Towards a just, equitable, humane and sustainable society

பள்ளியிலே கொண்டாட்டம்

 

சமச்சீர் கல்வி, தமிழ், வகுப்பு 3, பருவம் 2, பாடம் 2

உரையாடுவோம்; திட்டமிடுவோம்; செய்து காட்டுவோம்

பாடத்திட்டம் தயாரித்த ஆசிரியர்கள்: வ. சுமதி,சு.தமிழரசி

பாடத்திட்டத்தின் பிரதிபலிப்பு: வ. சுமதி

 

நோக்கம் :

• குழந்தைகள் தங்களின் எண்ணங்களை முறையாகவும் சுருக்கமாகவும் வெளிப்படுத்தும் திறனை வளர்த்தல்.

• பள்ளி விழா ஒன்றைத் திட்டமிட்டு, செயல்படுத்தும் திறனை வளர்த்தல்.

• மாணவர் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான திறன்கள் இருப்பதை உணர்ந்து பாராட்டுதல்.

• மாணவர் இதழை உருவாக்குதல்.

 

ஈடுபடுதல்:

பள்ளி விழாக்களை நினைவு கூர்தல்:

ஆண்டுதோறும் பள்ளியில் நடைபெறும் பல்வேறு விழாக்களைப் பற்றி உரையாடினோம். மாணவர்கள் ஒவ்வொரு விழாவாக நினைவுகூர்ந்தனர். உதாரணமாக, சுதந்திர தினம், ஆசிரியர் தினம், குழந்தைகள் தினம், மாணவர் தினம், கை கழுவும் தினம் என்று கூறினர். மேலும், எந்தெந்த விழாக்களில் என்னென்ன நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் கூறினர். உதாரணமாக,சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாக்களில் கொடியேற்றம் நடைபெறும்; மற்ற விழாக்களில் நடைபெறாது என்று கூறினர். அவர்கள் பட்டியலிட்ட விழாக்களைக் கரும்பலகையில் எழுதி வைத்தேன். மாணவர்களின் இத்தகைய பதில்களிலிருந்து, அவர்களுக்குப் பள்ளியில் நடைபெறும் விழாக்கள், அவற்றிற்கிடையேயான வித்தியாசம், அப்போது நிகழும் நிகழ்ச்சிகள், யார் எந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றனர் போன்ற அனைத்து செய்திகளும் தெரிந்திருந்தன. ஆனால் அவர்களால் விழாக்கள் எந்தெந்த நாட்களில் நடைபெறும் என்று நினைவுகூற முடியவில்லை.

ஆராய்தல்

மாணவர்களை அவர்களுக்குப் பிடித்த ஒரு விழாவைத் தேர்ந்தெடுத்து, அவ்விழாவில் நடைபெறும் நிகழ்வுகளை வரிசைப்படுத்தி எழுதுமாறு கூறினேன். கரும்பலகையைப் பார்த்து, ஆளுக்கொரு தலைப்பைத் தேர்ந்தெடுத்தனர். குழுவாக அமர்ந்து, சகமாணவர்களோடு உரையாடி, பின் எழுத்த தொடங்கினர். சுதந்திர தின விழாவைப் பற்றி எழுதிய மாணவி, பள்ளியைச் சுத்தம் செய்தது முதல், பூக்களைச் சேகரித்து வந்தது, கொடிக் கம்பத்தை அலங்கரித்தது, மாணவர்கள் தங்கள் சட்டைகளில் கொடிகளை அணிந்து கொண்டது என்று அனைத்து நிகழ்ச்சிகளையும் வரிசைப்படுத்தி எழுதியிருந்தாள். மாணவர்கள் விழாவில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் எழுதினர். அவர்கள் எழுதியதில் அதிக பிழை இருந்தாலும் அவர்களின் எண்ணங்கள் தெளிவாக இருந்தன. ஆசிரியரிடம் பேசுவதை விட சக மாணவர்களிடம் உரையாடும்போது அவர்கள் மிகவும் தைரியமாகக் காணப்பட்டனர்.

