Towards a just, equitable, humane and sustainable society

திருக்குறள்

திருக்குறள்

சமச்சீர் கல்வி, தமிழ், வகுப்பு 4

வான்புகழ் வள்ளுவனின் குறளைக் கதைவழியில் கற்றல்… 

ப. இந்துமதி,ச. குணசெல்வி,க. சுபாஷினி,வ. சுமதி,சு. தமிழரசி

 

நோக்கம்:

  • செய்யுள் உணர்த்தும் கருத்தை அறிதல்
  • சொற்களஞ்சியம் பெருக்குதல்
  • அகரமுதலியைப் பயன்படுத்துதல்

ஈடுபடுதல்:

ஆசிரியர் செயல்பாடு: ஆசிரியர் மாணவர்களை 3 குழுக்களாகப் பிரிக்கிறார். ஒவ்வொரு குழுவுக்கும் நன்னெறியை உணர்த்தும் படக்கதைகள் கொண்ட அட்டைகளைக் கொடுக்கிறார். அந்த அட்டைகளைக் கதையின் போக்கில் வரிசைப்படுத்தச் சொல்கிறார். வரிசைப்படுத்தப்பட்ட படங்கள் மூலம் அறியும் கதையையும் அது கூறும் நீதியையும் மற்ற குழுக்களோடு பகிர்ந்து கொள்ளுமாறு கூறுகிறார்.

மாணவர் செயல்பாடு: மாணவர்கள் குழுவாக அமர்ந்து, படக்கதைகளை வரிசைப்படுத்தி, கதையின் மையக்கருத்தைப் புரிந்துகொண்டு, அக்கதை உணர்த்தும் நன்னெறியைக் கண்டுபிடிப்பர். இதை மற்ற குழுக்களுடன் பகிர்ந்து கொள்வர்.

 மதிப்பீடு: இதன் மூலம் ஒரு கதை உணர்த்தும் கருத்தை மாணவர்கள் புரிந்து வெளிப்படுத்த முடிகிறதா என்பதை மதிப்பிட முடிகிறது.

ஆராய்தல்:

செயல்பாடு 1:

ஆசிரியர் மாணவர்களைச் சிறு சிறு குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு திருக்குறள் புத்தகத்தைக் கொடுத்து, கீழ்காணும் கேள்விகளுக்கு விடை காணச் செய்தல்.

  1. இந்தப் படத்தில் உள்ளவர் யார்?
  2. உன் கையில் உள்ள புத்தகத்தின் பெயர் என்ன?
  3. இப்புத்தகத்தில் எத்தனைக் குறட்பாக்கள் உள்ளன?
  4. இப்புத்தகத்தில் எத்தனைப் பிரிவுகள் உள்ளன?
  5. ஒரு தலைப்பின் கீழ் எத்தனை குறட்பாக்கள் உள்ளன?

செயல்பாடு 2:

ஆசிரியர் செயல்பாடு: ஆசிரியர் திருவள்ளுவர் முகமூடியை அணிந்து, ஒவ்வொரு குழுவுக்கும் ஒவ்வொரு சூழலைக் கொடுக்கிறார். மாணவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட சூழலைக் குழுவாகப் படித்து, விவாதித்து அதில் மறைந்துள்ள நன்னெறியைக் கண்டுபிடிப்பர்.

மாணவர் செயல்பாடு: மாணவர்கள் குழுவாக அமர்ந்து அவர்களுக்கு வழங்கப்படும் சூழலை வாசிப்பர். பின் ஒவ்வொரு சூழலுக்கும் கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாவை அவர்கள் குழுவிற்குள் விவாதித்து விடை காண்பர். ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் இருப்பின் அனைத்து பதில்களையும் குறிப்பு புத்தகத்தில் எழுதி வைத்துக் கொள்வர்.

சூழல் 1:

ஒரு நாள் ராமு பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தான். அப்போது அவன் வகுப்பில் படிக்கும் செந்தில் மற்றும் அவனது நண்பர்கள் அவனைப் பலமாகத் தாக்கினர். ராமு வலியால் துடிக்கிறான். தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சுகிறான். ஆனால் அவன் யாரையும் திருப்பி அடிக்கவில்லை. ஒரு வாரம் கழித்து வழக்கம் போல் ராமு பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தான். அப்போது சாலை ஓரத்தில் பள்ளிச்சீருடை அணிந்து ஒரு சிறுவன் அமர்ந்து கொண்டிருந்தான்.

