Towards a just, equitable, humane and sustainable society

வகுப்பறை வளங்களும் மாணவர் கற்றலும்

மாணவர்களின் சமூக பொருளாதார நிலை:

எங்கள் பள்ளியில் பயிலுகின்ற மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட பொருளாதார சூழ்நிலையைக் கொண்டவர்கள். பெற்றோர் பெரிதாகச் சம்பாதிப்பவர்களோ அல்லது குழந்தைகளைச் சரியான முறையில் பராமரிப்பவர்களோ இல்லை.

பணி சார்ந்த ஆர்வங்கள்:

• அனைத்துப் பாடங்களுக்கும் என்னால் முடிந்த அளவு எளிய கற்றல் கற்பித்தல் கருவிகளை உருவாக்குவதில் எனக்கு ஆர்வம் உண்டு.

• விதவிதமான இராகங்களில் பாடல்கள் கற்றுக் கொடுத்தல்

• பிள்ளைகளை எப்போதும் மகிழ்வாக வைத்திருத்தல்.

• பிள்ளைகளுக்கு ஏதாவது தேவைகள் இருப்பின் நிறைவேற்றுவது மட்டுமல்லாது கைவினையிலும் ஆர்வம் உண்டு.

ஆசிரியர் வட்டத்தில் சேர்ந்ததன் காரணம்:

வகுப்பறையில் நான் பெற்ற இன்பம் என் சக ஆசிரியர்களும் பெற வேண்டும் என்ற நோக்கமே என்னை ஆசிரிய வட்டத்தில் சேர வைத்தது.

 

கடந்த ஆண்டு நான் செய்த வித்தியாசமான செயல்கள்:

• செயல் வழி கற்றல் மூலம் மாணவர்களுக்குக் கற்பித்தது

• மாணவர்களின் பணித்தாள்களை அவர்களையே செய்ய வைத்தது

• மாணவர்களைத் தொலைநோக்கப்பூர்வமான உரையாடல்களில் ஈடுபடுத்தியது.

 

அனுபவப் பகிர்வு

வகுப்பறைச் சவால்கள்:

கற்பித்தல் நடைபெறும்பொழுது மாணவரின் கவனச் சிதறல் சவாலாக அமைந்தது.

• பணித்தாள்களைச் செய்ய வைக்கும் பொழுது மாணவர்களிடையே நடக்கும் தேவையில்லாத குழப்பங்கள் சவாலாக அமைந்தது

• நல்ல கற்பித்தல் நடைபெற்றும் சிறு சிறு தேர்வுகளில் மாணவர்களின் பங்கேற்கும் திறன் குறையும் போது சவாலாக உணர்ந்தேன்

• மதிய உணவு வேளையில் சில மாதங்கள் சரியாக உணவு அருந்தாதது சவாலாக அமைந்தது

• புது புது உத்திகளைக் கையாளும் போது மாணவர்களின் புரிதல் கேள்விக் குறியாக அமையும் போது அதை எப்படி தீர்ப்பது என்பது சவாலாக அமைந்தது.

• மாணவர்கள் தாம் கற்றதைப் புரிதலோடு கற்றிருக்கிறார்களா என்பதைக் கண்டறிவது சவாலாக அமைந்தது.

நோக்கம்:

• ஒவ்வொரு மாணவரும் புரிதலோடு படிக்க வேண்டும்

நோக்கத்தை அடைய திட்டமிட்ட விதம்:

• மாணவர்களின் கவனச் சிதறலைக் குறைக்க நகைச்சுவையாய் கற்பிக்க ஆரம்பித்ததில் கொஞ்சம் வெற்றியடைய முடிந்தது

• பாடத்திட்டத்தைக் குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் திறம்பட தயாரித்து அதனை வகுப்பறையில் நடைமுறைப் படுத்தினேன்.

• சொல்வது எழுதுதல் போன்ற எளிய பயிற்சிகளை அவ்வப்போது கொடுத்து எழுத வைத்தேன்.

