Towards a just, equitable, humane and sustainable society

கற்றலில் கற்றல் கருவி - செயல்பாடு மற்றும் உரையாடல்

கடந்த மூன்று ஆண்டுகளாக இதே பள்ளியில் முதல் வகுப்பு குழந்தைகளுக்கு ஆசிரியராகப் பணியாற்றுகின்றேன். என் வகுப்பில் 26 குழந்தைகள். அருகிலுள்ள அரசு குடியிருப்புப் பகுதியிலிருந்து பெரும்பாலான குழந்தைகள் இப்பள்ளிக்கு வருகின்றனர்.

இவர்களின் பெற்றோர்கள் வெவ்வேறு வகையான தினக்கூலி வேலைகளில் ஈடுபடுபவர்கள். பள்ளியில் நிறைய மரங்கள் உள்ளன. பள்ளிக்குப் பின்புறம் பூங்கா ஒன்று இருக்கிறது.

என்னைப் பற்றி:

 கடந்த பத்து ஆண்டுகளாக முதல் வகுப்பு ஆசிரியராக மட்டுமே இருக்கிறேன். கற்றல் கற்பித்தல் கருவிகளை விதம் விதமாகத் தயாரிப்பதிலும் குழந்தைகளுக்கு ஏற்றசெயல்பாடுகளில் ஈடுபடுவதும் எனக்குப் பிடித்தமானது. புதிய விசயங்களை அறிந்து கொள்வது எனக்குப் பிடிக்கும்.

கடந்த ஆண்டு, என் வகுப்பறையை ப்ரிண்ட் ரிச் (print rich) சூழலோடு வைத்திருந்தேன். முன்பெல்லாம் கற்றல் கருவிகளை நான் தயாரிப்பேன். ஆனால் இப்பொழுது மாணவர்களுடன் சேர்ந்து தயாரிக்கிறேன்.

கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் பல புதுமையான செயல்பாடுகளை வகுப்பறையில் செயல்படுத்தினேன். தமிழில் பாடத்திட்டம் தயாரித்து கற்பித்தலில் ஈடுபட்டேன்.

ஆசிரியர் வட்டத்தில் இணைந்ததிற்கான காரணம்:

ஆசிரியர் குழுவில் உரையாடல் மற்றும் குழுகற்றலில் ஈடுபட்டு, ஈடுபாட்டோடு கற்றல் கற்பித்தலில் செயல்படவும், மற்ற ஆசிரியர்களின் அனுபவத்தை அறிந்துகொள்ளவும், அரசு பள்ளியில் இருக்கும் .இன்றைய சவால்களான கற்றல் குறைபாடுடைய குழந்தைகள் மற்றும் அதி-செயல்பாடுடைய குழந்தைகளைக் கையாளும் முறையைப் பற்றி அறிந்து கொள்ளவும் இவ்வுலகில் நடக்கும் பல்வேறு விசயங்களைத் தெரிந்து கொள்ளவும் புதுவை ஆசிரியர் வட்டத்தில் என்னை இணைத்துக் கொண்டேன்.

 

