Towards a just, equitable, humane and sustainable society

கற்றல் கற்பித்தலின் மேம்பாடு

பின்புலம்:-

சென்ற ஆண்டு பணியாற்றிய பள்ளியின் பெயர்:

அரசு தொடக்கப் பள்ளி, பெருங்களூர்

மாணவர்களின் சமூக பொருளாதார நிலை:

குறைந்தே காணப்பட்டது. அதிக மாணவர்களின் பெற்றோர்கள் படிக்காதவேர்களாகவே இருந்தனர்.

பணி சார்ந்த ஆர்வங்கள்:

நான் ஆசிரியராக பணியாற்றுவதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். நான் கற்றுக் கொடுத்து மாணவர்கள் கற்றுக் கொண்டால் மிகவும் மகிழ்ச்சியடைவேன். அப்போது மேலும் கற்பிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். “எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்.” ஆசிரியர் பணி போன்ற உயர்ந்த பணி எதுவும் இல்லை என்பதே உண்மை.

ஆசிரியர் வட்டத்தில் சேர்ந்ததன் காரணம்:

நான் ஆசிரியர் வட்டத்தில் சேர்ந்ததன் முதல் காரணம், 5ணி பாடத்திட்டத்தை எப்படி எழுதுவது என்ற முறையைக் கற்றுக் கொள்ளத்தான். ஆனால், பிறகுதான், இங்கு பல எண்ணற்ற திறன்களைக் கற்றுக் கொள்ளலாம் என்பது தெரிந்து கொண்டேன். இங்கு ஆசிரியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பல விசயங்களை விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.

எ.கா.

1. மாணவர்களின் கற்றலை மேம்படுத்துவது.

2. பின் தங்கிய மாணவனைச் சிறந்த மாணவனாக உருவாக்குவது.

3. மாணவர்களின் திறமைகளை வெளிக் கொணர்வது போன்ற பல செயல்கள்.

இங்கு வயது வித்தியாசம் இன்றி அனைத்து ஆசிரியர்களும் ஒன்று கூடி எடுத்துக் கொண்ட முயற்சிகள் மிகவும் அருமை. திருமதி தனமேரி ஆசிரியை அவர்கள், ஒன்றாம் வகுப்பு ஆசிரியராக 21 ஆண்டுகள் பணியாற்றியதன் மூலம் தான் பெற்ற அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்ட விதம் எங்களை மேலும் ஆர்வத்துடன் செயல் பட வைத்தது என்றே சொல்ல வேண்டும். அவர்கள் வகுப்பில் பல நல்ல நல்ல உத்திகளைக் கையாண்டு கற்றலை மேம்படுத்தி இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டேன்.

கடந்தாண்டு நான் கையாண்ட வித்தியாசமான செயல்கள்:

நான் கடந்த ஆண்டு அரசு தொடக்கப் பள்ளி பெருங்களூரில் பணியாற்றினேன். என் வகுப்பில் ஒரு மாணவன் கூட படிக்கத் தெரியாமல் இருக்கக் கூடாது என்று நான் எண்ணினேன். நாங்கள் ஒரு குழுவாக ஒரு பாடத்திட்டத்தைத் திட்டமிடும் பொழுது, புதிய உத்திகள் பல கிடைத்தன. மாணவர்கள் செயல்பாடுகள் மூலம் நான் கற்பித்ததை விட நிறைய கற்கிறார்கள் என்பதையும், வண்ண வண்ண ஈர்க்கக் கூடிய கற்றல் கற்பித்தல் கருவிகள் (TLM) மூலமும் ஒரு சுதந்திரமான சூழல் மூலமும் ஊக்கம் அடைகிறார்கள் என்பதையும் உணர்ந்தேன். அது மட்டுமல்லாது மாணவர்களுக்கும் நமக்கும் இடையே நடக்கும் கற்றலை மையப்படுத்திய உரையாடல்கள் அவர்களின் சிந்திக்கும் திறனை மேம்படுத்துகிறது என்பதைப் புரிந்து கொண்டேன். இக்கற்றல் கற்பித்தல் கருவிகள், கற்பிக்க மட்டுமில்லாது, கற்றல் எவ்வாறு நடைபெற்றுள்ளது என்பதை அறியவும் உதவுகிறது என்பதை அறிந்து கொண்டேன். இவ்வாறு உருவாகிய கற்றல் கற்பித்தல் கருவிகளில் ஒன்று ‘சொல் சொருகு அட்டை’, மற்றொன்று ‘சொல் பரமபதம்.’

