Towards a just, equitable, humane and sustainable society

முதல் வகுப்புத் தமிழ்ப் பாடப்புத்தகம் – ஒரு பார்வை

ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் 12 பேர் உட்கார்ந்து பாடப்புத்தகத்தை ஆய்வுக்குட்படுத்தும் பணியில் ஈடுபட்டோம். எந்தெந்த அடிப்படையில் புத்தகங்களை உற்று நோக்குவது எனப் பட்டியலிட்டோம். பாடப்புத்தகத்தின் பாடங்கள் குழந்தைகளுக்கு எப்படியிருக்கிறது,கற்பித்தலின் நோக்கத்தை அடையவும் மொழித்திறன்களை வளர்த்துக் கொள்ளவும்  எவ்வகையில் உதவியாக உள்ளன. குழந்தைகளுக்கு அந்நியமாக இருக்கும் விஷயங்கள், விலகலைத் தருபவை/ தேவையற்றவை என்ற வகையில் சில கூறுகளை எடுத்துக்கொண்டு சேர்ந்து கலந்துரையடினோம். இதுவரை ஒரு பாடத்தை நடத்துவதற்காக அபபாடங்களைப் படித்திருக்கின்றோம்.  அதே பாடங்களை  எடுத்து கலந்துரையாடலில் ஈடுபடும்பொழுது/ஆய்வுக்குட்படுத்தும் பொழுது அது வேறு பரிமாணங்களைத் தருவது போல் இருந்தது. நாங்கள் புத்தகத்தை முன் வைத்து உரையாடியவற்றின் தொகுப்பு இது.

