Towards a just, equitable, humane and sustainable society

கௌதாரியும் முயலும்

0
No votes yet
0
Post a comment

படக்கதையைப் புரிந்து கொள்ளல்:

தமிழ்ப் புத்தகத்தில் உள்ள கௌதாரியும் முயலும் என்ற கதையை புத்தகத்தில் உள்ள படத்தைப் பார்த்துக் கூறுமாறு கூறினேன். குழந்தைகள் படக்கதையைப்  பார்த்து ஒவ்வொருவராக தங்களுக்குப் புரிந்த அளவு கூறினர்.  சில குழந்தைகள் ஏற்கனவே கதையைப் படித்து வைத்திருந்தனர்.  அதனால் கதை வாசிப்பு சுலபமாக முடிந்தது.

வீட்டு விலங்குகள்- செல்லப்பிராணி பற்றிய உரையாடல்:

குழந்தைகளிடம் உங்கள் வீட்டில் செல்லப் பிராணிகள் உள்ளனவா என்று கேட்டேன். சிலர் தங்கள் வீட்டில் செல்லப் பிராணிகள் உள்ளன என்றனர், ஆடு, மாடு, கிளி, கோழி... என அடுக்கிக் கொண்டே சென்றனர்.  சிலர் எங்கள் வீட்டில் செல்லப்பிராணிகள்  இல்லை  ஆனால்,  எலி, கரப்பான், அணில்... உள்ளன என்றனர். உடனே நான் சரி அவைகள் என்ன செய்யும் என்று கேட்டபொழுது. வகுப்பறையிலிருந்து வெவ்வேறு அனுபவங்கள் வந்தன. அவற்றை வரையுங்கள் என்று கூறியதும் மாணவர்கள் மகிழ்ச்சியாக  ஈடுபட்டனர்.

வரைய வைத்து எழுத வைத்தல்:

குழந்தைகளிடம்  செல்லப்பிராணிகளைப்  பார்த்துக்கொள்ளும் முறைபோன்ற காட்சிகள் இடம்பெறுமாறு படங்கள் வரைய  சொன்னேன்.  குழந்தைகள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட செயல்பாட்டை ஆர்வமுடன்  உற்சாகத்தோடு வரைய ஆரம்பித்தனர். பின்னர் அப்படத்தை ஒரு கதையாக எழுதுமாறு தூண்டினேன். முதலில் குழந்தைகள், கதையாக சொல்வதில்தான் ஆர்வம் காட்டினர், எழுதுவதில் அவர்களுக்கு அனுபவம் இல்லை என்பதால் முதலில் நான் கரும்பலகையில் ஒரு மாணவன் கூறிய கதையை எழுதி காண்பித்தேன். பின்னர் குழந்தைகளை, அவர்கள் வரைந்துள்ள படத்திற்குக் கதை   எழுதுமாறு கூறினேன். ஒருசில மாணவர்களே கதையை முழுமையாக எழுதினர். சிலர் இரண்டு மூன்று வரிகள் எழுதினர். மூன்றாம் வகுப்பு மாணவர்கள் இந்த அளவிற்கு எழுதியதை  நான் ஒருபெரிய முன்னேற்றமாக கருதுகிறேன்.

எழுதியதை சரிசெய்தல்:

எழுத்துப்  பிழைகள் இருந்தாலும், அவற்றையும் சரியென்று கூறினேன். எனக்குப் புரியாத சில வரிகளை குழந்தைகளிடமே கேட்டுப் புரிந்து கொண்டேன்.

இச்செயலின் முடிவாக, குழந்தைகளிடம்  ஒரு வெள்ளைத் தாளினைக் கொடுத்து, மீண்டும் இதேபோல் வேறு ஒரு கதையை எழுதுமாறு வீட்டு வேலையாக கொடுத்து அனுப்பினேன். குழந்தைகள் வீட்டுவேலையை தங்கள் பெற்றோருடன் காண்பித்து, கதையைச் சொல்லி எழுத்துப்பிழை இல்லாமல், தங்களுடைய கையெழுத்தில் எழுதி வந்தனர்.

