Towards a just, equitable, humane and sustainable society

பசுவும் கன்றும்

 

சமச்சீர் கல்வி, தமிழ், வகுப்பு 5, பாடம் 4

பா.இலட்சுமி

துள்ளிக் குதிக்குது கன்று குட்டி

இரண்டாம் வகுப்பு ஆசிரியை என்ற முறையில் தமிழில் முதல் பாடமான ‘பசுவும் கன்றும்’ என்ற பாடலை எனது கற்பித்தல் முறையில் நடத்தி முடித்திருந்தேன். திசைமானியில் வெளிவந்த ஆசிரியர் குழுவின் இப்படியும் கற்பிக்கலாம் என்ற கற்றல் முறையைப் படித்தவுடன் நாமும் ஏன் இம்முறையைப் பின்பற்றக் கூடாது என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது. ஆசிரியர் குழுவின் வழிகாட்டுதலுடன் எனது கற்பித்தல் முறையும் இணைத்து, எனது வகுப்பறையில் மீண்டும் ஒரு முறை இப்பாடத்தை அறிமுகம் செய்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஈடுபடுதல்

நான் மாணவர்களை அவர்கள் அறிந்த விலங்குகள் பற்றிய பாடலைப் பாடச் சொன்னேன்.

அவர்கள் உற்சாகமாக,

“குள்ள குள்ள வாத்து.....” “கரடி மாமா கரடி

மாமா.........”

“ஜல் ஜல் குதிரை........” என அவர்களுக்குத் தெரிந்த பாடல்களை மகிழ்வுடன் பாடினர். நான் அனைத்து மாணவர்களையும் ஆர்வத்துடன் ஈடுபடுத்தும் விதமாக விலங்கின் பெயரைக் கூறியவுடன் அவை எழுப்பும் ஓசையை மாணவர்கள் எழுப்ப வேண்டும். இந்த விளையாட்டில் மாணவர்கள் தன்னை மறந்து மகிழ்ச்சியுடன் ஈடுபட்டனர். அவர்கள் தவறாக எழுப்பிய ஓசையை திருத்திக் கொள்ளவும் உதவி செய்தேன். இதனைத் தொடர்து விலங்குகள் பற்றி நான் ஒரு பாடல் பாட மாணவர்கள் தொடர்ந்து பாடினர்.

“அப்பா என்னை அழைத்துச் சென்றார்

அன்று ஓர் இடம்”

அங்கிருந்து குயிலும் மயிலும் ஆடித்திரிந்தன.....”

இப்பாடலை மாணவர்கள் உற்சாகமாகப் பாடி முடித்தனர்.

இதனைத் தொடர்ந்து மாணவர்கள் தத்தம் குழுவில் சென்று அமர்ந்தனர். அவர்களை இப்பாடலில் வந்த விலங்குகளின் பெயரை குழுவில் கலந்துரையாடி எழுதச் சொன்னேன். பின்னர் ஒவ்வொரு குழுவில் இருந்தும் ஒருவர் முன்னால் வந்து விலங்குகளின் பெயரைப் படித்தனர். எல்லா விலங்கின் பெயரையும் எழுதிய ‘தாமரைக்குழு’ உறுப்பினர்களில் சட்டைகளில் நட்சத்திரம் ஒட்டுப் படம் (Star Sticker) ஒட்டப்பட்டது. இதனை அக்குழு மகிழ்சியுடன் ஏற்றுக்கொண்டது.

ஆராய்தல்:

நான் மாணவர் குழுக்களிடம் விலங்குகள் சிலவற்றின் படங்களைக் கொடுத்தேன். அவ்விலங்குகளின் குட்டிகள் படங்களை மேசை மேல் வைத்தேன். ஓவ்வொரு குழுவிலிருந்தும் ஒவ்வொருவராக வந்து அவர்களிடம் உள்ள விலங்குகளின் குட்டியைத் தேடி எடுக்கச் செய்தேன்.

பின்னர் அக்குழுவில் உள்ள எல்லா விலங்குகள் அதன் குட்டிகள் பெயரை பட அட்டையைப் பார்த்துத் தனித் தாளில் எழுதச் செய்தேன்.

எ.கா:

 

பசு - பசுகன்று

நாய் - நாய்க்குட்டி

அணில் - அணிற்பிள்ளை

யானை - யானைக்கன்று

மீன் - மீன்குஞ்சு

 

இதில் சில மாணவர்கள் கன்றுக்குட்டி, யானைக்குட்டி, அணில் குட்டி என்று தானே கூறுவோம். இதில் வேறு விதமாக இருக்கிறதே என்று கேள்வி எழுப்பினர். நான் பேச்சு வழக்கிற்கும், மரபு வழக்கிற்கும் உள்ள வேறுபாட்டைக் கூறி, ஒவ்வொரு விலங்கின் குட்டியையும் இப்படித்தான் அழைக்க வேண்டும் என்று அறிந்து கொள்ளச் செய்தேன். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு குழுவும் ஒரு விலங்கினைப் பற்றி ஆளுக்கு ஒரு வாக்கியம் கூறும்படிச் செய்தேன்.

