Towards a just, equitable, humane and sustainable society

வகுப்பறை நாட்குறிப்பு

கடந்த கல்வியாண்டில் நான் நரம்பையில் பணியாற்றினேன். ஆரம்பத்தில் ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புகளை நடத்தினேன். பின் மழலையர் வகுப்பு முதல் 2 ஆம் வகுப்புவரை நான்கு வகுப்புகளைக் கவனித்துக்கொண்டேன். அவர்கள் அனைவருமே மீனவக் குழந்தைகள். பள்ளி நல்ல கட்டிட அமைப்புகளையும், போதுமான நவீனகருவிகளையும் கொண்டிருந்தது. கணினி, ப்ரொஜெக்டெர், ரேடியோ ஆகியவற்றையும் புத்தகப் பூங்கொத்துப் புத்தகங்களையும் போதுமான அளவு பயன்படுத்த முடிந்தது. கற்றல் கற்பித்தல் விவாதங்களில் பங்கெடுப்பது

எனக்குப் பிடிக்கும். தேடித்தேடி புதுமையான விசயங்களைக் கற்றுக்கொள்வேன். புத்தக வாசிப்பு என் சுய மேம்பாட்டிற்காக இருக்கிறது. வாசிப்பு, உரையாடல், தேடல், கற்றல் ஆகிய அம்சங்கள் என்னை மகிழ்ச்சியான ஆசிரியராக வைத்துள்ளது. சமூக மாற்றத்திற்கான நிகழ்வுகளில் கலந்துகொள்வது எனது வழக்கம்.

புதுச்சேரி ஆசிரியர் வட்டத்தில் நான் சேர்ந்ததற்கு முதல் காரணம் ஆசிரியப்பணியில் சிறப்பாக ஈடுபடவும்ஆசிரிய நுட்பங்களை என்னுள் மேம்படுத்தவும் என் வகுப்பறை நிகழ்வுகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் மற்றவர்களுடையவற்றை தெரிந்து கொள்ளவும் வகுப்பறை மேலாண்மையை அறிந்துகொள்ளவும் கற்பித்தல் நுட்பங்களை அறிந்துகொள்ளவும் வகுப்பறை பிரச்சனைகளுக்கு தீர்வுகானவும் கல்வி தொடர்பான கோட்பாடுகள், திட்டங்கள், அரசாணைகள்... போன்றவற்றை அறிந்துகொள்ளவும் அதைப்பற்றி புரிந்து கொள்ளவும் கல்வித் தொடர்பான புத்தகம் வாசிக்கவும்... என அடுக்கிக் கொண்டே போகலாம். பல இடங்களுக்குப் பயணித்து பல்வேறு விசயங்களைத்தெரிந்து கொள்வேன். இதன்அடிப்படையில் வேலையில் தன்னிறைவு பெரும் முயற்சியில் என்னை இணைத்துக் கொண்டேன்.

கடந்த ஆண்டு என் வகுப்பறை எப்பொழுதுமே மகிழ்ச்சியாக இருந்தது என்பதை நான் உணர்ந்தேன். அதற்காக வெவ்வேறுவகையான செயல்பாடுகளில் ஈடுபட்டேன். வகுப்பறையில் வாசிப்புக்காக பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டேன். வாசிப்பும் வாசிப்பிற்கான சூழலோடும் வகுப்பறை இருந்தது. குழந்தைகளை வகுப்பறைக்கு வெளியே அழைத்துச் சென்று செயல்பட வைத்தேன். நான்கு வகுப்புகளை சேர்த்து கவனித்துக் கொண்டேன். தமிழில் குறிப்பிட்ட பாடங்களை தேர்வு செய்து அதற்கான பாடத்திட்டம் வகுத்து வகுப்பறையில் செயல் படுத்தினேன். உதாரணமாக பசுவும் கன்றும், நாடிப்பயில்வோம், வீடு எங்கே, நூலகத்தில் நாங்கள் போன்ற பாடங்களை குறிப்பிட்டுச் சொல்லலாம். குழந்தைகள் வாசிப்பிற்கு கதை எழுதிய அனுபவம் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

 

