Towards a just, equitable, humane and sustainable society

டீச்சரம்மா இல்ல ஸ்கூல் அம்மா டோய்!!!!

டீச்சரம்மா இல்ல ஸ்கூல் அம்மா டோய்!!!!

முதல் வகுப்பில் முதல் மூன்று மாதங்கள் அன்னையாய் ஒரு ஆசிரியர்....

அ.தனமேரி

என்னைப் பற்றி:

நான் தன்மேரி, தட்டாஞ்சாவடி தனமேரி. நான் ஆசிரியர் பணியிலமர்ந்து 22 ஆண்டுகள் முடியப் போகிறது. இதில் 19 வருடங்கள், தொடர்ந்து முதல் வகுப்பு ஆசிரியரக இருக்கின்றேன் .

புதிதாக சேரும் மழலையான முதல் மூன்று மாதங்கள் எப்படி சமாளிப்பது என்பது பற்றிய எனது அணுகு முறைகளையும் எனது அனுபவத்தையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

முதல் வகுப்பில் சேர்வதற்காக வரும்  மழலையரில் மூன்று வகையினர் உண்டு.

  1. அங்கன்வாடிக்குச் சென்று உண்டு உறங்கி வந்த குழந்தைகள்
  2. LKG, UKG என பள்ளி வாசனை அறிந்த குழந்தைகள்
  3. அங்கன்வாடியும் அறியாமல் LKG, UKG யும் படிக்காமல் அன்னையின் முந்தானையில் அடிமையாகி போன குழந்தைகள்.

அணுகுமுறை:

முதல் வகுப்பு ஆசிரியையாக பொறுப்பேற்க முதலில் மன தைரியம் வேண்டும். அப்படிப்பாட்டவர்களால் மட்டுமே குழந்தைகளை சேதாரம் இல்லாமல் கையாள முடியும்.  முதல் வகுப்பு ஆசிரியருக்குக் கொஞ்சம் பொறுமை, கொஞ்சம் அர்ப்பணிப்பு உணர்வோடு நிறைய நிறைய பாசத்தை, அன்பை வெளிக்காட்டும் மனப்பக்குவமும் வேண்டும்.

மேற்சொன்ன மூன்று வகை மாணவர்களை அன்பு என்ற ஒற்றைச் செயல் வழியாய்க் கட்டிப்போட முடியும்.

முதல் மற்றும் இரண்டாம் வகை மாணவர்கள் கொஞ்சம் மிரட்சியோடு பயத்தோடும் வந்தாலும் இடத்தில் உட்கார் என்று சொன்னால் அமர்ந்து விடுவார்கள், ஆனால் மூன்றாம் வகை மாணவர்கள் அன்னையின் இடுப்பை விட்டே இறங்க மறுப்பார்கள். அப்படிப்பட்ட மாணவர்களைக் கனிவான பார்வையோடு அன்பான கொஞ்சல் மொழிகளோடு இரு சுரம் நீட்டி கூப்பிடும்போது வந்து விட்டார்கள் என்றால் சமாளித்து விடலாம். அப்படியும் வரவில்லையென்றால் குச்சி மிட்டாய், குருவி ரொட்டி, சாக்லேட், கலர் வத்தல், கடலை மிட்டாய் என லஞ்சமாகக் கொடுத்து பள்ளியின் உள்ளே அழைத்து வந்து விடலாம்.

அப்படியே அழைத்து வந்தாலும் அழுதுக்கொண்டே இருப்பார்கள். அந்த நேரத்தில் மிகவும் எரிச்சலாகவும், அசதியாகவும் இருக்கும்.  ஆனால் அதையும் தாண்டி பொறுமையைக் கடைப்பிடித்துத் தேவையானால் சக மாணவரின் உதவியோடு விளையாட்டுக் காட்டி வழிக்குக் கொண்டு வரலாம்.

முதல் 2 வாரங்கள் சேர்க்கை அதிகமாக இருக்கும்போது முதல் வகுப்பை சமாளிப்பது மிகவும் கடினமானதாக இருக்கும். அந்த நேரத்தில் வண்ணமயமான வகுப்பறையும் கரும்பலகையும் பேருதவியாக இருக்கும். அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் மழலையர்கள் நாம் வரைந்திருக்கும் படங்களையும் ஒட்டியிருக்கும் படங்களையும் பார்த்து தங்களுக்குள்ளே பேசிக் கொள்வார்கள். அழுகின்ற  மாணவன் அழுது கொண்டே இருப்பான்.

ஓரிரு நாட்கள் சென்ற பின் ஓரளவிற்கு வகுப்பு அமைதியான பின், வீட்டிலிருப்பவர் உங்கம்மா ‘வீட்டம்மா’  பள்ளியிலிருக்கும் வரை நான் ‘ஸ்கூல் அம்மா’ அதனால் யாரும் பள்ளிக்கு அழுது கொண்டு வரக்கூடாது. சிரித்துக் கொண்டுதான் வரவேண்டும் என்பதை மனதில் ஆழமாக பதியும் வண்ணம் உனக்காக நான்  இருக்கிறேன் என்று அவன் நம்பும்படியாக நல்ல விதமாக சொல்ல வேண்டும்.

