Towards a just, equitable, humane and sustainable society

வாசித்து மகிழ்ந்தார்கள்! பார்த்து மகிழ்ந்தோம்!

வாசித்து மகிழ்ந்தார்கள்!   பார்த்து மகிழ்ந்தோம்!  
கற்பித்தல் செழுமையுறும்பொழுது, கற்றலும் செழுமையுறும்

நல்.கருணாநிதி

 

முதல் வகுப்புக் குழந்தைகளுக்குக் கற்பித்தல் என்பது ஆசிரியரின் பல் திறன் சார்ந்த விஷயமாகவே இருந்து வருகிறது. ஆனால் ஆசிரியர் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும்பொழுது சுவையான அனுபவமாக, சமூகத்திற்கான முக்கிய வேலையில் ஈடுபட்ட உணர்வை அளிக்கிறது.  அர்த்தமுள்ள இச்செயல்பாடை கோர்த்து, வார்த்தைகளாக்கும் பொழுது நிறைவளிப்பதாகவே இருக்கிறது.
மற்ற எல்லா அரசுப்பள்ளிக் குழந்தைகளைப்போலவே எங்கள் பள்ளிக் குழந்தைகளுக்கும் ஆசிரியர் ஆதரவளிப்பவராகவும் இருக்க வேண்டியுள்ளது. குழந்தைகளைப் பற்றிக் குறிப்பிட வேண்டு மானால் அவர்கள் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். ஏதேனும் செயல்பாடுகள் அவர்களுக்கு விருப்பமானதாக இருக்கும். இயற்கை பற்றியும் விவசாயம் குறித்தும் பல தகவல்கள் அறிந்தவர்களாக இருப்பர். மரம் ஏறுதல், விளையாடுதல், தாங்களே தங்களை பராமறித்துக் கொள்ளுதல் போன்றவை வியக்கும்படியாக இருக்கும் இவர்கள் செயல்பாடுகள் ஆசிரியருக்கு சவாலாகவும் இருப்பவை. முதல் வகுப்புக் குழந்தைகளுடனான என் ஆசிரிய  அனுபவத்தை இங்குப் பகிர்ந்துகொள்ள முயற்சித்துள்ளேன். அதற்காக குழந்தைகளைப் பாதுகாத்தல், சிறப்புத்திறனுடைய குழந்தைகளுக்கான அணுகுமுறை, வகுப்பறையில் கற்பித்தலின் நுட்பங்கள், முதல் வகுப்பில் குழந்தைகளை வாசிப்பில் ஈடுபடுத்துதல் என்ற தலைப்பின் கீழ் பகிர்ந்துள்ளேன். 
குழந்தைகளைப் பாதுகாத்தல்:   

குழந்தைகள் முதல் வகுப்பிற்கு வருகிறார்கள் என்றாலே நினைவிற்கு வருவது அவர்களின் அழுகைதான். அவை முழுக்க முழுக்க அவர்களின்  பயம் வெளிப்படும் அழுகையும்தான்.  அவர்களை மடியில் உட்கார வைத்துக் கண்ணைத் துடைத்துவிடுவதில் துவங்கும் நம் வேலை. பள்ளிக்கு சாக்லெட்டை எடுத்துச் செல்வது, வகுப்பறைக்குள் 10 நிமிடங்களும் மைதானத்தில் 10 நிமிடங்களுமாக மாறி மாறி இருக்க வைப்பேன். குறிப்பாக மணல், களிமண்ணில் விதம் விதமான விளையாட்டுகள் விளையாடவைப்பேன். அவர்கள் சொல்வதைக் கேட்பது, அவர்களுக்குக் கதை சொல்வது, அவர்களிடம் சின்னச் சின்ன கேள்விகள் கேட்பது, ராகமாக எதையாவது உச்சரிக்கச் செய்வது என்ற ரீதியில் தொடரும். மூன்று மாதங்களுக்கு  இவை தொடரும். 

