Towards a just, equitable, humane and sustainable society

வாருங்கள் விருப்பத்துடன் - மகிழ்வுடன் வாசிக்க

எனது பள்ளி:

புதுக்குப்பம் பள்ளியில் 17 மாணவர்கள் 3 ஆசிரியர்கள் உள்ளனர். அரியாங்குப்பம் பேட் பள்ளியில் தலைமையாசிரியருடன் 23 மாணவர்கள் 2 ஆசிரியர்கள் உள்ளனர். இங்கு படிக்கின்ற மாணவர்கள் பள்ளிக்கு அருகாமையிலேயே வசிக்கின்றனர். ஆகையால் எங்களால் பெற்றோரை உடனடியாகச் சந்திக்க முடியும். பள்ளியில் வகுப்பறை, சுற்றுச் சூழல், கடல் காற்று, இடவசதி என அனைத்தும் உண்டு. ஆனால் எங்கள் மாணவர்களுக்குப் பெற்றோர்களின் கவனிப்பு இல்லை.

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்களின் குழந்தைகள் மட்டும் இங்கு படிகின்றனர். மற்ற குழந்தைகள் அருகில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கின்றனர். ஆசிரியர் பற்றாக் குறைவால் இரண்டு மற்றும் மூன்றாம் வகுப்பு மாணவர்கள் இணைந்து கற்பது, அவர்களது கற்றல் சூழலைப் பெரிதும் பாதிக்கின்றது.

ஆசிரியராக எனது ஆர்வங்கள்:

ஓர் ஆசிரியராக எங்களது அறிவை மென்மேலும் வளர்த்துக் கொண்டே இருப்பதில் எங்களுக்கு ஆர்வம் அதிகம். நிறைய புத்தகங்களை வாசிப்பது, மேற்படிப்பு படிப்பது, யோகா பயிற்சி செய்வது மற்றும் யோகப் பயிற்சிகளை மாணவர்களுக்குக் கற்பிப்பது, மாணவர்களின் தேவைகளை, விருப்பங்களை நிறைவேற்றுவது போன்ற பல ஆர்வங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

புதுச்சேரி ஆசிரியர் வட்டத்தில் சேர்ந்ததற்கான காரணங்கள்:

இக்குழுவைக் கற்றலுக்கான ஒரு தளமாகவே கருதுகிறோம். எங்களின் வகுப்பறை அனுபவங்களையும் சிக்கல்களையும் பகிர்ந்து அவற்றிற்கான விடைகளைக் கலந்தாலோசிக்கும் ஒரு இடம் தான் இந்த ஆசிரியர் வட்டம். கற்பித்தலில் புது உத்திகளைப் பயன்படுத்த ஆர்வம் ஏற்படுகிறது. பல ஆசிரியர்களின் அனுபவத்தைப் பெறுவதால் எங்களின் கற்பித்தல் எளிதாகிறது.

கடந்த ஆண்டு எங்கள் வகுப்பறை:

கடந்த ஆண்டு நாங்கள் எங்கள் மூன்றாம் வகுப்பில் முயன்ற சில செயல்பாடுகளையும் கையாண்ட உத்திகளையும் இங்கே எழுதியுள்ளோம்.

அ) விட்டுக்கொடு விருப்பத்துடன் பாடப்பகுதியை இரு ஆடுகள் ஆற்றில் மோதிக்கொள்ளும் கதையைப் படங்களைக் காட்டி விளக்கினோம். அதை நாடகமாக நடிக்கச் செய்தபோது மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றதுடன் தாங்களே கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தனர். Big Book தயார் செய்து, ஒரு கதையின் முதல் பாதியைக் கூறி மாணவர்கள் மீதிக் கதையை  Big Book வாயிலாக வாசித்து அறியச் செய்தது மிகவும் சிறப்பாக இருந்தது.

ஆ) திருக்குறளை அவற்றிற்கு ஏற்ற கதைகள் மூலம் விளக்கினோம். பொதுவாகத் திருக்குறளை கற்கச் சிரமப்படும் மாணவர்கள், கதைகள் மூலம் கற்பிக்கப்பட்ட போது ஈடுபாட்டோடு மகிழ்ச்சியுடன் கற்றனர்.

