Towards a just, equitable, humane and sustainable society

கதை கூறல்

0
No votes yet
0
Post a comment

கதை கேட்போமா….

9 ஆண்டுகால ஆசிரியர் பணியில் கடந்த ஓராண்டு காலமாக முதல் வகுப்பு மாணவர்களைக் கையாளுவதற்கான வாய்ப்பைப் பெற்றேன், அது ஒரு நல்ல அனுபவத்தைத் தந்தது. 8 ஆண்டுகால ஆசிரியர் பணியை முற்றும் துடைத்து எறிந்து மீண்டும் முதல்முதலில் பணியேற்று வகுப்பறைக்குள் நுழைந்த முதல் அனுபவத்தைக் காலம் மீண்டும் பரிசளித்திருந்தது. அத்தகைய சூழலில், மாணவர்களை எப்படி ஒரு கதை கூறல் வழியாகக் கையகப்படுத்திக் கொண்டேன். அதன்மூலம் மொழியறிவு வளர்ச்சிக்கு, சொற்களஞ்சியப் பெருக்கத்திற்கு எப்படி  பயன்படுத்திக் கொண்டேன் என்பதை ஒரு கதையின் வாயிலாகவே உங்களிடம் கூறுகின்றேன்.

பெயர் சொல்லும் கதை :

பணிமாறுதல் பெற்று பள்ளிக்குள் நுழைந்தவுடன் பள்ளியில் இளையவர் என்பதால் முதல் வகுப்பு தந்தார்கள். அதுவரை பணியாற்றிய பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களின் பற்றாக்குறையால் 6,7,8 வகுப்புகளையே கையாண்டதால், முதன்முதலில் புதியதோர் அனுபவத்தை எதிர்கொள்ளும் ஆர்வத்துடன் வகுப்பறைக்குள் நுழைந்தேன். முதல் வகுப்பு மாணவர்கள் என்பதால் வகுப்பறை மட்டுமல்ல பள்ளிச் சூழலே அவர்களுக்குப் புதிதானது. அதனால் வகுப்பில் ஒரு சிலரைத் தவிர எல்லோரும் குழப்பத்துடனும் மிரட்சியுடனும் என்னை பார்த்தார்கள், இன்னும் சிலர் என்னை பார்த்தவுடன் தங்கள் அழுகை சத்தத்தின் ஒலி அளவை கூட்டி வைத்தார்கள். சிலர் வகுப்பறையை விட்டு வெளியேறி ஓடுவதற்கான முன் தயாரிப்புடன் இருந்தார்கள். இவர்களை எப்படி வசப்படுத்துவது என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் ஒரு மாணவன் தானாகவே முன்வந்து உங்க பெயரென்ன? என்றான். ஆகா, அவனை வைத்துத்தான் வகுப்பறையை வசப்படுத்த வேண்டுமென்றெண்ணி என் பெயர் சிங்கம் என்றேன். ‘சிங்கமா?’ என்று அவன் சிரித்துக்கொண்டு ஓடியமர்ந்தான்.

கைக்குலுக்க வைத்த கதை :-

அவன் பக்கத்தில் இருந்த மாணவர்களிடமெல்லாம் என்னைக் கைக்காட்டி பேசிக்கொண்டான்.  பிறகு இன்னொருவன் மெதுவாக என்னிடம் வந்து உங்கள் பெயர் சிங்கமா? என்றான். ஆமாம் உன் பெயரென்ன? என்றவுடன், சற்றும் தயங்காமல் புலி என்றான். புலி எங்க இருந்து வருது ? என்றேன். ‘ரோட்டுபக்கமிருந்து’ என்றான். நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே இன்னும் சில மாணவர்கள் பயத்தைப் பின்பக்கமாக வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக எங்களை நோக்கி முன் நகர்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டு, புலிக்குக் கதை தெரியுமா? என்றேன். ‘ம்…’ என்று நான் கேட்பதற்கு முன்பே ஒரு கதையைச் சொல்லத் துவங்கிவிட்டான். துவக்கமுமில்லாமல் முடிவுமில்லாமல் ஒரு கதையைக் கூற ஆரம்பித்தான். ஆம் அந்த கதைதான் அழுகையைக் குறைத்தது. வெளியேறுவதற்காக  வாசல்வரை சென்றவர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தது. சொல்லப்போனால் எனக்கும் அவர்களுக்கும் இடையே இருந்த தூரத்தைக் குறைத்து ஒரு கைக்குலுக்கலை நிகழ்த்தியது அந்தக் கதை.

சினேகிதம் வளர்ந்த கதை :-

அடுத்தநாள் பள்ளிக்கு நுழையும் வரை அந்தச் சிங்கமும், புலியும் வகுப்பறைக்குள் உலாவிக்கொண்டே இருந்தன, என்னை பார்த்தவுடன் கத்தி கூப்பாடு போடும் மாணவர்களில் சிலர் புன்னகையோடு வரவேற்றனர். அதிலொருவன் வீட்டிலிருந்து வரும்போது புத்தகப்பைக்குள் சில கதைகளையும் எடுத்துப் போட்டு வந்திருந்தான். கதை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமானத் தூரங்களைக் குறைத்து சினேகிதத்தை வளர்க்கப் பெரும்பங்காற்றுகிறது.