 

சிறப்புத்திறனுடைய குழந்தைகளைக் கல்விச்செயல்பாடுகளில் ஈடுபடுத்துதல்:

 என் வகுப்பில் இருந்த கண்பார்வை குறைபாடுடைய மாணவிகளுக்கு, கற்பிக்கும் நுட்பங்களைக் கற்க வெவ்வேறு விஷயங்களை வாசித்து, பார்வையற்றோர் பள்ளிக்கு சென்று பார்த்துவந்து சில நுட்பங்களைக் கையாண்டேன். ஒவ்வொரு பொருளாக தொட்டு அறியச்செய்து, பின்பொருட்களைக் காட்டிக் காட்டி அதன் பெயரைச் சொல்லச் செய்தல். அதோடு ஒவ்வொரு மாணவர்களும் அப்பொறுப்பை ஏற்று செய்ய வைத்தல். அவர்கள் நாங்கள் காட்டும் பொருளை சொன்ன போது நானும் மற்ற மாணவர்களும் வியந்து போனோம். இதே போல் அவர்களை என் முயற்சியில் ஆப்பரேஷன் செய்து அழைத்து வந்து நாங்களே கவனித்துக் கொண்டோம். பின் அவர்களிடம்  பச்சை சிகப்பு என்று வண்ணங்களைக் காட்டி சொல்லிக்கொடுத்துப் பின் கேட்ட பொழுது, குறிப்பிட்ட வண்ணத்தை உணர்ந்து சொன்னபொழுது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி அலாதியானது. ஆனாலும் இவை கற்பித்தலின் நுட்பத்தின் பகுதியா? என்ற கேள்விக்கு பதில் தெரியவில்லை. இடதுகை பழக்கமுள்ள குழந்தையுடனான அனுபவம் தனி. பெற்றோர்களும் மற்ற ஆசிரியர்களும் கேட்டுக்கொண்டதன் பெயரில் அக்குழந்தையை வலதுகையில் பயிற்சியளித்தேன். என்னுடைய ஆர்வத்தால் அக்குழந்தையை அதிகம் சித்திரவதை செய்த உணர்வு எனக்குள் ஏற்பட்டது.  குழந்தைகளை கற்றலில் அதிகம் ஈடுபடுத்துகிறேன் என்ற பெயரில் அவ்வாறு செய்துவிட்டேனோ? என்ற கேள்வியும் தோன்றியது… இடது கைப்பழக்கம் உடையவர்களை அதே கையில் பழக்குவதுதான் நல்லது என்று அறிந்த பொழுது பெரும் குற்ற உணர்வுக்கு உள்ளாக வேண்டியிருந்தது. என் கற்பிக்கும் செயல் முறையை மாற்றி மிகக் கவனமாக இடக்கைப் பழக்கத்திற்கே இட்டுச் சென்றேன். அப்பொழுது பல விமர்சனங்களை எதிர் கொண்டாலும் தைரியமாக செய்ய முடிந்தது. அறிவியல் பூர்வமான தகவல்கள் கொடுக்கும் அறிவு முக்கியமானது. அவற்றை நம் கல்வியில்  இன்னும் பல மைல் கற்களை எட்ட வேண்டியுள்ளது.

 

பாடத்தைத் திட்டமிடுதலும் நுட்பங்களை பயன்படுத்துதலும்:

