Towards a just, equitable, humane and sustainable society

ஒளிமயமான எதிர்காலம்

 

சமச்சீர் கல்வி, தமிழ், வகுப்பு 4, பருவம் 2, பாடம் 2

கசடற கற்போம்; கற்ற வழி நடப்போம்

பாடத்திட்டம் தயாரித்த ஆசிரியர்கள்:  ச. குணசெல்வி, சு. கவிதா,ப. இந்துமதி

பாடத்திட்டத்தின் பிரதிபலிப்பு: சு. கவிதா

 

நோக்கங்கள்

• கருத்தாடல்களில் பங்கேற்றல்

• நெகிழிப் பொருட்களின் அவசியத்தையும் அவற்றால் ஏற்படும் விளைவுகளையும் புரிந்துகொள்ளுதல்

• நெகிழிப் பயன்பாட்டைக் குறைத்தல்

 

ஈடுபடுதல்

நெகிழிப் பொருட்களை முறையாகப் பயன்படுத்தாததால் சுற்றுப்புறம் எவ்வாறு மாசுபடுகிறது என்பதை விளக்கும் வீடியோக்களையும் வண்ணப் படங்களையும் மாணவர்களுக்குக் காட்டினேன். அதைத் தொடர்ந்து அப்படங்களைச் சார்ந்த உரையாடலும் நிகழ்ந்தது.

வீடியோக்களைக் காட்டுவதற்கு முன்பே, அவர்களுக்குப் பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கூறுமாறு வினவினேன். அப்போது ஒரு மாணவன் “எனக்கு வருத்தப் படாத கரடிகள் சங்கம் மிகவும் பிடிக்கும்” என்றான். ஏன் என்று கேட்ட போது, “மரம் வெட்ட வருபவர்களைக் கரடி விரட்டும். மரம் வெட்டுவது தவறு; அது பலவகையில் பயன் தரக்கூடியது. அதனால் அதைப் பாதுகாக்கும் கரடியை எனக்குப் பிடிக்கும்” என்று கூறினான். இதுபோலத்தான் இப்போது நாம் அனைவரும் ஒருசில படங்களையும், வீடியோக்களையும் பார்க்கப் போகிறோம். எது பிடிக்கும், எது பிடிக்காது என்று காரணத்தோடு கூறுங்கள் என்றேன். ஆர்வத்துடனும் அமைதியாகவும் கவனித்தனர். இச்செயல்பாட்டின் மூலம் மாணவர்கள் உணர்வுப்பூர்வமாக, சுற்றுச்சூழல் சீர்கேட்டையும், நெகிழியின் தீமைகளையும் புரிந்து கொண்டனர். தங்களின் சொந்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். இது நெகிழ்ச்சியான ஒரு செயலாக அமைந்தது.

ஆராய்தல்

1. நெகிழிப் பொருட்களின் பயன்பாட்டை அறிதல் :

காலையில் விழித்தது முதல் இரவு உறங்கும்வரை நாம் பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களைப் பட்டியலிடச் செய்து அவற்றைக் கரும்பலகையில் எழுதினேன். பின் அவற்றின் நன்மை – தீமைகளை விவாதித்தோம்.

2. நெகிழியைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் :

மாணவர்கள் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து, தங்களுக்குள் உரையாடி, கீழ்க்கண்ட கேள்விகளுக்கு விடை தேடினர்.

- நமது அன்றாட பயன்பாட்டிற்கு நெகிழி இல்லையெனில் என்ன ஆகும்?

- பயன்படுத்தி முடித்த/ உடைந்த நெகிழிப் பொருட்களை என்ன செய்வீர்கள்?

- நெகிழியை எரிப்பதால் (அ) எறிவதால் என்னென்ன விளைவுகளைச் சந்திக்கிறோம்?

- நெகிழிப் பயன்பாட்டை எவ்வாறு குறைக்கலாம்?

குறிப்பு: இச்செயல் பாட்டின் போது ஆசிரியர் நெகிழி பற்றிய செய்திகள், துண்டறிக்கைகள், படங்கள் முதலியவற்றை வகுப்பறையில் ஒட்டி வைக்கலாம்.

3. பாடத்தைப் படித்துப் பொருளறிதல் :

மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பத்தியைப் பிரித்துக் கொடுத்தேன். அவர்கள் தனித்தனியாக அமர்ந்து வாசித்தனர்.