அனுபவப் பகிர்வு

வகுப்பறை நாட்குறிப்பு

சென்ற ஆண்டு முதல் மற்றும் இரண்டாம் வகுப்பை சேர்த்து கவனிக்கும் பொறுப்பு என்னுடையதாக இருந்தது. புதிதாக வகுப்பறைக்குள் வரும் குழந்தைகள் ஒவ்வொருவரையும் எப்படி வகுப்பறைச்சூழலுக்கு பழக்குவது என்பது முதல் தேவையாக இருந்தது. அதற்கடுத்து விளையாடி மட்டுமே பழக்கப் பட்ட அவர்களுக்குப் பாடங்களை நடத்துவது. இரண்டு வகுப்புகளுக்கும் தனித்தனியான பாடங்களை எப்படி நடத்துவது என்பது போன்ற பொறுப்புகள். என் செயல்பாடுகள் சரிதானா? என்பதை அறிந்துகொள்ளவும், இன்னும் எப்படியெல்லாம் செய்யவேண்டும் என்று அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இருந்துகொண்டே இருந்தது. இச்சமயத்தில்தான் வாசிப்புத்திருவிழாவில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இத்திருவிழா வகுப்பறை செயல்பாடுகளை வடிவமைப்பதற்கு பெரிதும் உந்துதலாக இருந்தது. என் வகுப்பறையை விதம் விதமான செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகளுக்கானதாக மாற்றத்துவங்கினேன்.

வகுப்பறை உத்திகள்

வாசித்தலில் குழந்தைகள் எந்த நிலையில் உள்ளனர் என்பதை அறிந்து அதற்கேற்ப உதவுதல்.

• வாசித்தலுக்கான நுட்பங்களை புரிந்துகொண்டு அவற்றை வகுப்பறையில் ஈடுபடுத்துதல்.

• குழந்தைகளுக்கு தேவைப்படும் கற்றல் கருவிகளை மற்ற ஆசிரியர்களுடனும் குழந்தைகளுடனும்

இணைந்து உருவாக்குதல்.

• என் செயல்பாடுகளையும் குழந்தைகளின் கற்றலையும் ஆவணப்படுத்துதல்

என்ற வகையில் என் வேலையில் வெவ்வேறு வகையான மாற்றங்கள் நிகழத்துவங்கின. குறிப்பாக குழந்தைகள் வகுப்பறையில் மகிழ்ச்சியாக இருந்தனர். விதம் விதமான கற்றலில் ஈடுபட்டனர்.

இச்சமயத்தில் “ஆவணப்படுத்துதலின் அவசியமும் முறைகளும்” என்ற பயிற்சியில் கலந்து கொண்டேன். அதன் அவசியம் எனக்குப் புரிந்தது. அதனால் பதிவு செய்வது என்று முடிவு செய்து பதிவு செய்யத் துவங்கினேன். ஒரு நோட்டில் தேதியை எழுதி நிகழ்வுகளை எழுதத் துவங்கினேன். . ஆனால் பாடத்திற்கு நான் பயன்படுத்தத் துவங்கிய வித்தியாசமான முயற்சிகளில் நான் செலவழிக்கும் நேரமே கொஞ்சம் அதிகமானதாக இருந்தது. அதில் இதுவேறா? என்ற மலைப்பு எனக்கு துவக்கத்தில் இருந்து கொண்டே இருந்தது. இருந்தபோதும் முனைப்புடன் மூன்றுவாரங்கள் ஈடுபட்டேன். வகுப்பறையில் முக்கியமான மற்றும் வித்தியாசமான வேலைகளில் ஈடுபடும்பொழுதே அதை எப்படி நாட்குறிப்பில் எழுதுவது என யோசிப்பேன். அன்றைய எனது செயல்பாடுகளை எழுதி முடித்ததும் நாளை நான்  செய்ய வேண்டியது என்பதைக் குறிப்பேன். ஒவ்வொரு நாளும் முதல் நாளுக்கும் அடுத்தநாளுக்கும் பயணிக்கும்படி செய்தது நாட்குறிப்பு.

“15 -12 -2015 - நாட்குறிப்பில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளேன், “இன்று நான் இனம் மாற்றிக் கூட்டல் கணக்கை துவங்க வேண்டும். குழந்தைகளுக்குத் தெரியும் என்பதுபோல் நேரடியாகத் துவங்கிவிட்டேன். அவர்கள் முழிக்கும்பொழுதுதான் அது புரிந்தது. பிரவின் முழிப்பதைப் பார்க்கும்பொழுதுதான் புரிந்தது. இன்று அப்படியே அதை நிறுத்திவிட்டு, எந்த செயல்பாடு அதற்கு உகந்ததாக இருக்கும் என யோசிக்க ஆரம்பித்தேன்.