உயிரெழுத்து மெய்யெழுத்துக்களை சொல்வது அடையாளப் படுத்துவது, எழுத முயற்சிப்பது, புத்தகத்திலுள்ள அனைத்துப் பாடல்களையும் பாடுவது என்ற ரீதியில் தொடரும். என் திட்டமிடலை ஒரு முன் உதாரணமாகக் கொள்ளமுடியாது. ஆரம்ப காலத்தில் அதிகமாகத் திட்டமிட்டு திட்டமிட்டு அதற்கான செயல்பாடுகளைத் தயாரித்து அவற்றை செய்ய முடியாமல் போனதைப் பற்றிக் கவலைப் பட்டிருந்திருக்கிறேன். ஆனால் இப்பொழுது எச்சமயத்தில் என்ன செய்வது என்ற திட்டம் மனதில் தெளிவாகிக் கொண்டு இருக்கிறது. அதனால் திட்டமிடும்பொழுதே இரண்டு மூன்று முறைகளை மனதில் வைத்துகொள்வது வழக்கமாகிவிட்டது. உதாரணத்திற்கு ”காக்கா இந்தப் பக்கம்...” என்ற பாடலைச் சொல்லிக்கொடுக்க திட்டமிடுகிறேன். நான் பாடி, இராகம் போட்டு எல்லாம் செய்துப் பார்த்துவிட்டு செல்கிறேன். ஆனால் அன்று முதல் வரி சொல்லிக் கொடுத்தபொழுது ஏதோ சரி வரவில்லை. எனக்கும் மாணவர்களுக்குமான இடைவெளி பெரிதாக இருப்பது போல் தோன்றியது. அன்று அதை அதற்கு மேல் தொடரவில்லை. மாறாக அன்று ”நீ காக்காய் மாதிரி கத்து; நீ குருவி மாதிரி கத்து…” என்பதாய் முடித்துவிட்டேன். மறு நாளும் பாடல் சொல்லித்தரவில்லை. காக்காய் மாதிரி நடந்து கொண்டே காக்கா என்று கத்து … என்பதாய் இருந்து. அடுத்த வாரம் அப்பாடலை சொல்லிக்கொடுத்த பொழுது, அப்பாடலின் தன்மையே வேறு மாதிரி இருந்தது. நாம் பாடத்தைத் திட்டமிடுவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் குழந்தைகளின் உணர்வைப் புரிந்து அதை மாற்றியமைத்துக் கொள்வது. இந்த சுதந்திரவெளியைக் கண்டுபிடிக்கவும் எனக்கு காலம் தேவைப்பட்டது. மூன்று மாதத்தில் நெருக்கமாக குழந்தைகளைக் கற்றலுக்கு நகர்த்திச் செல்வது அல்லது நாம் எதிர்பார்க்கும் கற்றலுக்கு இட்டுச்செல்வது சுலபமாக இருந்தது. கற்பித்தலில் தொடர்ந்து விதம் விதமாக ஈடுபட்டுவந்தபொழுதும் பாடத்திட்டத்தை முறையாக பயன்படுத்தாத உணர்வு எனக்குள் இருக்கும் அட்டவணைப்படி செயல் படாததுக் கூட இதற்குக் காரணமாக இருக்கலாம்.

கற்பித்தல் நுட்பங்களைப் பயன்படுத்துதல்:

 அடுத்தது, வகுப்பறையில் பாடங்களை நடத்துவதற்கு நான் கையாளும் நுட்பங்கள் குறிப்பிடத்தக்கவை. எனக்குமுன் என் வகுப்பறையை கவனித்துக் கொண்ட ஆசிரியர் வீரப்பன் அவர்கள் பயன்படுத்தி விட்டுச்சென்ற எழுத்து அட்டைகள் எனக்கு மிகவும் பயன்பட்டது. எழுத்து அட்டையும் வார்த்தை அட்டையும் அவற்றில்  முக்கியமானவை. நான் கரும்பலையை பயன்படுத்துவதை விட வெவ்வேறு நுட்பங்களைப் பயன்படுத்துவேன். எந்த எழுத்தைக் கற்றுத்தருகிறேனோ அந்த எழுத்தை வெவ்வேறு விதங்களில் வகுப்பறையில் இடம் பெறச்செய்வேன். ”வா” என்ற எழுத்தை கற்பிப் பதற்கு தரையில் எழுதி, அட்டையில் எழுதித் தொங்க விட்டு, கரும்பலகையில் எழுதி, மணலில் எழுதி, வார்த்தையில் உள்ள அந்த எழுத்தை வித்தியாசப்படுத்தி என விதம் விதமாக இருக்கும். எழுத்து அட்டை, சுவரெழுத்து, வார்த்தை அட்டை, மணலில் எழுதுதல், போஸ்டரில் எழுதுதல் என பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்துவேன். அதோடு பாடத்திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள நுட்பங்களையும் மறக்காமல் செய்வேன். அவர்கள் முன் அமர்ந்து பாடத்திட்டத்திற்கு தேவையான துணைக்கருவிகளைத் தயாரிப்பேன். அவர்களுக்கு வாசித்துக் காட்டுவேன். ஜனவரிக்குப் பிறகு ஏப்ரல் வரை அவர்கள் பாடம் கற்கும் நிகழ்வு விரைந்து நடைபெற்றது. கற்பித்தல் முறைகளும் நுட்பங்களும், காலத்திற்கும், விஷயத்திற்கும், நபர்களுக்கும் ஏற்ப மாறுபட்டுக் கொண்டே இருக்கக் கூடியது. 

