Towards a just, equitable, humane and sustainable society

கவிதைப் பட்டிமன்றம் – பண்பா? அறிவா?

0
No votes yet
0
Post a comment

தமிழ், வகுப்பு 5

பாடம்: கவிதைப் பட்டிமன்றம் – பண்பா? அறிவா?

பாட நோக்கம்:

  • தன் கருத்தைக் கவிதை மூலம் வெளிப்படுத்த முயலுதல்
  • இரண்டு கருத்துக்களை ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் பேசும் திறன் பெறுதல்
  • மற்றவரின் கருத்துகளைக் கேட்டறிந்து அதற்கு ஏற்றார் போல் உரையாடுதல்/பதிலளித்தல்
  • சொற்களஞ்சியம் பெருக்குதல்

கற்றல் செயல்பாடுகள்:

இந்தச் செயல்பாடுகள் மாணவர்களின் பேச்சுத் திறனோடு படிக்கும் மற்றும் எழுதும் திறனை மேம்படுத்த அமைக்கப்படுவதாகும். இதன் மூலம் கற்றல் சம்பந்தமாக மாணவர்களுக்கு உள்ள சவால்களைக் களைந்து அவர்களிடம் மேலும், பல்வேறு வாசிப்புகளைப் (பள்ளி நூலகப் புத்தகங்கள்) பயன்படுத்தியும் புத்தகத்தில் உள்ள பயிற்சிகளைக் கொண்டும் அனைத்து மாணவர்களிடமும் பாடநோக்கத்தை அடைய வாய்ப்புள்ளது.

செயல்பாடு 1: படம் பார்த்து

  • மாணவர்கள் பாடப்புத்தகத்தில் உள்ள படத்தைப் பார்த்து அதைப் பற்றி தனித்தனியாக அவரவர் வார்த்தைகளில் விவரிக்க வேண்டும்.
    • தேவைப்பட்டால் சில கேள்விகளைக் கேட்டு, மாணவர்களைப் படத்தைப் பற்றி யோசிக்க வைக்கலாம் – இந்தப் படத்தில் எவற்றையெல்லாம் பார்க்க முடிகிறது (யாரெல்லாம் இருக்கிறார்கள், என்ன பொருட்கள் உள்ளன), அங்கு என்ன நடக்கிறது, அனைவரும் எந்த அமைப்பில் அமர்ந்துள்ளனர், ஏன்?
  • அனைத்து மாணவர்களின் விவரிப்பையும் ஆசிரியரோ மற்றொரு மாணவரோ கரும்பலகையில் எழுதலாம்.
  • பின்னர், மற்றவர்களுக்கு அதில் ஏதேனும் விளக்கங்கள் தேவைப்பட்டால் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
  • அனைவரும் எழுதியதும் மாணவர்களை அவர்களின் விவரிப்பை ஒவ்வொருவராக வகுப்பறைக்குப் படித்துக்காட்டி அதனைச் சரியாக உள்ளதா? என்பதை சரி பார்த்து திருத்தம் தேவைப்பட்டால் அவர்களையே (அல்லது இன்னொரு மாணவரின் உதவியோடு) செய்யச் சொல்லலாம்.
  • இந்தச் செயல்பாட்டின் மூலம் எழுத்து என்பது தங்கள் கருத்துகளின் உருவமே என்று மாணவர்கள் உணர வாய்ப்பு கிடைக்கும். மேலும், ஒரே படத்தைப் பார்ப்பதில் ஒவ்வொருவரின் கண்ணோட்டமும் வெவ்வேறாகவும் மற்றும் விளக்கம் அளிக்கும் முறைகளும் வார்த்தைகளும் வெவ்வேறாகவும் இருக்கலாம் என்பதை உணரவும் வாய்ப்புக் கிடைக்கும்.

செயல்பாடு 2: இசைப்பாடல்களின் நடையில் கவிதையை இயற்றுதல்

  • ஆசிரியர் பாடப்புத்தகத்தில் உள்ள உரைநடையை உரக்கப் படிக்க, மாணவர்கள் பாடப்புத்தகத்தைக் கவனிக்க வேண்டும்.
  • மாணவர்களைக் குழுவாகப் பிரித்து ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு கவிதையைப் பகிர்ந்து, பின்பு குழுவாக அமர்ந்து அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியை ஒவ்வொருவராகப் படிக்க, மற்றவர்கள் தங்கள் புத்தகத்தில் கைவைத்து அதனைப் பின்பற்ற வேண்டும்.
  • இவ்வாறு அனைவரும் படித்த பின், அவர்கள் படித்த பகுதியின் அர்த்தத்தைக் குழுவில் (தேவைப்பட்டால் ஆசிரியரின் உதவியுடன்) உரையாட வேண்டும்.
  • பின்னர் அந்தக் குழு இந்தக் கவிதைக்கு ஒரு இசையைத் தேர்ந்தெடுத்து அந்த இராகம் மற்றும் தாளத்துடன் பாடிப் பழக வேண்டும்
  • பின்னர், அவர்களின் பகுதியை ஒவ்வொரு குழுவிலும் இருவர் வகுப்பறைக்கு முன் வந்து படிக்கவும் அதை விளக்கி, பின்னர் குழுவாக இராகம் மற்றும் தாளத்துடன் பாடவும் வேண்டும்.
  • அனைவருக்கும் அட்டைக் காகிதம் (chart paper) கொடுத்து அவர்களின் பகுதியைப் பெரிதாக எழுதச் செய்து வகுப்பறையில் ஒட்ட வைத்து (மாணவர்கள் அடையும் உயரத்தில்), இந்தப் பாடம் முடியும் வரை அதைப் பயன்படுத்தி பாடப்புத்தகம் மற்றும் பலபயிற்சிகளைச் செய்ய வைக்கலாம் எ.கா. அந்தக் குழு அவர்களின் கவிதை பகுதியில் உள்ள ஒரு சில வார்த்தைகளைச் சிறிய அட்டைகளில் எழுதி வைத்துக் கொண்டு அந்த வார்த்தையை மற்ற குழுவில் உள்ளவர்களை chart – ல்  கண்டுபிடிக்கச் செய்யலாம். இது போன்ற பல்வேறு செயல்பாடுகளையும் விளையாட்டுகளையும் மாணவர் குழுக்களே வடிவமைத்து அவர்களின் வகுப்புக்குச் செயல்படுத்தலாம்.
  • இந்தச் செயல்பாடு முடிந்ததும், ஒவ்வொரு குழுவும் வேறு ஏதோ ஒரு குழு படித்து வழங்கிய கவிதையைப் படித்துக்காட்டி விளக்க வேண்டும்.
  • இதன் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் படத்தைப் படிக்கவும் அதைப் பற்றி உரையாடவும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.

