Towards a just, equitable, humane and sustainable society

பொம்மை உலகம்

பொம்மை உலகம்

சமச்சீர் கல்வி, தமிழ், வகுப்பு 4, பாடம் 7

பொம்மையும் நானும்

நோக்கங்கள்:

· நிறுத்தற்குறிகளைக் கவனித்துப், பத்தியைப் படித்துப் பொருளறிதல்.

· அகரமுதலியைப் பயன்படுத்துதல்.

· பொம்மைகளின் வகைகளையும் முக்கியத்துவத்தையும் அறிதல்.

ஈடுபடுதல்:

ஆசிரியர் 1: மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஒரு அட்டைப்பெட்டியில் படங்களைப் போட்டு வைத்தேன். ஒவ்வொருவரும் ஒரு படத்தை எடுத்து, பின் அதைப்பற்றி 3 வரிகள் பேசுமாறு கூறினேன். மாணவர்கள் படங்களை எடுத்து பார்த்தபோது மிகவும் மகிழ்ந்தனர். ஒருவர் பின் ஒருவராகக் கூற ஆரம்பித்தனர். அவற்றில் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்திய சில கருத்துக்களை மட்டும் இங்கே பதிவுசெய்கிறேன்.

மாணவர் 1- தாமரையைப் பற்றி கூறும்போது, அது ஒரு தேசியப்பூ என்று கூறினாள்.

மாணவர் 2- மீனைப் பற்றி கூறும்போது, அவைகளுக்கு இமைகள் கிடையாது என்று கூறினாள்.

மாணவர் 3- கிளியைப் பற்றி கூறும்போது, அது மனிதர்களைப்போல என்று கூறினாள்.

மேலும், கழுதை பொம்மையின் படத்தை எடுத்த ஒரு மாணவன்,

“இது கழுதை பொம்மை; இதை நான் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்வேன்; துணி தைப்பவரிடமிருந்து துண்டுத்துணிகளைச் சேகரித்து, ஒரு மூட்டை செய்து கழுதை பொம்மையின் மீது வைப்பேன்; கழுதைக்கு என் வீட்டுத் தோட்டத்தில் ஒரு வீடு கட்டுவேன்.” என்று கூறினான். ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு விதமாகத் தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தனர். சிலர் படங்களைப்பற்றியும், ஒரு சிலர் அது என்ன செய்யும் என்பதைப் பற்றியும், வேறு சிலர் அதன் சிறப்புகளையும் கூறினர். ஆனால் பொம்மைப் படத்தை எடுத்த மாணவன், அந்த பொம்மையை வைத்துக்கொண்டு தான் என்ன  செய்வேன் என்று கூறினான். இச்செயல்பாட்டில், ஒரு சில மாணவர்களுக்கு என்னுடைய உதவி தேவைப்பட்டது.

ஆசிரியர் 2: எனது வகுப்பில் அதிக மாணவர்கள் இருந்ததால் இது குழுசெயல்பாடாக இருந்தது. மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தனர். அனைவரும் படங்களை எடுக்க விரும்பினர். ஆனால் அவர்களே, குழுத்தலைவரிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்தனர். அவர்கள் குழுவுக்குள் விவாதித்துப், பின் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் போது, பெரும்பாலும் பேச்சு வழக்கில் இல்லாமல் எழுத்து வடிவமாகவே இருந்தது.

அச்சமயம் அவர்கள், தம் மூன்றாம் வகுப்பில் படித்ததையும், சூழ்நிலையியலில் கற்றதையும் மட்டுமல்லாது மற்ற பாடங்களில் கற்றவற்றை நினைவுக்குக் கொண்டுவந்து தங்களின் செயல்பாட்டோடு இணைத்துக் கொண்டனர். பகிர்வின்போது, குழுவில் இருந்த அனைவரும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டனர். இச்செயல், மாணவர்களை நான் சரியான பாதையில் கொண்டு செல்கிறேன் என்பதை உறுதிப்படுத்தியது.

ஆராய்தல்:

1. பொம்மைகளின் வகைகளை அறியச்செய்தல்

ஆசிரியர் 1: வகுப்பில் உள்ள மாணவர்களைச் சிறு குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவுக்கும், ஒரு பொம்மையைக் கொடுத்தல். இந்தப் பொம்மையைச் செய்யத் தேவையான பொருட்கள், இதன் சிறப்புகள், பயன்பாடு போன்றவற்றைத் தத்தம் குழுவில் விவாதித்தனர். பின்பு கொடுக்கப்பட்ட செயல்பாட்டுத்தாளைக் குழுவாக அமர்ந்து நிரப்பினர்.