அனுபவப் பகிர்வு

ஆய்வின் நோக்கம்/.வகுப்பறைச் சவால்கள்:

ஆய்வின் முக்கிய நோக்கம் கற்றலில் பின் தங்கிய மாணவர்களை முன்னிற்கு கொண்டு வருவதும் வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களையும் கற்றல் திறன் மிக்க மாணவர்களாக மாற்றுவதுமாகும். கற்றலில் குறைபாடு உள்ள குழந்தைகளையும் ஆர்வத்துடன் கற்கச் செய்ய வேண்டும் என்பதையே என் சவாலாக ஏற்றுக் கொண்டேன்.”உன்னால் முடியும்” என்ற எண்ணத்தையும் தன்னம்பிக்கையும் ஒவ்வொரு மாணவர்களிடமும் உருவாக்கத் திட்டமிட்டேன். இதற்கு என்னென்ன செய்தால் சாத்தியமாகும் என்பதே என்னுடைய சவாலாக இருந்தது. தமிழ் எழுத்துக்களை நினைவு வைத்துக் கொள்ள அவர்கள் தடுமாறினர். முதலில் அவர்கள் மனதில் எழுத்துக்களைப் பதிய வைப்பது எனக்குச் சவாலாக இருந்தது. இச்சவாலை எதிர்க்கொள்ளத் திட்டமிட்டேன். அப்போது எனக்கு உதித்த புதிய உத்திதான் சொல் உருவாக்கும் அட்டை. இதைப் பற்றிப் பிறகு பகிர்கிறேன்.

நோக்கத்தை அடையத் திட்டமிட்ட விதம் / மேற்கொண்ட முயற்சிகள்.

ஒவ்வொரு மாணவரும் புரிதலோடு படிக்கவும், எழுதவும் கற்கும் போது தான் அவனிடம் சொற்களஞ்சியப் பெருக்கம் ஏற்படுகிறது. எனவே அவன் பல சொற்களைத் தானே கொடுக்கப் பட்டிருக்கும் எழுத்துக்களிலிருந்து உருவாக்கி படிக்கத் திட்டமிட்டேன். அதற்காக நான் பல முயற்சிகளை மேற்கொண்டேன். மாணவர்கள் எளிமையாக ஆர்வமுடன் கற்க பல செயல்பாடுகளைக் கையாண்டேன்.

உ.தா.

விடுபட்ட எழுத்துக்களைக் கூறுதல்.

கடைசி எழுத்தைக் கூறுதல்.

கொடுக்கப்பட்ட எழுத்துக்களைக் கொண்டு புதிய சொற்களை உருவாக்குவது.

முதல் எழுத்தை மாற்றி புதிய வார்த்தையை உருவாக்குவது.

சொற்களைத் தன் வாக்கியத்தில் பயன்படுத்தத் தெரிவது.

கற்பித்தல் மற்றும் மதிப்பிடுதல் உத்திகள் பற்றிய சுருக்கம்:

ஒன்றாம் வகுப்பில் தான் நாம் பேசுவது வரிவடிவத்தில் எழுதப் படுகிறது என்பது புலப்படும். நான் குழந்தைகளின் கற்றலுக்கும் பிறகு கற்றார்களா என்று மதிப்பிடுவதற்கும் ஏதாவது கற்றல் கற்பித்தல் கருவி உருவாக்க நினைத்தேன். அப்பொழுதான் ஆங்கிலத்தில் ‘scrabble’ என்று அழைக்கப் படும் விளையாட்டு தமிழிலும் உருவாக்கலாம் என்று நினைத்தேன்.

 அதிக பணம் செலவில்லாமல் அந்தக் கருவிச் செய்யத் திட்டமிட்டேன். அப்போது வீட்டில் இருந்த துணி அட்டைப் பெட்டி கிடைத்தது. அதைக் கையாள்வது எளிதாக இருக்கும் என்று நினைத்தேன். அதில் அட்டைத்தாள் ஒன்றை ஒட்டி சொற்களை உருவாக்கி எழுத்துக்களை அதில் சொருகும் வகையில் செய்தேன். அட்டைத் தாளை முக்கோண வடிவில் வெட்டி அதில் தேவையான வார்த்தைகளை எழுதினேன். அதைக் கொண்டு மாணவர்கள் சொற்களை உருவாக்கச் செய்தேன்.