கட்டிய  காட்டன் சேலை கசங்காமல் செல்ல நான் காலேஜ் விரிவுரையாளர் அல்லவே! அகவை 5 முடிந்து ஆறாம் அகவையில் அடியெடுத்டு வைக்கும் அருமையான மழலைகளுக்கு அன்னையல்லவா!

அப்படிப்பட்ட மழலையர்கள் பள்ளி என்ற சொல்லுக்குப் பழக்கப்பட்டவர்களாக என்னை நெருங்கி வரும்போது ஆனந்தம் ஆனந்தமே! அழுது கொண்டிருந்த பிள்ளைகள் என்னை நைஸாக, லேசாக தொட்டு பார்க்க ஓரமாய் நின்று ஓரக்கண்ணால் என்னையும் மற்ற பிள்ளைகளையும் பார்க்க, எனது புடவை முந்தானையை இழுக்க, என் காலடியில் அமர்ந்து என் கால் விரல்களை சீண்ட என என்னோடு கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வரும் போது ஆனந்தத்திற்கு அளவேயில்லை எனலாம்.

நாம் அன்னையாக மாற அவர்கள்  தரும் ஒவ்வொரு வாய்ப்பையும் சரியாக பயன்படுத்தினால் அவர்களுடைய மனதில் நீங்கா இடத்தைப் பிடிக்கலாம். சில நேரங்களில் சில பிள்ளைகளின் இயற்கை உபாதைகள் வகுப்பறையிலேயே நிகழும் போது நாம் சகிப்புத் தன்மையோடு அவனைக் கழுவி தலைமையாசிரியரிடம் வேறு  உடை வாங்கி (அ) பெற்றோருக்கு தகவல் கொடுத்து சக மாணவரின் கிண்டல் கேலியை தடுத்து அவனை அரவணைக்குபோது அவன் மனதில் நாம் இடம் பிடிக்கிறோம்.

முதல் மூன்று மாதங்கள் மழலையர் நம்மை ஏற்றுக் கொள்ளும் வரை பல இன்னல்களை சந்திக்க நேரிடும்.

  1. அழுது அடம் பிடிக்கும் குழந்தையை அன்பு காட்டி சமாதானப்படுத்தி வகுப்பறையில் அமர வைத்தால், இடைவேளைக்குப்பின் பார்த்தால் ஓடியிருப்பான். தேட வேண்டும்.
  2. ஓவராக அழும் மாணவனை நான் தான் உன்னோட ஸ்கூல் அம்மா, அப்படி இப்படி என்று பேசி மற்ற பிள்ளைகளையும் பார்த்துக்கொண்டு இவனை நமது மடியில் உட்கார வைத்து கதை சொல்லி, பாட்டுப்பாடி சமாதானப்படுத்தி, சரிபடுத்திக் கொண்டு இருக்கும் போது ‘லஞ்ச்’ கொடுக்கிறேன் என்ற பெயரில் அவனது அம்மா தன் முகத்தைக் காட்டும்போது இவ்வளவு நேரம் நான் பட்ட கஷ்டம், இழந்த சக்தி, எல்லாம் வீணாய் போகும்.
  3. அடுத்தது உணவு உண்ணும் போது உணவை அள்ளி வாயில் வைத்து ஒழுங்காய் சிந்தாமல் சாப்பிடத் தெரியாத குழந்தைகளால், அழுது வடிந்து உணவு உண்ண அடம் பிடிக்கும் குழந்தைகளால், வீட்டு சாப்பாடு கொண்டு வரும் குழந்தைகளின் உணவை பிடுங்கித் திண்ணும் குழந்தைகளால், இப்படி பல பிரச்சனைகள் வரும்.
  4. மற்ற பிள்ளைகளுடைய பொருளை எடுத்துக் கொள்ளுதல் (அ) ஒளித்து வைத்தல் இந்தப் பழக்கம் கொண்ட பிள்ளைகளால் மட்டுமல்ல செருப்பு, பை, பென்சில், இரப்பர், தண்ணீர் பாட்டில், லஞ்ச் பை என அனைத்தையும் எங்காவது வைத்துவிட்டு அழும் பிள்ளைகளாலும் பிரச்சனைதான்.
  5. இடைவேளைகளின் போது அண்ணன் அக்காள் படிக்கும் வகுப்புகளில் சென்று அமர்ந்து கொண்டு நம்மை தேட வைப்பது, இவை போன்ற பல பிரச்சனைகள் நம்மை சந்திக்கும்.

