Towards a just, equitable, humane and sustainable society

கலந்துடையாடிக் கற்பித்தல்

 

ஒவ்வொரு குழந்தையும் அவர்களின் வயதிற்கேற்ற பொதுஅறிவுடன் தான் பள்ளிக்கு வருகின்றனர். அவர்களுக்குத் தெரிந்ததைப் பகிர்ந்து தெரியாததைக் கற்கச் செய்வதே கற்பித்தல்

மாணவர்கள் ‘எழுதப்படாத பலகைகள்’ அல்லர். வகுப்பறைகள் மட்டுமே கற்றல் களங்கள் அல்ல. தெரிந்ததிலிருந்து தெரியாததைக் கற்றல் என்பது நாம் அனைவரும் அறிந்த, ஏற்றுக் கொள்கிற கற்றல் கோட்பாடுகளில் ஒன்று. ஆனால் நம் வகுப்பறைகளில், பாடங்களைக் கற்கும் பொருட்டு,  மாணவர்கள் பயமின்றி பேச எவ்வளவு இடம் தர முடிகிறது என்பது விவாதிக்கப் படவேண்டிய ஒன்றாகவே இருந்து கொண்டிருக்கிறது. நான் தலைமை ஆசிரியராகப் பணிபுரியும் பள்ளியில் ஆசிரியர் நாகராஜன் ‘மூதுரை’ என்ற செய்யுள் பகுதியைப் பெரும்பாலும் உரையாடல் மூலமாகவே நடத்தி முடித்தது எனக்கு மனநிறைவைத் தந்தது. அந்த அனுபவத்தை இக்கட்டுரையின் வாயிலாகப் பகிர்ந்து கொள்கிறேன்.

செய்யுளை அறிமுகம் செய்தல்:
ஆசிரியர் ஒரு குழந்தையிடம் பென்சில் தரும்படி கேட்டு வாங்கினார். ஒருவரிடம் ஒரு பொருள் வாங்கினால் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுப்பி ‘நன்றி’ என்ற பதிலை வாங்கி கரும்பலகையில் நன்றி என்று எழுதினார். பின்னர் ஒருவருக்கு உதவி தேவைப்பட்டால் நாம் என்ன செய்ய வேண்டும்? ‘உதவ வேண்டும்’ என்று கூறி ‘உதவி’ என்று எழுதினார். பின்னர் நமக்கு உதவி செய்பவருக்கு நாம் என்ன செய்ய வேண்டும்? என்ற வினா எழுப்பி ‘நன்றிக்கடன்’ என்பதை விளக்கிப் புரியவைத்தார். 
ஆசிரியர் நன்றிக்கடன் என்பதை விளக்கும் கதை ஒன்றைக் கூறி உதவி, நன்றி, நன்றிக்கடன் போன்றவற்றின் பெருமைகளை, முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி புரியவைத்தார்.

நன்றியின் சிறப்பை எடுத்துக்கூறியவர் யார் என்ற வினா எழுப்ப, குழந்தைகள் திருவள்ளுவர் என்று கூறியதைப் பாராட்டி ‘திருவள்ளுவர்’ என்று கரும்பலகையில் எழுதினார். பின்னர் நன்றி பற்றி அவர் என்ன கூறினார் என்று கேட்க, “நன்றி மறப்பது....”, “எந்நன்றி கொண்டார்க்கும்...” போன்ற குறள்களைக் குழந்தைகள் கூறி விளக்கம் அளித்தனர். 
பின்னர் இதை போலவே நல்ல நல்ல கருத்துகளை ஒரு பாட்டியும் கூறினார். அவர் யார்? என்று கேட்க குழந்தைகள் ஔவையார் என்று பதில் கூறினார். அவர் கூறியது என்ன என்று வினா எழுப்பக், குழந்தைகள் ‘ஆத்திச்சுடி’ என்று சொன்னார்கள். ஆசிரியர் இது மட்டுமல்ல அவர்கள் மேலும் பல நூல்களை எழுதியுள்ளார் அதில் ஒன்றுதான் மூதுரை என்று கரும்பலகையில் எழுதினார்.

 

கற்றல் செயல்பாடுகள்:

மூதுரை என்பதன் விளக்கம் அளித்தார். முதுமை+உரை என்று பிரித்து நூல் விளக்கம் அளித்தார். நூற்சிறப்பை எடுத்துக்கூறினார். பின்னர் ஆசிரியர் குறிப்பு கூறினார். ஔவையார் எழுதிய பிற நூல்களின் பெயர்களைப் பட்டியல் செய்தார். உ.ம். ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை.

  • குழந்தைகளைப் புத்தகத்தில் உள்ள பாடல்களை வாசிக்கச் செய்தார். ஆசிரியர் தென்னை மரம் ஏன் நடுகிறோம்? அதன் பயன் என்ன? எவ்வளவு நாட்களில் பயன் தருகிறது? அது வளர நாம் என்ன செய்கிறோம்? அது எப்படி வளர்கிறது? போன்ற பல கேள்விகளை எழுப்பி ஒவ்வொரு முறையும் விளக்கிப் புரியவைத்தார்.
  • மீண்டும் பாடலை வாசிக்கச் செய்து, அதிலிருந்து வினாக்கள் எழுப்பி பாடலின் பொருள் புரிந்துகொண்டனரா என்பதைச் சோதித்தார். ‘புலப்படுத்துவார்கள்’ என்ற புதிய வார்த்தையைக் கரும்பலகையில் எழுதிப்போட்டு விளக்கம் அளித்து புரியவைத்தார். 
  • அனைத்து குழந்தைகளுக்கும் வாசிப்புப் பயிற்சி அளிக்க ஆசிரியர் செய்யுளைக் கரும்பலகையில் ஒலி உச்சரிப்புடன் எழுதி, சரியான ஒலி உச்சரிப்போடு வாசிக்கப் பயிற்சிகள் அளித்தார்.
  • கடினமான வார்த்தைகள் என்ன என்று கேட்டு அவற்றிற்கான பொருள் விளக்கம் அளித்தார். செய்யுளை இனிய ராகத்துடன் பாடலாகப் பாடிக் காண்பித்து, குழந்தைகளையும் அவ்வாறே பாடப் பயிற்சிகள் அளித்தார்.