   முதல் வகுப்புக் குழந்தைகளை புத்தக வாசிப்பில் ஈடுபடுத்துதல்:

குழந்தைகள் வாசிப்பை முதல் வகுப்பிலேயே துவங்க வேண்டும் என்ற புதுச்சேரி ஆசிரியர் வட்டத்தின் கருத்து என் இம்முயற்சிக்கு உதவியாக இருந்தது. இரண்டு மாதங்கள் அவ்வப்பொழுது மேற்கொண்ட இம்முயற்சியில்  குழந்தைகளின் வாசிப்பில் ஏற்பட்ட மாற்றம் ஆச்சர்யமானதாக இருந்தது. எஸ். எஸ். ஏ (Sarva Siksha Abiyaan)வின்  குழந்தை  வாசிப்புநூல்களான புத்தகப் பூங்கொத்து நூல்களைக் கொண்டு நான் மேற்கொண்ட சிறு சிறு முயற்சிகளை இங்கு குறிப்பிட்டுள்ளேன். அதற்காக நான் வாசித்த நூல்கள் மற்றும் நண்பர்களுடனான உரையாடல் என எல்லாவற்றையும் அடிப்படையாகக் கொண்டது, இம்முயற்சி.  முதல் குழந்தைகளைப் புத்தகம் வாசிக்கப் பயிற்று வித்தல் என்பது கொஞ்சம் புது அனுபவம்தான். வெளி நாடுகளில் குழந்தைகள் கிழிக்கமுடியாத, வாயில் கடிக்கக் கூடிய புத்தகங்களை குழந்தைகளுக்குக் கொடுக்கிறார்கள். குழந்தைகள் பள்ளிக்குமுன் வாசிக்கப் பல்வேறு படப் புத்தகங்களைத் தருகிறார்கள் என்ற உரையாடலைக் கேட்ட எனக்கு முதல் வகுப்புக் குழந்தைகளுடன் புத்தகங்களைக் கொடுத்து முயற்சிக்கவேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது.

என்னுடைய இந்த உணர்தலுக்குப் பள்ளியில் உள்ள சர்வசிக்‌ஷ அபியானின் புத்தகப் பூங்கொத்து  நூல்கள் உதவியாக இருந்தன. குழந்தைகளிடம் புத்தகத்தைத் தருவதற்குக் கொஞ்சம் அச்சமாகவே இருந்தது. ஏனெனில் பிள்ளைகள் புத்தகத்தைக் கிழித்துவிடுவார்கள் என்ற பயம். இரண்டாவது முதல் வகுப்புக் குழந்தைகள் புத்தகத்துடன் என்ன செய்வார்கள் என்ற தயக்கம்.  இத்தயக்கத்துடன் புத்தகங்களை நான் புரட்டிப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். இப்புரட்டலில் என்னையறியாமல் பத்து புத்தகங்களைத் தேர்ந்தெடுத்தேன். 

முதல் முயற்சி

குழந்தைகளிடம், இன்று உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு புத்தகத்தைத் தரப் போகிறேன். நீங்கள் அதைப் படிக்க வேண்டும். படிப்பீர்களா? என்று கேட்டேன்.

”படிப்போம்”-  மகிழ்ச்சியோடு உறக்கச் சொன்னார்கள். இந்த உற்சாகத்தை நான் எதிர்பார்க்க வில்லை.

இருந்தபோதும் வழக்கமான ஆசிரியரான நான், நீங்கள் புத்தகத்தைப் பத்திரமாகத் திருப்பித் தந்தால், தினம் தினம் புதுப் புத்தகம் தருவேன் என்று கூறினேன். அதற்கும் தலையாட்டினார்கள். பின் நான்  தேர்ந்தெடுத்த புத்தகங்களை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று வழங்கினேன். பின் அவர்களைக் கவனித்தேன்.

வகுப்பறையில் ஒரே அமைதி

எல்லோரும் அவரவர்கள் புத்தகத்தை அமைதியாகப் புரட்டிக் கொண்டிருந்தனர். சில குழந்தைகள் அதிலுள்ள எழுத்துக்களை சத்தம் போட்டுக் கூட்டிப் படிக்கத் துவங்கினர். குழந்தைகளுக்கு தன்  புத்தகத்தில் ஆர்வம் குறைந்து அடுத்தப் புத்தகத்தைப் பார்க்கத் துவங்கியபொழுது 12 நிமிடங்களாகியிருந்தது. இன்று படித்தது போதும் என்று புத்தகங்களைத் திரும்ப வாங்கிக்கொண்டேன். அடுத்த நாள் அவர்களாகவே புத்தகம் கேட்டார்கள். மீண்டும் கொடுத்தேன். வாங்கி வைத்தேன்.