• எளிய கற்றல் கற்பித்தல் கருவிகளை மாணவர்களையே கையாள வைத்தேன்

கற்றல் கற்பித்தல் துணைக் கருவிகள்:

1. சொல் பாராசூட்

2. சொல் தட்டு

3. சொல் பரமபதம்

4. வயிற்றிற்குள் இரகசியம்

 

சொல் பாராசூட்

முன் முயற்சிகள்:

சொல் பாராசூட் தயாரிக்க பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் கூழாங்கற்களைச் சேகரித்தேன். அதனை உருவாக்க நூல் மற்றும் வார்த்தைகள் அடங்கிய அட்டைகள் தயாரித்தல், ஒட்டுதல் போன்ற காரியங்களை முன் முயற்சிகளாகச் செய்தேன்.

கற்பித்தல் திட்டம்:

கூழாங்கல்லில் சிறு சிறு சொற்கள் அடங்கிய அட்டைகளை ஒட்டித்தயார் செய்து மாணவர்கள் ஏற்கனவே கற்ற வார்த்தைகளைப் புரிதலோடு கற்றனரா என்பதை அறிய இவ்விளையாட்டை திட்டமிட்டேன்.

செயல் திட்டம்: சொல் பாராசூட்

சொல் பாரசூட் செய்து குறைந்த பட்சம் 50 சொற்களை ஒரு கூழாங்கல்லுக்கு 2 வீதம் ஒட்டி தயார் செய்து மாணவர்களுக்குப் புரிதலுடன் கூடிய கற்பித்தல் நடந்ததா என்பதை அறிய செயல்திட்டம் தீட்டினேன்.

செயல்பாடு - மாணவர்களைத் திறந்த வெளிக்கு அழைத்துச் சென்று அவர்களை வட்டமாக நிற்க வைத்து முதலில் பாராசூட்டைத் தூக்கி வீசினேன். அது கீழே விழும் போது மாணவர்கள் அனைவரும் முட்டி மோதிக் கொண்டு ஓடியதைக் கண்μற்ற போது எனது செயல்திட்டத்தில் குறை இருப்பதை உணர்ந்தேன். அதன் பின் மாணவர்களுக்குச் சில விதிமுறைகளை விதித்து1,2,3 என எண்களைச் கொடுத்து முதல் எண் கொண்டவர்கள் முதலில் பிடித்துச் சொற்களைப் படியுங்கள். அடுத்தது 2-ஆம் எண் கொண்டவர்கள் என முழுமையாக அந்த விளையாட்டை விளையாடிக் கற்றனர். அவர்கள் எழுத்துக் கூட்டி மட்டும் படிக்கிறார்களா அல்லது புரிதலோடு படிக்கிறார்களா? என்பதை அறிய, அவர்களிடம், இந்தச் சொல்லின் பொருள் என்ன? இந்தச் சொல்லை எப்படி பயன்படுத்துவாய் போன்ற வினாக்களை எழுப்பியபோது சில சொற்களின் பொருள் தெரியாதது தெரிய வந்தது. அந்தச் சொற்களின் பொருளை எடுத்துரைத்தும் அதை ஒரு வாக்கியத்தில் பயன்படுத்தியும் பொருளுணர வைத்தேன்.

2. செயல் திட்டம் சொல் தட்டு:

ஒரு மரப்பலகையில் வட்ட வடிவ வெண் நுரை அட்டையை ஒட்டி அதனைத் தேவையான அளவிற்கு இடைவெளிவிட்டு வெட்டி அட்டைகளைச் சொருகிப் பூ வடிவமாக அமைக்கவும். இடைவெளியில் எழுத்துக்கள் அடங்கிய அட்டைகளை வைக்க வேண்டும். உதாரணமாக, சொல் தட்டில் ‘ந’, ர, ம, க, நா, கா, ய், ம் என்ற எழுத்துக்களை வைக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த எழுத்துக்களிலிருந்து எவ்வளவு சொற்கள் உருவாக்கக முடியும் என்று

மாணவர் கண்டுபிடிக்க வேண்டும். நகம், மரம், ரகம், காய், நாய், என்று முதலிலும், பிறகு தொடர் விளையாட்டால் நரகம், மகரம், போன்ற சொற்களையும் உருவாக்குவார்கள். அவர்களாகவே எழுத்துக்களை ஒன்று சேர்க்கும் பொழுது,சொற்கள் எவ்வாறு வரி வடிவம் மற்றும் ஒலி வடிவம் இணைந்து உருவாக்கப் படுகிறது என்பதைப் புரிந்து கொள்வார்கள். தவறானால் தாமாகவே திருத்திக் கொள்ளவும் செய்கிறார்கள். மற்றவர்களுக்குக் கற்றுத் தரும் பழக்கமும் வளர்கிறது. சொல் தட்டு விளையாட்டு விளையாடும் பொழுது மாணவர்களின் அகமும் முகமும் மலர்ந்து மகிழ்ந்ததைக் கண்கூடாகக் காணமுடிந்தது.