செயல்பாடு 3: வகுப்பறையில் பட்டிமன்றம்

  • பட்டிமன்றத்தில் பங்கு பெற ஆர்வமுள்ள மாணவர்களை முன்வரச்செய்து அவர்களை ஏதேனும் ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுக்கச் செய்து (அறிவா? பண்பா?) இரு குழுவாக (குழுவிற்கு 2 அல்லது 3 பேர்) பிரித்து, ஆசிரியர் நடுவராகப் பங்கேற்க வகுப்பறையில் ஒரு பட்டிமன்றம் நடத்த வேண்டும்.
  • பட்டிமன்றத்திற்கு சில விதிகள் அமைக்க வேண்டும். முக்கியமாகக் கருத்துகள் பகிரப்படும் விதம் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும். ஒருவர் பேசி முடித்த பின்பு தான் மற்றவர் பேச ஆரம்பிக்க வேண்டும். பேசுவதற்குக் கால அளவு (2 அல்லது 3 நிமிடமாக) நிர்ணயிக்க வேண்டும்.
  • அனைவரும் பேசி முடித்த பின்பு பேசுபவரின் கருத்துகளை உள்வாங்கி பார்வையாளர் பகுதியில் உள்ள மாணவர்கள் இருவர் (ஒவ்வொருவரும் ஒரு குழுவை) பேசப்பட்ட கருத்துகளைத் தொகுத்து வழங்கலாம். மேலும் சிலர் அந்த கருத்துகள் குறித்த கேள்விகள் விளக்கங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

செயல்பாடு 4: கவிதை புனைவது

  • மாணவர்களைக் குழுவாகப் பிரித்து அவர்களுக்கு ஏதோ ஒரு தலைப்பில் சிறிய கவிதையைக் (2, 3 வரிகள்) கொடுத்து தொடர்ச்சியாக கவிதை புனையச் சொல்லலாம்.
  • இந்தத் தலைப்பு மாணவர்கள் தினமும் கடந்து வரும் விசயங்களுடன் தொடர்புப்படுத்தி இருக்க வேண்டும். எ. கா. அன்பு, பாசம், பசி, தூக்கம், பள்ளி, வீடு, மழை, வெயில், மரம், மிருகங்கள், பறவைகள்.

செயல்பாடு 5: பேனா நண்பர்கள்/ குறிப்பு எழுதுதல்

  • வகுப்பறையில் நடந்த இந்தச் செயல்பாடுகளைப் பற்றியும் இதன் மூலம் தங்கள் கற்றல் அனுபவங்களையும் தாங்கள் கற்றவற்றையும் பற்றி வேறு பள்ளியில் உள்ள சக ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்குக் கடிதம் எழுதலாம். இதை ஆசிரியர்கள் அவர்களின் அறிமுகமான மற்றொரு பள்ளி ஆசிரியரின் வகுப்புக்கு அனுப்பலாம். அவர்களும் இதற்குப் பதில் எழுதலாம்.
    • வகுப்பில் நடந்த செயல்பாடுகள், இந்தச் செயல்பாடுகளில் அவர்களின் பங்கு
    • ஆசிரியரின் ஈடுபாடு அல்லது உதவிகள்
    • தங்கள் சக மாணவருடன் நடந்த கூட்டு அனுபவங்கள்
    • தனியாக அவர்களின் கற்றல்கள் மற்றும் அனுபவங்கள்
    • ஒட்டுமொத்த வகுப்பாக அனைவரின் பங்கு
    • தங்களின் வருங்கால எதிர்பார்ப்புகள்
  • அல்லது மாணவர்கள் அவர்களின் பாட அனுபவம் தொடர்பான ஒரு குறிப்பாகவும் (diary) இருக்கலாம். இந்தக் குறிப்பு அவர்களுக்கு வகுப்பு எப்படி இருந்தது, அவர்களின் கற்றல் பற்றியும், அவர்கள் எந்த நேரத்திலும் எடுத்துத் திருப்பிப் பார்க்க உதவும்.

 

 

***************************************************************************************************

மாணவர்களுக்கானத் திறன் தேர்வு

மேற்குறிப்பிட்ட செயல்பாடுகளை வகுப்பறையில் செய்து அதன் மூலம் மாணவர்கள் உருவாக்கிய படைப்புகளை,  புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை எங்களுக்கு அனுப்புங்கள். சிறந்த படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.

***************************************************************************************************

Grade: 
5

Term: Term 1

Subject: 
Tamil

0
No votes yet
0
Post a comment

Request Printed Copy