Towards a just, equitable, humane and sustainable society

நண்பர்களாவோம் - கற்றலை இனிமையாக்க

எனது பள்ளி:

என் பள்ளியில் 275 மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர். 13 ஆசிரியர்களும் தலைமையாசிரியரும் தங்கள் பணியைச் செம்மையாய் செய்கின்றனர். பெரும்பாலான மாணவர்கள் கீழ் / நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவர்கள். பள்ளி மாணவர்கள் சுயசுத்தத்திற்கும் சுற்றுப்புறத் தூய்மைக்கும் மிக முக்கியத்துவம் அளிப்பர். பள்ளி விழாக்களில் தங்கள் திறமைகளை நிரூபித்துக் கொண்டே இருப்பர். என்னை புதிதாக்கும் முயற்சியின் வெளிப்பாடே

ஆசிரியர் வட்டத்தில் இணைந்ததிற்குக் காரணம்:

 என் குழந்தைகளின் புரிதலை விரிவுபடுத்தும் களமாகவே இதனைக் கருதுகிறேன்.

அனுபவப் பகிர்வு

கடந்த ஆண்டு என் வகுப்பறை:

கடந்த ஆண்டு என் வகுப்பறையில் நான் எனது நான்காம் வகுப்பு மாணவர்களோடு சேர்ந்து செயலாற்றிய பல்வேறு முயற்சிகளை இங்கே பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

நான்காம் வகுப்பில் நான் செயல்படுத்திய பல்வேறு முயற்சிகளின் விளைவாக எனக்கும் என் மாணவர்களுக்கும் இடையே ஒரு பிணைப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த இணைப்பு மாணவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட ஐயங்களைத் தடையின்றி கேட்கவும் அவர்களுக்கு ஒத்துப்போகாத கருத்துக்களை மறுத்துரைக்கவும் அவரவர் எண்ணங்களை வெளிப்படுத்தவும் துணைபுரிந்தது. மேலும் இது குழுக்கற்றல், சகமாணவர்களிடமிருந்து கற்றல் போன்ற செயல்பாடுகளை எளிதாக்குகிறது. கல்வியாண்டின் தொடக்கத்தில் மற்ற ஆசிரியர்களைப் போல் நானும் சில சவால்களை என் வகுப்பறையில் சந்தித்தேன். அவற்றைக் களைவதற்காக சில முயற்சிகளில் ஈடுபட்டேன். இது சார்ந்த எனது அனுபவங்களை இங்கே பதிவு செய்கிறேன்.

சிந்தனைக்கான விதை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆரோவில் பள்ளியில் நடைபெற்ற பயிற்சிப் பட்டறையில் கிடைத்தது. அதை அடியொற்றி வகுப்பறை விதிகளை உருவாக்கினோம். ஒரு சார்ட் தாளில் அவற்றை எழுதி ஒட்டினோம். அதனுடன் ஆலோசனைப் பெட்டி ஒன்றையும் தயாரித்து வகுப்பறையில் வைத்தோம்.

கீழ்க்காணும் குறிக்கோள்களை மையப்படுத்தி எனது வகுப்பறைச் செயல்பாடுகளை அமைத்தேன்.

• மாணவர்களின் சிந்தனைத் திறனைத் தூண்டுதல்

• அவர்களைக் கேள்வி கேட்கத் தூண்டுதல்

• தங்களின் கருத்துக்களைத் தெளிவாகப் பகிர்தல்

• கேட்கும் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தல்

• குழுச் செயல்பாடுகளில் முழுமையாக ஈடுபடுதல்

இக்குறிக்கோள்களை அடைய எனது வகுப்பறை கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளை முறையாகத் திட்டமிட்டேன். ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்களின் பங்களிப்பும் ஈடுபாடும் இருக்குமாறு பார்த்துக் கொள்வேன். அவ்வாறு நான் முயன்றவற்றில் சிலவற்றைக் கீழே குறிப்பிட்டுள்ளேன்.

அ) திருக்குறளைப் பொருளுணர்ந்து கற்றுக்கொள்ள குறள் உணர்த்தும் கருத்துக்களை விளக்கும் விதமாகப் படக்கதைகளை உருவாக்கினோம். குறட்பாக்களை நேரடியாகக் கதைக் கூறி விளக்காமல் படக்கதைகள் மூலம் கற்பித்தோம். அவ்வாறு கற்றுணர்ந்ததால் பசுமரத்தாணிபோல் குறளும் பொருளும் மனதில் நன்கு பதிந்ததைக் காண முடிந்தது.

ஆ) உயர்திணை / அஃறிணையைக் கற்பிக்கச் செய்தித் தாள்களில் உள்ள படங்களைத் திரட்டி, அப்படங்களை உயர்திணை / அஃறிணை என வகைப்படுத்துமாறு கூறினேன்.

