Towards a just, equitable, humane and sustainable society

மாற்றம் ஒன்றே மாறாதது

 ‘மாணவர்களை ஆற்றுப்படுத்துவது மட்டுமே ஆசிரியர்களின் கடமையன்று ஆசிரியர்களும் மாற்றங்களுக்கு உட்பட வேண்டும்’ – இது மாணவர்களிடமிருந்து நான் கற்ற பாடம்.

எனது பள்ளி:

எனது பள்ளியில் 169 மாணவர்களும் ஆசிரியர்களும் தலைமை ஆசிரியருடன் இணைந்து செயல்படுகிறோம். இங்கு படிக்கின்ற மாணவர்கள் பொருளாதார நிலையில் பின்தங்கியே உள்ளனர். அனைத்து பெற்றோர்களும் கூலித் தொழிலாளர்களாகவே இருக்கின்றனர். அவர்கள் தினசரி பலவித பிரச்சனைகளை வாழ்க்கையில் எதிர்கொள்கின்றனர்.

எங்கள் பள்ளி சிறந்த அழகிய தூய்மையான ஒரு பள்ளி. தேவையான எண்ணிக்கையில் வகுப்பறைகள், நல்ல வெளிச்சம் மற்றும் காற்றோட்ட வசதிகளை உடையது. தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் ஒற்றுமையாகச் செயல்படுவதால் எங்கள் பள்ளி அனைவராலும் பாராட்டப் படுகிறது. தூய்மை இந்தியா வாரம், கணித மேதை இராமானுஷர் வாரம், தேசிய பசுமைப்படை சார்பில் பல விழாக்கள், கூட்டங்கள், ஆண்டுவிழா போன்ற அனைத்தும் மிகச் சிறப்பாக நடைபெறும்.

 

தினம் காலைக்கூட்டத்தில் மருத்துவக்குறிப்பு, அறிவியல் செய்தி, திருக்குறள், பொது அறிவு செய்திகள் போன்ற பல செய்திகள் மாணவர்களால் கூறப்படுவதுண்டு. பல தனியார் பள்ளிகளிலிருந்து மாணவர்களை எங்கள் பள்ளியில் சேர்கின்றனர். பெற்றோர்களுக்கு அரசு பள்ளியின் மீது தனி மதிப்பு ஏற்பட முன்னோடியாக எங்கள் பள்ளி இருந்து வருகின்றது.

இருப்பினும் மாலை மற்றும் இரவு நேரங்களில் சமூக விரோதிகளால் நடைபெறும் சீர்கேடுகள் எங்களுக்குச் சவாலாகவே இருக்கின்றன. காலையில் பள்ளியில் உடைந்த பாட்டில் துண்டுகள் எங்கும் நிறைந்து இருக்கும். தினமும் அவற்றையெல்லாம் சுத்தம் செய்வதே எங்களின் முதல்வேலையாக இருக்கிறது. ஊர் மக்கள் சிலர் பள்ளி வளாகத்தில் கழிவுப்பொருட்களைப் கொட்டும் இடமாகவும் கழிவறையாகவும் பயன்படுத்துவது வருத்தத்தை அளிக்கிறது.

 

ஆசிரியராக எனது ஆர்வங்கள்:

சிறுவயதிலிருந்தே வகுப்பில் முதல் மாணவி, வகுப்புத் தலைவி, பள்ளித் தலைவி எனப் பல பொறுப்பில் இருந்திருக்கிறேன். பள்ளிப் பருவத்திலேயே அனைவரின் சந்தேகங்களுக்கும் விடையளிப்பேன். சக மாணவியருக்குப் படிப்பில் உதவி செய்வேன். எனது ஆசிரியர்களும் “நாளை நீ ஆசிரியராகத்தான் வரப் போகிறாய்” என்று என்னை வாழ்த்திப் பாராட்டுவர். எனது ஆசிரியர்களிடம் நான் அதிக மதிப்பும் பற்றும் வைத்திருந்தேன். அதனால் நானும் ஒரு சிறந்த ஆசிரியராக உருவாக வேண்டும் என்ற கனவு என்னுள் வளர்ந்து கொண்டே இருந்தது. இந்த எண்ணம் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி வரை தொடர்ந்ததால் எனக்கு ஆசிரியப் பணி செய்வதில் சுமையோ, வருத்தமோ இருந்ததில்லை.

