Towards a just, equitable, humane and sustainable society

என் குழந்தைகளே எனது ஆசான்

குழந்தைகளுக்குப் பாடம் கற்பிக்க நினைத்ததில்லை. அவர்களை வழி நடத்தியே வெற்றி கண்டுள்ளேன். ஒவ்வொரு வகுப்பும் ஒரு புதிய அனுபவம்.

பள்ளி என்னும் ஆலயத்தில் வகுப்பறை என்பது கருவறை. அந்தக் கருவறையில் நாள் முழுவதும் குழந்தைகளுடன் இருக்கும் பொழுது ஏற்படும் மட்டற்ற மகிழ்ச்சி, அனுபவம் ... ஒவ்வொரு ஆசிரியருக்கும் கிடைத்த வரம். அத்தகைய மகிழ்ச்சி நான் தலைமை ஆசிரியரான பிறகு முழுவதுமாக எனக்குக் கிடைக்காமல் போனது எனக்கு வருத்தத்தைத் தான் தருகின்றது என்றாலும் வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதில் தவறுவதில்லை. 

நான் குழந்தைகளுக்குப் பாடம் கற்பிக்க என்றும் நினைத்ததில்லை. அதை நான் செய்யவும் இல்லை. அவர்களை வழி நடத்தியே வெற்றி கண்டுள்ளேன். ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு புதிய அனுபவம் எனக்குக் கிடைக்கும். என் குழந்தைகளே எனது ஆசான். என் வகுப்பறையே என் பள்ளி. (உ.ம்) ஒருமுறை தமிழ் எழுத்துக்களில் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தேன். நான் ஒரு சொல் சொல்லி, ஒரு குழந்தையை அழைத்து அந்தச் சொல்லைக் கரும்பலகையில் எழுதப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தேன். 

ஒரு மாணவனை ஐயர் என்று எழுதச் சொன்னேன். அவன் ‘அய்யர்’ என்று எழுதினார். ‘ஐயனார்’ என்ற வார்த்தைக்கு ‘அய்யனார்’ என்று எழுதினர். தொடர்ந்து அய்ந்து, அய்யம்....என்றே எழுதிக் காட்டினர். நான் ஐந்து, ஐயனார், ஐயம்...என்று எழுதி படிக்கச் சொன்னேன். அந்தக் குழந்தை என்னிடம் நான் எழுதியதை நீங்க படித்துக் காட்டுங்கள் என்று கூறினார். ஒலி சரியாகத் தானே இருக்கிறது இதில் என்ன தவறு இருக்கிறது? என்று கேட்ட மூன்றாம் வகுப்புகுழந்தைக்கு நான் எந்த இலக்கண வரியைப் புரிய வைப்பது? சொன்னால் புரியுமா? அன்றைய என்னுடைய இயலாமையை எண்ணி என்னை நானே கேள்வி கேட்டேன். அந்தக் குழந்தை எழுதியது தவறு இல்லையே, அந்த வயதில் அது சரியாகத் தானே உச்சரித்து எழுதியிருக்கிறது. இதைத்தானே நானும் சொல்லிக் கொடுத்தேன். இப்படி என்னத் திக்கு முக்காடச் செய்த வகுப்புகள் பல.

என் நண்பர்கள் வகுப்பறையை எப்படிச் சமாளிக்கின்றனர்? என் பள்ளிக் குழந்தைகளின்  திறன் எப்படி இருக்கின்றது? அவர்களின் தேவை என்ன? என்பதையறிய நான் வகுப்பிற்குச் சென்ற பொழுது குழந்தைகளின் ஆர்வமும், என் நண்பர்களின் முயற்சியும் என்னை மகிழ்வித்தது உண்மை.. அவற்றில் சில.. 