ராமு ஓடிச்சென்று பார்த்தான். அங்கு செந்தில் அடிபட்ட தனது காலைப் பிடித்துக்கொண்டு அழுதுகொண்டிருந்தான். அவனால் தனியாக நடக்க முடியவில்லை. அதனால் ராமு செந்திலின் கையைப் பிடித்துத் தூக்கி, பள்ளி வரை நடந்து செல்ல உதவினான். தன்னால் அடிக்கப்பட்ட ராமு தனக்கு உதவுவதை எண்ணி வெட்கித் தலைகுனிந்தான்.

செந்தில் ராமுவிடம், “நான் உன்னை அடித்தேன் அல்லவா? பிறகு ஏன் எனக்கு உதவி செய்கிறாய்?” என்று கேட்டான். அதற்கு செந்தில் என்ன பதில் கூறியிருப்பான்?

சூழல் 2:

அன்று விடுமுறை நாள். வேலுவும் முகிலனும் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பக்கத்திலிருந்த மாந்தோப்பிலிருந்து மாம்பழ வாசனை அவர்களின் மூக்கைத் துளைத்தது. தோப்பின் மதில் சுவரை எகிறிக் குதித்து மாம்பழங்களைப் பறித்து வரலாம் என்று வேலு கூறினான். ஆனால் முகிலன் அவனைத் தடுத்தான். நாம் தோப்பின் சொந்தக்காரரிடம் சில மாம்பழங்களைக் கேட்டு வாங்கலாம்; அவருக்குத் தெரியாமல் எடுப்பது தவறு என்று கூறினான்.

ஆனால் வேலு முகிலனின் பேச்சைக் கேட்காமல் சுவரை ஏறி குதித்து சில பழங்களைப் பறித்து விட்டான். அதைக் காவலாளி பார்த்துவிட்டார். வேலுவைப் பிடித்து தரதரவென முதலாளியிடம் இழுத்துச் சென்றார். வேலு முதலாளியின் வீட்டின் உள்ளே சென்ற போது அங்கு முகிலன் மாம்பழங்களைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். வேலுவுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. முதலாளி வேலுவை வன்மையாகக் கண்டித்து அனுப்பினார்.

முகிலனுக்கு மட்டும் எவ்வாறு மாம்பழங்கள் கிடைத்தன? அவன் என்ன செய்திருப்பான்?

சூழல் 3

முத்து, பாரதி இருவரும் நண்பர்கள். ஒருநாள் அவர்கள் தங்கள் வியாபாரத்தை முடித்து விட்டு, வீடு திரும்பினர். இருவரும் பேருந்தில் பயணம் செய்தபோது, அவர்களுக்கு அறிமுகம் இல்லாத ஒருவர் அவர்களின் பக்கத்தில் வந்து அமர்ந்தார். அவர் பெயர் குரு.

குரு, நண்பர்கள் இருவரிடமும் பேச ஆரம்பித்தார். முத்து அவரது பெயரையும் ஊரையும் மட்டும் கூறி அமைதியானார். ஆனால் பாரதி தன்னைப்பற்றி மட்டுமல்லாது தன் குடும்பம், வியாபாரம் என்று ஆரம்பித்து தன் கையில் உள்ள பணம் வரைக் கூறினார். சிறிது நேரத்தில், பயணக்களைப்பில் அனைவரும் உறங்கினர். கண்விழித்துப் பார்த்தபோது குரு அங்கே இல்லை. பாரதி வியாபாரத்தில் சம்பாதித்த மொத்த பணத்தையும் காணவில்லை.

பணம் எங்கே? என்ன நடந்திருக்கும்? ஏன் அவ்வாறு நடந்தது?

சூழல் 4:

ஒருநாள் கயலும் அவளது செல்ல நாய்க்குட்டியும் வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருந்தனர். கயல் ஓட, நாய்க்குட்டி துரத்திப் பிடித்தது. பின் நாய்க்குட்டி ஓடும், கயல் துரத்திப் பிடிப்பாள். இவ்வாறு இருவரும் விளையாடிக் கொண்டிருக்கும் போது, கயலின் கை பட்டு உப்பு ஜாடி கீழே விழுந்து உடைந்து விட்டது.