என்னிடம் படித்த பல பிள்ளைகள் இன்று பலதுறைகளில் சிறப்பாகச் செயலாற்றி வருகின்றனர். இதை அவர்கள் என்னிடம் கூறும் போது மட்டற்ற மகிழ்ச்சியும் திருப்தியும் அடைகிறேன். ஒருபுறம் திருப்தி ஏற்பட்டாலும், மறுபக்கம் என் பணி இன்னும் முழுமை பெறவில்லை.

 சமுதாயச் சீர்கேடுகளை மாற்ற வேண்டும், பழைய பண்பாடு கலாச்சாரம் நிலைபெற நல்ல விதைகளை மாணவர்களிடத்தில் தூவவேண்டும் , ஒவ்வொரு விதையும் விருட்சமாக வளர்ந்து நாளைய பாரதம் சிறக்க பிள்ளைகளை வல்லவர்களாக்க வேண்டும் போன்ற எண்ணங்கள் ஏக்கங்களாக இன்றும் என்னுள் அரித்துக் கொண்டிருகின்றன.

மாணவர்களுக்கும் சக ஆசிரியர்களுக்கும் உதவும் வகையில் பயனுள்ள புத்தகங்கள் எழுத வேண்டும். இந்த ஆர்வம் என் பணி நிறைவு வரை... இல்லை இல்லை என் வாழ்நாளின் இறுதி நொடிவரை பிறருக்கு உதவும் வகையில் இருக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோள்.

இந்த உலகை விட்டு மறையும் பொழுது என் நினைவாக எதையாவது விட்டுச் செல்ல வேண்டும் என்ற பேரவா என்னுள் நிறைந்திருக்கின்றது.

புதுச்சேரி ஆசிரியர் வட்டத்தில் சேர்ந்ததற்கான காரணங்கள்:

‘ஆசிரியர் என்றாலும் நானும் ஒரு மாணவியே’. தினம் நான் வகுப்பறையில் கற்றுத் தெளிவது ஏராளம். வகுப்பறையில் நிலவும் பலவகையான சிக்கல்களுக்கு எனது பார்வையில் தீர்வு காண்பதை விட மற்றவர்களுடன் கலந்துரையாடும் போது சவாலுக்கான தீர்வுகள் கிடைக்கின்றன. இந்த வாய்ப்பை ‘புதுச்சேரி ஆசிரியர் வட்டம்’ எனக்கு அமைத்துக் கொடுத்துள்ளது. குறுகிய வட்டத்தில் என் சிந்தனை, படைப்பு, செயலாக்கம் போன்றவற்றை அடக்கிக் கொள்ள எனக்கு விருப்பம் இல்லை. பலருடைய உழைப்பு, முயற்சி, அனுபவம் போன்றவற்றைத் தெரிந்து கொள்வதால் என் பணி மேலும் சிறக்கும் என்ற ஆழமான நம்பிக்கை எனக்குள் உருவாவதற்கு இவ்வட்டம் உறுதுணைபுரிகிறது.

நூலகத்திற்கு ஏன் செல்கிறோம்? பல விசயங்களைத் தெரிந்து கொள்ளவும் கற்பித்தலுக்குத் தேவையான செய்திகளைச் சேகரிக்கவும் பொது அறிவை வளர்த்துக் கொள்ளவும் எனப் பல காரணங்கள் உண்டு. இது போல மற்ற ஆசிரிய நண்பர்களுடன் உரையாடும் போது எனது கற்றலை மேம்படுத்திக் கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது. சரியான பாதையில் செல்கிறோமா என என்னை நானே சோதித்துக் கொள்ளவும் என்னைப் புதுப்பித்துக் கொள்ளவும் எனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் ஓர் அற்புதமான தளமாக இதை நான் கருதுகிறேன்.