  • பாடப்புத்தகம் வண்ணங்களுடனும் படங்களுடனும் இருப்பது சிறப்பானதாக உள்ளது.
  • இடம்பெற்றுள்ள எல்லா பாடல்களுமே “டம் டம் டும் டும், காக்கா அந்தப் பக்கம், சின்ன சின்ன, இவ்வளவு வேணுமா,வண்ண வண்ணப் பூக்கள், யானை…” எல்லா பாடல்களுமே சிறப்பாக இருந்தன.  குழந்தைகள் மிகச்சுலபமாகப் பாடக்கூடியவைகளாகவுள்ளன. அது பாராட்டுதலுக்குறியது. பாடும்பொழுது மகிழ்ச்சியாக உள்ளனர்.  அதனால் இன்னும் இன்னும் பாடல்கள் தேவைப்படுகின்றன. அதோடு பாடல்களிலிருந்து வரும் வார்த்தைகளின் மூலம் எழுத்து அதனுடன் இணைந்த வார்த்தை மற்றும் வாக்கியம் என்ற பாட அமைப்பு பயனுள்ளதாக இருக்கின்றன. பாடல்கள் இன்னும் இன்னும் தேவைப்படுவதால், முதல்வகுப்பிற்கு ஆலோசிக்கும் பாடல்கள் என ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ள பாடல்களை ஆசிரியர்களுக்கு வழங்குதல் நலம்.  பாடல்கள் குழந்தைகளால் பாடப்படாமல், வாக்கியத்திற்கும் இசைக்கும் இடையில் சேர்ந்து ராகமிழுத்து சொல்லுதல் என்ற நிலை இருந்து வருகிறது. அந்நிலை மாறி முறையான இசையுடன் பழக ராகம் அமைத்து அதன்படி ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு எடுத்துச் செல்வது நலம்.
  • இளங்குழந்தைகள் பாடலுக்கு இணையாக அல்லது பாடலைவிட நெர்க்கமாக உணரமுடிவது கதைகள்.
  • படக்கதைகளைப் பாடப்புத்தகத்தில் சேர்ப்பது அவசியமாக உள்ளது. அவற்றைப் படக்கதை வாசிப்பு என்றே குறிப்பிடலாம். இணைக்கும் கதைகள் வாழ்க்கையுடன் தொடர்பு படுத்தக்கூடியதாக இருக்கவேண்டும். பல வகுப்பறைகள் பாடலுடனும் கதையுடனும் மகிழ்ச்சியாக இருப்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டியுள்ளது.
  • குழந்தைகளிடம் படவாசிப்புக்கான  பகுதிகள் இருக்கின்றன. அவை பேசுதல் கேட்டல் திறனுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை இன்னும் வெவ்வேறு திறன்களுக்கும் பயன்படுத்த முடியும். வாக்கியமாக எடுத்துரைத்தல், தொடர்புப் பாடல்களைப் படுதல் எனச் செயல்பட வேண்டியுள்ளது.
  • பாடப்புத்தகத்தின் பல பகுதிகளைப் பயிற்சித்தாள்கள் எடுத்துக்கொண்டுள்ளன. அவற்றை மாற்றி, பயிற்சித்தாள் புத்தகம் தனியாக இருந்தால் நல்லது.
  • பாடப்புத்தகத்தின் இடையிடையே இருக்கும் ஆசிரியர்களுக்கான குறிப்புகள் அல்லது ஆசிரியருகான திட்டங்களை பாடப்புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அது மாணவர்களுக்கானதாக இருக்கிறது. அதை மாணவர்கள் படிக்கும்பொழுது ஆசிரியர்களுக்கான குறிப்புகள் இடையூறாக உள்ளது
  • குழந்தைகளை மகிழ்விக்கும் விளையாட்டுகள் நிறைய இடம்பெற்றுள்ளன. கோடு போடுதல், வண்ணம் தீட்டுதல், சென்றடைதல் போன்ற பயிற்சிகள் மொழிப்பாடத்திற்கு தொடர்பற்று இருப்பதைப்பார்க்க முடிகிறது.
  • பேசுதல், கேட்டல், படித்தல், எழுதுதல் – என்பதைக் கடந்து குழந்தைகளுக்குத் தெரிந்ததிலிருந்து தெரியாததைக் கற்றுக்கொடுத்தல், அவர்கள் புழங்கும் மொழியை மதிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தல், அவர்களின்  வாழ்வியல் நிகழ்வினை பாடமாக்குதல் போன்றவற்றை மொழிப்பாடம் உள்ளடக்கி உள்ளது .  ஆனால் அவற்றைப் பாடப்புத்தகத்தில் பரவலாகப் பார்க்கமுடியவில்லை. இயல்பான அல்லது அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கானதாக  இல்லாமல் – வசதியானதாகவும் அழகுக்கானதாகவுமாக இருக்கிறது.
  • அகர முதலி பகுதியில் ஒரு வார்த்தையை மட்டும் தராமல், இணை வார்த்தைகள் அனைத்தையும் தருதல் நல்லதாக இருக்கும்.
  • கற்கும் சூழல், பாடநோக்கம், பாடத் தயாரிப்பு ஆகியவைகள் அடங்கிய ஆசிரியர் கையேடு பயனுள்ளதாக இருக்கும்.

எங்களது மேற்கண்ட உரையாடல் பாடப்புத்தகத்தை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள உதவியது என்று சொன்னால் மிகையாகாது. பாடப்புத்தகத்தைக் கடந்து பயணிக்க வேண்டிய அவசியம் பற்றி நிறைய உரையாடலில் இருந்தது. பாடப்புத்தகம் ஒரு துணைக் கருவி மட்டுமே. அதைத் தாண்டிய அனுபங்கள் மட்டுமே அதை நிறைவு செய்ய முடிகிறது. ஆசிரியர் அந்நிலையை அடையும்பொழுது கல்வி அடுத்த நிலைக்குச் செல்ல வாய்ப்பு உள்ளது.

பங்கேற்ற ஆசிரியர்கள்: சசி குமார், ராஜதிலகம், ராஜேஷ், லக்‌ஷ்மி, நாதன், கேஷவர்தினி, ஜேம்ஸ், காயத்ரி, சதீஷ், பவித்ரா

 

 

 

Grade: 
1

Subject: 
Tamil

Term: Term 1