இ) பள்ளியிலே கொண்டாட்டம் - பாடத்தை மாணவர்கள் ஆல்பம் தயாரித்தல், வகுப்பு இதழ் தயாரித்தல், குழுவாகச் செயல்பட்டுப் பள்ளி விழா ஒன்றைத் திட்டமிடல், வகுப்பில் நடித்துக் காட்டுதல் போன்ற செயல்பாடுகளின் வாயிலாகக் கற்றனர். இதனால் மாணவர்கள் பலமுறை பாடத்தை வாசித்து மனப்பாடம் செய்யும் அவசியம் ஏற்படவில்லை. இதன் விளைவாகத் தங்களாகவே ஒரு விழாவைத் திட்டமிட்டு நிகழ்த்த முடியும் என்ற தன்னம்பிக்கை அவர்களிடத்தில் வெளிப்பட்டது.

ஈ) மானின் விடுதலை என்பது ஒரு பாடல். இதில் உள்ள சில வார்த்தைகள் கடினமானதாக இருந்தது. எனவே பாடலை ஒரு கதையாகக் கூறி பின் அக்கதையை வாசிக்கச் செய்தோம். பிறகு பாடலை நடத்தினோம். கற்றல் மிக எளிதாகவும் இயல்பாகவும் நடந்தது. கடின வார்த்தைகளுக்கு மாணவர்களே பொருள் அளித்தனர். இதே பாடலில், வருணனைச் சொற்களை அறிமுகப்படுத்த பிங்கோ செயல்பாடு, வருணனைச் சொற்கள் அடங்கிய சுவரொட்டியைக் கொண்டு விளையாட்டுகள், படம் பார்த்து சொந்த வாக்கியங்களில் படத்தை விவரிப்பது போன்ற செயல்பாட்டுகள் எங்களுக்குப் பெரிதும் உதவின.

உ) தமிழின் சிறப்புகள் - பாடத்தைக் கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், செப்பு தகடுகள், செப்பு நாணயங்கள் அடங்கிய பட அட்டை போன்ற கற்றல்-கற்பித்தல் வளங்களைக் கொண்டு விளக்கினோம்.

அனுபவப் பகிர்வு

ஆய்வறிக்கை

மூன்றாம் வகுப்பில் நாங்கள் செயல்படுத்திய பல்வேறு முயற்சிகளில் எங்களைக் கவர்ந்த, வகுப்பில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய, மற்ற ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் ஒரு செயல்திட்டத்தைக் கீழே எழுதியுள்ளோம்.

வகுப்பறைச் சவால்கள்:

• மாணவர்களுக்கு எழுத்துக்கள் மட்டுமே உள்ள பாடத்தைப் படிப்பதில் ஆர்வம் குறைவு.

• பாடப்புத்தகத்தை மட்டும் படிப்பதில் சலிப்பு

• புத்தகத்தில் இருப்பதை மட்டுமே படிப்பது; கருத்தைப் புரிந்து கொள்வதோ, அதற்கு மேலே சிந்திப்பதோ இல்லை.

• படித்ததைப் பகிர்வதில் சிக்கல்

• இணைந்து படிக்குபோது விட்டுக்கொடுக்கும் தன்மை இல்லை

நோக்கத்தை அடைய மேற்கொண்ட முயற்சிகள்:

எழுத்துகளுடன் படங்களையும் சேர்த்து பார்த்துப் படிக்க வைப்பதால் ஆர்வம் அதிகரிக்கும் என நினைத்தோம். மேலும் இவை பாடப்புத்தகமாக இல்லாமல் நாங்களோ அல்லது மாணவர்களோ தயாரித்த வளங்களாக இருந்தால், அவை மாணவர்களோடு நெருங்கிய ஒரு தொடர்பை ஏற்படுத்தி கற்றலை வலுப்படுத்தும் என எண்ணினோம்.

கற்றல் வளங்கள் மாணவர்களின்  சிந்தனையைத் தூண்டும் விதமாகவும் அனுமானி த் து க் கூறக்கூடிய அளவில் இருக்கும் படியாகவும் பார்த்துக் கொண்டோம். இவற்றினூடே         நற்பண்புகளை வளர்க்கும்   செயல்பாடுகளையும்   இணைத்துக் கொண்டோம்.

