Towards a just, equitable, humane and sustainable society

எதிர்ச்சொற்களை அறிமுகப்படுத்துதல்

கற்றல் நோக்கங்கள்:

  • படங்களை உற்றுநோக்கி அவற்றைப் பற்றிப் பேசும் திறனைப் பெறுவர்.
  • சொற்கள், சொற்றொடர்களை முறையாக உச்சரிக்கும் திறனைப் பெறுவர்.
  • சொற்களின் ஒலிவடிவ, வரிவடிவத் தொடர்புகளை இனங்காண்பர்.
  • பாடமுடிவில் மாணவர்கள் எதிர்ச்சொற்களை அறிந்துகொள்வர்.
  • எதிர்சொற்களைப் புரிந்துகொண்டு வாக்கியத்தில் அமைத்துப் பேச / எழுதக் கற்றுக்கொள்வர்

தேவையான கற்றல் வளங்கள்:

  1. எதிர்ச்சொற்களைப் படங்களுடன் விளக்கக்கூடிய சொற்பட வளம்.
  2. எதிர்ச்சொற்களின் பொருளை எடுத்துக்காட்டி எளிதாக விளக்கக்கூடிய பெரிய/சிறிய, குண்டு/ஒல்லியான சிறிய பொருள்கள்.

கற்றல் கற்பித்தல் செயல்பாடு : 1

‘எதிர்ச்சொல்’ என்பதற்கான பொருளை மாணவர்களை உணரவைத்தல்.

ஆசிரியர்: நம் உடலில் தலை எங்கு உள்ளது ? கால் விரல்கள் எங்கு உள்ளன? சொல்லுங்கள் பார்ப்போம்.

மாணவர்: இங்கே உள்ளது. தலையையும் விரல்களையும் சுட்டிக்காட்டுவர் (or) மேல், கீழ் என்ற சொற்களைப் பயன்படுத்துவர்.

ஆசிரியர்:  நம் உடலில் தலை ‘மேலே’ உள்ளது, கால் விரல்கள் நம் உடலின் ‘கீழே’ உள்ளன. மேல் – கீழ் ஆகியவை எதிர்ச்சொற்கள் ஆகும். இவை இரண்டில் எது பெரிய பென்சில்? எது சிறிய பென்சில்? (இரண்டு வெவ்வேறு உயரமுள்ள பென்சில்களைக் காண்பிக்க வேண்டும்)

மாணவர்கள்: “இது பெரியது, அது சிறியது.”  பெரிய பென்சிலையும் சிறிய பென்சிலையும் சுட்டிக்காட்டுவர்.

ஆசிரியர்: “பெரிய – சிறிய  ஆகியவை எதிர்ச்சொற்கள் ஆகும். நீங்கள் கூறிய ‘இது–அது’ ஆகியவை கூட எதிர்ச்சொற்கள் தாம். நீங்கள் எப்பொழுது தூங்குவீர்கள்? எப்பொழுது பள்ளிக்கு வருவீர்கள்?”

மாணவர்கள்: “இரவில் தூங்குவோம். பகலில் பள்ளிக்கு வருவோம்.” (நைட்/ராத்திரி/டே டைம் என்று மாணவர்கள் கூறலாம்)

ஆசிரியர்: “ஆம். நீங்கள் இரவில் தூங்குவீர்கள். பகலில் பள்ளிக்கு வருவீர்கள். பகல்-இரவு  ஆகிய இரண்டும் எதிர்ச்சொற்கள் ஆகும்.”

கரும்பலகையில்:

எதிர்ச்சொற்களை இணைத்து ஒவ்வொரு முறை மாணவர்களுக்கு அறிமுகம் செய்தவுடன் உடனடியாக அவற்றைக் கரும்பலகையில் எழுதவும்.

மேல் – கீழ்

பெரியது – சிறியது

இது – அது

பகல் – இரவு

கற்றல் - கற்பித்தல் செயல்பாடு – 2

எதிர்ச்சொற்களைப் படங்களுடன் இணைத்துக் கற்பித்தல்

ஆசிரியர்: மாணவர்களை சிறு சிறு குழுக்களாகப் பிரித்து சொற்பட வளங்களை மாணவர்களுக்கு வழங்குவார். ஆசிரியர் ஓரிரு முறை அனைத்துச் சொற்களையும் வரிசைப்படி படித்துக்காட்டுவார், பின் படங்களையும் சொற்களையும் இணைத்துப் பொருள் புரியுமாறு  படித்துப்பார்க்கச் சொல்வார்.

ஆசிரியர்: “எது பெரியது? எது சிறியது? எது மேல்? எது கீழ்? எது குளிர்? எது வெப்பம்?” – இந்தக் கேள்விகளை ஒவ்வொரு குழுவினருக்குள்ளும் மாற்றி மாற்றிக் கேட்டுக்கொள்ளுங்கள்.

மாணவர்: ஆசிரியரைப் பின்பற்றி சொற்பட வளத்தில் உள்ள சொற்களின் உதவியுடன் மாணவர்கள் சிறு சிறு வினாக்களை எழுப்புவர்? குழுவினர் எது பெரியது ? எது சிறியது ? என சுட்டிக்காட்டுவர்.

கற்றல் கற்பித்தல் செயல்பாடு - 3

மாணவர்கள் படங்களை விவரித்தல் மற்றும் வாசித்தல்.

ஆசிரியர்: சொற்பட வளம் - 2 ஐக் சுட்டிக்காட்டி மாணவர்களிடம் பட விவரிப்புச் சொற்றொடர்களைப் படிக்கச் சொல்வார். மேலும், படங்களைத் தங்களது சொந்தச் சொற்களால் விவரிக்கச் சொல்வார்.

மாணவர்கள்: மாணவர்கள் விவரிப்புச் சொற்றொடர்களை வாசிப்பர் & விவரிப்பர்.

கரும்பலகையில்:

மாணவர்கள் விவரிப்பவற்றை ஆசிரியர் உடனுக்குடன் சிறிய சொற்றொடர்களாக மாற்றிக் கரும்பலகையில் எழுதுவார்.

கற்றல் – கற்பித்தல் – மதிப்பீடு:

ஆசிரியர், பயிற்சித்தாளை மாணவர்களிடம் வழங்கி, உரிய வழிமுறைகளைக் கூறி சரியான எதிர்ச்சொற்களை நிரப்பவும், பொருத்தவும் மாணவர்களை வழி நடத்துவார்.

Grade: 
2, 3

Term: Term 3

Subject: 
Tamil

Request Printed Copy