அனுபவப் பகிர்வு

கற்றலில் கற்றல் கருவி - செயல்பாடு மற்றும் உரையாடல்

கற்பித்தல் கருவிகள் சமீப காலத்தில் விதம் விதமாக வகுப்பறையில் பயன்படுத்தப் படுகிறது. கல்வியில் ஏற்பட்ட மிகப் பெரும் மாற்றமாகக் கூட அவற்றைக் கொள்ளலாம். இம்மாற்றம் வகுப்பறைகளை மகிழ்ச்சியானதாக ஆக்குகிறது. கற்பித்தல் கருவிகளைத் தயரிப்பதில் நானும் முனைப்புடன் ஈடுபட்டுவந்தேன். கலர் காகிதங்களையும் அட்டைகளையும், துணிகளையும் கொண்டு எழுத்துக்களையும் எண்களையும் வெட்டி ஒட்டித் தொங்கவிட்டு என வகுப்பறை குதூகலமாகக் காட்சியளிக்கும். கற்றல் கருவிகள் குழந்தைகள் மகிழ்ச்சியான கற்றலில் ஈடுபட உதவியாக இருக்கிறது. இருந்த போதும் அவற்றை பயன்படுத்தும்பொழுது கற்றல் மேம்படுகிறதா? கற்றல் கருவிகள் அதனுடன் இணைந்த செயல்பாடுகள் மற்றும் அச்செயல்பாடுகளுடன் நடைபெறும் உரையாடல் ஆகியவை இணையும்பொழுதுதான் நாம் எதிர்பார்த்ததை கற்பிக்க ஏதுவாக இருக்கும்.. குழந்தைகளுடன் நடத்தப் படும் உரையாடல் என்பதை ஆசிரியர் தொடர் செயல் பாடுகள் மூலம் செழுமைப் படுத்த வேண்டியுள்ளது. சென்ற ஆண்டுவரை கற்றல் -கற்பித்தல் கருவிகள் தயாரிப்பதில் கவனம் செலுத்திய நான் முடிந்த ஆண்டில் வித்தியாசமான முறையைக் கையாண்டேன். மணலில் எழுத வைப்பது, குறிப்பிட்ட வடிவமுடைய பொருட்களைக் கொண்டுவரச் சொல்வது எனத் துவங்கியது.நான் எதிர்பார்ப்பவற்றை குழந்தைகள் செய்வதற்கு அவர்களுடன் நிறைய பேசவேண்டும். கற்பித்தல் கருவிகளை குழந்தைகளுடன் இணைந்து தயாரித்தல் பின் அவற்றைக் கொண்டு செயல்பாடுகளில் ஈடுபடுதல் மற்றும் அவற்றின் மூலமாக மேற்கொள்ளப்படும் உரையாடல் என்ற கருத்தாக்கத்தை முன் வைத்து செயல்படத் துவங்கினேன். இம்முறையில் என் வகுப்பறையில் நடைபெறும் உரையாடல்கள் எனக்குள்ளும் மாணவர்களுக்குள்ளும் பெறும் மாற்றத்தை ஏற்படுத்தியதாக உணர்கிறேன்.. அதனால் அவற்றை இங்கு பதிவு செய்துள்ளேன்.

உரையாடலின் வடிவங்கள்:

உரையாடல் பற்றிய அறிமுகத்துடன் துவங்கலாம் என எண்ணுகிறேன். 6 வயது குழந்தைக்கு நாம் விரும்பியதைக் கற்பிப்பதற்கு உரையாடுதல் என்பது அத்தியாவசியமாகிறது. உரையாடல் என்பது ஆசிரியர்கள் தொடர்ந்து செய்யும் நிகழ்வுதான். நாம் யாருடன் வாழ்கின்றோமோ அவர்களுடன் உரையாடல் நடத்துவது என்பது இயல்பான ஒன்றுமட்டுமல்ல, அத்தியாவசியமான ஒன்றாகவும் இருக்கிறது. தொடர்புகொள்ள, புரிந்துகொள்ள செயல் படுத்த, செழுமைப்படுத்த என வெவ்வேறு விதங்களில் வகுப்பறையில் உரையாடல் உதவியாக உள்ளது. ஐந்துமாதக் குழந்தையுடன் ஓயாது பேசுவதையும், பேசியதையே திரும்பத் திரும்பப் பேசச்சொல்லி ரசிப்பதும், என வெவ்வேறு விதமான உரையாடல்களுக்கு வாய்ப்பளித்து வளர்கின்றனர் குழந்தைகள். அவர்கள் பள்ளிக்குள் வந்ததும், பள்ளியை ஒரு அந்நியமான இடமாக ஆக்காமல் இருப்பது நல்லது எனத் தோன்றியது. இருந்தபோதும் ஆரம்பப் பள்ளியில் முதலாம் வகுப்பு குழந்தையுடன் உரையாடுவது என்பது என்ன என்பதைப் பற்றியோசிக்கத் துவங்கினேன். இவ்வுரையாடல் பல நேரங்களில் கேள்வி பதில் நிகழ்வாக மாறியுள்ளது. சாப்பிட்டாயா? எழுதினாயா? ஏன் வரவில்லை?... (உரையாடல் என்பதில் நாம் கேள்வி கேட்கலாம் அவர்களும் கேள்வி கேட்பர். நாம் கருத்துச் சொல்லலாம் அவர்களும் கருத்துசொல்வர், என்றிருந்தால் நலமாக இருக்கும். உரையாடல் குறிப்பிட்ட செயல்பாடுகள், நிகழ்வுகளை நோக்கியதாகவும் இருக்கலாம் என்றுணர்ந்த பொழுது மகிழ்ச்சியாக இருந்தது.) முதல் வகுப்புக் குழந்தைகளுக்கு மொழி என்பது பேச்சாக மட்டுமே இருக்கிறது. அதில் அவர்கள் அறிந்த வார்த்தைகள், அவர்கள் மற்றவர்களோடு தொடர்பு கொள்ளுதல் என எல்லாம் கலந்து இருக்கிறது. நம் செயல்பாடுகளில் உரையாடல் என்பது அவர்களை மதித்தல், அவர்கள் புரிந்து கொள்வதை அறிதல், அவர்களுக்குப் பிடித்தமான வகையில் இட்டுச் செல்லுதல் என முக்கியத்துவம் பெறுகிறது. அதோடு அவர்களது மனநிலையைச் சுலபமாகப் புரிந்துகொள்ள உதவியாக உள்ளது. இவையெல்லாவற்றையும்விட நம்மை அவர்கள் செழுமைப் படுத்துகின்றனர். இதற்கான உதாரணத்திலிருந்து துவங்கலாம் என எண்ணுகிறேன்.