நான் இந்தச் சொருகு அட்டையைச் செய்த போது எனது நோக்கம் ஒவ்வொரு மாணவரும் எழுத்துக்களை அடையாளம் காணவேண்டும் என்பதும், எவ்வாறு பல எழுத்துக்களை ஒன்றாகக் கோர்த்து ஒரு சொல் உருவாகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுமே. எழுத்துக்களைக் கூட்டி வார்த்தையாக வாசித்தாலே ‘படிக்க’ தெரிந்துவிட்டது என்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஆனால் புரிதல் இல்லாமல் படித்தால் என்ன பயன் என்பதைப் பிறகு தான் புரிந்து கொண்டேன். இதற்குப் பூப்பட அட்டைகள் எனக்கு உதவியாக இருந்தது. நான் சொல்லும் வார்த்தையை மனதில் கொண்டு அதன் எழுத்துக்களைத் தேடி எடுத்து அடுக்குவார்கள். பிறகு எந்தப் பூவின் பெயரை நான் கூறினேனோ அந்தப் பூவின் படத்தை அதன் பக்கத்தில் வைப்பார்கள். உ.தா. நான் ஆவாரம்பூ என்று கூறினால் ஆ +வா+ர +ம்+பூ என்று அடுக்கி விட்டு ஆவாரம்பூவின் படத்தை அதன் அருகில் வைப்பார்கள்.

கற்றலின் போது அவர்கள் அந்தப் பூவின் படத்திலுள்ள எழுத்துக்களைப் பார்த்துப் பார்த்து அடுக்குவார்கள். கற்ற பின் பூவின் பெயரைக் கேட்டவுடனே தாமாகவே அடுக்கி, பூவின் அட்டையையும் அருகில் வைப்பர்.

சொல் பரமபதம்

நாங்கள் திட்டமிட்டபோது சேர்ந்து செய்த கற்றல் கற்பித்தல் துணைக்கருவி தான் சொல் பரமபதம். இந்த விளையாட்டில் நாங்கள் இரு நோக்கங்கள் வைத்திருந்தோம் - முதல் நோக்கம் விளையாட்டாக மாணவர்கள் சொற்களைக் கற்க வேண்டும் மற்றும் இந்தச் சொற்களின் பொருள் அவர்களுக்கு புரிந்திருக்கிறதா என்று மதிப்பிட வேண்டும் என்பதே. நாங்கள் அதற்காக அவர்கள் இதுவரை கற்றிருக்கும் எழுத்துக்களை வைத்து எளிமையான வார்த்தைகளை உருவாக்கினோம். இது வரை வந்த பாடங்களில் புதிதாகக் கற்ற சொற்களும் இதில் அடங்கியிருந்தன. படங்கள் இல்லாமல் வெறும் சொற்கள் இந்த அட்டையில் இருந்தால் போதும் என்று தீர்மானித்தோம். நாங்கள் படங்களின் வழியே அவர்களுக்கு எந்த வித சலுகையும் தர விரும்பவில்லை. புதியதான வார்த்தைகளும் இதில் இடம் பெற்றிருந்தன. இது அவர்களின் சொற்களஞ்சியத்தில் புரிதலோடு இடம் பெறவேண்டும் என்பது என் நோக்கம்.

 

இந்த விளையாட்டில் தாயத்தும் காசுகளும் உண்டு. நான் வண்ண வண்ண சட்டைப் பொத்தான்களை தான் பயன்படுத்தினேன். இதன் காரணமாக பல மாணவர்கள் ஒரே சமயம் பங்கேற்க முடிந்தது

ஒரு மாணவர் தாயத்தை உருட்டியவுடன் அந்தத் தாயத்தில் ஆறோ அல்லது ஒன்றோ விழுந்தால் அவன் விளையாட்டை தொடங்கலாம். தாயத்தில் எந்த எண் வருகிறதோ அத்தனை எண்கள் அவன் முன்னேறலாம். எந்தக் கட்டத்தில் நிற்கிறானோ அந்தக் கட்டத்தில் இருக்கும் சொல்லை அவன் படிக்க வேண்டும். முதன் முதலில் எல்லா வார்த்தைகளையும் படிக்கும் வரை, அவர்கள் வெறும் வாசித்தலோடு நிறுத்திக் கொண்டார்கள். இரண்டாவது கட்டமாக அவர்கள் தாம் படிக்கும் சொற்கள் புரிகிறதா என்பதைப் பரிசோதிப்பதற்கு அவர்கள் அந்தச் சொல்லை ஒரு வாக்கியத்தில் பயன்படுத்த வேண்டும் என்று நிர்பந்தம் விதித்தேன். சில முறை சில சொற்களின் பொருள் புரியாமல் இருக்கும் பொழுது முழு குழுவிற்கும் அது கொடுக்கப்படும். எவருக்குமே தெரியவில்லை என்றால் நான் விளக்கமளித்து அந்தச் சொல்லை வாக்கியத்தில் பயன்படுத்தி புரிய வைப்பேன். இதில் பாம்பின் வாயில் சருக்குவதும் ஏணி வழியே ஏறுவதுமாக இருப்பதால் அவர்கள் மகிழ்ச்சியாக இந்தச் செயலாட்டில் ஈடுபட்டனர்.

