Towards a just, equitable, humane and sustainable society

ஏலேலோ ஐலசா...

அ. தனமேரி,சு. நிர்மலா,வா. வீரப்பன்

சமச்சீர் கல்வி, தமிழ், வகுப்பு 1, பருவம் 3, பாடம் 1

விளையாட்டாக, விளையாட்டு மூலம் மொழி கற்றல்...

 

வளர்க்கப்படும் திறன்கள் :

• படம் பார்த்து பெயர்களைக் கூறுதல்

• எளிய பாடல்களைப் பாடுதல்

• கதை கூறுதல்

• அறிந்த எழுத்துக்களை அடையாளப் படுத்துதல்

• படங்களுக்குப் பொருத்தமான வண்ணம் தீட்டுதல்

கற்றல் துணைக் கருவிகள் :

• மின் அட்டைகள்

• படங்களோடு கூடிய சொல் அட்டைகள்

• செருகு அட்டை

• சொல் பாராசூட்

• நகரும் சொல்லட்டை

• சொற்களஞ்சிய பரமபதம்

ஈடுபடுதல்:

மாணவர்களிடம் அவர்களுக்குத் தெரிந்த மரங்களின் பெயர்களைக் கூறச் செய்தல். அதன் பின் மரங்களின் பெயர்கள் அடங்கிய, கீழ் வரும் பாடலைச் சொல்லிக் கொடுத்தல்.

மாமரத்தில் ஏறலாம்

 மாங்காயைப் பறிக்கலாம்

தென்னை மரத்தில் ஏறலாம்

தேங்காயைப் பறிக்கலாம்

பனை மரத்தில் ஏறலாம்

பனங்காயைப் பறிக்கலாம்

நெல்லி மரத்தில் ஏறலாம்

நெல்லிக்காயைப் பறிக்கலாம்

கொய்யா மரத்தில் ஏறலாம்

கொய்யாக்காயைப் பறிக்கலாம்

வாழை மரத்தில் ஏறினால்

வழுக்கி வழுக்கி விழுந்திடலாம்

இப்பாடலை உரிய பாவனைகளோடு பாடிக் காட்டி மாணவரையும் பாட வைத்து உற்சாகப் படுத்துதல்.

ஆராய்தல்:

சாலையில் போவது பேருந்து

வானத்தில் பறப்பது வானூர்தி

தண்ணீரில் போகும் வாகனம் எது?

கப்பல், படகு - இவற்றைப் பார்த்ததுண்டா?

போன்ற கேள்விகளை மாணவர்களிடம் எழுப்ப வேண்டும். படகு பற்றிய பாடலை இப்போது நாம் அனைவரும் பாடலாம் என்று கூறி, ஆசிரியர் உரிய பாவனைகளோடும், ராகத்தோடும், பாடிக் காட்டுதல். மாணவர்களும் தொடர்ந்து உடல் பாவனைகளோடும், படகோட்டி ராகத்துடனும் பாடுதல்.

 எல்லோரும் பங்கேற்கும் வகையில் இரு குழுக்களாக மாணவர்களைப் பிரித்து, முதல் வரியை ‘வாழை மரத்தாலே’ முதல் குழு பாட, ‘என் படகு ஐலசா, என் படகு ஐலசா’ என்று வரும் வரிகளை மற்ற குழு பாட வேண்டும், பிறகு முதல் குழு ‘வாகாகச் செய்தேனே’ என்று பாட, இரண்டாவது குழு ‘என் படகு ஐலசா, என் படகு ஐலசா’ என்று பாட வேண்டும்.

