Towards a just, equitable, humane and sustainable society

மெய் சொல்லல் நல்லது

மெய் சொல்லல் நல்லது

சமச்சீர் கல்வி, தமிழ், வகுப்பு 4, பருவம் 1, பாடம் 1

மு.சாந்த குமாரி ,வா. வீரப்பன் ,மாலதி

உள்ளதைச் சொல்லும் உயர்ந்த உள்ளத்தை மாணவர்களைப் பெறச்செய்தல்! 

 

பாட நோக்கம் :

- ஓசைநயமிக்க கருத்துப் பாடல்களைக் கேட்டுப் புரிந்து கொள்ளல்

- நாட்டுப்புறக் கதைகளைக் கேட்டல்

- உற்றுக் கேட்ட விவரங்களைப் புரிந்து கொள்ளல்.

- கடினச் சொற்களை அறிந்து கொள்ளுதல்

நாட்டுப்புறக் கதை கூறல்:

- பாடத்திற்குத் தொடர்புடைய நாட்டுப்புறக் கதையைத் தேர்ந்தெடுத்து மாணவர்களுக்குக் கூறுதல்.

- கதை சொல்லும்பொழுது கதை கூறும் உத்திகளைப் பயன்படுத்துதல்.

பயிற்சித்தாள் - உள்ளதைச் சொல்வோம்.

- உள்ளதைச்சொல்வோம் பயிற்சித்தாளை மாணவர்களுக்கு வழங்குதல்

- வகுப்பறைக்கேற்ப தனியாகவோ குழுவிலோ கொடுத்து பதிலளிக்கும்படி செய்ய வேண்டும்.

ஹரிச்சந்திரன் - கதை கூறல்

- "ஹரிச்சந்திர மஹா ராஷா' கதையைக் குழந்தைகளுக்குக் கூறுதல்

- ஹரிச்சந்திர மஹாராஷாவின் கதையைக் கூறும் பொழுதே மாணவர்களிடம் உரையாடல் மூலம் அவர்கள் புரிந்து கொண்டதை உறுதிப்படுத்துதல்.

ஹரிச்சந்திரன் - சினிமா

- ஹரிச்சந்திர மஹாராஷா படத்தை மாணவர்களுக்குப் போட்டுக் காட்டுதல்.

ஹரிச்சந்திர நாடகம் பார்த்த காந்தி:

- ஹரிச்சந்திர நாடகத்தைப் பார்த்த காந்தி உண்மை பேசத்துவங்குவதல்.

- அனுபவத்தையும் கதையையும் இணைத்து மாணவர்களுடன் உரையாடல் நிகழ்த்துதல்.

பாரதிதாசன் - அறிமுகம்

- பாரதிதாசன் புகைப்படம் மற்றும் ஆசிரியர் குறிப்பு இணைத்த - போஸ்டர் தயாரித்து மாணவர்களுக்குக் கூறுதல்.

- புதுவையைச் சார்ந்தவர் என்பதால் வேறு பல விவரங்களுடன் கதையாகவும் கூறலாம்.

கடினச்சொற்களைக் கற்பித்தல்:

- பாடலைக் கொடுத்து கடின வார்த்தைகளை அடிக்கோடிடச் செய்தல்.

- அடிக்கோடிட்ட வார்த்தைகளை எடுத்து எழுதுதல்

- கடினச்சொல்லிற்கு படங்களைக் கொண்டும் சூழலை மையப்படுத்தியும் பொருள் புரிய வைத்தல்

- ஓசை நயமிக்க சொற்களை வகைப்படுத்துதல்

பாடலைப் பழக்கப் படுத்துதல்:

- ஆசிரியர் சொல்ல மாணவர்கள் சொல்லுதல்

- வெவ்வேறு ராகங்களில் பழக்கப் படுத்துதல். முழு பாடக் கருத்தினை ஒருங்கிணைத்து மீட்டுக் கொணருதல்

மதிப்பிடுதல்

வகுப்பறை அனுபவம்

மெய் சொல்லல் பழக்கத்தை மாணவர்கள் பெறுவதற்கும் அப்பாடலின் மூலம் அவர்கள் அடைய வேண்டிய திறன்களான, பாடல்களைப் பாடுதல், கதை கேட்டல், புரிந்துகொண்டு செயல் படுத்துதல் போன்றவற்றை மேம்படுத்துவதற்கு ஏற்ப பாடத்திட்டத்தைத் தயாரித்து மாணவர்களிடம் சென்றோம். 18 மாணவர்கள் இருந்த வகுப்பறையில். வட்டமாக அமர்ந்தோம். இரண்டு சுற்று கைக் கோர்த்து நடந்து வந்த பின் வட்டத்தை உருவாக்கினோம்.