விளக்குதல்

1. மாணவர் பகிர்வு:

மாணவர்கள், தாங்கள் எழுதிய நிகழ்ச்சிகளை மற்ற மாணவர்களோடு பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்குபெற்ற மாணவர்களின் பெயர்களையும் கூறுமாறு நான் சொன்னேன். பிறகு ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு தனித்திறன் உள்ளது என்பது பற்றி எங்கள் உரையாடல் ஆரம்பித்தது. ஒவ்வொருவரின் தனித்திறன் என்ன என்பதைக் கேட்டேன். பெரும்பாலான குழந்தைகளால் கூற முடியவில்லை. பின் உனக்கு எது பிடிக்கும் என்றும் எதை நீ ‘ரொம்ப ஜாலியா’ செய்வாய் என்றும் எழுதச் சொன்னேன். மாணவர்கள், பாடுவது, ஆடுவது, விளையாடுவது, நடிப்பது, வரைவது என்று அடுக்கிக் கொண்டே சென்றனர். உரையாடல் அத்தோடு நில்லாமல், ஒவ்வொருக்கும் ஒரு தனித்திறன் உள்ளது; அத்திறன்களை மதிக்கவும் மேன்மேலும் வளர்க்கவும் வேண்டும் என்றும் உறுதிபூண்டோம்.

2. மாதிரி வாசிப்பு:

பிறகு நான், புத்தகத்திலுள்ள பாடத்தை, ஏற்ற இறக்கத்தோடு நிறுத்தற்குறிகளுக்கேற்ப வாசித்துக் காட்டினேன். மாணவர்கள், வார்த்தைகளுக்கு அடியில் விரல் வைத்து, எனைத் தொடர்ந்து வாசித்தனர். மாணவர்களை, எழுத்துகள் தவிர, மற்ற குறியீடுகளை வட்டமிடுமாறு கூறினேன். குறியீடுகளைக் கரும்பலகையில் எழுதினேன். இவ்வாறு வாசிக்கும் போதே, பாடத்தைப் பள்ளி விழாக்களோடு தொடர்புபடுத்த கீழ்க்கண்ட வினாக்களைப் பயன் படுத்தினேன்.

• பள்ளிகளில் ஏன் இதுபோன்ற விழாக்கள் கொண்டாடப்படுகின்றன?

• தாமரையின் தனித்திறன் என்ன?

• நமது பள்ளி ஆண்டு விழாவிற்கும் கதையில் வரும் பள்ளி ஆண்டு விழாவிற்கும் ஏதேனும் வித்தியாசம் உள்ளதா? என்ன வித்தியாசம்? மாணவர்களின் பதில்கள் என்னை வியப்பிலாழ்த்தின. பெரும்பாலான பதில்கள் மேலோட்டமாக இருந்தாலும், ஒருசில பதில்கள் சிறப்பாக இருந்தன.

 அவற்றில் சில,

“நாம இப்பதான மிஸ் பேசினோம். நம்மளோட திறமைகளை வளக்கிறதுக்கு”

“நம்மள எல்லாரும் பாராட்டுவாங்க மிஸ்”

“நம்ம ஸ்கூல் ஆண்டு விழாவுல கண்காட்சியெல்லாம் வைக்க மாட்டோம்”

இதன் பிறகு, மேலும் இருமுறை பாடத்தை உரிய உச்சரிப்போடும் ஏற்ற இறக்கத்தோடும் வாசித்துக் காட்டினேன்.

3. மாணவர் வாசித்தல்:

பிறகு மாணவர்கள், தாமரை, தேவி, வேலன் என்று ஆளுக்கொரு பாத்திரத்தை எடுத்து

வாசிக்க ஆரம்பித்தனர்.

4. இணைப்புச் சொற்களை அறிமுகம்

செய்தல்:

மாணவர்கள் வாசிக்கும் போதே, அவர்களை ‘இணைப்புச் சொற்களை’ அடிக்கோடிடுமாறு

கூறினேன். காலைவேளை, செய்தித்தாள் போன்ற ஓரிரு வார்த்தைகளைச் சுட்டிக்காட்டினேன்.

