Towards a just, equitable, humane and sustainable society

கவிதைகள் படைப்போம் - முதலாம் வகுப்புக் குழந்தைகள்

0
No votes yet
0
Post a comment

மொழிகற்றல் என்பது வெறும் வாசித்தல் எழுதுதலோடு முடிந்து விடுவதல்ல, மொழியை உருவாக்குவதும் இதில் அடங்கும். ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் படத்தைப் பார்த்து, வகுப்பறையில் உரையாடி, அனைத்து மாணவர்களும் ஒருங்கே சிந்தித்து இருவரிப் பாடல்களை உருவாக்கியுள்ளனர்.

குழந்தைகளின் மொழியை மொழி கற்பித்தலுக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை இக்கட்டுரையில் பார்க்கலாம். மேலும், கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல், சிந்தித்தல் ஆகிய மொழித்திறன்களின் தொடர்பைக் காணலாம். குழந்தைகளிடம் வினா எழுப்பி, அவர்கள் கூறுவதை எழுதி, அதை வாசித்து… அப்பப்பா 'பாடப்பொருள் ஒன்று; திறன்கள் பல'.

வகுப்பில் உள்ள ‘அனைத்துக் குழந்தைகளையும்’ கற்றலுக்குத் தயார்படுத்துதல் என்பது மிகமுக்கியமான ஒன்று. அனைவருக்கும் வாய்ப்பு கொடுத்து, அனைவரிடமிருந்தும் ஒப்புதல் பெற்று, ஒரு குழந்தை சம்மதிக்க வில்லை என்றாலும் உரையாடல்களை நிகழ்த்தி… என்று பல முயற்சிகளின் மூலம் ஆசிரியர் அனைத்து குழந்தைகளையும் கற்றலில் ஈடுபடுத்தி இருக்கிறார்.   

நோக்கம் :

மொழிகற்றல் என்பது எழுத்துக்களை அறிவதிலும் வார்த்தைகளைப் படிப்பதிலும் மட்டுமே அல்ல; படைப்பாற்றலை உருவாக்கும் களமாகவும் வகுப்பறை அமைய வேண்டுமல்லவா!

முதல் பருவத்தேர்வு விடுமுறையில் அசிம் பிரேம்ஜி நிறுவனம் அளித்த பயிற்சிப் பட்டறையில் பாடப்புத்தகத்தில் வரும் படங்களைப் பயன்படுத்திப் பாடல்கள் உருவாக்கும் ‘கருத்தாடல்  அணுகுமுறை’யை அறிந்தேன். முதலாம் வகுப்பு மொழிகற்றல் செயல்பாட்டில் கருத்தாடல் அணுகுமுறையைப் பயன்படுத்தத் தொடங்கினேன்.

செயல்பாடு :

பாடப்புத்தகத்திலுள்ள படங்களைக் காண்பித்துப் பேச வைத்தேன். அவர்கள் என்ன செய்கிறார்கள்? இது என்ன? -  போன்ற வினாக்களை எழுப்பி, குழந்தைகள் பதிலாகக் கூறும் சொற்களைக் கரும்பலகையில் எழுதினேன். பிறகு அந்தச் சொற்களைக்  கொண்டு மாணவர்களைப் பாடல் எழுத வைக்க மீண்டும் மாணவர்களுடன் உரையாடினேன்.

(எ.கா.) பாடப்புத்தகத்தில் உள்ள மரத்தைக் காட்டி நாம் மரத்தைப் பற்றிச் சிறிது நேரம் பேசலாமா என்றதும் ‘சரி’ என்றனர். இது என்ன மரம் என்றதும் ஆலமரம் என்றனர். பிறகு மரம் மரம் ஆலமரம் எழுதலாமா என்றதும் ‘சரி’ என்ற ஒப்புதல் கிடைத்தது. எழுதி முடித்ததும் பச்சை வண்ண ஆலமரம் என்ற இரண்டாம் வரியும் வந்தது.