 

 

கடந்த ஆண்டு என் வகுப்பறை

கடந்த ஆண்டு என் வகுப்பறையில் நான் எனது ஐந்தாம் வகுப்பு மாணவர்களோடு சேர்ந்து செயலாற்றிய பல்வேறு முயற்சிகளை இங்கே பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

அ) தஞ்சைப் பெரிய கோயில் - என்ற பாடத்தை நடத்தும் பொழுது இக்கோயிலைப் பற்றி உங்களுக்குத் தெரிந்தவற்றை எழுதுங்கள் என்று கூறினேன். சிலர் கோவிலைப் படமாக வரைந்தனர். வேறு சிலர் ஒரு பக்கத்திற்கு எழுதியிருந்தனர். ஒரு மாணவி கோவிலில் குடம் குடமாக ஊற்றும் பாலை அபிஷேகத்திற்குப் பிறகு குழந்தைகளுக்கும் நோயாளிகளுக்கும் கொடுக்கலாம் என்று எழுதியிருந்தாள். மற்றொரு மாணவி “கோவிலுக்குப் போகிறாயா? இதோ நான் டிப்ஸ் தருகிறேன்.” என்று எழுதியிருந்தாள். இதையெல்லாம் பார்க்கும் போது எனக்கு வியப்பாகவே இருந்தது.

ஆ) கலை உலகில் கலைவாணர் என்ற பாடம் குழந்தைகளின் கற்பனை வளத்தைப் பெருக்குவதாக அமைந்தது. ஒரு நகைச்சுவைப் படத்தைப் பார்த்து அதை ஒரு கதையாக வடிவமைத்துப் பின் பத்து நிமிடத்தில் ஒரு நாடகமாக நடித்துக் காட்டும் திறன் மாணவர்களிடம் இருப்பதைக் கண்டேன். ஒவ்வொரு பாடம் நடத்தும் போதும் மாணவர்களின் நடிக்கும் திறனை வளர்க்க நான் எடுத்த சிறுசிறு முயற்சிகளின் தொகுப்பாகவே இதைக் கருதுகிறேன். அதுமட்டுமின்றி, கதையிலிருந்த புதிய வார்த்தைகளுக்குப் பொருள் கூறியதோடு மிக எளிய உதாரணங்களையும் அளித்தது எனக்கு வியப்பாகவே இருந்தது. உதாரணமாக ‘பெருமை’ என்ற சொல்லுக்கு “நாம் முதல் பரிசு வாங்கி விட்டால் நம் பெற்றோர் மற்றவர்களிடம் பெருமையாகப் பேசுவார்கள்” என்றான் ஒரு மாணவன். ‘பொறாமை’ என்பதற்கு“நீங்கள் யாருக்காவது good போட்டு விட்டால் அவனுக்கு மட்டும் good போட்டீங்களே, எனக்கும் போடுங்க என்று கேட்பது” என்றனர். மிக எளிமையான பொருள் விளக்கம். என்னால் கூட இவ்வளவு எளிமையாக எடுத்துச் சொல்ல முடியுமா என்ற கேள்வி என்னுள் எழுந்தது.

இ) போரைத் தடுத்த புலவர் - என்ற பாடத்திற்குப் ‘பொம்மலாட்டம்’ செய்யுமாறு மாணவர்களைத் தூண்டினேன். பொம்மைகள் செய்யத் தேவையான பொருட்களை வகுப்பறையில் வைத்தேன். ஒவ்வொரு குழுவும் ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து அக்கதைகேற்ற பொம்மைகளைச் செய்து பொம்மலாட்டத்தையும் நிகழ்த்தினர். ஒவ்வொரு முறையும் என் மாணவர்கள் என்னைப் பெருமையடையவே செய்கின்றனர்.