மாணவர்கள், ஆசிரியர் உதவியின்றித் தானாகச் சிந்தித்துச் செயல்பட்டனர். இதற்கு முன்புவரை, மாணவர்கள் தாமாகச் சிந்தித்து எழுதுவது என்பது அரிதாகவே இருந்தது. பொதுவாக அவர்கள், கேள்விக்கான பதில்களை மனப்பாடம் செய்து எழுதுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால் இன்று அவர்களே எழுதியது எனக்குப் பேரானந்தத்தைத் தந்தது. அவர்களின் வரிகள் பேச்சு வடிவிலேயே இருந்தன. மேலும், எழுத்துப் பிழைகளும் அதிகமாகவே இருந்தன.

ஆசிரியர் 2 : மாணவர்கள் தங்கள் பொம்மைகளுக்குப் பெயர் சூட்டினர். கேள்விகளுக்குப் பதிலளித்த பின், பொம்மைகளைப் பற்றிக் கதைபேசத் தொடங்கிவிட்டனர். குழுக்களின் பகிர்வின் முடிவில் எதிர்பார்த்த பாடப்பொருட்கள் அனைத்தையும் கூறிவிட்டனர்.

2. பாடத்தைப் படித்துப் பொருளறிதல்

மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பத்தியைப் பிரித்துக் கொடுத்தேன். அவர்கள் தனித்தனியாக அமர்ந்து வாசித்தனர். புதிய வார்த்தைகளுக்கு அகராதியைக் கொண்டு பொருள் புரிந்து கொண்டனர். பள்ளியில் தமிழ் அகராதி இல்லாததால், பாடப்புத்தகத்தின் இறுதியில் உள்ள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள பட்டியலைப் பயன்படுத்திக் கொண்டனர்.

ஒவ்வொருவரிடமும் அவர்கள் வாசித்த பத்தியிலிருந்து ஒரு வினாவைக் கேட்டேன். ஒரு சில மாணவர்கள் சரியான பதிலை அளித்தனர். வாசிக்கும்போது ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு நிலையில் இருந்தான். வேகமாகவும் சரியாகவும் வாசித்த மாணவர்களால் மட்டுமே கேள்விகளுக்குச் சரியான பதிலளிக்க முடிந்தது. வாசிப்பதற்கே சிரமப்பட்ட மாணவர்களுக்கு புரிதல் என்பது மிகக் குறைவாகவே இருந்தது. பத்திகள் பெரியனவாக இருந்ததால், நான் நினைத்ததை விட இச்செயல்பாட்டிற்கு அதிக நேரம் தேவைப்பட்டது. புதிய சொற்கள் குறைவாகவே இருந்தாலும், சொற்களின் அளவு பெரியது, உ.ம். பொருட்காட்சி, அறிவிப்புப்பலகை, நிறைந்திருந்தன, உரையாடுவது. இத்தகைய சொற்கள் சராசரியாக வாசிக்கும் மாணவர்களையும் மிரள வைத்தன. நிறுத்தற்குறிகள் அதிகமாக உள்ள பத்தியைத் தேர்வுசெய்து மாணவர்களுக்கு வாசித்துக் காட்டினேன். நான் வாசிக்கும் போது மாணவர்கள் புத்தகத்தில் விரல் வைத்து நான் வாசிப்பது போலவே திரும்பக் கூறினர். பிறகு அவர்களையும் அவ்வாறே வாசிக்கச் செய்தேன். 2 மாணவர்கள் மட்டுமே நிறுத்தற்குறிகளுக்கேற்ப ஏற்ற இறக்கத்துடன் வாசித்தனர். ஒரு சிலர் ‘.’ மற்றும் ‘?’ ஆகியவற்றிற்குக் கவனம் செலுத்தினர். எழுத்துக்கூட்டி வார்த்தைகளை வாசிப்பதிலே அதிக நேரத்தைச் செலவிட்ட மாணவர்களால் நிறுத்தற்குறிகளுக்கேற்ப வாசிக்க இயலவில்லை.

ஆசிரியர் 2: மீத்திறன் மிக்க மாணவர்கள் பெரிய வார்த்தைகளைக்கூட சரளமாக வாசித்தனர். சராசரியாக வாசிக்கும் மாணவர்கள் முதல் முறை தயங்கியும் இரண்டாம் முறை சரியாகவும் வாசித்தனர். அடுத்த நிலையில் உள்ள மாணவர்களுக்கு எழுத்துகூட தெரியாதது வருத்தத்தை அளித்தது. பாடத்தைப் படித்தபின் கேட்கப்பட்ட கேள்விக்கு அழகாகப் பதிலளித்தனர். சில கேள்விகளுக்கு மீண்டும் படித்துப் பதில் கூறினர். ‘சுய உதவிக் குழு’ என்ற அமைப்பைப் பற்றி அறிந்திருந்தாலும் அந்த அமைப்பின் பெயரை அவர்கள் அறிந்திருக்கவில்லை. மாணவர்கள் வாசிக்கும் போது நிறுத்தற்குறிகளுக்கு ஏற்ப வாசிக்கவில்லை.