• கரும்பலகையில் எழுதிய வார்த்தைகளைக் குச்சியைக் கொண்டு சுட்டிக் காட்டி வாசித்துவிட்டு அதே குச்சியைக் கொண்டு ‘‘இங்க வா!’’ என்று ஒரு மாணவியைக் காட்டி அழைத்தேன். “வரமுடியாது” என்று தலையாட்டினாள்.

“ஏன் வர மாட்ட?” என்றேன்.

“பயமா இருக்கு!” என்றாள்.

“ஏன்?” என்றேன்.

ஸ்கேலைக் காட்டினாள்.

உடனே அதைத் தூக்கி எறிந்துவிட்டு, “வா!” என்றேன்

வேகமாக அருகில் வந்தாள்.

அவள் என்னைப் பார்த்து பயப்பட வில்லை.

என் கையில் இருந்த அடிக்காத குச்சியைப் பார்த்து பயந்தாள். அடிக்காவிட்டாலும் கூட குச்சி வகுப்பறையில் குழந்தைகளைப் பயமுறுத்துகிறது. என்பதை இதை விட எப்படி உணருவது?

உணர்தல் அழைத்துச் செல்லும் பாதை சிறப்பானது.

உரையாடலுடன் செயல்பாடுகள்:

• என் இரண்டாவது உதாரணம், பாடத்திற்காக நான் மேற்கொண்ட செயல்பாடுகளை மையமாகக் கொண்டு நடைபெற்ற ஒன்று.

- படுக்கைக் கோடு நிற்கும் கோடு கற்பிப்பதற்கான செயல்பாடுகளைத் தயாரித்து பாடம் நடத்தினேன். அப்பாடம் மற்ற பாடத்திற்கு உதவியாக இருந்ததைக் குறிப்பிட்டால் நல்லது. நான் திட்டமிட்டிருந்த செயல்பாட்டை வகுப்பறை உரையாடலுக்கு வலிமை சேர்த்ததாகவே கருதுகிறேன். ஒரு நிற்கும் கோடு ஒரு படுத்திருக்கும் கோடு என்று குழந்தைக்கு சொல்வதைக்காட்டிலும்;

 ஒரு குழந்தையை வந்து நில் என்றேன்.

வந்து நிற்கிறது.

என்ன செய்கிறாய் என்று கேட்கிறேன்.

“நிக்கிறான்” என்கின்றனர் குழந்தைகள்.

(ஒரு குச்சியை இன்னொரு குழந்தையிடம் கொடுத்து ‘‘நிற்க வை’’ என்றேன்)

இரண்டு பைகளைக் கொண்டுவந்து வைத்து அதற்கிடையே நிற்க வைத்தனர்.

குச்சி என்ன செய்யுது? என்றேன்.

நிற்கிறது என்றனர்.

இதைப் போலவே படுத்திருக்கும் கோட்டினை புரிந்துகொள்ள குச்சியை பயன் படுத்திப் பார்த்தோம். கடைசியாக கரும்பலகையில் நிற்கும் கோடு மற்றும் படுத்திருக்கும் கோடு வரைந்த பொழுது அவர்களாகவே அதைக் குறிப்பிட்டனர். இது எல்லோருக்கும் சுலபமாகப் புரிந்தது.

இச்செயல்பாட்டை நான் மறந்துவிட்டேன். புரிந்த இப்பாடம் வேறு ஒன்றில் வெளிப்பட்டது. வேறொரு நாள் “ட, ப” எழுதி சொல்லிக்கொடுத்த பொழுது மாணவர்கள் அதனுடன் இணைத்ததை பகிர்ந்து கொண்டாக வேண்டும்.