 

ரோஜா குழு :

 

எங்களுக்குப் பிடித்த விலங்கு நாய்

நாய் வீட்டைக் காக்கும்.

- நாய் ஒரு நன்றி உள்ள விலங்கு

- நாய் “லொள் -லொள்” என்று குரைக்கும்

- நாய் வேகமாக ஓடும்

- எங்கள் வீட்டு நாயின் பெயர் மணி

 

இவ்வாறு ஒவ்வொரு குழுவும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டது இனிமையாக இருந்தது. விளக்குதல் ஒவ்வொரு குழுவிற்கும் ஒருசில படங்களைக் கொடுத்து வண்ணம் தீட்டச் செய்தேன். ஆளுக்கு ஒன்றாக அழகாக வண்ணம் தீட்டினர் (பசுவும் கன்றும் படக்கதை). இதனைத் தொடர்ந்து எங்கள் பள்ளியில் இருந்த குறுந்தகடினை ஒலிக்கச் செய்து மாணவர்கள் அதனைக் கவனமாகக் கேட்கச் செய்தேன். மாணவர்கள் ஆர்வத்துடன் கேட்டனர். இரண்டு மூன்று முறை கேட்ட பிறகு நான் ‘பசுவும் கன்றும்’ பாடலைப் பாட மாணவர்களும் தொடர்ந்து பாடினர். இவ்வாறு இரண்டு மூன்று முறை அவர்கள் பாடிய பிறகு, அவர்களிடம் உள்ள வண்ணம் தீட்டிய படக்கதையினை வரிசைப்படுத்தச் சொன்னேன். 1. பசு புல் மேய்தல் 2. கன்றுக்குட்டி துள்ளி வருதல் 3. பசு கன்றை நாவால் நக்குதல் 4. பசுக்கன்று பால்குடித்தல் மாணவர்கள் எந்த வித குழப்பமும் இன்றி படக்கதையினை அழகாக வரிசைப் படுத்தினர். படத்தைப் பார்த்து அழகாகப் பாடவும் செய்தனர். இதனைத் தொடர்ந்து நான் பசு, பசுக்கன்று முகமூடியைத் தயார் செய்து மாணவர்களிடம் கொடுத்தேன். ஒவ்வொரு குழுவில் இருந்தும் இருவர் முகமூடியை அணிந்து நடிக்கப் பிற குழு நண்பர்கள் அப்பாடலைப் பாடிக் கற்றலை இனிமையாக்கி, வகுப்பறையை ஒரு நாடக மேடையாக மாற்றி விட்டனர்.

 

விரிவாக்குதல்:

பாடலை மாணவர் கற்று மகிழ்ந்த பின்னர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் படம் ஒன்றைக் காண்பித்து அவரைப் பற்றி மாணவர்கள் அறிந்து கொள்ளச் செய்தல். அடுத்ததாக ‘விரல் அச்சில் விலங்கின் உருவத்தை உருவாக்குவோம்’ என்ற தலைப்பில் போட்டி ஓன்று ஆரம்பமானது. நான், விரல் மையில் உருவாக்கிய பல விதமான விலங்குகள் உருவங்களை காட்டி, முதலில் அவர்களை உற்று நோக்கச் செய்தேன். பின்னர் ஒவ்வொரு குழுவும் அழகழகான உருவங்களை உருவாக்கினர். இதனூடே அவர்கள் உருவாக்கிய விலங்கின் குட்டிகளை எப்படிச் சரியாகக் கூறுவது என்றும் அதன் கீழே எழுதி என்னை ஆச்சரியப்பட வைத்தனர். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் வண்ணம் தீட்டிய படக்கதையும், விரல் அச்சில் விலங்குகள் படங்களும் பிற வகுப்பு மாணவர்களும் காணும் வகையில் காட்சிப்படுத்தப் பட்டன.

 

 

 

 

 

 

மதிப்பிடுதல்:

கற்றல் இனிதே நடந்து முடிந்த பிறகு மேசை மேல் இருந்த வினாப் பெட்டியில் இருந்து ஒவ்வொரு குழுவும் ஒரு தாளினை எடுத்து, அதனைப் படித்து விடையை தங்கள் குழுவுடன் கலந்துரையாடி அறிந்தனர். பின்னர் அதே கேள்வியை எதிர் குழுவுடன் கேட்டு தங்கள் விடை சரிதானா என உறுதி செய்து கொண்டனர். பாடலில் வரும் முக்கியமான சொற்களை ஆசிரியர் கூற ஒவ்வொருவராக வந்து கரும்பலைகையில் எழுதினர். எழுதத் தடுமாறிய மாணவர்களுக்கு அவர்தம் குழுவினர் உதவி செய்தனர். ஒவ்வொரு குழுவையும், விலங்குகள் - அவற்றின் குட்டிகள் படங்களை சேகரித்து வரச் சொன்னேன். இவ்வாறு எங்கள் வகுப்பறைக் கற்றல் ஒரு குதுகலக் கற்றலாக மாறியது. இனிமேலும் இப்படியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் என் கற்பித்தல் அனுபங்களை தங்களுடன் பகிர்ந்து கொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

Grade: 
2

Subject: 
Tamil

Term: Term 2