மரம் மரம் ஆலமரம்

பச்சை வண்ண ஆலமரம்

என்று இரு வரிகளை கரும்பலகையில் எழுதி முடித்ததும் பாடலாகப் பாடினோம். பின்னர் மாணவர்கள் இருவர் இருவராக வந்து வாசித்தனர்.

முதல் வகுப்பு மாணவன் அவர்கள் உருவாக்கிய பாடலை வாசிக்கின்றான்       முதல் வகுப்பு மாணவர்கள் ஒரு பாடவேளையில் உருவாக்கிய பாடல்கள்

அனைத்து குழந்தைகளும் வாசித்து முடித்ததும் சொற்களைச் சுட்டிக் காட்டுமாறு கூறினேன். அவர்களால் சொற்களை அடையாளம் காண முடிந்தது. ஆலமரக் கோட்டுப்படங்கள் கொடுத்து வண்ணம் தீட்டச் சொன்னேன்,   மாணவர்கள் வண்ணம் தீட்டினர். அதை அட்டையில் ஒட்டி ஆலமரம் என்று எழுதினேன். மறுநாள் குழந்தைகள் முன்னிலையில் அவர்கள் கூறிய பாடல் வரிகளை வரைபடத் தாளில் எழுதி வகுப்பறையில் ஒட்டினேன். அந்த வாரம் முழுவதும் என் குழந்தைகள் உருவாக்கிய பாடல்கள் அனைத்தும் எங்கள் வகுப்புச் சுவரை அலங்கரித்தன. ‘கிளி’ என்ற வார்த்தையைக் கூறியவுடன்  “கிளி, கிளி, பச்சைக்கிளி” என்றனர். “இரண்டாம் வரிக்கு என்ன எழுதலாம்”? என்று கேட்டபோது பலதரப்பட்ட பதில்கள் வந்தாலும், “சிவப்பு மூக்கு கிளி” என்று ஒரு மாணவன் கூறியதும் அனைவரிடமும் கேட்டுவிட்டு,

கிளி கிளி பச்சைக்கிளி

சிவப்பு மூக்கு பச்சைக்கிளி

என்று எழுதினேன். இவ்வாறு இரண்டு வரிப் பாடல்கள்களை  எழுதிக் கொண்டு இருந்த போது அவையெல்லாம்  இரண்டு வரிப் பாடல்களாக  முடியவில்லை. “மிஸ் நா சொன்னது முன்னாடி வரனும்”,  “நா சொன்னதையும் எழுதுங்க”,   “நான் சொன்னது வந்தே ஆகணும்” என அன்புக் கட்டளைகள் வந்துகொண்டே இருந்தன. ஒரு சில சமயங்களில் குழந்தைகளைச் சமாதானம் செய்ய முடியாமல் மூன்று வரி நான்கு வரிப் பாடல்களாக நீளும்.  கருத்தாடல் அணுகுமுறையில் உருவாகும் பாடல்கள் பொதுவாக அனைத்து மாணவர்களும் சேர்ந்து உருவாக்கிய பாடல்களாக இருக்கும். (எ.கா.)

  

 

 

‘எளனி’,  ‘மோதரம்’,  ‘பஸ்’ போன்ற சொற்களைப் பயன்படுத்தும் போது “எளனி இல்லம்மா இளநீர்" என்றதற்கு “மிஸ் உங்களுக்குத் தெரியாதா? எளனி தான் குடிப்போம் அதான் correct” என்று கூறி ‘இளநீர்’ என்று எழுத என்னை அனுமதிக்கவே இல்லை. மோதிரம் என்று சொன்னதற்கு “விரல்ல ‘மோதரம்’ போட்டுக்குவேன்னு தான் சொல்லுவாங்க, ‘மோதிரம்’ இல்லை.” என்றே சாதித்தனர். ‘பஸ்’ என்பதைப் பேருந்து என்று தான் தமிழில் சொல்லவேண்டும் என்று நான் சொன்னதற்கு  “படிக்கும் போது பேருந்துன்னு படிக்கலாம்,  பாட்டுக்கு பஸ்ஸுனே இருக்கட்டும்மா” என்று என்னைச் சமாதானம் செய்தனர் என் குழந்தைகள். நானும், சரி அவர்களது நடைமுறை மொழியே இருக்கட்டும் என்று எந்த ஒரு மாற்றமும் செய்யவே இல்லை. ஒருவேளை நான் “புத்தகத்தில் இப்படித் தான் இருக்கு, இளநீர் தான் சரி”  என்று  கூறி மாற்றி எழுதி இருந்தால் அடுத்தடுத்த பாடல்களை அவர்களால் சுதந்திரமாக உருவாக்க இயலாமல் போகலாம் எனக் கருதி அவர்களது விருப்பத்தின்படியே எழுதினேன்.