விரிவாக்கச் செயல்பாடுகள்:

  • ஒரு மாணவனை அழைத்துக் கிரீடம் கட்டினார். அதில் ஒரு வார்த்தை எழுதப்பட்டு இருந்தது. அம்மாணவனுக்கு அந்த வார்த்தை என்னவென்று தெரியாது. அந்த வார்த்தையை அவன் கண்டுபிடிக்கும் வண்ணம் மற்றவர்கள் வினா எழுப்ப வேண்டும். 
  • அடுத்ததாகச் செய்யுளில் உள்ள வார்த்தைகள் எழுதப்பட்ட மின் அட்டைகள் குழந்தைகளிடம் தரப்பட்டது. பின்னர் செய்யுளில் எப்படி வார்த்தைகள் உள்ளதோ அதைப்போலவே இந்த வார்த்தைகளைக்கொண்டு செய்யுளைச் சரியாக வடிவமைத்து வரைபட தாளில் ஒட்டச் செய்தார்.
  • ஔவையார் எழுதிய பிற நூல்களின் பெயர்கள் கொண்ட மின்அட்டைகளையும் கொடுத்து ஔவையாரின் படத்தை ஒட்டி, அதைச் சுற்றி நூல்களின் பெயர்களையும் ஒட்டச் செய்தார்.
  • யார் யாருக்கெல்லாம், எதற்கெல்லாம் நாம் நன்றி கூறலாம் என்ற வினாவிற்குக் குழந்தைகள் சொன்ன பதில்களை ஆசிரியர் கரும்பலகையில் பட்டியல் இட்டார். அவை, இறைவன், தந்தை, தாய், கதிரவன், இயற்கை, உழவன், தாய்மொழி, தாய்நாடு, பூமி, பாசம், அன்பு,கருணை, ஆசான் போன்றவை. “நன்றி சொல்லப் பழகலாம்.. நாளும் சொல்லி மகிழலாம்..’’ என்ற பாடலை பாடி, குழந்தைகளுக்கும் பாடப் பயிற்சி அளித்தார். இதன் மூலம் ‘நன்றி’ கூறுவதன் இன்றியமையாமையை குழந்தைகள் புரிந்து கொண்டதுடன் நன்றி சொல்லப் பழகினர். 
  • மாணவர்களிடம் வார்த்தைகள் எழுதப்பட்ட மின் அட்டைகளைக் கொடுத்து, அவற்றை வாசிக்கச் செய்து சொல்வதெழுதுதல் பயிற்சி ஏட்டில் எழுதச்செய்தார். 

எழுதுதல் பயிற்சி:
தினமும் நாட்குறிப்பு எழுதச் சொன்னார். “மகிழ்ச்சி, துன்பம் போன்ற எதையாவது எழுது. ஒரு நாளில் நடந்ததை ஒரு வரியாவது எழுது. அது உன்னை மாற்றுவதுடன் நாளை வருங்காலத்திற்கும் பயன்படும்”, என்று விளக்கி எழுதும் ஆர்வத்தைத் தூண்டினார்.

தொடர் பணி: 
பாடலை வாசித்து, எழுதி வரச் சொன்னார். பின்னர் யாருக்கு நீ நன்றி கூற விரும்புகிறாய்? ஏன்? என்று எழுதி வரும்படிக் கூறினார்.

கற்பித்தல் சிறப்புகளாக நான் நினைப்பவை: 

  • பாடப்பொருளை/ கருத்துக்களை ஆசிரியரே கூறாமல் குழந்தைகளிடமிருந்தே வினாக்கள் மூலம் வரவழைத்தது கற்றலை வலுப்படுத்தும். அவர்களுக்குத் தெரிந்தவற்றிலிருந்து தெரியாதவற்றிற்கு அழைத்துச் சென்றது
  • குழந்தைகள் பட்டியலிடும் அனைத்தையும் கரும்பலகையில் எழுத்துக்களின் ஒலி உச்சரிப்புடன் எழுதியதும், குழந்தைகளை அதில் கவனம் செலுத்த அறிவுறுத்தியதும் சிறப்பு. (ரகர வரிசை, னகர வரிசை போன்று அடிக்கோடிட்டது)
  • செயல்பாடுகள் அனைத்தும் எளிமையாகவும் சிறப்பாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தது மாணவர்கள் அனைவரும் பங்கேற்க ஏதுவாக அமைந்தன.
  • புதிய வார்த்தைகளைக் கொடுத்து அவர்களை வாசிக்கச் செய்து, உடனடியாக எழுதச் செய்தது அவர்களின் நினைவாற்றல் பெருக்கத்திற்கு வழிவகை செய்தது
  • ஆசிரியர் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம், நல்ல பண்புகள், இயற்கையை நேசித்தல் போன்றவைகளை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியது, குழந்தைகளை எதிர்கால சமுதாயத்திற்குத் தயார்படுத்தும் விதமாக இருந்தது.

Teacher: M, Sandhakumari

Subject: 
Tamil

Term: Term 2