Towards a just, equitable, humane and sustainable society

பூச்சிகளை பிடியுங்கள் ! பூச்சிகளை பிடியுங்கள்!

சமச்சீர் , அறிவியல், வகுப்பு – 7, அலகு – 1

வகுப்பறைக்கு வெளியே பறந்து வந்த 13 மாணவர்களும் இப்படித்தான் பள்ளி வளாகத்தில் பச்சை செடிகளுக்கு இடையே ஓடிக் கொண்டிருந்தனர், ஆசிரியரும் பின்தொடர்ந்து ஓடினார். இதோ ஒரு பூச்சியை பிடித்துவிட்டேன். மாணவன் மிகிலன் ஆனந்தத்தில் கத்தினான். ஆசிரியரும் ஓடிப்போய் தனது அலைபேசியில் புகைப்படத்தை பதிவு செய்தார். பூச்சியை விட அவனது ஆர்வம் அழகாகவே இருந்தது. மற்ற மாணவர்களுக்கும் ஆர்வம் தொற்றிக்கொள்ள பூச்சிகள் பதறியது போல் விழுந்தடித்து பக்கதில் உள்ள நடவு வயலுக்குள் புகுந்தன. மாணவர்கள் விடுவார்களா!

ஆசிரியர் பாடு பெரும்பாடாகிவிட்டது. வேறு வழியில்லை. அவரும் ஓடினார்.

ஏன்?

ஏழாம் வகுப்பு அறிவியல் முதல்பருவ புத்தகத்தைத் திறந்து  “அன்றாட வாழ்வில் விலங்குகளின் பங்கு” என்று ஆசிரியர் கூறிய அடுத்த கணமே…

சின்னஞ்சிறு குருவிப் போலே – நீ

திரிந்து பறந்து வா பாப்பா ..!

என்று பாட ஆரம்பித்து விட்டனர் மாணவர்கள்.

ஆசிரியரும் இசையோடு அப்பாடலைப் பாட பள்ளியில் பால் காய்ச்சும் வட்டாவில் இரண்டு மாணவர்கள் மேளம் தாளமிட, வகுப்பறை ஒரே துள்ளல் மயமானது.ஒவ்வொரு பாடம் தொடங்கும்போதும் இப்படியொரு பாடல் இடம்பெற்றிருந்தால் எப்படியிருக்கும் என மனம் இலயித்தது.உண்மையில் அன்றாட வாழ்வில் நம்முடன் பழகும் விலங்குகளை அழகுற பட்டியலிட்டிருந்தார் மகாகவி பாரதி.

மறுநாள் புலர்ந்தது. அதே பாடவேளை.

செயல் 1.2

விலங்குகளின் பெயர்கள்

எதற்காக நம்முடன் வைத்துள்ளோம்?

நாய்

 
 

நேசிக்கிறோம்

குழந்தைகளே , பின்வரும் வெற்றிடங்களை நிரப்புவோமா? 

விடைகள் விழத்தொடங்கின.

நாய்கள் பேய்களைக் கண்டுபிடிக்க உதவுமாம், மாணவன் இளையவனின் பதில் இது.  ஓர் ஆட்டுக்குட்டி, அடிப்பட்டு கிடக்க என்ன செய்வாய்? ஆசிரியர் வினவ, அவினாசின் பதில் இது,

“ஆட்டுக்குட்டியை தூக்குவேன்; அம்மாவிடம் எடுத்து செல்வேன்;

கறியாக்கி சாப்பிடுவேன்”.

அடப்பாவமே……..!

தற்கால மாணவர்களின் கண்ணோட்டம் ஆசிரியரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அடுத்த நாள் வகுப்பறையில் செங்குளவி ஒன்று ஆசிரியரை நடுமண்டையில் கொட்டியது. ஆசிரியர் வலியால் துடித்தார். மாணவர்களுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. குளவியை துரத்திப்பிடித்து அடித்து கொன்றனர். ஒரு மாணவன் கத்தினான், “அய்யா! எல்லா பூச்சிகளையும் நெருப்பு வைத்து கொளுத்தி விடலாமா?” என்று கூறியதைக்கேட்டு அதிர்ந்து போனேன். அப்பொழுதுதான் எனக்குள் இந்தச் செயல்திட்டம் உதித்தது.

பூச்சிகளை பிடியுங்கள்…… பிடியுங்கள் என்று மாணவர்கள் பறந்து கொண்டிருந்தனர்.

ஒரு வழியாக மாணவர் அனைவரும் ஆளுக்கொரு பூச்சி, இரு பூச்சி என்று வகுப்பறைக்கு பிடித்து வந்தனர். பூச்சிகள் ஒவ்வொன்றையும் படம் பிடித்தவுடன் அப்படியே வெளியில் விட்டு விடச் சொன்னேன்.

