Towards a just, equitable, humane and sustainable society

கலை உலகில் கலைவாணர்

 

மு.சாந்தகுமாரி

சமச்சீர் கல்வி, தமிழ், வகுப்பு 5 , பருவம் 2 இயல் 1

சிரித்தால் மட்டும் போதுமா? சிந்திக்கவும் வேண்டாமா?

 

ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எடுக்க வேண்டிய “கலையுலகில் கலைவாணர்” பாடத்தைத் திட்டமிட்டபடி செய்து முடிக்கத் தேவையான ஏற்பாடுகள், துணைக்கருவிகள் செய்யப்பட்டது. நகைச்சுவைத் துணுக்குகள் சேகரித்தல், வண்ணப்படங்கள் சேகரித்தல், நாபிறழ்சி பயிற்சி வார்த்தைகள்/வாக்கியங்கள் சேகரித்தல், கலைவாணர் அவர்களின் நகைச்சுவை ஒலிஒளி நாடாக்கள் சேகரித்தல் போன்ற அனைத்து முன்னேற்பாடுகளும் செய்து முடித்துப் பாடத்திற்குத் தயாரானேன்.

 

பாட நோக்கங்கள்:

1) கட்டுரை, உரையாடல் எழுதுதல்

2) படைப்பாற்றல் திறன் வளர்த்தல்

3) பேச்சுவழக்கு, இலக்கிய வழக்குச் சொற்களின் வேறுபாடு அறிதல்

4) நகைச்சுவை, கதைப் பகுதிகளைப் படிக்கும் பொழுது அதன் உள்ளார்ந்த கருத்தை அறிதல்.

5) பாடப் பகுதிகளைச் சரியாகவும் திருத்தமாகவும் தெளிவாகவும் சரியான இடைவெளிவிட்டும் குரலில் ஏற்ற இறக்கத்துடனும் படித்தல்.

ஈடுபடுதல்

செயல்பாடு 1

சிறுவர் மலர் பத்திரிக்கை மற்றும் சிறுவர்களுக்கான “வாங்க சிரிக்கலாம்” புத்தகத்தை இரு மாணவர்களுக்கு ஒன்று எனக் கொடுத்துப் படிக்க சொன்னபொழுது மாணவர்கள் அனைவரும் அதில் ஆர்வமுடன் பங்கேற்றனர். மிகச்சிறப்பாகப் படித்தனர். ஏற்ற இறக்கத்துடன் படித்தனர். சிலர் படிக்கவில்லை. மற்றவர்கள் படித்ததைப் புரிந்துகொண்டு நடித்தனர். நான்கு மாணவர்கள் எழுத்துக் கூட்டிப் படித்தனர் அச்சமயம் மற்றவர்கள் அதைப் புரிந்து கொள்வதில் சிரமமிருந்ததால் நகைச்சுவை மாதிரி இல்லாமலிருந்தது.

செயல்பாடு 2

ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைப்பு தரப்பட்டது. அது ஒரு பொருளைப்பற்றியது. தங்களுக்குக் கிடைத்தப் பொருளைப் பற்றி குழுவில் எழுதி அதை பொதுவில் எடுத்துக் கூறினர். அவர்கள் சொல்லும் பொழுது மற்ற மாணவர்கள் அதைக் கவனித்தனர். அவர்கள் சொல்லாமல் விட்ட கருத்தை, மற்றவர்கள் எடுத்துக் கூறினர். மான், மீன், வீடு, கோயில், புத்தகம், புலி ஆகிய தலைப்புகளில் ஆறு குழுக்களும் பேசினர். அனைவராலும் அழகாகப் பேசமுடிகிறது. மீன் பற்றி பேசிய குழுவில் வாஸ்து மீன் வளர்ப்பது குறித்து ஒரு மாணவி எடுத்துக் கூறியது வியப்பளித்தது. புத்தகம் பற்றிப் பேசிய குழு பாடப்புத்தகம் குறித்து மட்டுமே பேசினர்.

 அதை மற்ற மாணவர்கள் சுட்டிக்காட்டியபொழுது அவர்களால் வேறு பல தகவல்கள் தர முடிந்தது.

மீண்டும் அவற்றைக் குழுவில் அமர்ந்து சரிசெய்து கொடுத்தனர்.

செயல்பாடு 3

பரமார்த்தகுருவின் நகைச்சுவைக் கதைகளைப் படிக்கும்பொழுது அவர்கள் மகிழ்ச்சியாய் ஈடுபட்டதைப் பார்க்க முடிந்தது. அவர்கள் படித்த கதையை நாடகமாக்கியது நன்றாக இருந்தது.