3. செயல் திட்டம் சொல் பரமபதம்:

சொல் பரமதம் வழியாகப் பல விஜயங்களை மாணவர்கள் கற்கிறார்கள். சொல் பரமபதம் விளையாட்டில் தெரிந்த, பழக்கப்பட்ட சொற்கள் அல்லாது புதிய சொற்களும் உள்ளன. அதற்கு நாம் அவர்களுக்குக் கற்று தரவில்லையே என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது, அந்த வார்த்தையைப் படித்தவருக்குப் பொருள் புரியவில்லை என்றாலும் கேட்டுத் தெரிந்து கொள்ளும் பழக்கம் அவர்களிடம் வளர்ந்திருந்ததைப் பார்க்க முடிந்தது. நம்மையே உதாரணமாக எடுத்துக் கொண்டாலும், நம்முள் எத்தனை பேர் ‘எனக்குத் தெரியாது’ என்று சொல்கிறோம். புரியாவிட்டாலும் புரிந்த மாதிரி பாவனை அல்லவா செய்கிறோம்? இந்தக் கூச்சமெல்லாம் இல்லாமல் தெரியாமல் இருப்பது குற்றமில்லை என்ற உணர்வு இவர்களுள் வளர்ந்திருப்பதே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. இந்த விளையாட்டு மூலம் எண் வரிசை, ஏறு வரிசை, இறங்கு வரிசை, கூட்டல் போன்ற பாடப்பொருள்களைக் கற்கிறார்கள்.

இதையெல்லாம் விட, வாழ்க்கையில் ஏற்றமும் தாழ்வும் சாதாரணம் என்ற தத்துவத்தை விளையாட்டாக கற்கிறார்கள். பாம்பில் சறுக்கி கீழே இறங்கினால் திருப்பி எவ்வாறு மேலே ஏறலாம், எந்த எண் தாயத்தில் விழுந்தால் ஏணியில் ஏறலாம் பாம்பைத் தவிர்கலாம் என்பதைப் பற்றி மாணவர்கள் சிந்தித்து செயல்பட்டு கணக்கு போட்டது எனக்கு வியப்பைத் தந்தது. குழந்தைகள் எவ்வாறெல்லாம் கற்கிறார்கள்?

4. செயல் திட்டம்: வயிற்றுக்குள் இரகசியம்:

குழந்தைகளுக்குப் பொம்மை படம் மிகவும் பிடிக்கும். அதுவும் இது போன்ற பெயர் கொண்ட சொல் விளையாட்டு என்றால் ஆர்வம் தூண்டும் தானே? இந்தச் செயல்பாட்டிற்காக நான் முயல் வடிவத்தைத் தேர்ந்தெடுத்தேன். ஒரு முயலை வரைந்த பின் பல முயல் படங்களை உருவாக்கினேன். ஒவ்வொரு முயலுக்கும் ஒரு அடிப்பக்கம் மற்றும் மேல் பக்கம் உண்டு. தொடர் அட்டைகளில் சொற்களை எழுதி அது விசிறியாக விரியும் பொழுது ஒவ்வொரு சொல்லாகப் படித்து மகிழ்வார்கள் மாணவர்கள்.

இந்தச் செயல்பாட்டின் மூலம் ஒவ்வொரு எழுத்தில் தொடங்கும் சொற்களை மாணவர்களால் படிக்க முடிகிறதா? என்று நாம் புரிந்து கொள்ளலாம். உதாரணமாக - ‘அ’ என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் அம்மா, அணில், அமைதி, அறம், அகம், அரசு, அண்ணன், அப்பா, அக்கா, போன்ற சொற்களை நாம் முதலில் ஒரு பக்கத்தில் பட்டியலிட வேண்டும்.