  

கதைவாசித்தல்:

அடுத்த நாள் பாடவேளையில் குழந்தைகளை சிறுசிறு குழுக்குகளாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவிடம் விலங்குகள் மற்றும் பறவைகளை மையமாக கொண்ட கதைப் புத்தகங்களைக் கொடுத்து, அவற்றில் ஒரு படக்காட்சியைத் தேர்ந்த்தெடுத்து, அந்தப் பட காட்சியைத் தங்களுடைய வரைப்படதாளில் வரைந்து, பின் அதற்கு ஒரு கதை எழுதுமாறு கூறினேன்.  குழந்தைகள் குழுவில் அமர்ந்து, தங்களுக்குப் பிடித்தமான ஒரு படத்தைத் தேர்வுசெய்து, வரைந்து அவற்றிக்குக் கதையும்  எழுதினர். பின்னர் அவர்கள் அக்கதை புத்தகத்தை வாசிக்கவும் ஆரம்பித்தனர். வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும் கதைகூறுதல் மற்றும் கதை எழுதுதல் நிகழ்ச்சியில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

குழந்தைகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான செயல்பாடுகளை எதிர்பார்க்கின்றனர். அந்த எதிர்பார்ப்பின் தொடக்கமாக, குழந்தைகளை தங்கள் வீட்டில் உள்ள பத்திரிக்கையை எடுத்து வருமாறு கூறினேன். அவற்றில் தங்களுக்குப் பிடித்த செல்லப்பிராணியை வரைய சொன்னேன், அவற்றிக்கு வண்ணங்களைத் தீட்டி, அவற்றை பிங்கர் பப்பெட் (finger puppet)  செய்ய வைத்தேன்.

குழந்தைகள் அனைவரும் பிங்கர் பப்பெட்(finger puppet)   செய்தனர். தாங்கள் செய்த பப்பெட்களை வைத்து  கதையாகக் கூறினர். இச்செயல்பாடுகள் மூலம் குழந்தைகள் பறவைகள் மற்றும் விலங்குகளின் வாழ்க்கை முறை பற்றி ஒரு தெளிவான கருத்துகளைத் தாங்களே அறிந்துகொண்டனர்.

பின்னர் நான், கௌதாரியும் முயலும் என்ற கதையைக் குழந்தைகளே படிக்குமாறு தூண்டினேன். குழந்தைகள் கதையைப் படித்து அக்கதையை விளக்கவும் செய்தனர். பின்னர் வகுப்பில் வாசிப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.

கதை கூறுதல் முறை மூலமாக குழந்தைகளிடம் வளர்க்கப்பட்ட திறமைகள்

  1. சிந்திக்கும் திறன்
  2. வரையும் திறன்
  3. கதையை கோர்வையாக கூறும் திறன்.
  4. தன்னம்பிக்கை
  5. அறியாததை தாங்களே அறியும் திறன்
  6. பயமின்மை
  7. பேசும் திறன்

இவைபோன்ற பல திறமைகளை குழந்தைகள் தாங்களே வளர்த்துக்கொண்டனர். இத்திறன்கள் குழந்தைகளிடம் வளர ஆசிரியர் ஒரு தூண்டுகோலாய் மட்டுமே இருந்தது போல் உணர்ந்தேன்.

நம் தமிழ்ப் பாட புத்தகத்தில் பல பாடங்கள், கதைகளாகவே உள்ளன. அவற்றை நடத்துவதற்கும், மாணவர்களின் மனதில் கதையை சுலபமான முறையில் கொண்டு செல்வதற்கும் படங்களின் மூலம் கதை எழுதும் மற்றும் கதை கூறும் முறை உதவியாக உள்ளது என நான் நம்புகிறேன்.

 

 

Grade: 
3

Subject: 
Tamil

Term: Term 1

0
No votes yet
0
Post a comment