நாங்கள் பாடமெடுத்த மாணவர்கள் இதுவரை எங்களுக்கு அறிமுகமாகாதவர்கள். அதனால்

பெயர் எழுதி சட்டையில் குத்தி விட்டோம். அது போதாதென்று அறிமுக விளையாட்டு ஒன்றையும்

விளையாடினோம். விளையாட்டு முடிந்ததும் நாட்டுப்புறக் கதையான “முட்டை யாருடையது”

என்ற கதையைக் கூறி உரையாடல் ஒன்றை மேற்கொண்டோம். மாணவர்கள் உற்சாகமாக பதிலளித்தனர். அது முடிந்ததும் இரண்டு நபர்கள் குழுவை உருவாக்கினோம். இக்குழுவை உருவாக்க படிக்கத் தெரிந்தவர்கள் ஒருவர் படிக்கத் தெரியாத ஒருவர் என இருவர் குழுவாகப் பிரிந்து அமர வைத்தோம். ஒவ்வொரு குழுவிற்கும் குழு செயல்பாட்டிற்கான பேப்பர் வழங்கப்பட்டது. அதை அடுத்து அவர்களை ஈடுபடுத்திய செயல்பாடு மிகவும் முக்கியமானது. மூன்று நபர் குழுவாகப் பிரிந்து, அவர்களுக்கு "உள்ளது உள்ளபடி" என்ற பயிற்சித்தாளை வழங்கினோம். அதைப் படித்து விவாதித்து மற்றவர்கள் முன் எடுத்துரைக்க வேண்டும். அவர்கள் குழு வேலையைத் துவங்குவதற்குமுன் கீழ்க்கண்ட கேள்விகளை வாசித்து உதாரணம் காட்டி விளக்கினோம்.

இப்படிவத்துடன் 15 முதல் 20 நிமிடங்கள் வரை அவர்களுக்குள் உரையாடினர். அவர்கள் உரையாடிய விதம் அழகாக இருந்தது. நான் பள்ளிக்கூடத்தில பொய் சொல்லியிருக்கிறேன்.

""நான் சாப்பாட கொட்டிட்டு இல்லன்னு பொய் சொல்லியிருக்கிறேன்'', என்றான் ஒரு மாணவன்.

ஆரம்பத்தில் கூச்சப்பட்ட அவர்கள் போகப் போக சுலபமாக பேசிக்கொண்டனர்.

 

தாங்கள் குழுவில் பேசிக்கொண்டதைக் காகிதத்தில் குறித்ததைப் பகிர்ந்துகொள்வது என்பது அவர்களுக்குப் புது அனுபவமாக இருந்தது. முதல் மூன்று குழுக்கள் அதற்கான

பயிற்சியில் ஈடுபட்டதுபோல் இருந்தது. கடைசி இரண்டுகுழு முறையாகச் செய்தனர். கடைசி

குழு பகிர்ந்து கொண்டதை இங்கு குறிப்பிடலாம் என எண்ணுகிறேன்.

மூவரும் வரிசையாக நின்று கொண்டனர்.

மாணவர் 1 - கடையில் பொய் சொல்லியிருக்கிறோம்.

மாணவர் 2- கடைக்காரர் உள்ளே சாமான் எடுக்கச் சென்ற பொழுது மிட்டாயை எடுத்துக் கையில் ஒளித்துக் கொள்ளுவோம்.

மாணவர் 3 - ஆசையால்

-----

மாணவர் 1 - வீட்டில் தங்கச்சியிடம் பொய் சொல்லியிருக்கிறேன்.

மாணவர் 2- தங்கச்சி வச்சிருந்த பொம்மை எனக்கும் புடிச்சிருந்தது. அதுக்கும் புடிச்சிருந்தது.

ஆனால் நான் அதை எடுத்துக் கொண்டு போய் ஃப்ரெண்டுகிட்ட குடுத்துட்டு, வீட்டில் வந்து காணவில்லை என்று பொய் சொல்லிவிட்டேன்.

மாணவர் 3 - ஆசையால்

--------

மாணவர் 1 - பள்ளியில்

மாணவர் 2- திருவிழாவிற்குச் சென்றதால் லீவு போட்டு விட்டு, பள்ளியில் போய் உடம்பு சரியில்லை ஆஸ்பத்திரிக்கு போனேன் என்று பொய் சொல்ல்லியிருக்கிறேன்.

மாணவர் 3 - ஆசிரியர் அடிப்பாங்கன்னு பயத்துல பொய் சொன்னேன்.

--------

இப்படி மாணவர்கள் அவர்களுக்கே உரிய முறையில் எடுத்துக் கூறினர். இப்பகிர்வை முன் வைத்து உரையாடலைத் துவங்கினோம்.

ஆ : அப்படியானால் நாம் பொய் சொல்லிதான் ஆகவேண்டுமா?

மா : ஆமாம்.

ஆ : பொய் சொல்லுவது சரியா?

மா : தவறு.

இப்பதிலைக் கொண்டு என்ன செய்வது என்று எங்களுக்கு குழப்பமாக இருந்தது.

 

ஆ : உண்மையை மட்டுமே பேசியவரின் கதையைக் கேட்கலாமா?

மா : கேட்கலாம்.

அனைத்து மாணவர்களையும் அருகில் வரவழைத்துக் கதைக்குத் தயார்படுத்தி கதையைத் துவங்கினோம்.