கதையற்ற கதை :-

மாணவர்கள் கதை சொல்லத் தயாரானால் எந்த எதிர்பார்ப்புமில்லாமல் கேட்கத் தயாராக வேண்டும். ஏனெனில் அவர்களின் கதையில் நீதி, கருத்து, உவமை, புதிர், புத்திசாலித்தனம் என்று நீங்கள் எதிர்பார்க்கின்ற எந்த ஒன்றும் இருக்காது. ஆனால் அது குழந்தைகளுக்கானக் கதையாக இருக்கும் என்ற உத்தரவாதத்தை மட்டும் தர இயலும், குழந்தைகளுக்கானக் கதையைக் குழந்தைகளைத் தவிர யாராலும் எழுதிவிட முடியாது என்று நம்புபவன் நான்.

இன்று குழந்தைகளுக்கானக் கதை புத்தகங்கள் ஏராளமாக வருகின்றன. ஆனால் அவையெல்லாம் குழந்தைகளுக்கானக் கதைகள் என்று நம்புகின்ற பெரியவர்கள் எழுதுகின்ற கதைகள். அதில் அறிவுரை, நல்லொழுக்கம் போன்ற கருத்துகள் இருக்குமே அன்றி குழந்தைகளைக் குதூகலப்படுத்தும் கதைகள் இருப்பதில்லை. குழந்தைகளின் கதைகள் ஒருபோதும் ஒரு ஊரில் ஒருத்தர் என்று துவங்காது. நன்றாகக் கவனித்தால் அவர்களின் கதைகளில் துவக்கமே இருக்காது. துவக்கமில்லாத கதையில் எப்படி முடிவு இருக்கும். ஆதலால் அந்தக் கதையில் முடிவும் இருக்காது. அது இடையில் தோன்றி நீங்கள் விழிப்பதற்கு முன் இடையிலேயே மறைந்துவிடும். ஒரு அழகானக் கனவைப் போன்றது. அதில் குரங்கு செல்போன் பேசும். கரடி கடலைமிட்டாய் வாங்கி சாப்பிடும். சிங்கத்திற்கும் புலிக்கும் பொம்மை டிவி பார்ப்பதில் சண்டை வரும். இப்படி காலத்திற்கேற்ப கதாப்பாத்திரங்களால் ஆன கதையில் கதையே இல்லையென குழந்தைகளிடம் விசாரணை வைக்கும் ஆசிரியர்களைக் குழந்தைகள் விரும்புவதில்லை. ஏனெனில் அவர்களிடம் இருப்பதெல்லாம் கதையற்ற கதைகள்.

கதைகள் வகுப்பறை :

கதைகள் இருந்து கற்றல் நடைபெறுவது  என்பது மிக எளிதானது என்பதுடன் மாணவர்களுக்கு மிக நெருக்கமான கற்றல் சூழலை உருவாக்கும் என்பதை அறிந்தேன். கதைகளின் வாயிலாகக் காகம், குருவி, மயில் என்பவை பறவைகள். சிங்கம், புலி, கரடி, யானை போன்றவை விலங்குகள் என வேறுபாடுகளைக் கற்பித்தேன். இரவு, பகல் என்ற பொழுதுகளையும் அந்தப் பொழுதுகளில் காணும் காட்சிகளையும் எளிமையாகக் கதையின் வாயிலாக விவரித்தேன்.

உதாரணமாக:

மாலை நேரம் வந்தவுடன் பறவைகள் எல்லாம் தன் கூடுகளுக்குத் திரும்புகின்றன. சிறது நேரத்தில் இருட்டிவிட்டது. நிலா நடு வானில் வந்து காட்டை எட்டிப்பார்த்தது. நட்சத்திரங்களெல்லாம் நிலவொடு துணைக்கு வந்து மின்னிக் கொண்டிருந்தன, என்பதன் மூலம் இருட்டு, நிலா, நட்சத்திரம் போன்றவை இரவோடு தொடர்புடையன என்பதை எளிதாகப் புரிந்து கொள்ள துணைபுரியும்.

சொற்களஞ்சியம் கதைகள்:

கதைகளில் வரும் பூ, வா, தா, போ, போன்ற ஓர் எழுத்துச் சொற்களில் ஆரம்பித்து மலை, காடு, இலை, கிளை போன்ற ஈரெழுத்துச் சொற்கள், சிறகு மயில், இரவு போன்ற மூவெழுத்துச் சொற்கள் என கொஞ்சம் கொஞ்சமாக முதல் வகுப்பு மாணவர்களுக்கு அவர்கள் சொல்லும் கதைகளில் இருந்தே அவர்களுக்கானக் கற்றலை நிகழ்த்தலாம். பல்வேறு சொற்களை அவர்கள் எளிய முறையில் அறிந்து கொள்ள கதைகள் உதவுகின்றன.

கதையின் முடிவு :

இப்படி எளிய முறையில் கதையிலிருந்து அவர்களுக்கு அறிமுகமாகி கதையின் வாயிலாகவே ஒரு கற்றலை நிகழ்த்தலாம், மேலும் மொழிப்பாடங்களில் சொற்களைக் கற்பிக்க, சொற்களைக் கொண்டு எளிய வாக்கியங்களை அமைக்க கதைகள் துணைபுரிகின்றன.

Author: சீ. வினோத்குமார், ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, திருப்பரக்குன்றம். மதுரை. தொடர்புக்கு : 9944861050

Subject: 
Tamil

Term: Term 3

0
No votes yet
0
Post a comment