ஆசிரியை மஞ்சுளா அவர்கள் எப்பொழுதும் ஒரு பாடலுடன் முன் ஆயத்தம் செய்வது வழக்கம். மிக நல்ல குரல் வளத்துடன், குழந்தைகளைக் கவரும் வண்ணம் பாடல் பாடிப் பாடப் பகுதியை அறிமுகப்படுத்துவதில் வல்லவர். மூன்றாம் வகுப்பு, ‘பள்ளியிலே கொண்டாட்டம்’ என்ற பாடத்தை நடத்தும் பொழுதும் முன் ஆயத்தமாக,

  • பொங்கி வருது பொங்கி வருது; பால் பொங்கி வருது என்ன நாள்?
  • ஊரெல்லாம் வான வேடிக்கை; வீட்டுக்குள்ள படையல் முறுக்காம். அது என்ன விழா?
  • ஏப்ரல் மாதம் வந்தாலே எங்களுக்குக் கொண்டாட்டம்; நாங்களெல்லாம் பாடுவோம் ஆட்டமெல்லாம் போடுவோம் அது என்ன விழா?
  • வருது வருது நேருமாமா பிறந்த நாள் வருது. என்ன விழா?

இப்படிப் பாடிப் பள்ளியில் கொண்டாடும் விழாக்களை ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்திக் குழந்தைகளை ஈடுபடுத்தியது சிறப்பாக இருந்தது. அழகாகப் படம் வரைய என்னால் முடியும் என்று கூறுபவர் யார் என்ற வினா எழுப்பி, அந்தக் குழந்தைகளைப் படம் வரையச் செய்தார். இதைப்போலவே ஆடவும் பாடவும், பேசவும், நடிக்கவும் விருப்பமுள்ளவர்களை அழைத்து திறமைகளை வெளிப்படுத்தச் செய்தார். குழந்தைகளைக் குழுக்களாகப் பிரித்துக் கலந்துரையாடச் செய்தது மிகவும் நன்றாக இருந்தது. குழந்தைகள் தங்களுக்குத் தெரிந்ததை மிகவும் வெளிப்படையாகவும் எவ்வித தயக்கமும் இன்றி வெளிப்படுத்தினர். ஒவ்வொரு நிகழ்ச்சி (விழா) பெயர் கூறும் பொழுது அதை நம் பள்ளியில் கொண்டாடினோமே என்று பேசிக்கொண்டது நன்றாக இருந்தது. 
குழந்தைகள் விழாவில் என்ன செய்தோம் என்ற வினாவிற்குப் பாயசம் போட்டீங்க என்று ஒரு குழந்தை கூறியது. ஆசிரியர் ‘கலை நிகழ்ச்சிகள்’ என்ற பதிலை எதிர்பார்த்தார். ஆனால் குழந்தைகளோ கலர் சட்ட போட்டோம், பாயசம், கேக் சாப்பிட்டோம், விளையாட்டு போட்டி நடந்தது, ஆடினோம், பாடினோம், நேரு மாமா பற்றி பேசினோம்… என்று ஒவ்வொன்றாகக் கூறினார். பின்னர் ஆசிரியர் அவர்கள் கூறிய பதிலைக் கொண்டு இவையெல்லாம் கலை நிகழ்ச்சிகள் என்று புரிய வைத்தது நன்றாக இருந்தது. 

ஆசிரியர் சந்தோஷ்குமார் மூன்றாம் வகுப்பு படத்துக்கு முன் ஆயத்தம் செய்தார். குழந்தைகளை ரயில் போன்று பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஓடி வரச் செய்தார். ஒரு மாணவனை முன்னே நிறுத்தி, இவனைப் பிடித்து மற்றவர் தொடர வேண்டும், முன்னே நிற்கும் மாணவன் மட்டுமே ஓலி எழுப்ப வேண்டும் என்று கூறினார். அவர்கள் வந்ததும் முன்னே நின்றது யார் என்ற வினா எழுப்ப, குழந்தைகள் பிரதீப் என்றனர். ரயிலின் முன்னே என்ன இருக்கும்? ஒரு ரயிலுக்கு எத்தனை என்ஜின்? போன்ற பல கேள்விகளைத் தொடர்ந்து எழுப்பி கலந்துரையாடலுக்கான சூழலை ஏற்படுத்தினார். பஸ்ஸில் பயணம் செய்ய எங்கு போக வேண்டும் என்ற கேள்விக்குக் குழந்தைகள் பஸ் ஸ்டாண்ட் என்று கூறினர். ரயிலில் போக வேண்டுமானால் எங்கு போக வேண்டும் என்ற கேள்விக்கு Train stand என்று குழந்தைகள் பதில் அளித்ததை உண்மையிலே ரசித்தேன். பின்னர் ஆசிரியர் ரெயில்வே ஸ்டேஷன் செட் அப் செய்து வகுப்பிலேயே விளக்கியது நன்று.