அதைத் தொடர்ந்து மாணவர்களும் அவ்வாறே செய்தனர். மாணவர் அனைவரும் படித்து

முடித்த பின், இணைப்புச் சொற்களை எவ்வாறு பிரித்து எழுதுவது என்பதை விளக்கினேன்.

இணைப்புச் சொற்களைக் கரும்பலகையில் எழுதி, மாணவர்களைப் பிரித்துக் கூறச் சொன்னேன்.

அவர்கள் அவ்வாறு கூறும் போது, நான் அவற்றைக் கரும்பலகையில் எழுதினேன். ஒருசில மாணவர்களை அழைத்துக் கரும்பலகையில் பிரித்து எழுதுமாறு கூறினேன்.

விரிவாக்குதல்

1. திறன் ஆல்பம் தயாரித்தல்:

மாணவர் அனைவரும் ஒரு வெள்ளைத் தாளில் தத்தம் திறன் ஏடுகளைத் தயாரித்தனர். அதில் மாணவர் பெயர், வயது, மாணவரின் நிழற்படம், பிறந்தநாள், வகுப்பு, மாணவருக்குப் பிடித்த செயல்பாடுகள், மாணவரின் தனித்திறன் ஆகிய தகவல்கள் இருந்தன. அனைத்து ஏடுகளையும் ஒன்று சேர்ந்துத் திறன் ஆல்பத்தைத் தயாரித்தோம்.

Picture-1

2. வகுப்பு இதழ் தயாரித்தல்:

நாளிதழ்களுடன் வரும் இணைப்புப் புத்தகங்களை மாணவர்களிடம் கொடுத்தேன். ஒரு சார்ட் அட்டையில் அவரவருக்குப் பிடித்த கதை, படம், புதிர், கவிதை என்று எதை  வேண் டுமானாலும் வெட்டி ஒட்டலாம் என்று கூறினேன். இவை மட்டுமன்றி, தாங்களாகவும் கதை, கவிதைகளை எழுதலாம் அல்லது வரையலாம் என்றும் கூறினேன். ஒருசில மாணவர்கள் மட்டும், வெட்டி ஒட்டிய படத்திற்கு ஏற்ற கதைகளை எழுதியிருந்தனர். இதுபோன்ற செயல்களைக் கொடுப்பதால், மாணவர்கள் ஆர்வமாகவும் பயமின்றியும், வாசிக்கவும் எழுதவும் செய்கின்றனர். மேலும் சிறிது சிறிதாக அவர்களின் எழுத்துப் பிழைகளும் குறையும் என்று நம்புகிறேன்.

             

 

மதிப்பிடுதல்

1. செயல் திட்டம் - ஒரு விழாவைத்

திட்டமிடல்:

மாணவர்களை ஒரு குழுவாக அமரச் செய்து, ஏதாவது ஒரு தலைப்பில், பள்ளியில் ஒரு விழா நடத்தத் திட்டமிடுமாறு கூறினேன். அதில், அழைப்பிதழ் தயாரித்தல், கலை நிகழ்ச்சிகள், பொறுப்புகள், மேடை அலங்காரம் போன்றவையும் அடக்கம். அவர்கள் ‘பசுமையான ஊர்’ என்ற தலைப்பில் திட்டமிட ஆரம்பித்தனர். தலைமை ஆசிரியரும் மற்ற ஆசிரியர்களும் அழைக்கப் பட்டனர். பாடல், நாடகம், பேச்சு ஆகியவை முறையாக நடந்தன. இ ந் த ச் செயல்பாட்டை மாணவர்களால் தனித்துச் செய்ய இயல.வில்லை.

என் னுடைய பங்களிப் பு அதிகமாக இருந்தது. இது எனக்கு ஒரு சவாலாகவே இருந்தது. எல்லா நிலைகளிலும் நானே அவர்களுக்குப் பயிற்சி அளித்தேன்.

2. புத்தகப் பயிற்சிகள்:

மாணவர்கள், சமச்சீர் புத்தகத்தில், இரண்டாம் பருவத்தில் பக்கம் 7 மற்றும் 8ல் கொடுக்கப் பட்டுள்ள அனைத்து பயிற்சிகளையும் செய்து முடித்தனர்.

Grade: 
2

Subject: 
Tamil

Term: Term 2