பிறகு தொடர் அட்டையை உருவாக்கி, அதில் ஒவ்வொரு மடிப்பிலும் ஒரு சொல் வருமாறு எழுத வேண்டும். எழுதி முடித்த பிறகு, விசிறியாக மடித்து விட வேண்டும். கீழுள்ள அட்டைப்பகுதியை மட்டும் கீழ் பக்கம் உள்ள முயலின் வயிற்றில் ஒட்டி விட வேண்டும். இவ்வாறு ‘க’ வரிசை, ‘ச’ வரிசை என்று பல முயல்கள் உருவாக்க வேண்டும். வகுப்பிலுள்ள மாணவர்களை இரண்டு இரண்டு பேராகப் பிரித்து குழுவாக்க வேண்டும். ஒவ்வொரு குழுவும் ஏதாவது ஒரு முயலை எடுத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு மடிப்பாக திறந்து, அந்த மடிப்பில் எழுதியிருக்கும் சொல்லைப் படிக்க வேண்டும். ஒருவர் மற்றொருவர் உதவியை எடுத்துக் கொள்ளலாம். இந்த விளையாட்டின் மூலம் மாணவர்கள் கற்றறிந்து சரியாய் இருந்தால் சந்தோஜமாகவும் தவறாக இருந்தால் தாமே திருத்தியும் கொள்கிறார்கள்.

 

 

எனது அனுபவம்:

குழந்தைகளின் பயிற்சித்தாள்கள்:

பயிற்சித்தாள்களைச் செய்யும் போது பிள்ளைகள் சொல்வதைப் புரிந்து கொண்டு என்னைப் பின்பற்றிச் செய்து வருவார்கள். அப்படிச் செய்யும் போது சில நேரங்களில் புரிந்தவர்கள் நன்றாகவும் புரியாதவர்கள் பொருட்களை வீணாக்கியும் செய்வார்கள். வண்ணக் கோலம் போடும் போது, மாணவர்கள் ‘பகிர்தல்’ என்ற பண்பைக் கற்கிறார்கள். செய்யத் தெரியாதவர்கள் காகிதத்தை வீணாக்கினாலும் வேறு ஒரு காகிதம் கொடுத்து மீண்டும் செய்ய வைத்து மதிப்பெண் போடும்பொழுது, அவர்கள் முகத்தில் தோன்றிய அலாதியான மகிழ்ச்சி என் அனுபவமாகக் கருதுகிறேன்.

மாணவர்களின் கற்றல் திறனைச் சோதித்து அறிய இந்தப் பயிற்சித் தாள்கள் பயன்பட்டது. படம் ‘பார்த்து பெயர் ஒட்டு’ என்ற பயிற்சித் தாளில் ஒரு புறம் படங்களைக் கொடுத்து விட்டு அந்தப் படங்களுக்குரிய சொற்களை வெட்டி கலந்து கொடுத்துப் படத்துக்குறிய சொற்களை ஒட்டச் செய்த போது அவனுக்குள் புரிதல் நடந்திருக்கிறதா என்பதை நான் புரிந்து கொண்டேன்.

வகுப்பறை உரையாடல்கள்:

மாணவர்களுக்கும் எனக்கும் கற்றல் சம்பந்தமாக உரையாடல் நடக்கும் பொழுது நிகழ்ந்ததுஎன்னவென்றால் கற்றல் மட்டுமே.

உதாரணமாக:

‘நெல்’ என்ற சொல்லினை விளக்கும் பொழுது,

தட்டாஞ்சாவடி நகரப் பகுதி என்பதால் மாணவனுக்கு ‘நெல்’ என்ற சொல்லைப் புரிய வைக்க படாதபாடு பட்டேன். ஏனென்றால் சோறு அரிசியிலிருந்து வருகிறது, அரிசி கடையிலிருந்து வருகிறது என்பது மட்டுமே அவனுக்குத் தெரிந்த உண்மையாக இருக்கிறது. அவன் உழவர் உழுது பயிர் செய்து அறுவடை செய்வதைக் கண்டதில்லை. ஆதலால் ‘நெல்’ என்ற சொல்லைக் கற்பிப்பது சவாலாகவும், அதே நேரம் அதிக விளக்கமளிக்க வேண்டிய ஒன்றாகவும் அமைந்தது.

குழந்தைகள் எவற்றைக் கற்கிறார்கள்?