இரண்டாம் முயற்சி:

குழந்தைகள் ஆர்வம் குறையாமல் புத்தகத்தை உற்றுப் பார்ப்பது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவர்கள் அதில் அப்படி எதைப்படிக்கிறார்கள் என்பதை அறியவேண்டும் என்ற உணர்வை அவர்களது ஈடுபாடு எனக்கு உணர்த்தியது. இருந்தபோதும் முதல் வகுப்புக் குழந்தையால் என்ன படிக்கமுடியும் என்ற நிலையிலிருந்து மாறுபடாத நான் அவர்களுக்கேற்ற ஒன்றைக் கண்டு பிடித்தேன். அவர்கள் என்ன படித்தார்கள் என்று எழுந்து சொல்லச்சொன்னேன். நீங்கள் படிக்கும் புத்தகத்திலுள்ள விஷயத்தை எழுந்து சொல்லவேண்டும் என்று கேட்டேன். நான் நான் என்று குழந்தைகள் கத்திக் கையைத் தூக்கினர். வியப்பாக இருந்தது எனக்கு. வரிசைப்படி அதைச் செய்ய சொல்லி கவனித்தேன்.

குழந்தை 1:

 இதோ இந்த புள்ள என்ன பன்னுச்சி.

போயிக்கிட்டே இருந்தது.

அப்ப இந்த ஆடை பாத்துச்சி.

பாத்துச்சா?

அதுகூடவே கொஞ்ச நேரம் நின்னு பேசுச்சி.

ரெண்டுபேரும் பேசிட்டு, போயிட்டாங்க. அவ்வளவுதான்.

ஒரு ஆடும் பெண்குழந்தையும் நிற்கும் வயல் வெளிக்காட்சியான ஒற்றைப்படத்தைப் பார்த்து குழந்தை வாசித்த விஷயம் இது. என் மனம் மகிழ்ச்சியடைந்ததைப் பற்றி சொல்லவே முடியாது. உடனே அடுத்த குழந்தையிடம் கேட்டேன்.

குழந்தை 2:

இவர் ஒரு தாத்தா.

அவர் புள்ளைங்க கூட இருக்கார்.

குழந்தை 3:

இந்த புத்தகத்துல …

மாடிருக்கு…

கோழியிருக்கு…

செடியிருக்கு…

குழந்தை 4:

ஒரு ஊர்ல அம்மாவும் அப்பாவும் இருந்தாங்களாம்.

அவுங்க பையன் இவன். (படத்தை எல்லாருக்கும் காட்டியவாறு)

அவன் பள்ளிக்கூடம் போனான்.

அந்த டீச்சர் இவுங்க.(படத்தை எல்லோருக்கும் காட்டி)

அங்க அவன் படிச்சான்.

இதற்குமேல் குழந்தைகள் என்ன படிக்க வேண்டும் என்ற கேள்வி என்னுள் எழுந்தது. நானும் குழந்தைகளும் மாறி மாறி புத்தகத்திற்குள் பயணித்தோம்.  இதில் எனக்கு அடுத்ததாகத் தோன்றியது. ஒரே புத்தகத்தை ஒவ்வொரு குழந்தையும் எப்படிப் படிக்கிறார்கள் என்ற ஆர்வம் எழுந்தது. நல்லவேளை, இதைப் பொதுவில் செய்வதற்குமுன் சற்று யோசித்தேன். அதனால் தனியாக உட்கார்ந்து ஒவ்வொரு குழந்தையையும் தனித்தனியாக அழைத்து, என் அருகில் அமரச்செய்து வாசிக்கச் சொல்லிக் கேட்டேன்.

நான் தேர்ந்தெடுத்த புத்தகத்தின் பெயர் :

        ”பட்டம் பறக்குது”

நான் இப்புத்தகத்தைத் தேர்ந்தெடுத்ததிற்கு சின்னச் சின்ன காரணங்கள் உண்டு. கற்றுக்கொடுத்திருந்த எழுத்துக்கள் அதிகம் இருந்த புத்தகம். இரண்டு வார்த்தைகளைக் கொண்ட வாக்கியங்கள்…

மூன்றாம் முயற்சி:

  • அப்புத்தகத்தைக் கையில் வைத்துப் படித்துக் கொண்டிருந்த குழந்தை ஒவ்வொரு எழுத்தாகக் கூட்டி வாசித்துக் கொண்டு இருந்தாள். என் காதில் விழுந்த பொழுது அதைக் கவனித்தேன். மற்ற குழந்தைகளும் பார்த்தார்கள். பின் அப்புத்தகத்தை வாங்கி நான் சில விஷயங்களை உற்று கவனித்தேன். அவள் அப்புத்தகத்தைப் படிக்க முடிந்ததற்கான காரணங்களை  வரிசைப் படுத்தினேன்.