இ) ‘வழங்கும் தமிழ்’ என்ற பாடத்தின் தொடர்ச்சியாக மாணவர்கள் மீன் விற்கும் பெண்ணுடன் நேர்க்காணல்

ஒன்றை நிகழ்த்தி அவர்களின் வாழ்க்கை நிலையையும் அவர்கள் பேசும் தமிழையும் தெரிந்து கொண்டனர்.

ஈ) ‘பொம்மை உலகம்’ என்ற பாடம் பொம்மைகளின் வகைகளையும், பொம்மைகள் நமது கலாச்சாரத்தில் பெற்ற இடத்தையும் விளக்குகிறது. மாணவர்களின் புரிதலை மேலும் ஆழமாக்கக் களப்பயணமாக அருகில் உள்ள ஐயனார் கோவிலுக்குச் சென்றோம். மகிழ்ச்சியுடன் சென்ற மாணவர்கள் கோவிலில் அதிகப்படியான வினாக்களைத் தொடுத்தனர்.

உ) இதே பாடத்திற்காக வீராம்பட்டினம் தொடக்கப்பள்ளியில் பணிபுரியும் கைவினை ஆசிரியரை வரவழைத்து மாணவர்களுக்கு முட்டை ஓட்டைக் கொண்டு பென்குவின், கம்பளி நூலில் கோழிக்குஞ்சு,பஞ்சு பொம்மை போன்றவற்றைச் செய்யக் கற்றுகொடுத்தோம். இதன் விளைவாக மாணவர்கள் தாங்களாகவே, துணி, பஞ்சு, தென்னங்குச்சி, களிமண், ஐஸ்கிரீம் குச்சி, காகிதம், கொட்டாங்குச்சி போன்றவற்றைப் பயன்படுத்தி பொம்மைகள் செய்து வந்திருந்தனர். அதனால் அவைகளைக் கொண்டு வகுப்பறையிலேயே பொம்மை கண்காட்சி ஒன்றை நடத்தினோம்.

ஊ) ‘ஒளிமயமான எதிர்காலம்’ என்ற பாடத்தைக் கற்பிக்க நெகிழியால் ஏற்படும் பாதிப்பு பற்றிய ஒலிஒளி படக்காட்சியைப் (குறும்படம்) காட்டினேன். அக்குறும்படம் மாணவர்களிடம் மிகப்பெரிய மனமாற்றதை ஏற்படுத்தியது. நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் நெகிழி பொருட்களின் பட்டியலைத் தயாரித்த மாணவர்கள் இவ்வளவு பொருட்களையா நாம் தினசரி வாழ்க்கையில் பயன்படுத்துகிறோம்! என ஆச்சரியப்பட்டதோடு மட்டும் அல்லாமல் வருத்தப்படவும் செய்தனர். நெகிழிக்கு மாற்றாக எவற்றைப் பயன்படுத்தலாம் எனப் புகைப்படங்கள் காட்டியபோது ஆர்வத்துடன் கூர்ந்து கவனித்த அவர்கள், அவைகளைப் பின்பற்றவும் தொடங்கினர்.

 

எ) ‘பழமொழி’ பாடம் உழவு குறித்தச் செய்திகளைப் பழமொழி வாயிலாகக் கூறுகிறது. அதனால் உழவு சார்ந்த பாடல்களைத் திரையிட்டுக் காட்டியபோது உல்லாசமாகத் திரையரங்கில் பார்ப்பது போல், மேசையின் மீது சாய்ந்து கொண்டு பார்த்த காட்சி எப்பொழுது எண்ணினாலும் என் முகத்தில் புன்னகையும் பூரிப்பும் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. அப்பாடல்களைப் மீண்டும் மீண்டும் பாடிக் களித்தனர். பாடத்தைக் கடினமாக உணராத வகையில் வண்ணம் தீட்டுதல், படங்களை வரிசைப்படுத்துதல், ஒலி புத்தகம் மூலம் பாடத்தை வாசித்தல் எனப் பாடத்தைச் சுவையாக்கினேன்.

பழமொழி உணர்த்தும் மறைபொருளை மாணவர்கள் ஓவியமாக வரைந்தது மாணவர்களின் மீதான மதிப்பை மேலும் கூட்டியது. உழவுத்தொழிலை நன்கு புரிந்து கொள்ள ஏதேனும் ஒரு நெல் வயலுக்குச் சென்று உழவருடன் கலந்துரையாடத் திட்டமிட்டோம். ஆனால் திட்டமிட்டபடி களப்பயணம் செல்லாதது மட்டுமே இன்று வரை என்னை உறுத்திக் கொண்டே இருக்கிறது.