அடுத்த அடியை இரண்டாவது குழு பாட, முதல் குழு “என் படகு ஐலசா, என் படகு ஐலசா” என்று பாட வேண்டும். இந்தப் பாடலை அட்டையில் (சார்ட் தாளில்) எழுதி வைத்தால் அதைப் பார்த்துக் கொண்டே, மாணவர்கள் பாடுவார்கள். (இந்தப் பாடலின் போஸ்டர் இவ்விதழுடன் இணைக்கப் பட்டிருக்கிறது)

 திரும்பத் திரும்ப வரும் ‘என் படகு ஐலசா, என் படகு ஐலசா’ என்ற வாக்கியத்தை அடையாளம் காட்டத் தெரிகிறதா என்று பார்க்க வேண்டும்.ஒவ்வொரு மாணவராக வந்து சொற்களின் மீது விரலை வைத்து காட்டியபடியே வரிகளைப் பாட வேண்டும். இச்செயல் மாணவர்களிடம் ஒருஉள்ளார்ந்த வாசிப்பை மேம்படுத்தும். அதைத் தவிர மாணவர்களின் பார்வையில் தொடர்ந்து காட்சிக்கு வைக்கப்படும் இது போன்ற அச்சுப் பொருட்கள்மாணவர்களுக்குள் வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுவதோடு, வாசிக்கும் திறனையும் மேம்படுத்தும்.

பக்கம் 7ல் உள்ள படத்தை உற்று நோக்கி யானைக்குள் என்னென்ன படங்கள் உள்ளது என்பதை மாணவர் வாயிலாகவே சொல்ல வைத்தல்.

எலி, ஏணி, சேவல், பெட்டி, வேலி, குதிரை, குடை, நத்தை, பறவை, மேகம் ஆகிய சொற்களை மாணவர்கள் கூறுவார்கள்.

இந்தச் சொற்களில் எல்லாம் என்னென்ன ஒலிகள் வருகிறது என்று கூர்ந்து கவனிக்க வைத்தல். அவர்களும் எ, ஏ மற்றும் ஐ என்று கூறுவார்கள்.

பிறகு அவர்களுக்கு எ என்ற ஒலியில் தெரிந்த சொற்களைக் கூறச் செய்தல்.

அவர்களும் எட்டு, எடு, எள்ளுருண்டை என்று கூறுவர்.

இவ்வாறே ஏ வில் தொடங்கும் ஏழு, ஏடு, ஏறு, போன்ற சொற்களையும், ஐ யில் தொடங்கும் ஐந்து, ஐஸ் போன்ற வார்த்தைகளையும் கூறுவர். அவர்கள் கூறிய சொற்களைக் கரும்பலகையில் எழுதி, எ, ஏ, மற்றும் ஐ எழுத்தை வட்டமிட்டு அறிமுகப் படுத்தவேண்டும்.

விளக்குதல்:

‘க்’ என்னும் ஒலி, ‘எ’-ஓடு சேரும் பொழுது கெ (க் + எ = கெ) என்று ஒலிக்கும். அதே போல், ச் - ஓடு சேரும்பொழுது செ (ச் + எ = செ) என்று ஒலிக்கும் என்று அவர்களுக்குப் புரிய வைத்து, எலி, செங்கல், நெல், ஏணி, தேர், சேவல் போன்ற படங்கள் அடங்கிய சொல்லட்டைகளை மாணவரிடம் கொடுத்துச் சொற்களை அறிமுகப் படுத்துதல். ஒவ்வோரு சொல்லைப் பற்றியும் சிறு சிறு தகவல்களை மாணவர்க்குக் கூறுதல்: உதாரணமாக,

• எலி சிறிய விலங்கு. தானியங்களை விரும்பி உண்ணும்.

• களிமண்ணைக் கொண்டு செய்யப்பட்டு சூளையில் சுடப்படுவது, சிவப்பு நிறத்தில் இருப்பதால், செங்கல்.

நெல் வயலில் விளைவது. நெல்லிலிருந்து வருவது நாம் சாதமாகச் சாப்பிடும் அரிசி.

• உயரமான இடங்களைச் சுத்தம் செய்ய ஏணியைப் பயன்படுத்துவோம்.

• கோவில் திருவிழாக்களில் தேர் இழுப்பார்கள்.

• காலையில் சேவல் ‘கொக்கரக்கோ’ என்று கூவும்.

இப்படியாக, அவரவர்க்குத் தோன்றிய, சம்பந்தப்பட்ட கருத்துக்களை மாணவர்க்குப் பகிர்ந்தல் வேண்டும்.