இதைப்போல்

3-8-2015 “ க் - க் = கொக்கு, ங் - ங் = சங்கு என வாய்ப்பாடு சொல்லிக் கொடுப்பது போல் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தேன். ந் - ந் = பந்து என்று சொல்வதற்கு பதில் இப்- இப் -பால் (ball) எனப் படித்தான், மோனிஷ். திரும்பக்கேட்டால் அப்படியே கூறுகிறான். இதற்கு முன் ஒருமுறை ஓ என்று கரும் பலகையில் எழுதச் சொன்னபொழுது “0” என்று ஆங்கிலத்தில் எழுதினான். ஐ எழுதச்சொன்னால் ஆங்கில எழுத்து “மி” எழுதுகிறான். இந்தப் பிரச்சனையைப் பற்றி மற்ற ஆசிரியர்களிடம் கேட்க வேண்டும்” என எழுதியிருந்தேன். அதைப்போலவே மற்ற ஆசிரியர்களிடம் பேசி சரி செய்தேன்.

அதோடு மூன்று வாரங்கள் கழித்து நான் எழுதியதை உட்கார்ந்து வாசித்தேன். அதில் குழந்தைகளின் செயல்பாடுகள் இருந்தன. அவர்கள் கற்றுக்கொண்டது இருந்தது. அவர்கள் கற்கக் கஷ்டப் பட்டவை இருந்தது. நான் மேற்கொண்ட மேற்கொள்ளவிருக்கும் உத்திகள் இருந்தன. அவர்கள் தங்கள் வீட்டைப் பற்றி கூறிய விசயங்கள் அதில் இடம்பெற்றிருந்தது. மொத்தத்தில் எங்கள் வகுப்பறை அதில் உள்ளடங்கியிருந்தது. கற்றல் கற்பித்தல் நிகழ்வுகள் அனைத்தையும் பதியத் துவங்கினேன். அது நான் செய்ததையும் செய்யவேண்டியதையும் எனக்கு சொல்லிக்கொண்டே இருக்கும் வழிகாட்டியாக மாறிப்போனது.

இச்சமயத்தில் எனக்கு நான்கு வகுப்புகளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு வந்தது. எல் கே ஷி முதல் இரண்டாம்

வகுப்புவரை,எல்லோரையும் தனித்தும் பிரித்தும் கையாள வேண்டும். இது எனக்கு பெரும் சவாலாக மாறிப் போனது. இச்சவால்களை எதிர்கொள்ளும் பலத்தை எனக்குத் தந்தது நாட்குறிப்பு. டைரி எழுதும் வழக்கம் சுலபமாக மாறிப்போயிருந்த சமயத்தில் எனக்கு ``ஆசிரியரின் நாட்குறிப்பு” என்ற ஹேமராஜ் பட் என்ற ஆரம்பப் பள்ளி ஆசிரியரின் நாட்குறிப்பு படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அது எனக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நான் பட்டிருந்த கஷ்டங்களை அவர் பட்டதோடு அவர் எப்படியெல்லாம் வெளி வந்தார் என்பதையும் சித்தரித்திருந்தது. நான்கு வகுப்புகளை ஒன்றாக வைத்திருந்தது. பாடங்களை ஈடுபாடுடன் நடத்தும்பொழுது கையாளும் முறைகள் இப்படி ஒவ்வொன்றுடனும் என் டைரியை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டேன்.

ஆனியின் கண்காட்சியில் ஈடுபட வாய்ப்புக் கிடைத்தபொழுது அவளது டைரியை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சமூகத்தை உற்றுப் பார்க்க எனக்குக் கிடைத்த வாய்ப்பாக அது இருந்தது.

ஷான் ஹோல்டின் டைரியை வாசிக்க எடுத்துவைத்துள்ளேன்.

நான் என் டைரியை இன்று திறந்து பார்த்தபொழுது:

• நான் நான்கு வகுப்புகளையும் ஒரு வகுப்பில் வெவ்வேறு முறையில் உட்காரவைத்தது பற்றி நான்கு பக்கங்கள் எழுதியுள்ளேன்.

• எப்பொழுது அவர்களை ஒன்றாக சேர்க்க முடிந்தது; எதற்காகப் பிரித்து வைத்தேன் என்பதை அதில் தெளிவு படுத்தியுள்ளேன். கதை சொல்லுதல், கதை வாசித்தல் என்பதாக சேர்ந்துஉட்கார்ந்தும். வகுப்புப் பாடங்கள் மற்றும் அது சார்ந்த செயல் பாடுகளுக்கு பிரித்து வைத்திருந்ததும் தெரிகிறது. இதை நான் செய்யும்பொழுது புரிதலுடன் செய்யவில்லை. வாசிக்கும்பொழுது உணர்கிறேன்.

• வாசிப்பிற்கு என்னென்ன நுட்பங்களை பயன்படுத்தினேன் என்பதை வரிசைப்படுத்த உதவியாக உள்ளது.