கற்றல் வெளிப்பாடுகள்:

1) எழுத்துக்களைச் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை: இந்தக் கருத்தாடல்  அணுகுமுறையைப் பயன்படுத்திப்  பாடல்களை உருவாக்கும் போது,  நவம்பர் மாதம். ‘கு’, ‘கூ’ வரிசை எழுத்துக்களைத் தனியாகச் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. (எ-கா)

குளம் குளம்; மீன் இருக்கிற குளம்         

முயல் முயல்; வெள்ளை முயல்

ஆடு ஆடு; ஓடி வா ஆடு

புற்று புற்று; பாம்பு இருக்கிற புற்று

2) குழந்தைகளின் சொற்களஞ்சியத்திற்கு நாம் மட்டும் காரணம் அல்லவே!: ஒரு முறை ‘அழகான’ என்ற சொல் திரும்ப திரும்ப வந்தது. நான் “ஒரே சொல் திரும்ப திரும்ப வந்தால் போரடிக்கும் இல்ல” என்று கூறியதும் வேறு சொல்லைப் போட்டுப் பாடலை முடித்தனர்.  மற்றொருமுறை ‘தித்திப்பான’ என்ற சொல் திரும்ப திரும்ப வந்த போது விஷாலி என்ற சுட்டி “ஹே… அத நாம கொய்யாவுக்குச் சொல்லிட்டோம், இப்ப வேற யோசிக்கலாம்" என்று கூறினாள். வகுப்பு மீண்டும் சிந்திக்கத் தொடங்கியது. கௌதம் திடீரென ‘சுவையான’ என்றதும் வகுப்பே கைதட்டி ஆரவாரம் செய்தது. எனக்கோ இதுவரை 'சுவையானது" என்ற வார்த்தையை நாம் சொல்லிக்கொடுத்ததே  இல்லையே என்று யோசித்தேன். ஆம்!  குழந்தைகளின் சொற்களஞ்சியத்திற்கு நாம் மட்டும் காரணம் அல்லவே! அவர்கள் கேட்கும்,  பார்க்கும் பாடல்கள், உரையாடல்கள் நிகழ்வுகள் என அனைத்துமே மாணவர்களின் சொற்களஞ்சியத்தை வளமாக்குகின்றன.

3) இந்த அணுகுமுறை மாணவர்களிடையே ஆர்வத்தை வளர்த்திருக்கிறது: ஒருநாள் விளையாட்டுப் பாடவேளையில் அனைத்துக் குழந்தைகளும் விளையாடிக் கொண்டு இருந்தனர்.  அப்போது கண்ணன்,  கௌதம் என்ற இருவரும் நான் கேட்ட எல்லா சொற்களுக்கும் போட்டி போட்டுக் கொண்டு யோசிக்காமல் பாடல்கள் சொல்லிக்கொண்டே இருந்தனர். மறுநாள் என்னிடம் “அம்மா நேத்து நாங்க சொன்ன பாட்டெல்லாம் எங்க? எழுதலையா? ஒட்டலையா?” என்று கேட்டனர். அந்தளவிற்கு மாணவர்களிடையே ஆர்வத்தை வளர்த்திருந்தது.