செயல்பாடு:

சொல் பாராசூட் - இந்த விளையாட்டின் மூலமாக மாணவர்களை உற்சாகமாக வாசிக்க வைக்கலாம்.

செய்யும் முறை:

தேவையான பொருட்கள்:

• சொல் எழுதி ஒட்டும் அளவிற்குக் கூழாங்கற்கள் அல்லது கூர்மையில்லாத கற்கள்.

• பூக்கட்டும் நூல் ஒரு கண்டு

• சிறிய பிளாஸ்டிக் பைகள்

• செல்லோடேப்

சிறிய நெகிழிப் (பிளாஸ்டிக்) பைகளைச் சேகரிக்கவும். அதைச் சதுரமாக வெட்டி, ஒவ்வொரு மூலையையும் சுருட்டி, நூல் கட்டி, அந்த நான்கு நூலையும் ஒரு கல்லில் கட்ட வேண்டும். பிறகு கவனமாகச் சுருட்டி வைக்க வேண்டும்.

இதுவரை மாணவர்கள் அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, மற்றும் ஐ வரிசை சொற்கள் கற்றிருக்கிறார்கள். இந்தச் சொற்களை அவர்களால் புரிதலோடு வாசிக்க முடிகிறதா என்று தெரிந்து கொள்ள, இந்தச் சொற்களை சிறிய சிறிய தாள்களில் எழுதி, கற்களின் மீது செல்லோடேப் கொண்டு ஒட்ட வேண்டும். நாம் கற்பிக்க வேண்டிய சொற்களையும் எழுதி ஒட்ட வேண்டும். பிறகு பாராசூட் உருவாக்க வேண்டும். செய்துவைத்திருக்கும் சொற்கற்களை பாராசூட்டுகளில் பயன் படுத்தவேண்டும்

மாணவர்களை வெளியே மைதானத்திற்குச் கூட்டிச் சென்று, ஒவ்வொருவரையும் ஒரு பாரசூட்டை எடுத்து பறக்க விடுமாறு கூற வேண்டும். முதலில் ஆசிரியர் மாதிரி செய்து காட்டலாம், பாராசூட் கீழே வந்ததும், அவர்கள் இந்தக் கல்லில் இருக்கும் சொல்லைப் படிக்க வேண்டும். ஆசிரியர் அதை வாங்கித் திரும்பவும் வேறொருவர் வாசிப்பதற்குக் கொடுக்கலாம். இந்த விளையாட்டு மாணவர்களுக்கு விளையாட்டாக வாசிக்கும் திறனை மேம்படுத்தும்.

          

விரிவாக்குதல்:

நேரு மாமா வந்தார்

முள் வேலி இருந்தது

மர ஏணி பாருங்கள்

தேனீ கூடு கட்டும்.

மேகம் கறுத்தது.

வெல்லம் இனிக்கும்.

இவை போன்ற வாக்கியங்களைச் சார்ட் தாளில் எழுதி மாணவர்களை வாசிக்கவைக்கலாம்.

வார்த்தைகளாக வெட்டி, கலந்து மாணவர்களிடம் கொடுத்து, வாக்கியங்களாகச் சேர்க்கச் சொல்லலாம்.

நகரும் சொல்லட்டை: நகரும் சொல்லட்டையைக் கொண்டு வாக்கியம் உருவாக்குதல

நகரும் சொல்லட்டை

தேவையான பொருட்கள் - இரண்டு சார்ட் அட்டைகள், கத்திரிக்கோல், மார்கர் பென்

செயல்முறை:

`ஒரு சார்ட் தாளிலிருந்து மூன்று, இரண்டு அங்குல அகலம் கொண்ட கீற்றுகளை வெட்டிக் கொள்ளவும். அதில் சொற்களைச் சீரற்ற முறையில் எழுதவும்.