மாணவர்கள் அனைவரும் கலைப்பொருட்கள் செய்யும் விதத்தைப் பார்த்தும் அவர்களிடன் கேட்டும் அறிந்தனர். பள்ளிக்கு வந்ததும் ‘காகித மலர்’ ஒன்றைச் செய்தனர். பள்ளியில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் என் மாணவர்கள் பங்கேற்க ஊக்கப்படுத்துகிறேன். தினம் நாட்குறிப்பு எழுதும் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளேன். தினம் ஒரு தலைப்பில் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதச் செய்கிறேன். எளிய பாக்கள் எழுதும் ஆர்வத்தைத் தூண்டுகிறேன். மதிய இடைவெளியின் போது சிறுவர் இதழ்களை வாசித்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வழக்கத்தை உருவாக்கிக் கொண்டு வருகிறேன்.

அனுபவப் பகிர்வு

ஆய்வறிக்கை

ஐந்தாம் வகுப்பில் பல புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி இருக்கிறேன். அதில் என்னைக் கவர்ந்த, மாற்றத்தை உருவாக்கிய முயற்சிகளைப் பற்றி மற்ற ஆசியர்களுடன் பகிர்ந்து கொண்டு இருக்கிறேன். அவற்றுள் ஒன்றைக் கீழே எழுதியுள்ளேன்.

 

வகுப்பறைச் சவால்கள்:

மாணவர்கள் ஒருவருக்கொருவர் பொறாமைப்படுதல், சண்டையிடுதல், கோபப்படுதல், வெறுப்பைக் காட்டுதல் என வகுப்பறை எப்போதும் இரைச்சலாக இருந்தது. இதனால் கற்பதிலும்குழுச்செயல்பாடுகளிலும் சிறப்பான விளைவுகளை எதிர்பார்க்க முடியவில்லை. மாணவர்கள் அடுத்தவர்களைக் குறை கூறுவதிலும் அவர்களின் தவறைச் சுட்டிக் காட்டுவதிலுமே கவனத்தைச் செலுத்தினர்.

தீர்வுக்காகத் திட்டமிடல்:

எனக்குத் தெரிந்த மற்றும் தெரியாத இவைபோன்ற பல விரும்பத்தகாத குணங்களை அறிந்து கொள்ள விரும்பினேன். அவைகளை நான் கண்டுபிடிப்பதை விட அவர்களாகவே கூறி, அதற்கான தீர்வுகளையும் அவர்களே முடிவெடுக்கும் வகையில் விவாதிக்க வேண்டும் என தீர்மானித்தேன். அவர்களிடம் ஏற்படும் மாற்றங்களையும் கவனித்து தேவைப்படும் தருணங்களில் உதவிடவும் முடிவெடுத்தேன்.

தீர்வுக்கான செயல்பாடுகள்:

மாணவர்கள் பின்வரும் வினாக்களுக்கு விடையளித்தனர்.

 

1. நம்மைச் சுற்றி எவையெவை மாறவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

2. நாம் நேசிக்கும் உறவினரிடம் பிடித்த, பிடிக்காத விசயங்களைப் பட்டியலிடுதல்

3. உன் நண்பன் எப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாய்?

4. அனைவராலும் நேசிக்கப் படுபவர்களின் பெயர்களைப் பட்டியலிடுக. குழுவாக அதற்கான காரணங்களை விவாதித்தல்

5. நல்ல பண்புகளைப் பட்டியலிடுதல் மாணவர்கள் எவற்றையெல்லாம் நல்ல பண்புகளாக நினைக்கிறார்கள் என்பதை மேலே குறிப்பிட்டுள்ள இச்செயல்பாடுகள் எனக்கு உணர்த்தின.

பயன்படுத்திய உத்திகள்:

மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தாள் கொடுத்து அதில் அவர்களின் பெயரை எழுதச் சொன்னேன். பிறகு ஒவ்வொரு மாணவனும் தன் நண்பனிடம் சென்று, தன்னிடம் அவனுக்குப் பிடிக்காத குணங்களை பட்டியலிடச் சொல்ல வேண்டும். பிறகு அப்பட்டியலைப் படித்துப் பார்த்து, அவற்றில் நல்லவை எவை, தீயவை எவை என்று பிரித்துணர வேண்டும். நண்பன் கூறியதில், தானும் தீயது என்று முடிவு செய்யும் குணங்களை மாற்ற முயற்சி செய்ய வேண்டும்.