எனது அனுபவம்:

பணித்தாள்கள்:

பின்வரும் பணித்தாள்களை மாணவர்களின் கற்றலை மதிப்பிடப் பயன் படுத்தினேன்.

1. படத்தோடு சொல்லை ஒப்பிடு

2. விடுப்பட்ட எழுத்தைக் கண்டுபிடி

3. முதல் எழுத்தை மாற்றி புதிய சொல் உருவாக்கு

4. பட அட்டையிலிலுள்ள பொருளின் சொல்லைச் சொல்லட்டையில் உருவாக்கு

5. புதிரில் உள்ள வார்த்தைகளைக் கண்டுபிடி

என்னுடைய வகுப்பறை உரையாடல்களின் பொழுது, மாணவர்களுக்கு என்னென்ன பிடிக்கும், எவை

வகுப்பறை உரையாடல்கள்:

எவை பிடிக்காது என்பதைப் புரிந்து கொண்டேன். இந்த உரையாடல்கள் பல தலைப்புகளில் இருக்கும். விலங்குகள், பூக்கள், பறவைகள், வண்டிகள், என்று பல விசயங்களைப் பற்றி உரையாடுவோம். இது ஒரு வித அருகாமையை ஏற்படுத்தும். இம்மாதிரி ஒரு உரையாடல் பூக்கள் பற்றி நடத்தும்பொழுது பல கேள்விகள் மூலம் அவர்கள் பூக்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டேன்.

உ.தா.

என்னென்ன பூக்கள் பார்த்திருக்கிறாய்?

என்ன நிறங்களில் எல்லாம் பூக்கள் பார்த்திருக்கிறாய்?

உன் வீட்டில் என்ன பூ பூக்கிறது?

எல்லா பூக்களும் மணம் தருமா?

மணம் தராத பூக்கள் எவையெவை?

பூக்களுக்கு ஏன் ஒரு வித மணம் இருக்கிறது?

உனக்கு பிடித்தப் பூக்கள் எவை?

அவர்களுக்குப் பல விசயங்கள் தெரிந்திருக்கிறது என்பதை இந்த

உரையாடல்கள் மூலம் என்னால் அறிய முடிந்தது.

குழந்தைகள் எவற்றைக் கற்கிறார்கள்/ எவற்றைக் கற்பதில் சிரமப்படுகிறார்கள்?

குழந்தைகள் படத்துடன் கூடிய சொற்களைக் கொடுத்தால் எளிதில் கற்கிறார்கள். சொற்களை மட்டுமே கொடுத்தால் அவற்றைக் கற்பதில் சிரமப் படுகிறார்கள். படங்கள் அவர்களுள் ஒரு புரிதலை ஏற்படுத்துகிறது. அப்போது தான் உணர்ந்தேன் ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு சொல்லையும் புரிதலோடு படித்திருந்தால் சிரமப் படாமல் படித்திருப்பார்கள் என்பதை.

பிரதிபலிப்பு:

கற்பித்தலின் போது ஏற்பட்ட மாற்றங்கள்.

நான் சொற்களைக் கரும்பலகையில் எழுதி அவற்றை வாசித்துக் காட்டினேன்.அப்போது அது மாணவர்களுக்கு நினைவில் வைத்துக் கொள்வது சிரமமாக இருந்தது. எனவே கற்பித்தலில் மாற்றத்தை ஏற்படுத்தினேன். அதற்காகத்தான் நான் உருவாக்கிய “சொருகு அட்டையைப்” பயன்படுத்தினேன். அவர்களுக்குப் புரிதலோடு கற்றல் நடைபெறவேண்டும், தொடர்பு படுத்திப் படிக்கவேண்டும் என்பது என்னுடைய நோக்கமாக அமைந்ததால், பூக்களின் படங்கள் அடங்கிய அட்டைகளைப் பயன்படுத்தினேன். முதலில் சொற்களை வாசிக்க வைத்து, அதிலிருக்கும் எழுத்துக்களை வாசிக்க வைத்து பிறகு சொல்லை உருவாக்கவும் வைத்தேன். முதலில் வார்த்தைகளில் உள்ள வெற்றிடங்களைப் பூர்த்தி செய்ய வைத்தேன். இவ்வாறு குறியீட்டைக் (Code) கண்டுபிடித்து வாசிக்கும் சுமையை நீக்கினேன்.