முதலில் பாடத்தை ஓரிருமுறை வாசித்தோம். இப்பாடத்திற்கான நோக்கங்களை வரிசைப்படுத்தினோம். நோக்கங்களை அடைவதற்கான செயல்பாடுகளை விவாதித்து எழுதினோம். பாடத்தை ஒரு கதையாக வடிவமைத்தோம். கதையில் ஆங்காங்கே சொற்களை நீக்கி அவ்விடத்தில் தகுந்த படங்களைப் புகுத்தினோம். இதற்காக இணைய தளத்திலிருந்து படங்கள் சிலவற்றைச் சேகரித்தோம்.

கூறப்படும் கதையின் பொருளை மாணவர்கள் புரிந்து கொண்டனரா என்பதை அறிய, இரு ஆடுகள் ஆற்றில் மோதிக்கொள்ளும் கதையைப் படக்கதையாக உருவாக்கினோம். மாணவர்களிடம் சுயமாக வாசிக்கும் பழக்கத்தை வளர்க்க பெரிய புத்தகத்தை (Big Book) தயாரித்தோம். பெரிய எழுத்துக்கள், குறைந்த வாக்கியங்கள் மற்றும் வண்ண மயமான படங்களைக் கொண்ட இப்புத்தகம் மாணவர்களை மிகவும் கவர்ந்தது.

இவைமட்டுமன்றி, விட்டுக் கொடுக்கும் பண்பை வளர்க்க இரப்பர் விளையாட்டைத் தேர்ந்தெடுத்து அ த ற் கு த்தேவையான பொருட்களையும் சுயமாக வாசிக்கும் சூழலை உருவாக்கத் தேவையான கதை அட்டைகளையும் தயாரித்து க ற் பி த் த லு க் கு த் தயாரானோம்.

கற்பித்தல் மற்றும் ம தி ப் பி டு த ல் உத்திகள் பற்றிய சுருக்கம்:

 

 தயாரித்து வைத்திருந்த அனைத்து   உபகரணங்களுடன் வகுப்பறையில் நுழைந்தோம். இரப்பர் வளைய விளையாட்டை மாணவர்கள் விளையாட வேண்டுமெனில், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தே ஆகவேண்டும். இதன் மூலம் விட்டு கொடுத்தல் என்ற பண்பை உணர வைக்க முடிந்தது.

இப்பண்பை மேலும் வலுப்படுத்த, மாணவர்களிடம் படக் கதைகளைக் கொடுத்து கதைகளைச் சரியான முறையில் அடுக்கச் சொன்னோம். ஆனால் அவர்கள் ஆடுகள் விட்டுக் கொடுத்த கதையையும்விட்டுக்கொடுக்காத கதையையும் கலந்து அடுக்கினர். எனவே கதையை மீண்டும் கூறி பின் அடுக்கச் செய்தோம். இப்போது சரியாக அடுக்கினர்.

மாணவர்களின் புரிதலின் ஆழத்தை மதிப்பிடுவதற்காக அவர்களை இக்கதையை முகமூடி அணிந்து நடித்துக் காண்பிக்கச் செய்தோம். தாங்கள் கேட்டு வரிசைப்படுத்திய கதையைச் சொந்த வாக்கியங்களாக மாற்றி நடித்துக் காட்டினர். குழந்தைத் தன்மையோடும் நகைச்சுவையோடும் அவர்கள் நடித்துக் காட்டியது எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.