மாற்றிக்கொள்ள வேண்டிய குணங்களாக மாணவர்கள் கூறியவைகளில் சில:- பொறாமை, பொய், பேராசை, திருடுதல், கோபப்படுதல், வெறுப்பாகப் பேசுதல், பிறரை இகழ்தல், ஏளனம் செய்தல், அடித்தல், சண்டை போடுதல், பெரியோர் சொல் கேளாமை, வகுப்பறையில் குப்பை போடுதல், புத்தகத்தைக் கிழித்தல், தூய ஆடை அணியாமை போன்றவை. அவரவர் மாற்ற நினைக்கும் குணங்களை ஒரு தாளில் எழுதி அவற்றை தீயிட்டு கொளுத்தினோம். மாற்றத்தைக் காண மாணவர்களுக்கு 25 நாட்கள் கொடுக்கப்பட்டன. அதற்குள் மாற்றங்கள் நிகழும் என்பது எனது நம்பிக்கை.

 

எதிர்கொண்ட சவால்:

ஆனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு மாணவன் என்னிடம் வந்து, அவனது நண்பன் தன்னை அடிப்பதாகவும் விளையாட்டில் சேர்த்துக் கொள்ள வில்லை என்றும் கூறினான். இது எனக்குப் பெரிய ஏமாற்றத்தைத் தந்தது. என் திட்டத்தில் எங்கு பிழை நேர்ந்தது என்று யோசித்தேன். சட்டென்று ஒரு எண்ணம் உருவானது.

மாற்றுத் திட்டம்:

அடுத்தநாள் மாணவர்களின் பெயர்களை ஒரு சார்ட் தாளில் எழுதி அதை வகுப்பறையில் ஒட்டினேன். நமது வகுப்பில் யாராவது ஒருவரின் மாற்றத்தைப் பற்றி தொடர்ந்து மூன்று பேர் கூறினால் அவர்களுக்கு ஒரு நட்சத்திரம் (star) தருவேன் என்று அறிவித்தேன். நாள்தோறும் அதை நினைவு கூர்ந்தேன். சார்ட் தாளில் நட்சத்திரங்கள் குவிந்தன. நான் மட்டற்ற மகிழ்ச்சியுற்றேன்.

எதிர்பாரா விளைவுகள்:

இச்செயல்பாட்டின் மூலம் எதிர்பாராத வேறு சில திறன்களும் வளர்ந்தன. அவை குழுப்பணி, பிறருக்கு உதவுதல், விட்டுக் கொடுத்தல், பிறர் மீது அன்பு செலுத்துதல், தன் கருத்தை எடுத்துக் கூறல், நட்புணர்வு போன்றவை.

என்னுள் மாற்றம்:

இவற்றிற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் ஒரு நிகழ்வு நடந்தது. ஒரு மாணவன் எந்த ஒரு கல்விச் செயல்பாட்டிலும் ஈடுபாடின்றி காணப்பட்டான். தொடர்ந்து பல நாட்களாக அவனது வேலைகளைச் சரிவரச் செய்வதில்லை. அன்று காலையும் அவன் வீட்டுப் பாடங்களைச் செய்யாமல் வந்ததால் நான் கோபமடைந்தேன். அதைப்பார்த்த ஒரு மாணவன் என்னிடம் வந்து, ‘கோபம் கொள்ளக் கூடாது, அது மிகக் கொடியது, விட்டுக் கொடுத்து போக வேண்டும்- என்று எங்களுக்கு அடிக்கடி சொல்வீர்கள். இப்போது நாங்கள் மாறிவிட்டோம் நீங்கள் மட்டும் மாற்றாமல் அப்படியே இருப்பது எனக்கு வருத்தமாக உள்ளது’ என்று கூறினான். அப்பொழுதுதான் என்னை மாற்றிக் கொள்வதின் அவசியத்தை உணர்ந்தேன். மாணவர்களை ஆற்றுப்படுத்துவது மட்டுமே ஆசிரியர்களின் கடமையன்று. ஆசிரியர்களும் மாற்றங்களுக்கு உட்பட வேண்டும். மாணவர்களிடமிருந்து நாம் கற்கவேண்டியவை பல என்று உணர்ந்தேன்.