தொடர்ந்து ஆசிரியர் கிராமங்களில் எந்த வசதியும் இல்லை, வண்டிகள் இல்லை. மக்கள் எப்படி போவார்கள் என்ற வினா எழுப்பக் குழந்தைகள் பலவித பதில்களை அளித்தனர். இங்கு ஆசிரியர் மாட்டு வண்டி என்ற பதிலை எதிர்பார்த்தார். ஒரு குழந்தை நடந்து போவார்கள் என்றது. ஆசிரியர் உடல்நிலை சரியில்லை; நடக்க முடியாது. எப்படிப் போவார்கள் என்று கேட்டதற்கு, ஒரு குழந்தை ஆம்புலன்ஸ்க்கு போன் செய்ய வேண்டும் என்றது. ஆசிரியர் போன் வேலை செய்யவில்லை, எப்படிப் போவது என்று கேட்க, குதிரை வண்டி என்றது ஒரு குழந்தை, பாராசூட் என்றது வேறொரு குழந்தை. பாராசூட் வரை யோசிக்கும் குழந்தைகள் மாட்டுவண்டி என்ற பெயரைச் சொல்லவில்லை. பின்னர் ஆசிரியர் மண்,கல் போன்றவற்றை எப்படி எடுத்துச் செல்வார்கள் என்று கேட்டவுடன் மாட்டு வண்டி என்றனர்.

இப்பதில் என்னைச் சிந்திக்க வைத்தது உண்மை. குழந்தைகள் மாட்டு வண்டியில் மக்கள் சென்றதைப் பார்த்திருக்கவில்லை. ஆனால் கல், மண் போன்றவை எப்படி எடுத்துச் செல்லப்படுகிறது என்ற கேள்விக்கு உடனே பதில் அளித்தனர். குழந்தைகள் தங்களின் சூழலில் இருந்தே கற்க முடியும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக இந்த வகுப்பு இருந்தது.

ஆசிரியை திருமதி வனிதா இரண்டாம் வகுப்பு ‘Longest shortest’ என்ற பாடத்தை மிகச் சிறப்பாக கையாண்டார். கதையுடன் முன் ஆயத்தம் செய்து பெரியது சிறியது அறிமுகப்படுத்தியது குழந்தைகளுக்கு மிக்க ஆர்வமூட்டுவதாக அமைத்தது. மூன்று குழந்தைகளை முன்னே அழைத்து ஒரு கோடு கிழித்து அதிலிருந்து ஒவ்வொன்றாக தாண்டி குதிக்கச் செய்தார். அவர்கள் தாண்டிய இடத்தைக் குறித்து, யார் அதிகம் தூரம் குதித்தது? யார் குறைந்த தூரம் குதித்தது என்பன போன்ற வினாக்களை எழுப்பிக் குழந்தைகளைச் சிந்திக்கச் செய்தது சிறப்பு. வினாக்கள் எழுப்பிக் குழந்தைகளை கொண்டே, அவர்களைக் கவரும் வண்ணம் எளிய அழகிய படங்களைக் கருப்பலகையில் வரைந்தது, ஆர்வத்தை மேலும் தூண்டுவதாக அமைத்தது உண்மை.
மேலும் யாருடைய வீடு அருகில் உள்ளது? யாருடைய வீடு தொலைவில் உள்ளது? போன்ற வினாக்களை கரும்பலகையில் வரைந்து விளக்கமும் அளித்தார்.

இதுபோன்று அவர்களின் அன்றாட வாழ்க்கைச் சூழலைப் பயன்படுத்தி விளக்க குழந்தைகள் அனைவரும் மிக்க ஆர்வத்துடன் பங்கேற்றனர். ஆசிரியர் ஒவ்வொரு முறையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கம் அளித்தது நன்றாக இருந்தது.

Teacher: M. sandhakumari

Subject: 
Tamil

Term: Term 1