அதன்பிறகு வாசிப்புப் பயிற்சிக்காகப் படத்திற்கு உரிய வாக்கிய அட்டைகளைத் தந்து அவற்றையும் வரிசையாக அடுக்கச் செய்தோம். வாக்கிய அட்டைகளை மிக்க சிரமத்தோடு வாசித்து, ஒவ்வொரு படத்தோடும் பொருத்திப் பார்த்து, பின் வாக்கியத்தின் பொருளை அறிந்து வாக்கியங்களை வரிசைப்படுத்திய விதம் அருமையாக இருந்தது. வாசிக்கத் தெரியாத மாணவர்களும் சக மாணவர்களிடம் கேட்டு இச்செயல்பாட்டில் பங்கெடுத்துக் கொண்டது எங்களைப் பிரமிக்கச் செய்தது. வாசிப்பின் மீது ஆர்வத்தை ஏற்படுத்த, முன்பே செய்து வைத்திருந்த பெரிய புத்தகங்களை அவர்களிடம் காண்பித்தோம். அவற்றைப் பார்த்தவுடன் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி. இம்மகிழ்ச்சி தொடரவும்

வாசிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்தவும் பாதிக் கதையைக் கூறி மீதிக் கதையை வாசிக்கச் செய்தோம். இருவராக இணைந்து வாசித்தனர். வாசித்து முடித்த பின் மற்ற மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். பிறகு புத்தகங்கள் பிறருக்கு மாற்றி அளிக்கப்பட்டு, வாசிப்பு தொடர்ந்தது.

சுயமாக வாசித்தலையும் வாசித்தவற்றைச் சொந்த நடையில் வெளிப்படுத்தும் திறனையும் மதிப்பிட மேலும் சில கதைகளை மாணவர்களுக்கு வழங்கினோம். குரங்கு அப்பத்தைப் பங்கிடும் கதை, ஒரு குழந்தைக்கு இருதாய் போட்டியிடும் கதை ஆகியவற்றை நாடகமாக நடித்துக் காட்டினர்.

வகுப்பறை அனுபவங்கள்:

இரு படக்கதைகளை இணைத்துத் தரும்பொழுது மாணவர்களிடையே முதலில் குழப்பம் இருந்தது. கதையைக்கூறிய பிறகு தெளிவாகக் கதைகளைப் பிரித்து வரிசைப் படுத்தினர். அதே கதையை நாடகமாக நடித்த பின், படங்களின் உதவிகொண்டு கதையின் வரிகளைப் வாசிக்க முடிந்தது. சொந்த நடையில் கதையைக் கூறவும் முடிந்தது.

   

பெரிய புத்தகத்தை மூன்றாம் வகுப்பு மாணவர்கள் வாசிக்கும் போது, மற்ற வகுப்பு மாணவர்கள் தாங்களும் வாசிக்க விருப்பம் தெரிவித்தனர். எனவே, மூன்றாம் வகுப்பு மாணவர்கள் வாசித்து முடித்தவுடன் மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் இப்புத்தகங்களைக் கொடுத்தோம். மாணவர்கள் இருவராக இணைந்து வாசித்ததால் வாசித்தல் எளிமையாக இருந்தது.

பிரதிபலிப்பு:

படமும் வரிவடிவமும் இணையும்போது வாசிப்பதில் ஆர்வம் அதிகமாகிறது. இனி எந்தப் பாடத்தையும் விடுகதை போல் மாணவர்கள் விரும்பும் வகையில் கூறி மாணவர்கள் அதை முழுமையாக உணர்ந்தபின் பாடத்தை நடத்தி அவர்களின் ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும் என்று முடிவெடுத்தோம். அதனால் பாடம் நடத்தியபின் மாணவர்களின் வாசிப்பு ஆர்வமுடனும் எளிதாகவும் அமையும். கேட்டல் / பேச்சுத் திறன், கற்பனைத்திறன், ஒப்பீட்டுப் பார்க்கும் திறன் போன்ற பல திறன்களை வளர்ப்பதற்கு ஏற்ற கற்றல் சூழலை உருவாக்கி, தகுந்த நேரத்தில் மாணவர்களுக்குத் துணைபுரிதலே கற்றலை ஆழ்நிலைக்கு எடுத்துச் செல்கிறது. அது மட்டுமின்றி, மாணவர்கள் தங்களை கற்றலில் முழுமையாக ஈடுபடுத்தி ஆர்வமுடன் கற்கின்றனர். இனி வரும் ஆண்டுகளில் கேட்டல், பேசுதல், வாசித்தல் ஆகிய திறன்களோடு எழுதுதல் திறனையும் மேம்படுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டுள்ளோம்.

Subject: 
Tamil

Term: Term 1