சிறிது நேரத்தில் அம்மா வந்து, யார் உடைத்தது என்று கேட்ட போது, கயல் தான் இல்லை என்று கூறினாள். உடனே கோபத்தில் அம்மா பக்கத்தில் இருந்த நாய்க்குட்டியைப் பார்த்து நீ தான் உடைத்திருப்பாய் என்று திட்ட ஆரம்பித்தார். மேலும் ஒரு குச்சியால் அடிக்கவும் செய்தார். நான் செய்த தவறுக்காக என் தோழன் அடிவாங்குகிறானே என்று கயல் குற்ற உணர்வில் கண் கலங்கினாள்.

இப்போது கயல் என்ன செய்வாள்?

மதிப்பீடு: மாணவர்களால் ஒரு கதையை/ சூழலை வாசித்து, அதன் கருத்தைப் புரிந்து கொள்ள முடிகிறதா என்பதையும் கேட்கப்படும் கேள்விகளுக்குத் தேவையான தகவல்களை அக்கதையிலிருந்து சேகரிக்க முடிகிறதா என்பதையும் ஆசிரியரால் அறிந்து கொள்ள முடிகிறது.

விளக்குதல்

செயல்பாடு 1:

ஒவ்வொரு குழுவும் தாங்கள் படித்த கதையையும் அது கூறும் நீதியையும் கேள்விக்கான பதிலையும் பகிர்ந்து கொள்ளுவர். ஆசிரியர் மாணவர்களின் பகிர்வைச் சரிபார்ப்பார். கேள்விக்கான பதில்கள் குழப்ப நிலையில் இருந்தால், அந்தப் பதிலை மாணவர்களின் கலந்துரையாடலுக்குக் கொண்டு வருவார். உதாரணமாகச் சூழல் 4ல்,

“எனக்கு பதில் என் நாய்க்குட்டி தண்டனை வாங்கிவிட்டது. இனி நான் உண்மையைக் கூறத் தேவையில்லை என்று கயல் அமைதியாக இருந்துவிடுவாள்.”

என்று மாணவர்கள் பதிலளித்தால், ஆசிரியர் இக்கருத்தை மாணவர்கள் மத்தியில் விவாதத்திற்கு வைப்பார். மாணவர்கள், எது சரி, எது தவறு, எனவே நாம் என்ன செய்யவேண்டும் என்று விவாதிப்பர். இந்த விவாதத்தை ஆசிரியர் வழிநடத்துவார்.

செயல்பாடு 2:

ஆசிரியர் செயல்பாடு: ஆசிரியர் ஒவ்வொரு குழுவிற்கும் அவர்கள் வாதம் செய்த சூழலுக்கேற்ற குறட்பாவைக் கொடுப்பார். ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு தமிழ் அகராதியையும் கொடுப்பார்.

மாணவர் செயல்பாடு: மாணவர்கள் தாங்கள் படித்த கதைக்கும் குறளுக்கும் இடையேயுள்ள தொடர்பை ஆராய்வர். மாணவர்கள் கடினமான சொற்களுக்குப் பொருளறிய அகராதியைப் பயன்படுத்துவர். பிறகு தங்கள் குழுவுக்கு அளிக்கப்பட்ட குறளின் விளக்கத்தையும் அது கூறும் நன்னெறியையும் கண்டுபிடிக்க முயல்வர்.

மதிப்பீடு: ஆசிரியர் குறள் கூறும் கருத்துக்கும் அவர் விவாதித்த சூழலுக்கும் உள்ள ஒற்றுமையை மாணவர்கள் கண்டுபிடித்தனரா என்று பார்த்தல்.

செயல்பாடு 3:

ஆசிரியர் செயல்பாடு: ஆசிரியர் ஒவ்வொரு குறளாகப் படித்துக்காட்டி அவற்றிற்கான விளக்கத்தையும் அளிக்கிறார். ஒவ்வொரு சொல்லுக்குமான பொருளை மாணவர்களிடமிருந்து கேட்டுப் பெறுகிறார். மாணவர்களால் கூற முடியாத நிலையில் ஆசிரியரே அச்சொல்லைத் தக்க உதாரணம் தந்து விளக்குகிறார்.

மாணவர் செயல்பாடு: மாணவர்கள் ஆசிரியரோடு சேர்ந்து ஒவ்வொரு குறளையும் வாசிக்கின்றனர். ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்குத் தங்கள் குறிப்பு புத்தகத்தைப் பார்த்து பதிலளிப்பர். ஆசிரியரின் விளக்கத்திற்கும் தாங்கள் கண்டுபிடித்த விளக்கத்திற்கும் ஏதேனும் முரண்பாடு இருப்பின் அதை வெளிப்படுத்துவர்.