குழந்தைகள் எழுத்துக்களை அடையாளம் காணவும், புரிதலோடு படிக்கவும் வடிவமாக எழுதவும் இடம் விட்டு கோடு தொட்டு எழுத கற்கிறார்கள், என்று சொன்னால் அது முழுமையடையாது. கற்றல் கற்பித்தல் மாணவர்கள் செயல்முறை வழி கற்கும் பொழுது சக மாணவரோடு அன்பாய் பழகவும்,விட்டுக் கொடுத்து பழகவும் நல்ல பழக்கங்களையும் கற்றுக் கொள்கிறார்கள்.

பிரதிபலிப்பு:

நானே பேசிக் கொண்டிருந்த கற்பித்தலை மாற்றி பிள்ளைகளையும் பேச வைத்து அவர்களுக்குத் தெரிந்ததிலிருந்து தெரியாததைக் கற்பிக்க முடிந்தது. இதற்கு இந்த 5ணி பாடத் திட்டம் வழி வகுத்தது. இவ்வாறு மாணவர்களுடன் உரையாடும் பொழுது தான் அவர்கள் எவ்வளவு தூரம் சிந்திக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. பல நேரம், நம்மையே சிந்திக்க தூண்டுவதாகவும் அமைகிறது. ஒரு முறை யானைகளைப் பற்றி நாங்கள் உரையாடிக் கொண்டிருந்தபோது, யானைகள் கூட்டம் கூட்டமாக தனது குடும்பத்தோடு வாழும் குட்டி யானையை அம்மா யானை நன்கு பார்த்துக் கொள்ளும், அதன் அம்மா மட்டுமில்லாது அந்தக் குடும்பமே குட்டியைப் பாதுகாக்கும் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தபோது, “மணக்குள விநாயகர் கோவிலில் உள்ள யானை மட்டும் ஏன் தனியாக உள்ளது? அதற்கு குடும்பம் இல்லையா? ஏன் காட்டில் இல்லாமல் கோவில் வாசலில் கட்டிப் போடப் பட்டிருக்கிறது? போன்ற கேள்விகள் எழுந்தபோது என்னை ஆழ்ந்து சிந்திக்க வைத்தது. இது போலவே குதிரைக்கு ஏன் கடிவாளம் போடுகிறோம்? போன்ற கேள்விகள் என்னை வியப்பில் ஆழ்த்தியது. சிந்திக்க வைக்கும் உரையாடலில் நாம் ஈடுபட்டோமேயானால், தன்னைச் சுற்றி நடப்பதைக் கூர்ந்து கவனிக்கும் திறமையையும், அதைப் பற்றி யோசிக்கவும் தொடங்குகிறார்கள் என்பது உண்மை. முதல் மூன்று மாதங்கள் அன்னையாய் இருந்த நான், பின் வந்த ஏழு மாதங்களில் ஆசிரியராகவும், தோழியாகவும் மாற முடிந்தது. மாணவர்களுக்குக் கற்றலினை TLM வைத்து நடத்தினால் நன்றாக இருக்கும் என்ற காரணத்தால் கற்றல் சிறப்பாக நடந்தது. இறுதியான இரண்டு மாதங்கள் சொந்த காரணங்கள் காரணமாக மனதளவில் சிறிது தளர்ச்சி ஏற்பட்டதாலும் கடைசி இரண்டு மாதங்களில் பணி உயர்வு பெற்று பள்ளி மாறியதாலும் பிள்ளைகளை விட்டுப் பிரிய வேண்டி இருந்தது. எனது கற்பித்தல் நிறைவு அடையாமல் போய் விட்டது. முழுமையாக செய்திருந்தால் வெற்றி பெற்றிருப்பேன் என்று நினைக்கிறேன்.

அடுத்தது என்ன?

வரும் ஆண்டில் பணி உயர்வு பெற்ற நான், ஒரு வகுப்பு பிள்ளைகளுக்கு மட்டுமில்லாது ஐந்து வகுப்பு பிள்ளைகளையும் புரிதலோடு கற்பது எப்படி என்பதைச் செயல்வழியோடு, ஆசிரியர்களின் துணையோடு செய்ய வேண்டும். பிள்ளைகள் அனைத்து

Grade: 
1

Subject: 
Tamil

Term: Term 1