“பூச்சிகளால் நமக்கு ஒரு பயனும் இல்லையா?” என்றேன். வகுப்பறைக்குள் ஒரே அமைதி.

ஒரு மாணவன் வாய் திறந்தான்.

பட்டாம்பூச்சி – பார்க்க அழகா இருக்கும்.

தும்பி – பறந்தால் மழை வரும்.

அடுத்தடுத்து மாணவர்கள்………….

கரப்பான் பூச்சி – இரவில் சுத்தும்; வெட்டுக்கிளி தாவித் தாவி செல்லும்.

கம்பளிப்பூச்சி – முருங்கை மரத்தில் இருக்கும்.

மூட்டைப்பூச்சி - படுக்கையில் கடிக்கும்.

எறும்பு – ஒன்றன்பின் ஒன்றாய் செல்லும்.

ஈசல்- மண்ணிலிருந்து கிளம்பும்.

மின்மினிப்பூச்சி வெளிச்சம் காட்டும்.

பட்டியல் நீண்டு கொண்டே போனது. “இப்பொழுது புத்தகத்தை திறங்கள்”, என்றேன்.

குகன் கத்தினான், “ஆம் அய்யா”.

தேனி – தேன் கொடுக்கும்

பட்டுப்பூச்சி – பட்டுபுடவை செய்யலாம்.

புத்தகத்தில் வண்ணப்படங்களைப் பார்த்தவுடன் ஆர்ப்பரிப்பது  ஓர் அலாதி.

அடுத்த நாள் காலை முதல் பாடவேளை ICT ஆய்வகத்திற்கு மாணவர்களை அழைத்துச் சென்று விட்டார் ஆசிரியர். பள்ளிப்பிள்ளைகளுக்கு குதூகலத்தில் ஒன்றும் புரியவில்லை.

காணொளி:                                         

1.4 பட்டுப்பூச்சி வளர்ப்பு

1.5 தேனி வளர்ப்பு

1.பட்டுப்பூச்சி எப்படி இருக்கும்?       

1.ஒரு தேனியையும், வண்டையும் எப்படி இனம் காண்பாய்?

2.பட்டுப்பூச்சி எப்படி பட்டை உற்பத்தி செய்யும்?                                    

2.தேன்கூடு மற்றும்  தேனீக்களின் வகை.

3.பட்டுப்பூச்சிகள் வாழ்க்கை சுழற்சி

3.இராணித்தேனியின் ஆளுமை

4.பட்டுக்கூடுகளை சுடுநீரில் போடுதல்

4.வேலைக்காரத்தேனிகளின் தேன் பயணம்.

5.பட்டுத்துணி நெய்தல்                                  

5.தேனீக்களின் நடனம்

6.விலையுயர்ந்த பட்டு, பட்டு வகைகள்

6.தேன் கெட்டுப்போகாதா?                            சர்க்கரை நோயை உண்டு  பண்ணுமா?

முதல் இரண்டு பாடவேளையும் காணொளியை கண்டு களித்ததில் ஆய்வகமே புத்துணர்ச்சியாய் இனித்தது .

கரும்பலகை  - மாணவர் செயல்திட்டங்களை அழகுப்படுத்தும் காட்சிப்பலகை;   மாணவர் கற்றல் நிகழ்வுகளை அலைபேசியில் படம் பிடித்தல், பின் பெரிய திரையில் ஓட விடல். இவ்வாறு கற்றல் துள்ளல் ஏராளம் ஏராளம்.

வகுப்பறை அனுபவங்களிலிருந்து ஆசிரியரின் கற்றல்:

  • எப்பாடத்தை எடுக்கத் தொடங்கும்போதும் பாடல்கள்  பாடி ,கதைகள் சொல்லி (அ) ஏதாவது அன்றாட நகைச்சுவை நிகழ்ச்சிகளை சொல்லி  மாணவர்களை குதூகலிக்க வைப்பது கற்றல் சூழ்நிலையை அழகுபடுத்தும்.
  • ஏன் இந்தப்பாடம்?  எதற்கு இந்தப்பாடம் கற்க வேண்டும்? இச்சுரைக்காய் கறிக்கு  உதவுமா? உதவும் என்றால் ஆர்வத்தை தூண்டும்படி குறைந்தபட்ச 10 இனிப்பான வினாக்களையாவது தொகுக்க வேண்டும்.
  • கற்றல் சூழ்நிலையை வகுப்பறைக்கு வெளியே கொண்டு சென்று இலயிக்க வேண்டும்.

புத்தகத்தையே எப்பொழுதும் பார்த்துப் படித்து சொல்லாமல் அதையும் தாண்டி பல தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொண்டு கண்கவர் பல காணொளிகளை காண்பிப்பதுடன் மேலும் கற்றல் சூழ்நிலையை மேலும் எளிமை மற்றும் இனிமைப்படுத்த முடியும்.

 

Grade: 
7

Subject: 
Science

Term: Term 1