ஒரு நிற்கும் கோடும் படுத்திருக்கும் கோடும் சேர்ந்து “ட” என்றாள் ஒரு பெண். அதைப் பார்த்த மற்றொரு குழந்தை “ப” வைக் காட்டி இதில் இரண்டு கோடு நிற்கிறது என்றது. நான் சற்றும் எதிர்பாராத ஒன்று. அதோடு நான் அதுபற்றி யோசிப்பதற்குள் அடுத்த மாணவி அதை ஒட்டி பதில் சொன்னபொழுது இன்னும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனாலும் கணக்கையும் மொழியையும் குழப்பிக்கொள்ளக் கூடாது என்பதற்காக என் உரையாடலைத் தொடர்ந்தேன்.

எதுக்கு அங்க நிக்குது என்றேன்?

“ட“ வுக்கு நிக்குது. என்றான் ஒரு குழந்தை.

“இங்க ஒண்ணு இங்க ஒண்ணு நிக்கிது, இது படுத்திருக்கு” என்று “ப” வைப் பற்றிக் கூறியபொழுது, எனக்கு அவர்கள் மிகப் பெரிய பாடம் சொல்லிக் கொடுத்ததுபோல் இருந்தது. சூலை மாதத்தில் நடந்த இம்முறையைக் என்னை இவ்வருடம் முழுக்க இப்பானியைக் கையாளத் தூண்டியது.

கற்றல் கருவி/செயல்பாடு/உரையாடல்:

• வண்ண வண்ண பூக்கள் பாடம் நடத்திய பொழுது பூக்கள் பறித்துக்கொண்டு வரும்படி கேட்டுக்கொண்டேன். அவர்கள் பறித்துவந்த பூக்கள் பூக்கடையை வகுப்பறையில் வைத்தது போல் இருந்தது. அப்பகுதியில் பூத்த பூக்களும் கடையில் வாங்கிய பூக்களுமாக மல்லிப் பூ, ரோஷாப் பூ, செம்பருத்திப்பூ... எனப் பெயரும் வண்ணமும்கூட அவர்களுக்குத் தெரிந்தது. குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்தால் பூக்கள் பறித்தது பற்றிக் கேட்க வேண்டாம் எனத் தோன்றியது. ஆனால் அது போன்ற செயலுக்கு மாற்று என்ன என்பதைப் பற்றி என் மனம் யோசித்துக் கொண்டே இருந்தது. வண்ண வண்ண கன சதுரப் பாருளை உருவாக்க முடிவு செய்தேன். இப்பொருளை வெவ்வேறு செயல்ளுக்கு வகுப்பறையில் பயன்படுத்தலாம். முதலில் அது வண்ணங்களுக்கு, பின் அதன் மேல் எழுத்தை எழுதலாம் அதன் பின் ஒவ்வொன்றிலும் ஒரு வார்த்தைக்கான எழுத்துக்களை எழுதி கண்டு பிடிக்கச்செய்யலாம் என முடிவு செய்தேன். வண்ண வண்ண காகிதங்கள், அட்டைகள் ஆகியவற்றை வெட்டி வைத்துக்கொண்டு அவர்களுக்குச் செய்யக்கற்றுக் கொடுத்தேன். அவர்கள் உட்கார்ந்து பசையை வைத்து ஒட்டினர். வகுப்பறை ஆர்ப்பாட்டமாக இருந்தது. ஆகஸ்ட் மாதத்தில் வந்து சேர்ந்து அழுது கொண்டே இருந்த ஒரு மாணவன் அழுகையை நிறுத்தி வேடிக்கை பார்ப்பவனாக மாறினான். ஆறு வண்ணங்களில் ஏறக்குறைய ஐம்பது கனசதுரங்களைத் தயாரித்தனர். வழக்கம் போல் சரியாக ஒட்டிய மாணவர்கள் இது என்னுடையது என்று அவர்களுக்கு அருகிலேயே வைத்துக் கொண்டனர். அதிகம் செய்தவர்கள் நான் மூனு செய்தேன் என்றனர். ஒவ்வொருவருடையதாக முடித்து காயவைத்து ஒவ்வொரு கலரையும் தனித்தனியாகப் பிரித்து வகுப்பறை சுவறில் அடுக்கினேன். பச்சை, மஞ்சள், நீலம், வெள்ளை, கருப்பு, சிவப்பு - வண்ணங்கள் அத்துபடி.