கற்றல்-கற்பித்தல் வளங்களை இன்னும் சிறப்பாகவும் நீண்ட நாள் உபயோகப்படும்படியும் தரமான பொருட்களைக் கொண்டு செய்திருக்கலாம் என நினைத்தேன்.

அடுத்தது என்ன?

நான் இன்னும் நன்றாக திட்டமிட்டிருந்தால் மற்றும் திட்டமிட்டதை கடைபிடித்திருந்தால் முதலிலிருந்தே இன்னும் நிறைய புரிதலோடு மாணவர்கள் படித்திருப்பார்கள். நான் திட்டமிட்டதைச் சரியாக செய்யாமல் விட்டுவிட்டேன். இனி வரும் வருடங்களில் பின்வருமாறு நடைமுறைபடுத்த திட்டமிட்டுள்ளேன்:

நோக்கம் --- செயல்திட்டம் --- செயல்முறை --- கற்றல் அடைவு (Objective - plan --- process --- Outcome)

 

முதலில் மாணவர்கள் எழுத்துக்கூட்டிப் படித்தாலே வாசித்தல் நடந்து விட்டது மற்றும் புரிதல் நடந்துவிட்டது என்று நினைப்பேன்.

ஆனால், இப்பொழுது என்னிடம் நான் சொல்லிக்கொள்வது ‘கற்றல் நடந்து விட்டது என்று கருதாதே, நடந்ததா? என்று கண்டுபிடி.’

இந்த அனுபவம் என்னை மாணவர்கள் புரிதலோடு கற்க வேண்டும் என்பதையே கற்றல் கற்பித்தலின் நோக்கமாக கொள்ள வேண்டும் என்பதை என்னுடைய கொள்கையாக மாற்றியுள்ளது. இந்த வருடம் என்னால் செய்ய முடியாததெல்லாம் (எந்த காரணமாக இருந்தாலும்) அடுத்து வரும் வருடங்களில் நோக்கமும் விளைவும் நிகராக இருக்குமாறு செயல்படுவேன். பாடத்திட்டம் தீட்டிய பிறகு அதைச் செயல்படுத்தும் பொழுது எது குழந்தைகளுக்குப் புரிகிறது, எது புரிதலை ஏற்படுத்தவில்லை என்பதைக் கவனித்துப் புரிதல் ஏற்படுத்துவதற்குத் திரும்பவும் வேறு திட்டம் தீட்டிச் செயல்படுத்துவேன்.

இப்பொழுது திட்டமிடுவது என்பதும், கற்றல் கருவிகள் தயாரிப்பது என்பதும் என் வாழ்கையின் அங்கமாகவே மாறி வருகிறது என்பதை உணர்கிறேன். இப்பொழுது நான் இரண்டாவது வகுப்பைக் கையாள்கிறேன். எழுவாய் பயனிலை கற்பித்தலுக்காக நான் கற்றல் கற்பித்தல் துணைக் கருவி உருவாக்கினேன். முதலில் அவர்களுக்குப் பெயர்ச்சொல் ஆண்பாலாக இருந்தால் பயனிலை ‘ன்’ என்ற எழுத்தில் முடியும் என்றும், பெண்பாலாக இருந்தால் ‘ள்’ என்ற எழுத்தில் முடியும் என்றும், அஃறிணையாக இருந்தால் ‘து’ என்ற எழுத்தில் முடியும் என்பதையும் கற்றுக் கொடுத்தேன். அதற்காக பல முறை பயிற்சி அளித்தேன். பிறகு செயல் அட்டையின் வழியே கற்றலுக்கும் பிறகு மதிப்பீட்டிற்கும்பயன் படுத்தினேன். எழுவாயை ஒரு குழு தேர்ந்தெடுத்து சொருகும் பொழுது, பயனிலையை வேறொரு குழு சொருக வேண்டும் என்று விளையாட்டு மூலம் கற்றல் நிகழ்ந்தது மன நிறைவு கொடுத்தது. அடுத்த வருடம், மேலும் பல கற்றல் கற்பித்தல் உத்திகளோ

Subject: 
Tamil

Term: Term 1