 

விளக்குதல்

மாணவர்கள் தங்கள் குழுவில் விவாதித்ததை மற்ற குழுக்களோடு பகிர்ந்து கொண்டனர். அவர்கள் எழுதிய விடைகளையும் வாசித்துக் காட்டினர். பின் நாங்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து பாடத்தை வாசித்துப் பொருளை அறிந்தோம். இதுவரை நாங்கள் பார்த்த படக்காட்சிகள், உரையாடல்கள் , விவாதங்கள் ஆகிய அனைத்தும் பாடக்கருத்தைப் புரிந்து கொள்ள உதவின. இச்செயல்பாட்டின் போது நான் எதிர்பாராத வகையில், மாணவர்கள் 50 நெகிழிப் பொருட்களைப் பட்டியலிட்டனர். அவற்றில் 30 நாம் அன்றாடம் பயன்படுத்துபவைகளாகும். குழுச்செயல்பட்டின் போது மாணவர்களின் உரையாடல் ஏதோ மந்தமாக இருந்தது போல் எனக்குத் தோன்றியது. எனவே, மாணவர்களை மீண்டும் வகுப்பிற்குள் அழைத்து, அவர்கள் எழுதியதைப் பகிர்ந்து கொள்ளச் சொன்னேன். ஒவ்வொரு குழுவும் ஒன்றிரண்டு செய்திகளை மட்டுமே கூறினர். அவற்றை நான் கரும்பலகையில் எழுதினேன். அனைத்து குழுக்களும் முடிக்கும்போது தேவையான அனைத்து கருத்துக்களும் வெளிப்பட்டிருந்தது ஆச்சர்யம். இக்கருத்துக்களைப் பார்த்த மாணவர்கள் தாங்களாகவே, நெகிழிக்கான மாற்று வழிகளையும் கூறத் தொடங்கிவிட்டனர். நெகிழிக் குப்பைகளை எரிக்கும்போது ஒரு வித நாற்றம் வருகிறது; அது உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியது என்றனர். அச்சமயம், ‘டையாக்சின்’ வாயுவைப் பற்றி விளக்கினேன்.

 

நெகிழியின் விளைவுகளைப் பட்டியலிடும்போது அனைத்து குழுக்களும் கூறிய ஒரே கருத்து - விலங்குகளும் பறவைகளும் அவற்றை விழுங்கி இறக்கும் என்பது தான். இதற்குக் காரணமாக அமைந்தது ஈடுபடுதல் நிலையில் அவர்கள் பார்த்த படக்காட்சிகளே.

விவரித்தல்

மாணவர்களை 3 குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைப்பைக் கொடுத்தேன். அவை,

1) உன்னிடம் உள்ள தண்ணீர் பட்டில் உடைந்து விட்டது. உன் அப்பா புதிய பாட்டில்

வாங்கித் தருகிறார். உடைந்த பாட்டிலை என்ன செய்வாய் என்பதைப் பற்றி எழுதி, ஓவியமும் வரைய வேண்டும்.

2) வீடு சுத்தம் செய்யும் போது கிடைக்கும் எண்ணற்ற நெகிழிப் பைகளை உன் அம்மா உன்னிடம் கொடுக்கிறார். நீ அதை கடையில் எடைக்குப் போட்டு காசு கேட்கிறாய். கடைக்காரர் வாங்க மறுக்கிறார். நீ என்ன செய்வாய் என்று எழுது.

3) நெகிழிப் பொருட்களின் தீமைகள் மற்றும் அவற்றைக் குறைப்பதற்கான வழிகளை உன் நண்பர்களிடம் எவ்வாறு தெரிவிப்பாய்? நாடகமாக நடித்துக் காட்டு.

குறிப்பு: மேலே குறிப்பிட்டுள்ள செயல்களைச் செய்வதற்குக் கால அவகாசம் தேவை. அதனால், இச்செயல்பாடுகளின் முடிவை, என்னால் இக்கட்டுரையில் எழுத இயலவில்லை.

மதிப்பிடுதல்

- மாணவர்கள் ஒவ்வொருவரும் நெகிழியின் பயன்பாட்டைக் குறைக்க தன்னால் என்ன இயலும் என்று எழுதி, வகுப்பறையில் ஒட்ட வேண்டும்.

- சமச்சீர் புத்தகத்தில், இரண்டாம் பருவத்தில் பக்கம் 8 மற்றும் 9 ல் கொடுக்கப்பட்டுள்ள பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

Grade: 
4

Subject: 
Tamil

Term: Term 2