    -   அதிலுள்ள படங்கள்

     -  நான் வகுப்பறையில் எழுத்தை இணைப்பதற்காக அளித்த பயிற்சியின் நுட்பங்கள்.

      - கடந்த வகுப்புகளில் புத்தகத்தின் மேல் ஏற்பட்ட ஆவல் என ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக இருந்தது. 

இத்தொடர்பை புரிந்துகொள்ளும்பொழுது ஆச்சரியமாகவே இருந்தது.  பட்டம் பறக்குது புத்தகத்துடன் நான் குழந்தைகளுடன் தனித்தனியாக  அமர்ந்தேன்.

படத்தைப் பார்த்துக் கதை சொன்ன பொழுது அமைதியாக என் ஆவலை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாகக் கவனித்தேன்.

பின் எழுத்தை வாசிக்கும் படி கேட்டேன். ..

ப-    ப

ப ட்  - பட்

பட் ட - பட்ட

பட்ட ம்  -   பட்டம்

ப  - ப

ப ற  - பற

பற க் –பறக்

பறக் கு – பறக்கு

பறக்கு – து    பறக்குது

வாசித்தனர். எழுத்துக் கூட்டி வார்த்தைககளாக மாற்றமுடிந்த குழந்தைகளுக்கு வாக்கியத்திற்கு நகர முடிந்தது. குழந்தைகளின் வாசிப்பில் என் ஈடுபாடு என்பது குழந்தைகளால் ஏற்படுத்தப் பட்டது. பயணிப்பது சுலபமாக இருந்தது.

படத்தை வார்த்தைகளாக மாற்றினர். கதைகளாக்கினர். அக்கதையில் ஆரம்பம், கதை முடிவு என கதை அமைப்புடன் இருந்தது.

தெரிந்த எழுத்துக்களை வாசிக்கத் துவங்கினர். தெரிந்த எழுத்தைக் கொண்டு தெரிந்த வார்த்தைகளை உச்சரித்தனர்.

தெரிந்த வார்தைகளைக் கொண்டு தெரியாத வார்த்தைகளைக் கொண்டு அவர்களால் தெரியாத வார்த்தைகளை யூகித்து வாக்கியமாக மாற்றமுடிகிறது. இதை அவர்களால் சிறப்பாக செய்யமுடிந்த போதும் அவர்கள் சரியாகப் படித்து அவற்றைப் படித்தாக வேண்டுமென்பது என் ஆவல். அதனால் அவர்கள் அருகில் அமர்ந்து அவர்கள் வாசிப்பின்  ஒவ்வொரு நகர்வுக்கும் உதவுவேன். தொடர்ந்து  வாசிப்பில் ஈடுபடும்பொழுது பெரும் மாற்றத்தைப் பார்க்க முடிந்தது. இம்மாற்றம் அவர்களது ஆர்வத்திலிருந்து வந்ததா என் உழைப்பால் வந்ததா என்று சொல்ல முடியாது.

பதினோரு மாணாக்கர்களுள்ள என் வகுப்பறையில் நான்கு மாணவர்கள் எதைக்கொடுத்தாலும் வாசித்துப்பார்க்கும் ஆர்வத்தோடு இருந்தனர். மூன்று மாணவர்கள் முதல் வகுப்புக் குழந்தை எட்ட வேண்டிய கற்றலடைவுகள் அனைத்தையும் எட்டியிருந்தனர். மற்ற ஐந்து குழந்தைகளின் வளர்ச்சி என்பது வேறுபட்ட நிலையிலிருந்தது. ஆனாலும் அனைவரும் கற்றலில் வளர்ச்சிபெற்றிருந்தனர்.

முதல் வகுப்பிற்கு நான் கற்பித்த அனுபவத்தை மேற்கண்ட தலைப்புகளில் கோர்த்து பகிர்ந்துகொள்ள முயற்சித்துள்ளேன். ஆனால் இன்னும் செய்யவேண்டியவை எவ்வளவோ உள்ளது. அவைகளைத் தேடுவதும் ஆசிரியப் பணியின் தலையாய கடமையாகும் எனக் கருதுகிறேன். 

Grade: 
1

Subject: 
Tamil

Term: Term 1