விளக்குதல்:

ஆசிரியர் 1: மாணவர்கள் தங்கள் குழுவில் விவாதித்ததை மற்ற குழுக்களோடு பகிர்ந்து கொண்டனர். அவர்கள் எழுதிய விடைகளையும் வாசித்துக் காட்டினர். மாணவர்கள் குழுவுக்குக் கொடுக்கப்பட்ட பொம்மைகளைக் கையிலேந்தி, கருத்துக்களைப் பகிரும்போது அவர்கள் முகம் மகிழ்ச்சியில் மூழ்கியிருந்தது. அவர்கள் எழுதியதில் பிழைகள் இருந்தபோதும், சரியாக வாசித்தனர். அவர்களுக்குத் தெரிந்த வேறுசில பொம்மைகளைக் கூறும்போது, நான் எதிர்பாராத பதில்களும் வந்தன.

தாங்கள் வாசித்த பத்தியை மற்றவர்களுக்கு வாசித்துக்காட்டி அதன் பொருளையும் விவரித்தனர். புதிய சொற்களுக்கான பொருளையும் அறிந்திருந்தனர். மேலும், வினாக்களுக்குப் பெரும்பாலான மாணவர்கள் பதிலளித்தனர். ‘ஆற்றல்’ என்ற சொல்லை மாணவர்கள் தவறாகவே உச்சரித்தனர். பெரிய வார்த்தைகளை எவ்வாறு பிரித்து படிப்பது என்று மாணவர்களுக்கு விளக்கினேன். ஆனால் ‘ஆற்றல்’ என்ற சொல்லை நான் கூறும்போது மட்டுமே சரியாக உச்சரிக்கின்றனர். சற்று நேரம் கழித்து கேட்கும்போது தவறாகவே உச்சரிக்கின்றனர். பின் நாங்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து பாடத்தின் பொருளையும், சில உதாரணங்களையும், அவர்களைச் சுற்றி நிகழும் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகளில் பொம்மைகளின் பயன்பாட்டையும் விவாதித்தோம்.

நிறுத்தற்குறிகளுக்கு ஏற்ப வாசிக்கும்போது, ஒரு சில மாணவர்கள் என்னைப் போலவே வாசித்தனர். மற்றவர்கள் அதற்காக முயன்றனர். அனைத்து மாணவர்களும் ஏற்ற இறக்கத்துடனும் உரிய உணர்வுடனும் வாசிக்க, நிறுத்தற்குறிகளின் முக்கியத்துவத்தை விளக்கினேன். மேலும் அவை இல்லையென்றால், வாசித்ததைப் புரிந்துகொள்வது எவ்வளவு கடினம் என்பதைச் செய்து காட்டினேன். மேலும் நமது பேச்சில் ஏற்ற இறக்கம், உணர்வு போன்றவை இல்லாவிடில், நாம் தெரிவிக்க விழையும் கருத்தும் அக்கருத்தின் முக்கியத்துவமும் முழுமையாகச் சென்றடையாது என்பதையும் செய்து காட்டினேன்.

ஆசிரியர் 2: ‘மாதிரி’ வாசிப்பிற்குப் பிறகும் மாணவர்களால் நிறுத்தற்குறிகளுக்கேற்ப வாசிக்க இயலவில்லை. இதில் அவர்களுக்குப் பயிற்சி தேவை என்பதைப் புரிந்து கொண்டேன். அருகில் உள்ள அரசுப் பள்ளியிலிருந்து

கைவினை ஆசிரியை ஒருவரை வரவழைத்தேன். என்னைவிட அத்துறையை சேர்ந்த ஒரு வல்லுநர் பயிற்றுவிக்கும்போது கற்றல் எளிமையாகவும் விரைவாகவும் நிகழும் என்று எண்ணினேன்; அந்த எண்ணம் நிஜமானது. அந்த ஆசிரியை முறையாகக் கற்பிக்க, என் மாணவர்கள் மகிழ்ச்சியாகக் கற்றனர். அவர் ஒன்றிற்கு மேற்பட்ட பொம்மைகளைச் செய்யக் கற்பித்ததால், மாணவர்களும் அவரவர்களுக்குப் பிடித்த பொம்மைகள் பலவற்றைச் செய்து முடித்தனர்.

