Towards a just, equitable, humane and sustainable society

திருக்குறள் - நீரின்றி அமையாது உலகு

இத்திருக்குறளைக் கற்பிக்கவும், புரிதலோடு மனப்பாடம் செய்யவும்    கீழ்க்கண்டச் செயல்பாடுகளைச் செய்துபார்த்தோம்.

செயல்பாடு: 1

ஒரு கேள்வித்தாளை மாணவர்களின் கையில் கொடுத்துப் பதில் எழுதும்படி கூறினேன். அவர்கள் அதைச் சத்தமாக வாசித்தனர். பின் பதிலைச் சத்தமாகக் கூறினர். தண்ணீர் எதற்கெல்லாம் பயன்படுகிறது என்று வாசித்து விட்டு, கை கழுவ, குடிக்க, சமைக்க… எனத் தொடர்ந்தனர். நான் குறுக்கிட்டு- ஒவ்வொருவரும் ஒரு பதிலைக்கூறும்படி கேட்டேன். கழுவ, செடி வளர, சாப்பிட…. என வித்தியாசமான பதிலைக் கூறிக்கொண்டே வந்தவர்கள் அதற்கு மேல் சொல்ல முடியாதபொழுது. வீடு கழுவ, கக்கூஸ் கழுவ, பாத்திரம் கழுவ…என ஒரே கருத்திற்குள் பயணித்தனர்.  அச்சமயம் அவர்களை எழுதும்படி கூறினேன் .

அடுத்த கேள்வி: மாணவர்கள் மழையில் நனைந்த அனுபவத்தை எழுத வேண்டும். அமைதியாக எழுதும்படி கூறினேன். ஒரு மாணவி எழுந்து, நான் மழையில் நனைந்ததே இல்லை என்றார். அதைத் தொடர்ந்து இன்னொரு  மாணவியும் அப்படியே கூறினார். எப்படியிருக்கும் என்று எழுதும்படி கூறினேன்.

மழையில் நனைந்தால் ஜில்லென்று இருக்கும். சந்தோஷமாக இருக்கும். கண்ணெல்லாம் மறைக்கும். நனைந்துகொண்டே தண்ணியைக்குடிப்பேன். என்றெல்லாம் எழுதியிருந்தனர். மழையில் குளிப்பேன்.  தண்ணீர் வரும் என்றெல்லாமும் எழுதியிருந்தனர்.

மழையில் நனையக்கூடாது என்று பெரியவர்கள் கூறும் கருத்தைக் குழந்தைகள் பொருட்படுத்துவதில்லை என்பது பொய்யானதுபோல் இருந்தது.மாணவர்களின் இச்செயல்பாடு அவர்கள் தண்ணீர் மற்றும் மழை பற்றிய அவர்களது அனுபவத்தையும் தண்ணீரின் பயன்பாட்டை உணர்த்துவதுபோலவும் இருந்தது.

செயல்பாடு -2

இந்தியாவில் வறட்சி மற்றும் பஞ்சம் பற்றிய பி.பி.சி -யின் ஆவணப்படம் திரையிடப்பட்டதை மாணவர்கள் பார்த்தனர். 2008 ல் ஆந்திராவில் மழை பொய்த்தபொழுது நடந்தவைகள் பற்றிய ஆவணப்படம்.

மாணவர்களின் கேள்விகள்:

  • இது நெஜம்மா நடந்ததா?
  • மீட்டிங் போட்டு என்ன பேசினார்கள் என்று புரியவில்லை.
  • சோளம் விளையாமல் காய்ந்துபோய் இருந்தது.
  • பைப்பில் தண்ணீர் வராமல் இருந்தது?
  • இது வெளி நாடா நம்ம நாடா?

மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் ஒவ்வொன்றாகக் கூறும்பொழுது அவர்களுக்கு அடுத்தடுத்து கேள்விகள் உருவானது.  உ.ம் உண்மையாக நடந்த நிகழ்வு என்பதை அவர்களால் யூகிக்க முடியவில்லை. அதற்காக வழக்கமாக நாம் பார்க்கும் சினிமாவிற்கும் இந்த ஆவணப்படத்திற்குமான வேறுபாடுகளைப்பற்றி பேசவேண்டியிருந்தது. அவர்கள் அக்காட்சியைப் பார்த்தபொழுது இருந்த பாதிப்பைவிட அது உண்மை என்பதை அறிந்தபொழுது அவர்களுக்கு இப்படியா? என்பது  போலிருந்தது. அங்கிருந்து என் கேள்விகளைத் துவங்கினேன்.

தண்ணியில்லாததால் என்னென்ன நடந்தது?

  • வெறும் காடா இருந்தது.
  • வேலையில்லாம இருந்தது.
  • தண்ணியில்லாமல் கஷ்டப்பட்டார்கள்.
  • கெணறு ஆழப்படுத்தினார்கள்

வேலை இல்லாததால் என்ன நடக்கும்?

  • காசு இருக்காது.
  • சாப்பிட இருக்காது.

சாப்பிட இல்லாவிட்டால் என்ன செய்வார்கள்?

  • பொருளை விற்பார்கள்
  • கடன் வாங்குவார்கள்

இவர்களது இப்பதிலைக்கொண்டு  திருவள்ளுவர் குறிப்பிடும் ஒழுக்கத்திற்குள் பயணித்தேன்.

செயல்பாடு -3

மழையில்லாவிட்டால் என்ன நடக்கும் என்று அடுத்த நாள் கேட்ட பொழுது. வறுமை வரும் வேலையிருக்காது… என்றெல்லாம் சொல்ல முடிந்தது. மழையில்லாவிட்டால் மரம் நடவேண்டும் என்ற பதிலுக்குத் தாவினர். அதை வாழ்வுடன் ஒப்பிட்டுப்பார்ப்பது  இயல்பானதாக இல்லை.  ஒழுக்கம் கெட்டுப்போகும் என்று நாம் எதிர் பார்க்கும் வார்த்தையைப் பெறுவது கடினமாக இருந்தது. ஒழுக்கம் என்ற வார்த்தை அவர்களது அனுபவத்திற்குள்  இல்லாமல் இருந்தது கூடக் காரணமாக இருக்கலாம். வறுமை, வேலையின்மை , சாப்பாடு இன்மை ஆகியவற்றால் குலைந்துபோகும் பொது ஒழுக்கம் அவர்களது அனுபவத்தில் இல்லாமை கூட காரணமாக இருக்கலாம். குறள் பற்றிய புரிதலோடு மனப்பாடம் செய்வது சுலபமாக இருந்தது.

செயல்பாடு- 4

வறட்சி   பற்றி வரையும்படி கேட்டேன். பிள்ளைகளிடமிருந்து வித்தியாசமான ஓவியங்கள் வரவில்லை. அவர்கள் படம் பார்த்ததிலிருந்து சில காட்சிகளை வரைந்திருந்தனர்.

கேஷவர்தினி அ.தொ.ப நெல்லித்தோப்பு

Grade: 
5

Subject: 
Tamil

Term: Term 1