 

இக்கன சதுரத்தின்மீது மீண்டும் வெள்ளைத் தாளை ஒட்டும் வேலை நடைபெற்றது. ஒவ்வொரு புறமும் ஒரு எழுத்தை எழுதிக்கொடுத்தேன் அவ்வெழுத்தில் அவர்கள் வண்ணம் தீட்டினர்.

• இக்கன சதுரத்தைக் கொண்டு வார்த்தைகள் உருவாக்கினோம்.“ படம்” என்று நான் சொன்னால் நான் குறிப்பிடும் மாணவர் அதை சேர்த்து வைப்பர். ஒரு நல்ல பயிற்சி விளையாட்டாக அது இருந்தது. எழுத்துக்களை அடையாளம் கண்டு எடுத்து அவற்றை வார்த்தையாக மாற்றினர். இதற்குமுன் அவர்களுடன் அமர்ந்து எழுத்துமாலை செய்தோம். இப்பொழுது வார்த்தைகளை மாணவர்கள் சுலபமாக வாசித்தனர். முக்கியமாக அவர்கள் மகிழ்ச்சியாகவும் அழகாகவும் மிகப்பெரிய வேலையைச் செய்யும் உணர்வுடனும் அவர்கள் செய்தனர்.

• அடுத்தடுத்து இது போன்ற வேலைகளைச் செய்யத்தூண்டியது. ஒவ்வொரு செயல்பாட்டுடனும் அது எதற்கு என்பதைப் பற்றிப் பேசும்பொழுது அவர்களால் காரணத்தைச் சுலபமாகப் புரிந்துகொண்டு செயல்பட முடிந்தது. இதனால் இது ஒரு தயாரிப்பிற்கான செயல்பாடாகவும் மாறிவிடுகிறது.

 இன்னொரு முறை அட்டையில் முகமூடி செய்து விலங்குகள் போல் கத்தியது, பேசியது என்றொரு செயல்பாட்டை வடிவமைத்திருந்தேன் அதுவும் சிறப்பாக இருந்தது. இதன் தொடர்ச்சியாக நடந்த ஒரு அனுபவத்தையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

ஒரு மாணவனின் அம்மா வந்தவர்கள் என்னிடம், “ சார் ராத்திரி எல்லாம் அவன் உங்களைப்போலவே நடித்துக் கொண்டு இருக்கிறான்.” என்றார்கள்.

வகுப்பறையில் அவனை செய்து காட்டச் சொன்னேன். அவ்வளவு அழகாகச் செய்தான்.

பாடலின் ஒவ்வொரு வரியையும் சொல்லி விட்டு, என்னை போல் செய்தான்

“ காக்கா அந்தப் பக்கம் கா கா கா”

சொல்லு - என்றான்

கூறி விட்டு “ குருவி அந்தப் பக்கம் கீ கீ கீ”

சேந்து சொல்லுங்க - என்றான்.

பின் அடுத்த வரியைக் கூறினான்.

இப்படியே அடுத்தடுத்த வரிகளைக் கூறினான்.

- சத்தமாகச் சொல்லுங்க. என்று அவன் முடித்ததும் அடுத்த மாணவன் தான் செய்து காட்டுவதாக

எழுந்து வந்தான்.

- இங்க வா! என் பக்கத்துல உக்காரு... என்றான்.

என் செயல்பாடுகளை மாணவர்கள் மூலமாகப் பார்க்கும் பெரும் பேறு பெற்றதாக இருந்தது.

இந்நிகழ்வை முகமூடி மற்றும் அது சார்ந்த செயல் திட்டங்களுடன் இணைத்துப் பார்ப்பதா?

என்னைப் பற்றியது என்று பார்ப்பதா? என்ற குழப்பம் என்னில் இருந்தது.

மாணவர்களை மதித்தலும் அவர்களால் என்ன முடிகிறது, முடியவில்லை என்பதை அறிந்து கொள்ளவும். அதற்கான காரணத்தை அறிவதற்கும், அவர்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கின்றனரா என்பதைப் புரிந்துகொள்ளவும் உரையாடல், செயல்பாடுகள் மற்றும் கற்பித்தல் கருவிகள் என ஒவ்வொன்றுக்கும் முக்கியப் பங்கு உள்ளது. அவை சில நேரங்களில் தனித்தனியாகவும் பல நேரங்களில் இணைந்த ஒன்றாகவும்செயல்பட வேண்டியுள்ளது.

Subject: 
Tamil

Term: Term 1