மரம் மரம்;

பழம் குடுக்கிற மரம்

***************************

சிவன் சிவன்;

நல்ல சிவன்

***************************

வீடு வீடு;

உள்ள இருக்கிற வீடு

4) மீத்திறன் வளர்ந்தது: மூன்றாம் பருவத்தேர்வில் மூன்றாம் வகுப்புத் தமிழ்க் கேள்வித் தாளில் எங்கள் தோட்டம், செடிகள், பழங்கள், பூச்சிகள் என்ற சொற்களைத் தந்து விவரித்து எழுதச் சொல்லி கேள்விகள் இருந்தன. என் வகுப்பு மாணவி 'ஹன்சிகா'காலையிலேயே தேர்வு முடிந்தாலும் மாலை தான் வீடு செல்வாள். அவளிடம் “தோட்டம் என்ற சொல்லை வைத்து வாக்கியம் சொல்லம்மா” என்றேன். “தோட்டம் தோட்டம்; அழகான தோட்டம்” என்றாள். “இது பாடல் போல இருக்கிறதே!” என்று கூறிவிட்டு, எங்கள் வீட்டுத் தோட்டம் அழகாக இருக்கும் என்று உதாரணம் சொன்னேன். ஓரிரு நிமிடங்கள் கழித்து “செடிகளை வைத்துச் சொல்லம்மா” என்றேன். சரி என்று தலையாட்டி விட்டு “செடிகளில் இலைகள் பச்சையாக இருக்கும்" என்றாள். பாராட்டி விட்டு ‘மரங்கள்’ என்றேன், அதற்கு, அவள் “தோட்டத்தில் மரங்கள் உயரமாக இருக்கும்" என்றாள். அவள் சொல்வதைக் கேட்க கேட்க எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதன்பின் அவள் ஐந்தாம் வகுப்பு “READING CORNER”-ல் இருந்த புத்தகங்களை எடுத்து வாசித்துக் கொண்டு இருந்தாள்.

5) வாசிப்பிலும் பாடல் உருவாக்குவதிலும் ஆர்வம்: இந்தக் கருத்தாடல் அணுகுமுறையில் மாணவர்கள் தாங்களாகவே வாசிப்பில் ஆர்வம் காட்டினர். அனைத்துக் குழந்தைகளும் வாசித்தனர். இவர்களின் ஓய்வு நேர விளையாட்டே கவிதை எழுதுவது தான். எந்த ஒரு சொல்லையும் மையமாக  வைத்து அவர்களால் சொந்தமாக 2 வரிகளை உருவாக்க முடிகிறது. இந்த அணுகுமுறையைத் தொடர்ந்து வருடம் முழுவதும் பயன்படுத்தினேன். அதன்மூலம் மாணவர்களின் ஒட்டு மொத்த மொழித்திறனும் ஒருமித்து வளரும் சூழல் இயல்பாகவே அமைந்து விட்டது. மேலும், மாணவர்களது பாடல்களில்,  வர்ணனை, பண்பு, பயன் போன்றவை இயல்பாகப் பயின்று வந்துள்ளன.

இந்த அணுகுமுறையைத் தொடர்ச்சியாக வருடம் முழுவதும் பயன்படுத்தினேன். அனைத்துக் குழந்தைகளும் வாசித்தனர்.மாணவர்களின் ஒட்டு மொத்த மொழித் திறனையும் ஒருமித்து வளர்க்கும் சூழல் இயல்பாகவே இவ்வணுகு முறையில் சாத்தியமாயிற்று. ஓய்வு நேரங்களில் மாணவர்களுக்குப்  பாடல்கள் இயற்றும் தன்னார்வம் வளர்ந்தது. எந்த ஒரு சொல்லையும் மையமாக வைத்து அவர்களால் சொந்தமாக 2 வரிகளை உருவாக்க  முடிகிறது. முதலாம் வகுப்பிலேயே என் மாணவர்கள் எனக்களித்த இந்தப் பரிசைவிட வேறென்ன வேண்டும் எனக்கு!

Author: கவிதா, அ.தொ.ப., மணவெளி (அ)

Subject: 
Tamil

Term: Term 3

0
No votes yet
0
Post a comment