Towards a just, equitable, humane and sustainable society

என் உடல்

நோக்கங்கள் :

  • பாடமுடிவில் கீழ்க்குறிப்பிட்டுள்ள திறன்கள் மாணவர்களிடையே மேம்படும் :
  • பாடல்களைக் கவனத்துடன் கருத்தூன்றிக் கேட்டுப் புரிந்துகொள்ளுதல்
  • கேட்ட/படித்த பாடல்களிலிருந்து கேட்கப்படும் எளிய வினாக்களுக்கு முழுமையான சொற்றொடரில் விடை கூறுதல்
  • கேட்ட பாடல்களைத் தன் கற்பனையின் அடிப்படையில் கூறுதல்
  • கேட்டவற்றுடன் தன் அனுபவங்களைத் தொடர்புபடுத்திப் பேசுதல்
  • சொற்களின் ஒலிவடிவ, வரிவடிவத் தொடர்புகளை இனங்காணல்
  • சிறிய சொற்றொடர்களை உரிய ஒலிப்புடன் படித்தல்
  • எளிய சந்தப்பாடல்களை இசையுடன் படித்தல்
  • தன்னை அறிந்துகொள்ளுதல்
  • பெயர்ச்சொற்களை/வினைச்சொற்களைக் கற்றறிந்து பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்துதல்

செயல்பாடு 1 : முன்னறிவோடு தொடர்புபடுத்துதல்

ஆசிரியர் மாணவர்களின் உடல் உறுப்புகள் குறித்த முன்னறிவைச் சோதிக்கும் வகையில் எளிய கேள்விகளைக் கேட்டுப் பதில்களைப் பெறுதல்.

  1. நம் உடலில் உள்ள உறுப்புகள் யாவை? அவை எங்கெங்கே உள்ளன? (மாணவர்களை உடலுறுப்புகளின் பெயர்களைச் சொல்ல வைப்பதோடு அவ்வுறுப்புகளைச் சுட்டிக்காட்டவும் செய்யலாம்)
  2. இந்த உடலுறுப்பின் பெயர் என்ன ? இது எதற்குப் பயன்படுகிறது?

செயல்பாடு 2 :

ஆசிரியர் எளிய கேள்வி - பதில்கள் மூலம் ‘என் உடல்’ பாடலின் ஒவ்வொரு வரியையும் மாணவர்களிடையே அறிமுகம் செய்வார்.

ஆசிரியர் : கண்ணால் நாம் என்ன செய்வோம்?

மாணவர் : பார்ப்போம்.

ஆசிரியர் : கண்ணால் நாமும் பார்க்கிறோம் ( பாடல் வரி)

ஆசிரியர் : காதால் நாம் என்ன செய்வோம்?

மாணவர் : கேட்கிறோம்.

ஆசிரியர் : காதால் நாமும் கேட்கிறோம் (பாடல் வரி)

இதே போன்று ஒவ்வொரு வரியையும் அறிமுகப்படுத்தியபின் ஆசிரியர் பாடிக்காட்ட ஆரம்பிப்பார்.

செயல்பாடு : 3   ஆசிரியர் உடல்மொழியுடன் பாடிக்காட்டுதல்

பாடலின் ஒவ்வொரு வரியையும் தகுந்த ஏற்ற இறக்கங்களோடும் உரிய உடல் மொழியோடும் ஆசிரியர் ஓரிரு முறை பாடிக்காட்டி மாணவர்களைக் கவனிக்கச் செய்வார்.

நாம் எந்த உடல் உறுப்பால் பார்க்கிறோம்?

நாம் எந்த உடல் உறுப்பால் கேட்கிறோம் ?

மாணவர்கள் நன்கு கவனித்துப் பாடலை உள்வாங்கிய பின் ஆசிரியர் மாணவர்களைப் பின்தொடர்ந்து பாடச் செய்வார். மாணவர்கள் ஆசிரியரைப் பின்தொடர்ந்து உரிய சந்தத்துடன் பாடுவார்கள்.

செயல்பாடு : 4   ஆசிரியர் உடல்மொழியுடன் பாடிக்காட்டுதல்

ஆசிரியர் ஒவ்வொரு உடலுறுப்பையும் சுட்டிக்காட்டி அதற்குரிய பாடல் வரியை மாணவர்களைப் பாடிக்காட்டச் செய்தல்.

ஆசிரியர் கண், காது, மூக்கு முதலிய உறுப்புகளைத் தன் சுட்டுவிரலால் சுட்டிக்காட்டியபின் அதற்குரிய பாடல்வரியை மாணவர்களைப் பாடச்செய்தல்.

செயல்பாடு – 5:  மாணவர்களைக் குழுவாகப் பாடவைத்தல்

படங்களுடன் பாடல் வரிகள் அடங்கிய தாள்களை மாணவர்களிடையே அளித்து ஆண் / பெண், முதல் குழு/ இரண்டாம் குழு என மாறி மாறி பாடல் வரிகளை மாற்றி ஆசிரியர் மாணவர்களைப் பாடவைப்பார்.

செயல்பாடு – 6: உடல் உறுப்புகளின் படங்களைக் காண்பித்துப் பாடவைத்தல் /  பாடல் வரிகளை மாற்றிப்பாடுதல்.

ஆசிரியர் கண், காது, மூக்கு முதலிய உடல் உறுப்புகளின் படங்களை மாணவர்களிடையே காண்பித்து அதற்குரிய பாடல் வரிகளை மாணவர்களைப் பாடவைப்பார். மேலும் சிறு சிறு வினாக்களை எழுப்பி உரையாடுவார்.

பாடல் வரிகளை மாற்றிப்பாடுவதற்கான மாதிரி வரிகளை ஆசிரியர் வழங்கி மாணவர்களைப் பாடல் வரிகளை மாற்றிப்பாடவைப்பார்.

(எ.டு) – காலால் நானும் ஓடுகிறேன் , வாயால் நானும் பாடுகிறேன்

செயல்பாடு : 7 மதிப்பிடுதல்

  1. உடலுறுப்புப் படங்களை அவற்றின் பெயர்களோடு பொருத்துக.
  2. வினைச்சொற்களை அதற்குரிய படங்களோடு பொருத்துக.
  3. கோடிட்ட இடங்களில் உரிய உடல் உறுப்புகளை நிரப்புக.

Grade: 
1, 2

Term: Term 3

Subject: 
Tamil

Request Printed Copy