கதை சார்ந்த நிகழ்வுகள் :

• படங்களை பார்த்துக் கதை சொல்லுதல்

• கதையை வாசித்தல்

• கதை சொல்லுதல்

• கதையைப் படமாக வரைதல் என டைரியில் இருந்ததை எண்ணிப்பார்த்தேன். இவை பற்றி விதம் விதமாக நான் செய்தவற்றை டைரி கூறுகிறது.

18-3-2015 எஸ் எஸ் ஏ புத்தகம் ``பம்பரம்” – சாரு வாசித்தாள். தரை மேல் பம்பரம் என அதில் எழுதியிருந்தது. தரை என இரண்டு எழுத்துகளைப்

படித்துவிட்டு தரையில் பம்பரம் என வாசித்தாள். குழந்தை யூகித்துப் படிக்க முடியும் என்பதை முதன் முதலாகப் பார்க்கிறேன். இனி இதைப் பற்றி கவனித்துப் பார்க்க வேண்டும்.” இதேபோல் எழுத்து அறிமுகம் செய்யும்பொழுது வார்த்தைகளை இணைத்து செய்தல், மணலில் எழுதுதல், எழுத்துக்களை அலங்கரித்தல், சுவர் கரும்பலகையில் எழுதுதல் என நான் செய்ததை அடுக்கிக்கொண்டே போகமுடிகிறது. குழந்தைகள் தமிழைப் படிக்கும்பொழுது ஏற்படும் மாற்றங்கள், தேவைப்படும் பயிற்சிகளை உற்றுப் பார்த்த அனுபவம் ஒன்றை இங்கு குறிப்பிடலாம்.

27 - 11- 2015 “யார் பலசாலி என்ற புத்தகத்தை தர்ஜினி வாசிக்கும்பொழுது, விலங்கு என்பதை இங்கு விலங்கா? என தவறாக எழுதியிருப்பதாகக் குறிப்பிட்டாள். “நீதான் பலசாலி விலங்கா?” கேட்கும் வாக்கியம் அது. நிறுத்தற் குறிக்கான பயிற்சி போதுமானதாக இல்லை என்பதை டைரி உணர்த்தியது...” இதுபோல் குழந்தைகளின் அனுபவம் எப்பொழுது சரியாக பதிந்துள்ளது எங்கு இடை வெளி ஏற்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள இது உதவியது.

- என் பதிவுகளில் நான் மாணவர்களை அழைத்துச்சென்ற பசுமை நடை, கடற்கரை நடை என பதிவாகியுள்ளது பயணத்தில் நாங்கள் பேசிக்கொண்ட ஒவ்வொன்றையும் எழுதியுள்ளேன். ஆமை, கடல் வாழ் ஊயிரினங்களைப் பற்றி அவர்கள் கூரிய கதையை மறக்கவே முடியவில்லை. நாங்கள் கொண்டாடிய காற்றாடித்திருவிழா, பொங்கல் போன்றவை குறிப்பிடத்தக்கது.

27-1-16“ செல்வி பொங்கல் பொங்கும்போது குலவை போட வேண்டும் என அவளே கத்தினாள். எல்லோரும் சிரிக்க அவள் அதற்கு விளக்கம் அளித்தாள். பின் எல்லோரும் குலவை போட்டனர். அவர்களே பொருட்கள் எடுத்து வந்ததும் சேர்ந்து பொங்கல் செய்ததும் அங்கு உட்கார்ந்து, கொதிக்கும்போது தட்டு ஏன் குதிக்குது? தட்டுமேல் இருந்த தண்ணி எங்க போச்சு - போன்ற கேள்விகள் கேட்டு பேசினோம். கலாச்சார நிகழ்வுகளில் கூட அறிவியலைப் பேசமுடியும் எனப் புரிந்துகொண்டேன். எங்கள் தலைமை ஆசிரியர் இது போன்ற நிகழ்வுகளுக்குத் தரும் ஒத்துழைப்பு எனக்கு மகிழ்ச்சியளிக்கும்.

டைரி தந்த நிறைவு

இப்பதிவுகள் என் மாணவர்கள் எந்த நிலையில் இருந்தார்கள் எந்த நிலைக்கு வந்துள்ளர்கள் என்பதை தெளிவாகக் காட்டுகிறது. முக்கியமாக நான் என்ன செய்தேன் என்பதை எனக்கே கூறுகிறது. இதை பகிர்ந்துகொள்வதற்காக நான் அவற்றைப் படித்தபொழுது சிரித்தேன். எதையோ நினைத்து வருந்தினேன். யோசித்தேன். சில விசயங்களை மட்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

Subject: 
Tamil

Term: Term 1