Towards a just, equitable, humane and sustainable society

குறில் நெடில் - செயல்திட்டம்

நோக்கங்கள்:    

பாடமுடிவில் மாணவர்களின் கீழ்க்கண்ட திறன்கள் மேம்படும்.

  • சொல்-விளையாட்டு விதிமுறைகளைக் கேட்டுப் புரிந்து கொள்ளுதல்.
  • அறிந்த தகவல்களைக் கலவைத் தொடரில் பேசுதல்.
  • ஒன்றைப்பற்றி ( செய்தி / பொருள் / உயிரினம்) தங்கு தடையின்றி விவரித்துக் கூறுதல்
  • தெளிவான உச்சரிப்புடன் குறில் – நெடில் பிழைகள் இன்றிப் படித்தல்.
  • ஒரே எழுத்தில் தொடங்கும் பல்வேறு சொற்களை உருவாக்குதல்
  • படிக்கும் பகுதியில் உள்ள சொற்களின் பொருளை சூழலை வைத்துப் புரிந்து கொள்ளுதல்.
  • பொருள் உணர்ந்து சொற்களுக்கேற்ப குறில் நெடில் குறிகளைப் பயன்படுத்தி எழுதுதல்.
  • குழு மனப்பான்மையை வளர்த்தல்

செயல்பாடு 1 – முன்னறிவைச் சோதித்தல்

ஆசிரியர் மாணவர்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான சில சொற்களை எழுதச்செய்து பின் குறில் நெடில் பிழைகள் இன்றி எழுதியுள்ளார்களா? என்பதைச் சரி பார்ப்பார். மேலும், குறில் / நெடிலுக்கான வரிவடிவங்களை மாணவர்கள்  அறிந்துள்ளார்களா? என்பதையும் தனி எழுத்துக்களை ஒலிக்கச் செய்தும் ஆசிரியர் சோதிப்பார்.

எ.டு. : மாம்பழம், பால்கோவா, சீனிமிட்டாய், தா, நீ, நி, கை,

செயல்பாடு : 2 - குழுச்செயல்பாடு – படித்தல்

ஆசிரியர் மாணவர்களைச் சிறு குழுக்களாகப் பிரித்து குறில் – நெடில் எழுத்துக்களுடன் தொடங்கும் படச்சொற்களைப்  படிக்கச் செய்வார். அனைவரும் ஒருமுறையாவது அனைத்துப்

படச்சொற்களையும் படித்து, பின் அவற்றைப்பற்றி ஒவ்வொரு குழுவும் தங்களுக்குள் உரையாடுவதற்கான வழிமுறைகளை ஆசிரியர் மாணவர்களுக்கு வழங்குவார்.

ஆசிரியர் : இலந்தைப்பழம்/ கொய்யாப்பழம் சாப்பிட்டுள்ளீர்களா? அதன் உருவம் எப்படி இருக்கும்? நிறம் எப்படி இருக்கும்? – உன்னுடைய அனுபவங்களை எல்லாம் உன் குழு நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மாணவர்கள்: படச்சொற்களைப் பற்றிய அனுபவங்களை மாணவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வர்.

செயல்பாடு –3:  குழுச்செயல்பாடு – சொல் விளையாட்டு

ஆசிரியர் ஒவ்வொரு சொல்லையும் உரிய உச்சரிப்புடன் குறில் / நெடில் ஒலிக்குறிகளை அழுத்திக்கூற வரிசை முறைப்படி மாணவர் குழுக்கள் அதனதற்குரிய படங்களைக் கண்டுபிடிக்க வேண்டும். ஆசிரியர் ஒவ்வொரு குழுவிலும் இருக்கும் ஏதாவது ஒரு மாணவரை அந்தச் சொல்லைப் பற்றி ஓரிரு சொற்றொடர்களில் பேசவைப்பார். குழுவில் இருக்கும் ஏதாவது ஒரு மாணவரை அச்சொற்களைக் கரும்பலகையில் எழுத வைப்பார். சொற்களைப் பற்றிப் பேசவும், கரும்பலகையில் சரியாக எழுதவும் குழு நண்பர்கள் மாணவருக்கு உதவுவர்.

ஆசிரியர் ஒவ்வொரு சொல்லின் வழியாக சிறிய வினாக்கள் மூலம் உரையாடலை நிகழ்த்தி பயிற்சித்தாளில் உள்ளவற்றை மாணவர்கள் அறியுமாறு செய்வார்.

மாதிரி உரையாடல்:

ஆசிரியர்: அணில் என்ன சாப்பிடும்?

மாணவர் : பழங்களைச் சாப்பிடும்.

ஆசிரியர் : நாம் எதைக்கொண்டு நடக்கிறோம்?

மாணவர் : கால்கள்.

ஆசிரியர் : நகம் வளர்ப்பது நல்லதா கெட்டதா?

மாணவர்கள்: கெட்டது.

ஆசிரியர் : நகம் வளர்ப்பது நம் உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும்.

ஆசிரியர் : விமானம் யாரைப்போல/ எதைப்போல பறக்கிறது?

மாணவர் : பறவையைப் போல பறக்கிறது.

செயல்பாடு – 4:  குழு நடவடிக்கை – குறில் / நெடில் குறிகளில் தொடங்கும் சொற்களை மாணவர் கூறுதல் / எழுதுதல்.

ஆசிரியர் குறில் / நெடில் எழுத்துக்களை சரியாக உச்சரித்து மாணவர் குழுக்களை அவ்வெழுத்தில் தொடங்கும் சொற்களைக் கூற வைப்பார். மாணவர்கள் சொற்களைக் கூறக்கூற ஆசிரியர் அவற்றைக் கரும்பலகையில் எழுதுவார். ஒவ்வொரு குழுவில் இருந்தும் ஓரிருவரைக் கரும்பலகையில் எழுத வைப்பார்.

செயல்பாடு – 5:   மதிப்பீடு

கோடிட்ட இடங்களில் பொருள் உணர்ந்து சரியான குறில் / நெடில் எழுத்துக்களை எடுத்து எழுதுவதற்கான வழிமுறைகளை ஆசிரியர் மாணவர்களுக்கு வழங்குவார். ஓரிரு மாதிரிகளைக் கரும்பலகையில் எழுதிக்காண்பிப்பார்.

Grade: 
1, 2

Term: Term 3

Subject: 
Tamil

Request Printed Copy