ஹரிச்சந்திரன் கதையை வாய் வழியாகக் கூறினோம். மாணவர்கள் ஆர்வமாகக் கேட்டனர்.

ஹரிச்சந்திர மஹாராஜா, விஸ்வாமித்திரர் போன்ற கதையில் உள்ள பெயர்களை நினைவு வைத்துக் கொள்வது கொஞ்சம் கடினமாகவே இருந்தது.

மாணவர்கள் கதை கேட்டாலும் அது இன்னும் பதிய வேண்டும் என்பதற்காக ஹரிசந்திரனின் கார்ட்டூன் படம் ஒன்றைப் போட்டு மீண்டும் ஒரு முறை கதையை விளக்கமாகக் கூறினோம். அப்படிக் கூறும்பொழுது அவர்களுக்கு மனதில் பதிந்தது.

"ஹரிச்சந்திரா' படத்தைப் பார்த்த

மாணவர்களிடம், இந்தக் கதை நம் நாட்டில் பல இடங்களில் நாடகமாக நடிக்கப் பட்டது. அதைப் பார்த்த ஒரு பையன் தானும் உண்மையைச் சொல்பவனாக மாறவேண்டும் என முடிவு செய்தான். அவனுக்கு பொய் சொல்ல வேண்டிய அவசியம் பல இடங்களில் உருவானது. ஒரு முறை தேர்வு எழுதும் பொழுது ஒரு கேள்விக்குப் பதில் தெரியவில்லை. பக்கத்திலிருந்த மாணவர் பார்த்து எழுதும்படிக் காட்டினான். ஆனால் எழுதாமலே உட்கார்ந்து குறைந்த மதிப்பெண் எடுத்தார். உங்களுக்குக் கூடத் தெரியும். உண்மையையே பேசியவர் உங்களுக்கு யாரையாவது தெரியுமா என்றோம். மாணவர்கள் அமைதியாகவே இருந்தனர். அவர் பெரிய மகாத்மா... என்று குறிப்பு கொடுத்து, மகாத்மா யார் என்று தெரியுமா என்றபொழுது

மா : மஹாத்மா காந்தி.

ஆ : இங்குள்ள நாமும் ஹரிச்சந்திரா கதையை

சினிமாவாகப் பார்த்திருக்கிறோம். நாமும் என்ன செய்ய முயற்சிக்கலாம்?

மா: பொய் சொல்லாமலிருக்க!

எதிர்ச்சொல் விளையாட்டை நாங்கள் விளையாடி

பிறகு மாணவர்களை விளையாடவைத்தோம்.

15 முதல் 20 எதிர்ச்சொல்களை அவர்களால் சொல்லமுடிந்தது. அதோடு மாணவர்கள்

உற்சாகமாகவும் அடுத்தது நான், நான் என முந்திக்கொண்டும் செயல்பட்டனர். எதிர்ச்சொல் வார்த்தை தெரியாதவர்களும் கை தட்டி கை நீட்டும் செயலில் ஈடுபடுவதற்கு ஆர்வமாக முன் வந்தது மகிழ்ச்சியாக இருந்தது. பாடப்புத்தகத்திலுள்ள மெய் சொல்லல் நல்லது என்ற பாடலை நகலெடுத்து மாணவர்களிடம் கொடுத்து ,

- அதைப் படித்துப் பார்த்து கடினமான வார்த்தைகளை அடிக்கோடு இடச்செய்தோம்.

- அடிக்கோடிட்ட வார்த்தைகளைப் பின் பக்கத்தில் எழுதச் செய்தோம்.

- அவர்கள் எழுதிய வார்த்தைகளை ஒவ்வொன்றாகக் கேட்டு அதன் அர்த்தங்களை விளக்கினோம்.

- "மெய் சொல்லல் நல்லது' பாடலைச் சேர்ந்து படித்தோம்.

அடுத்து பாரதிதாசன் பற்றிய குறிப்பைப் புகைப்படத்துடன் முழு பக்க அளவில் வடிவமைத்து வழங்கினோம். அவர்கள் அதைக் கையில் வைத்திருக்கும் பொழுது, இது யார் தெரியுமா என்று கேட்ட பொழுது இவர்

ஹரிச்சந்திரர் மாதிரியில்லையே என்றான் ஒரு மாணவன். ஹரிச்சந்திரர் இப்படியிருக்க மாட்டார் என்பது தெளிவாகிவிட்டது. அவன் கதையிலிருந்து வெளிவரவில்லை என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது. பாரதிதாசனைக் கதையாகச் சொல்வதா?  பாடலாசிரியரை - உரை நிகழ்த்தி அறிமுகப்படுத்துவதா? என்ற யோசனையுடன் இவ்வகுப்பு முடிந்துள்ளது. இப்பாடம் அடுத்த வகுப்பில் தொடரும்.

 

To Download the Teaching Learning Material(TLM), Please click the link:கற்றல் கற்பித்தல் பொருள்கள்

Grade: 
4

Subject: 
Tamil

Term: Term 1