விவரித்தல்:

ஆசிரியர் 1: பாடப்புத்தகத்தில் 28ஆம் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள பயிற்சியைச் செய்ய அனைத்து மாணவர்களுக்கும் பயிற்சித்தாள் ஒன்றைக் கொடுத்தேன். இதைச் செய்யும்போது, மாணவர்கள் தாங்கள் எழுதும் சொற்கள் பொருளுடையனவா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டனர். இச்சொற்களிலும் எழுத்துப் பிழைகள் இருந்ததைக் கவனித்தேன். பொம்மைகள் செய்யத் தேவையான பொருட்களை வகுப்பறையின் மையத்தில் வைத்தேன். மாணவர்களை அவரவர்க்குப் பிடித்த அல்லது தெரிந்த பொம்மைகளைச் செய்யுமாறு கூறினேன். என்னுடைய உதவியின்றிக், குழுவாகவும், தனியாகவும் செயல்படத் தொடங்கினர். கிட்டத்தட்ட 20 பொம்மைகளைச் செய்திருந்தனர். நான் மேற்பார்வை மட்டுமே செய்திருந்தேன். செய்யப்பட்ட பொம்மைகளை ஒரு மேசையின் மீது அடுக்கிவைத்தோம். அவரவர் செய்த பொம்மைகளை அவர்களே விளக்கிய விதம் என்னை வியப்பிலாழ்த்தியது. மேலும் அவர்கள், தனக்குப் பிடித்த, மற்றவர்கள் செய்த பொம்மைகளைப் பற்றியும், அப்பொம்மை ஏன் தனக்குப் பிடிக்கும் என்பதையும் கூறினர். பல பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களின் படங்களை மாணவர்களுக்குக் காட்டி, இதுபோன்ற நேரங்களில் அவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கூறினேன். அப்போது அவர்கள் பழைய நிகழ்வுகளை நினைவு கூர்ந்தனர். ஐயனார் சிலை, குதிரை பொம்மை போன்றவை மட்டுமல்லாது, கொலு, கிருஸ்துமஸ், அழகர் திருவிழா, குழந்தை வரம் வேண்டி நேர்த்திக்கடன் செலுத்துவது, கோவில் திருவிழாக்களில் பொம்மைகளை வாங்குவது என்று பட்டியலிட்டுக்கொண்டே சென்றனர்.

ஆசிரியர் 2: கணினியில் கோவில்களில் பொம்மைகளின் பயன்பாடு பற்றிய புகைப்படங்களைக் காட்டியபோது, மாணவர்கள் அவர்களின் வாழிடங்களில் உள்ள கோவில்களைப் பற்றி பேசிக்கொண்டே இருந்தனர். எனவே, பள்ளிக்கு அருகாமையில் உள்ள ஒரு ஐயனார் கோவிலுக்கு அவர்களை அழைத்துச் சென்றேன். வழக்கமாக அவர்கள் கடந்து செல்லும் கோவிலாக இருந்தபோதிலும், அன்று அச்சிலைகளை ஆச்சரியமாகப் பார்த்தனர். அவற்றைச் சுற்றிச்சுற்றி வந்தனர்; தொட்டுத்தொட்டுப் பார்த்தனர். “ஏய்! நம்ம புக்குள இந்த செலய பத்தி படிச்சோம் டா!” என்று அவர்களுக்குள் பேசிக்கொண்டனர்.

இந்தக் களப்பயணம் மாணவர்களுக்கு ஒரு உற்சாகத்தைக் கொடுத்தது. நான் யாரையும் சாமி கும்பிடு, விபூதி, குங்குமம் வைத்துக்கொள் என்று கூறவில்லை. அதனால் பிறமத மாணவர்களுக்குக் கோவிலுக்குள் நுழைவதில் எந்தத் தயக்கமும் ஏற்படவில்லை.

மதிப்பிடுதல்:

மாணவர்களை அவர்களுக்குப் பிடித்த பொம்மையை வரைந்து, அதைபற்றி கதை ஒன்றை எழுதுமாறு கூறினேன். ஆனால் மாணவர்கள், தங்களுக்குப் பிடித்த சில பொம்மைகளை வரைந்து கதைகளை எழுதிக், கதைப்புத்தகத்தை உருவாக்கினர். அனைத்து மாணவர்களும் படங்களை நன்றாக வரைந்திருந்தனர். சிலரின் கதை வரிகள் கோர்வையாக இருந்தன. கதைகளின் போக்கும் முடிவும் சிறப்பாக இருந்தன. சில மாணவர்களின் வாக்கியங்களின் தொடர்பு தொலைந்திருந்தது. எழுத்துப் பிழைகள் நிறைந்திருந்தன. கதையை ஒவ்வொருவரும் தனித்தனியாகச் சிந்தித்து, எழுதித் தானாகவே சரிபார்த்தனர். அதனால் அவர்களின் படைப்பாற்றலைப் பார்த்தேனே அன்றி, அவர்களின் பிழைகளைப் பொருட்படுத்தவில்லை. மாணவர்களின் எழுத்துக்கள் அவர்களின் படங்களை ஒட்டி இருந்தனவே அன்றி அவற்றைத் தாண்டி அவர்களால் சிந்திக்க இயலவில்லை.

 

 

 

Grade: 
4

Subject: 
Tamil

Term: Term 1