வேறொரு சார்ட் தாளில் மேலிருந்து ஆறு அங்குலம் விட்டு விட்டு 2 ரு அங்குல நீளத்திற்கு ஒரு அங்குல இடைவெளி விட்டு மூன்று வெட்டுகளும், அதே போல அவற்றிற்கு நேரே கீழே ஓரங்குல இடைவெளி விட்டு, மறுபடியும் மூன்று வெட்டுகளும் வரவேண்டும். மேல் வெட்டின் வழியே சொற்கள் எழுதி வைத்துள்ள கீற்றுகள் பின் வழியே நுழைக்கப்பட்டு, கீழ் வெட்டின் வழியே உள்ளே நுழைக்கப்பட வேண்டும். கீற்றை இழுத்தால் ஒன்றன் பின் ஒன்றாக சொற்கள் தெரிய வேண்டும்.

செயல்பாடு: ஆசிரியர் வாக்கியத்தைக் கூறியவுடன், மாணவர் ஒவ்வொரு கீற்றாக அந்த வாக்கியத்தில் இருக்கும் சொற்கள் வரும் வரை இழுத்து, வக்கியத்தை உருவாக்குவர். இந்த வாக்கியப் பலகையைப் பல்வேறு வாக்கியங்கள் உருவாக்கப் பயன்படுத்தலாம்.

செயல்பாடு: ஒரு அட்டையில் பக்கம் 10 இல் உள்ள சொற்களை (சிலந்தி, விருது, திருகு, குருவி, துளசி) எழுதி போர்டு ஊசி கொண்டு குத்தவும். மாணவரிடம், ரப்பர் பேண்ட் கொண்டு சொல்லின் இறுதி எழுத்தோடு மற்றொரு சொல்லின் முதல் எழுத்தைச் சேர்த்து போடச் சொல்ல வேண்டும். இறுதியாகக் கிடைக்கும் உருவத்தை ஷிகினாத் தூள் கொண்டு அலங்கரிக்க வேண்டும்.வேறு வேறு சொற்களை அமைத்து கொடுத்து விரிவாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

மதிப்பிடுதல்:

• சொற்களஞ்சிய பரமபதம்: (இவ்விதழுடன் இணைக்கப் பட்டிருக்கிறது)

செயல்பாடு:

முதல் கட்டம் - பரமபதத்தில் 1 லிருந்து 100 வரை உள்ள கட்டங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சொல்லை எழுத வேண்டும். தாயக்கட்டையைப் பயன்படுத்திப் பரமபதம் விளையாடுவது போல், விளையாட வேண்டும். காய் எந்த எண்ணிற்கு நகர்ந்ததோ, அந்த எண்ணில் எழுதப் பட்டிருக்கும் சொல்லை மாணவர் படிக்க வேண்டும்.

இரண்டாம் கட்டம்: வாசித்தல் என்பது பொருள் புரிதலோடு நடந்தால் தான் அது வாசித்தல் என்று கருதப் படும். தங்களுடைய சொந்த வாக்கியங்களில் தனக்குக் கிடைத்த சொல்லைப் பயன்படுத்தத் தெரிந்தால் பொருள் புரிந்திருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். இந்தச் சொற்கள் அவன் சொற்களஞ் சியத்தில் நிரந்தர இடம் பிடித்து விடும். இரண்டாம் கட்டத்தில், காய் நகர்த்தப்பட்ட கட்டத்தில் இருக்கும் சொல்லை, அதை நகர்த்திய மாணவர் தன்னுடைய சொந்த வாக்கியத்தில் பயன்படுத்த வேண்டும்.

• செருகு அட்டையைக் கொண்டு மாணவர்கள் கற்றதை மதிப்பீடு செய்தல்.

• பக்கம் 6ல் உள்ள படத்தைப் பார்த்து சொற்களை எழுத வைத்து மதிப்பீடு செய்தல்

• எழுத்துக்களை மாற்றி எழுதி, சரியாக எழுத வைத்தல்.

• சொல்லுக்குப் படமும் படத்திற்குச் சொல்லும் எழுத வைத்தல்.

Grade: 
1

Subject: 
Tamil

Term: Term 1