 

ஆராய்தல்

செயல்பாடு 1

முன்பே திட்டமிட்டபடி ஆசிரியர் ஒவ்வொரு குழுவையும் அழைத்து அ வர்களுக்குரிய பகுதிகளைப் பிரித்துக் கொடுத்துப் படித்து குறிப்புகள் எழுதும்படி அறிவுறுத்தப்பட்டது. குறிப்புகள் எப்படி எடுப்பது என்பது குறித்து ஆசிரியர் விளக்கம் கொடுத்ததால் மாணவர்கள் எந்த ஐயமுமின்றி குறிப்பதில் ஈடுபட்டனர். ஒரு குழு விரைந்து முடித்தனர். அவர்களை மீண்டும் புத்தகத்தைப் படியுங்கள்; அப்பொழுதுதான் மற்றவர்கள் சரியாகப் படிக்கின்றனரா என்பதைப் பார்க்க முடியும். இதனால் அவர்கள் ஆர்வமுடன் ஈடுபட்டனர்.

செயல்பாடு 2

கலைவாணரின் நகைச்சுவைக்காட்சிகளைப் போட்டுக்காட்டிய பொழுது நன்கு சிரித்தனர்; இரசிக்கவும் செய்தனர். அவரது நகைச்சுவையைப் புரிந்து கொள்ள முடியாததால் ஒரு சிலரால் ரசிக்க முடியவில்லை. விளக்கியபிறகு புரிந்துகொண்டனர் . அவ்வனுபவத்தை எழுதியும் தந்தனர். அடுத்து சாப்ளின் படம் திரையிடப்பட்டது. நன்றாக ரசித்தனர். இரண்டு படங்களுக்குமுள்ள வேறுபாடு பற்றி பேசியபொழுது, சாப்ளின் எல்லாவற்றையும் சைகையிலேயே செய்கிறார்; சிரிக்கவைக்கிறார். ஆனால் கலைவாணர் பேசி, பாடி, நடித்து சிரிக்கவைப்பதுடன் சிந்திக்கவும் வைக்கிறார் என்றனர். படத்திரையிடலின் பொழுதும், உரையாடலின் பொழுதும் கேள்விகள் கேட்டு அவர்கள் எந்த அளவு புரிந்து கொண்டுள்ளனர் என்பதை உறுதி செய்துகொண்டேன். படத்தை ரசித்ததோடு பாடப்பகுதியையும் புரிந்துகொண்டனர்.

செயல்பாடு 3

தங்கள் வாழ்வில் பார்த்த, தனக்கு நேர்ந்த அனுபவம் மற்றும் படித்த நகைச்சுவை ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்ளச் சொன்னபொழுது, திரைப்படத்தில் பார்த்தவற்றையே முதலில் பகிர்ந்துகொண்டனர். பின்னர் நான், என் வாழ்க்கையில் சிறு பிள்ளையாக இருந்தபொழுது நடந்த அனுபவம் ஒன்றைப் பகிர்ந்துகொண்டேன். அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். பின் அவர்கள் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளத் துவங்கினர். வகுப்பறை ஒரே குதுகலமாக இருந்தது. அவர்கள் பகிர்ந்துகொண்டதை எழுதச்சொன்ன பொழுது சங்கடப்பட்டனர். ஒன்று அல்லது இரண்டை மட்டும் எழுதும்படி கேட்டபொழுது சந்தோசமாகச் செய்தனர். அவர்கள் எழுதியவற்றில் பேச்சு மொழி அதிகம் இருந்ததைப் பார்க்க முடிந்தது.

செயல்பாடு 4

ஆசிரியர் ஒரு செயல்பாட்டைக் கூறுவார், அதை ஒரு மாணவர் செய்வார். அம்மாணவர் என்ன செய்தார் என்பதை மற்ற மாணவர்கள் கூறுவர். கரும்பலகையைச் சுத்தம் செய் என்றார். அம்மாணவன் செய்தான். அழித்தான், க்ளீன் பண்ணினான், சுத்தம் செய்தான் என்பது போன்ற பதில்கள் கிடைத்தன. அதைத் தமிழில் முழு வாக்கியமாகக் கூறும்படிக் கேட்டேன். பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு இவற்றிற்கிடையே உள்ள வேறுபாட்டைக் குறைக்க இது உதவியாக இருக்கும் என நம்புகிறேன். தினமும் நாட்குறிப்பு எழுதும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள ஊக்கப்படுத்தினேன். “கவலையாக இருக்கிறது”, “அம்மா அடித்துவிட்டார்”

என்றெல்லாம் அவர்கள் எழுதியிருந்தனர். அம்மாணவரிடம் “கவலைப்படாதே” என்று ஆறுதலாகக் கூறினேன். அதைப் பார்த்த மற்ற மாணவர்கள் தங்களுடையதைக் கொண்டு வந்துகாட்டி, நான் எதாவது சொல்ல வேண்டுமென எதிர்பார்த்தனர். எழுதத் தெரியாத ஒரு மாணவி தன் தோழியிடம் கூறி எழுதி வாங்கி வந்தாள். இவ்வார்வம் எனக்கு மகிழ்ச்சியை அளித்தது.

Grade: 
5

Subject: 
Tamil

Term: Term 1