ஏ) ‘தோழிக்கு விருந்து’ என்பது உரையாடல் வடிவில் உள்ள பாடம். இதைக்கற்பிக்க ‘வாசிப்பு அரங்கம்’ என்ற வாசிப்பு உத்தியைப் பயன்படுத்தினேன். அனைத்து மாணவர்களும் இச்செயல்பாட்டில் பங்கெடுத்து வாசித்தது எனக்கு வியப்பாக இருந்தது. கதையைக் கூறி, சொற்களை எளிமை படுத்தியதால் வாசிக்க சிரமப்படும் மாணவர்கள் கூட சிறிய வாசகங்களை வாசித்தது மனதிற்கு நெகிழ்வூட்டியது.

ஐ) இந்த ஒரு வருடத்தில் என்னை மிகவும் கவர்ந்த வாசிப்பு உத்தி ‘கதை வரைபடமே’. ‘மன்னர் மன்னன்’ என்ற உரையாடல் பாடத்தைக் கற்பிக்க கதை வரைபடம் என்ற உத்தியைப் பயன்படுத்தினேன். எனது மாணவர்களுக்கு இது வருமா? அது வருமா? என்ற என் எண்ணத்தைத் தூள் தூளாக்கினர். இப்போதெல்லாம் எந்தக் கதை கூறினாலும் அதை ஐந்தே வரிகளில் சுருக்கி கதைவரைபடமாக மாற்றி விடுகின்றனர். மேலே குறிப்பிட்டுள்ள இச்செயல்பாடுகள் மற்றும் உத்திகள் மூலம் சிறிது சிறிதாக மாணவர்களுக்குப் பயம் விலக ஆரம்பித்தது. நாம் எதைக் கூறினாலும் ஆசிரியர் செவிமடுக்கிறார் என்ற நம்பிக்கை பிறந்தது. கற்கச் சிரம்மப்படும் மாணவர்களும் தங்களின் பயத்தைக் கடந்து பேச கற்க ஆரம்பித்தனர். மாணவர்களுக்குள் நல்லுறவு மலர்ந்தது. வகுப்பறைச் சட்டத் திட்டம் அமைக்க முற்பட்டபோது ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள், வருடம் முழுவதும் அவற்றைக் கடைப்பிடிக்க முயற்சித்தனர்.

ஆலோசனைப்பெட்டி

நான் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள எனக்கு நல்லதொரு வாய்ப்பினை எனக்கு இது ஏற்படுத்திக் கொடுத்தது. மாணவர்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படையாக ஒரு துண்டு சீட்டில் எழுதி ஆலோசனைப் பெட்டியில் போட ஆரம்பித்தனர். ஒவ்வொரு நாளும் பெட்டியிலிருக்கும் சீட்டுக்களை எடுத்துப் படித்து, அவர்களின் குறைகளைக் களைய முயன்றேன். மாணவர்களுக்கு என் மீது நம்பிக்கை துளிர்க்க ஆரம்பித்தது. ஒரு சில வாரங்களிலேயே அந்த நம்பிக்கை வேரூன்றியது.

மாணவர்களின் எண்ணங்கள் சிலவற்றைக் கீழே எழுதியுள்ளேன்.

• பெரிய வார்த்தை வேணாம் மிஸ்

• எழுதும் போது மறக்காம புள்ளி வைங்க மிஸ்

• அம்மான்னு சொல்றீங்க, ஏன் அடிக்கிறீங்க

• அவ என் கூட பேசமாட்டாளாம், பேச சொல்லுங்க

• நீங்க என் தோழி போல இருக்கீங்க

• எனக்கு A1 எல்லாத்துலயும் போட்டு இருக்கீங்க, கவிதாக்கு ஒன்றில் மட்டும் A2 போட்டு இருக்கீங்க

ஏன் மிஸ்.

• அழகா சொல்லித் தர்றீங்க மிஸ்

• நாங்க ஆறாவது போனா நீங்க அழுவாதீங்க

இதன் விளைவாக எந்தப் பாடமானாலும், குழுச் செயல்பாடானாலும் கேள்விகளை அடுக்கத் தொடங்கினர். நான் கூறும் கதையோ / அனுபவமோ / பாடம் சார்ந்த செய்திகளோ, விளக்கம் தேவைப்பட்டால் தயக்கமின்றி அறிய ஆர்வம் காட்டினர். நான் வகுக்கும் குழுச் செயல்பாடு புரியாமலோ / கடினமாகவோ இருந்தால் மாற்றச் சொல்லிக் கேட்கின்றனர். இந்த ஓராண்டுப் பயணத்தில் எனது மாணவர்கள் என்னிடம் மிக நெருங்கி உள்ளனர். இது அவர்களின் கற்றலுக்கு உறுதுணையாக இருந்ததை மகிழ்ச்சியோடு அனுபவிக்கிறேன். இந்த ஆண்டு வாசித்தலில் அதிக கவனம் செலுத்திய எனது வகுப்பறை அடுத்த ஆண்டு எழுதுதல் திறனைச் செம்மைப்படுத்தும் செயல்பாடுகளில் ஈடுபடும்.

 

Subject: 
Tamil

Term: Term 1