கோபத்தைக் கட்டுப்படுத்த சில தீர்வுகளை விவாதித்தோம். அவை,

1. கண்ணை மூடி மெதுவாக ஒன்று, இரண்டு,... என எண்ணுவது

2. மனதில் நினைப்பதை நாட்குறிப்பில் எழுதுவது

3. படம் வரைவது

4. நகைச்சுவை கதைகள் வாசிப்பது

5. தனக்குப் பிடித்த செயலில் ஈடுபடுவது

6. கைவினைப் பொருட்கள் செய்வது நோக்கத்தை அடைந்தேன்:

ஓரிரண்டு நாட்கள் கழித்து ஒரு மாணவி எனக்கு நன்றி கூறினாள். காரணம் கேட்டதற்கு அவள் தனது குணங்களைப் புரிந்து கொண்டதாகவும் பிடிக்காத குணங்களை மாற்றிக் கொள்வதாகவும் கூறினாள்.

இருபத்து நான்காம் நாள் ஒரு மாணவன் வந்து தன்னுடைய தீய குணங்களை மாற்றிக் கொள்ள தனக்கு மேலும் பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என்று கேட்டான். நான் வகுப்பு மாணவர்களிடம் அம்மாணவனிடம் மாற்றம் தெரிகிறதா என்று வினவினேன். அனைவரும் அவன் மாற முயற்சிக்கிறான் என்றும் அவன் கேட்ட அவகாசத்தைத் தரலாம் என்றும் கூறினர்.

வேறொரு நாள் ஒரு மாணவி அவளது நோட்டுப்புத்தகத்தில் கதை, கட்டுரை, செய்தி துணுக்குகள் என்று நிறைய எழுதியிருந்தாள். காரணம் கேட்டதற்கு, முந்தையநாள் வீட்டில் அப்பா சண்டை போட்டதால் அவள் சோகமானதாகவும் அதனால் கண்ணில் பட்டதையெல்லாம் எழுதியதாகவும் கூறினாள்.

இதேபோல் எதையும் மிகைப்படுத்திக் கூறும் மாணவி இப்போதெல்லாம் அவ்வாறில்லை. குழுச் செயல்பாடுகளிலும் அவளது பங்களிப்பு நன்றாகவே இருக்கிறது. மேலும் நிறைய மாணவர்கள் ஓவியங்கள் வரைய ஆரம்பித்துள்ளனர்.

ஒருநாள் கணித ஆசிரியை என்னிடம் வந்து “ஒரு மாணவி கணித நோட்டில் எழுதாமல் புத்தகத்தில் எழுதியிருந்தாள். நான் திட்டினேன். அவள் வேகமாகச் சென்று ஏதோ ஒரு நோட்டில் எதையோ எழுதினாள்” என்றார். அம்மாணவியைக் கேட்டபோது நோட்டு தீர்ந்து போனதால் புத்தகத்தில் எழுதியதாகவும், ஆசிரியர் திட்டிய பிறகு எனது சோகத்தைத் தான் வேறு ஒரு நோட்டில் எழுதியதாகவும் கூறினாள்.

இது போன்ற செயல்பாடுகள் மாணவர் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நமக்கும் மன நிறைவை அளிக்கின்றன. நான் நினைத்து நினைத்து மகிழ்ந்த செயல்பாட்டை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பி இக்கட்டுரையை எழுதியிருக்கிறேன்.

Subject: 
Tamil

Term: Term 2