மதிப்பீடு: குறள் கூறும் கருத்தை மாணவர்கள் புரிந்து கொண்டனரா என்று ஆசிரியர் தெரிந்து கொள்வார்.

விரிவாக்குதல்

செயல்பாடு 1:

ஆசிரியர் செயல்பாடு: ஆசிரியர் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு செயல்பாட்டுத் தாளைக் கொடுத்து. அதிலுள்ள சொற்களைக் கொண்டு வாக்கியங்கள் அமைக்கச் சொல்கிறார்.

மாணவர் செயல்பாடு: மாணவர்கள் வாக்கியங்களை அமைத்து அத்தாளைச் சுவரில் ஒட்டுவர். மாணவர்கள் அனைவரும் மற்றவரின் வாக்கியங்களை வாசிப்பர். ஏதேனும் சந்தேகம் இருப்பின் சக மாணவர்களிடம் கேட்டுத் தெளிவு பெறுவர்.

மதிப்பீடு: மாணவர்களுக்குப் புதிய சொற்களின் பொருள் புரிந்திருக்கிறதா, அச்சொற்களைத் தங்கள் எழுத்தில் பயன்படுத்த முடிகிறதா போன்றவற்றை ஆசிரியர் புரிந்துகொள்கிறார்.

செயல்பாடு 2:

ஆசிரியர் செயல்பாடு: மாணவர் ஒவ்வொருவரும் தனக்குப் பிடித்த ஒரு குறளைத் தேர்ந்தெடுக்குமாறு ஆசிரியர் கூறுவார். பின் அக்குறளுக்குப் பொருத்தமான, தன் வாழ்வில் நடந்த அல்லது பார்த்த ஒரு நிகழ்வை எழுதுமாறு கூறுவார்.

மாணவர் செயல்பாடு: மாணவர்கள் தனித்தனியாக அமர்ந்து நான்கு குறட்பாக்களையும் அவற்றின் விளக்கத்தையும் வாசிப்பர். பின் அவரவருக்குப் பிடித்த ஒரு குறளைத் தேர்ந்தெடுத்து அக்குறளுக்கேற்ற ஒரு நிகழ்வையோ அல்லது கதையையோ எழுதுவர்.

மதிப்பீடு: இச்செயல்பாடு மாணவர்கள் திருக்குறளின் பொருளைப் புரிந்து அதன் நீதியை உணர்ந்து கொண்டனரா என்பதை மதிப்பிட உதவும்.

குறிப்பு: இச்செயல்பாட்டில் ஆசிரியர் மாணவர்களின் புரிதல் திறனையும் அப்புரிதலைப் பயன்படுத்தும் திறனையும் உற்றுநோக்க வேண்டும். எழுத்துப் பிழைகளை அடுத்தடுத்த நிலைகளில் சரிசெய்து கொள்ள வேண்டும்.

மதிப்பிடுதல்:

செயல்பாடு 1:

ஆசிரியர் செயல்பாடு: ஒரு அட்டைப் பெட்டியில் சுடு, நாடி, சொல், இலை, வண்டு போன்ற சொற்கள் எழுதப்பட்ட சீட்டுகளைப் போடவேண்டும்.

மாணவர் செயல்பாடு: ஒவ்வொரு மாணவனும் ஒரு சீட்டை எடுத்து, அதிலுள்ள சொல்லின் முதல் எழுத்தை மாற்றி புதிய சொற்கள் பலவற்றை உருவாக்க வேண்டும்.

மதிப்பீடு: உருவாக்கப்பட்ட சொற்கள் அனைத்தும் பொருளுடையவைகளாக இருக்கின்றனவா என்று ஆசிரியர் சரிபார்ப்பார்.

செயல்பாடு 2:

ஒவ்வொரு மாணவனும் நான்கு குறளுக்கான விளக்கத்தையும் அவரவர் சொந்த நடையில் எழுத வேண்டும். பிறகு அவற்றிற்கான விளக்கப்படத்தையும் வரைய வேண்டும்.

To Download the Teaching Learning Material(TLM), Please click the link:கற்றல் கற்பித்தல் பொருள்கள்

Grade: 
4

Subject: 
Tamil

Term: Term 1