாம் வகுப்பு மாணவி சத்யாவிற்குப் பிறந்தநாள்.

9. நேற்று இரவு இடி மின்னலுடன் மழைபெய்தது.

10. சிந்துவிற்கு உடல்நிலை சரியில்லததால் நேற்று பள்ளிக்கு வரவில்லை.

    உரையாடல் மற்றும் செய்திகள் எழுதுவதற்குத் தேவையானக் கருத்துகள் பின்வரும் முறைகளிலும் பெறப்படுகிறது.

1. தினமும் வீட்டிலிருந்து ஏதேனும் ஒரு பொருள் கொண்டுவந்து அதைப்பற்றி உரையாடுதல்.

2. நாட்குறிப்பு மூலம் செய்திகளைப் பெறுதல்.

3. செய்தித்தாள், நாளேடுகளில் உள்ள செய்திகளைப் பற்றி உரையாடுதல்.

பாடல்

    குழந்தைகள் விரும்பும் கற்றல் கருவிகளில் மழலைப்பாடல்களும், சிறுவர் இலக்கியப் பாடல்களும் முதன்மையானவை. செவித்திறன் குறையுடைய குழந்தைகளின் வளர்ச்சிக்கும் இத்தகையப் பாடல் சிறந்த கருவியாகப் பயன்படுத்தப் படுகிறது. இவர்களுக்குப் பாடல்களைக் கற்பிக்கும் போது தாளம், ஓசை, அபிநயம், உச்சரிப்பு, குரல் ஏற்றத் தாழ்வு, புதிய வார்த்தைகள், ஒரே ஓசையுடைய சொற்கள் போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

எ.கா:

பட்டம் பாட்டு

பார்  பார்  பட்டம்   பார்

பச்சை  நிற  பட்டம்  பார்

பாபு  விட்ட  பட்டம்  பார்

பறந்து  போகும்  பட்டம்  பார்

 

காய் பாட்டு

குட்டைக்  குட்டைக்  கத்தரிக்காய்

குண்டு  குண்டு  பூசணிக்காய்

நெட்டை  நெட்டை  முருங்கைக்காய்

நீண்டு  தொங்கும் புடலங்காய்

திட்டமிட்ட செய்முறை

இம்முறையில் மாணவர்கள் செயல்கள் மூலம் மொழியைக் கற்று கொள்வதற்கான சூழல்கள் ஆசிரியரால் திட்டமிட்டு அமைத்துத் தரப்படுகிறது. மேலும் மாணவர்கள் செயல்பாடுகள் மூலம் மொழியைக் கற்று கொள்ளும் வகையில் ஆசிரியர் மாணவர்களை வழிநடத்துவார். பின்வரும் நோக்கங்களுக்காகச் செவித்திறன் குறையுடைய குழந்தைகளுக்கு இம்முறைப் பயன்படுத்தப்படுகிறது.

  • சொற்களஞ்சியம் வளர்த்தல்
  • மாணவர் சிறு சிறு வாக்கியங்களைக் கற்றுக்கொள்ள வாய்ப்பளித்தல்
  • வினைச்சொற்களையும், காலத்தையும் பொருள் பொதிந்த சூழலில் கற்பித்தல்
  • படைப்பாற்றல் திறன் வளர்த்தல்
  • ஜம்புலன்களையும் கற்றல் கற்பித்தலுக்குப் பயன்படுத்துதல்
  • மாணவர்கள் சிறுசிறு திறன்களைக் கற்றுக் கொள்ள வாய்ப்பளித்தல்
  • செயல்களின் படிநிலைகளையும், தனக்கான வாய்ப்பு வரும் வரை காத்திருக்கவும் கற்பித்தல்.

எ.கா:

எலுமிச்சை பழ ஜுஸ் தயாரித்தல்

தேவையான பொருட்கள், செய்முறை போன்றவை, உண்மைப் பொருள்கள் மற்றும் வரைபடத்தாளின் உதவியோடு கற்பிக்கப்பட்ட பின்னர், செயல்கள் மாணவரால் செய்யப்படுகிறது. இவை பின்வருமாறு கரும்பலகையில் எழுதப்படும். பின்னர் அதிலிருந்து பயிற்சிகள் அளிக்கப்படும். இதில் வினைச்சொற்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

எதிர்காலம்     - நிகழ்காலம் - இறந்த காலம்    

“சிந்து எலுமிச்சைப் பழத்தை வெட்டுவாள்."    

“சிந்து எலுமிச்சைப் பழத்தை வெட்டுகிறாள்”    

“சிந்து எலுமிச்சைப் பழத்தை வெட்டினாள்”.    

“ராகுல் எலுமிச்சைப் பழத்தைப் பிழிவான்;    ராகுல் எலுமிச்சைப் பழத்தைப் பிழிகிறான்;    ராகுல் எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்தான்”.

“சந்தோஷ் தண்ணீர் ஊற்றுவான்; சந்தோஷ் தண்ணீர் ஊற்றுகிறான்;சந்தோஷ் தண்ணீர் ஊற்றினான்”.    

“நிஷா சர்க்கரைப் போடுவாள்;    நிஷா சர்க்கரைப் போடுகிறாள்;    நிஷா சர்க்கரைப் போட்டாள்”.

“சத்யா உப்பு போடுவாள்;    சத்யா உப்பு போடுகிறாள்;    சத்யா உப்பு போட்டாள்”    .

“டீச்சர்  ஜுசை கலக்குவார்;    டீச்சர் ஜுசை கலக்குகிறார்;    டீச்சர் ஜுசை கலக்கினார்”.

முடிவுரை:

மேற்கூறியது போல பல செயல்பாடுகள் மூலம் ஒரு ஆசிரியராக செவித்திறன் குறையுடைய குழந்தைகளுக்கு ஒரு நல்ல கல்வியை அளிக்க முடியும் என்பதை இந்தக் கட்டுரையில் கூற முயற்சித்துள்ளேன்.

Author: Jayashree

Subject: 
Tamil

Term: Term 3

0
No votes yet
0
Post a comment