இவற்றிற்கான தீர்வாக நான் மேற்கொள்ளும் செயல் திட்டங்களாவன:

  1. அனைத்து மாணவர்களிடமும் காலையில் எழுந்தவுடன் பல்துலக்கி விட்டு 1 டம்பளர் சுடுநீர் குடித்தால் நல்லது. காலைக் கடனை எளிதாக நிறைவேற்ற முடியும். குளித்து முடித்து சுத்தமான உடை உடுத்தி, உணவு உண்டு  பையில் நோட்டு பென்சில், புத்தகம், தட்டு டம்பளர் இருக்கிறதா என பார்த்து வரவேண்டும் என்று கூறுவேன். 1 முறை 2 முறை அல்ல குறைந்த பட்சம் 10 முறைகளாவது திரும்ப திரும்ப கூறும்போது நமக்கு நல்ல பலன் கிடைக்கும், கிடைத்திருக்கிறது.
  2. என்னிடம் சொல்லாமல், உன் நண்பனிடம் சொல்லாமல், வகுப்பறையை விட்டோ, பள்ளியை விட்டோ எக்காரணத்தை முன்னிட்டும் வெளியில் செல்லக்கூடாது என்றும் யார் வந்து அழைத்தாலும் சொல்லாமல் செல்லக்கூடாது, எது கொடுத்தாலும் வாங்கி உண்ணக் கூடாது என்று சொல்லி வளர்க்க வேண்டும்.
  3. பெற்றோரிடம் காலையில் பள்ளி நேரமான 8:30க்கு 10 நிமிடங்கள் முன்னதாக பில்ளைகளை கொண்டு வந்து விடவும், மாலையில் 3:45க்கு சரியாக வந்து அழைத்துச் செல்லும்படியாகவும் உறுதியாகவும் கொஞ்சம் கறாராகவும் சொல்லுவேன். கூடியவரையில் மதிய உணவை பள்ளியிலேயே உண்ண அனுமதிக்கும் படியும், அப்படியில்லையெனில் காலையில் பள்ளிக்கு வரும்போதே பிள்ளைகள் கையில் உணவுக் கூடையைக் கொடுத்து விடும்படியாகவும் கூறிவிடுவேன்.
  4. பள்ளி உணவை மாணவர்கள் சில நேரங்களில் விருப்பமாகவும் சில நேரங்களில் விருப்பமில்லாமலும் உண்பார்கள். வீட்டு சாப்பாடு எடுத்து வரும் மாணவர்களை ஏக்கத்தோடு பார்ப்பார்கள். அந்த நேரங்களில், நானும் பள்ளியில் வருகின்ற சத்துணவை மாணவரோடு பகிர்ந்து உண்ணும்போதும், எளிய உணவு வகைகளை வீட்டிலிருந்து செய்து வந்து எல்லோருக்கும் கொடுத்து உண்ணும்போதும் மாணவர்களுக்கு ஆசிரியரே பள்ளி உணவை உண்கிறார்கள், நாமும் உண்ண வேண்டும் என்றும், கொடுத்து உண்பதால் வீட்டு சாப்பாடு எடுத்து வரும் பிள்ளைகளுக்கு மற்ற பிள்ளைகளுக்கு கொடுத்து உண்ணும் பழக்கமும் இயல்பாகவே வருகிறது.
  5. அவரவர் பொருளை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ள கற்றுத் தருதல் அவசியம். அடுத்தவர் பொருளுக்கு ஆசை கொள்ளுதல் கூடாது. பல விநோத வகைகளில் பென்சில், இரப்பர், செருப்பு இவைகளால் தான் பிரச்சனை அதிகம் வருகிறது. எனவே சேர்க்கையின்போதே அப்சரா, பென்சில், 1 ரூபாய் இரப்பர் மட்டுமே வாங்கி அனுப்ப வேண்டும். சாண்டக்ஸ் செருப்பு மட்டுமே போட வேண்டும் என்று கூறுவேன். பென்சில், இரப்பர் விஷயத்தில் வெற்றி கண்டுள்ளேன்.

எனது மாணவரின் அக்கா மற்றும் அண்ணன்கள் எங்கள் பள்ளியில் படித்தால் அவர்களை அழைத்து உனது தம்பியோ, தங்கையோ உன்னைத் தேடி வந்தால் உடனடியாக என்னிடம் கொண்டு வந்து விடு என்று அறிவுறுத்துவதோடு எனது பிள்ளைகளிடம் இவ்வளவு நேரம் எங்கே போனாய்? உன்னைக் காணாமல் நான் பயந்து போய்விட்டேன் அல்லவா, நீ இல்லாமல் வகுப்பில் உன் இடம் காலியாக உள்ளது அல்லவா என அன்பொழுக கூறும்போது அடுத்த முறை அவள் எங்கேயும் என்னிடம் சொல்லாமல் செல்வதில்லை.

முதல் மூன்று மாதங்கள் வரை ஸ்கூல் அம்மாவாக உருமாறுகின்ற எனக்கு குட்டி குட்டி கதைகளும் பாடல்களும் எனது பிள்ளைகளை என் கைகளுக்குள்ளே கொண்டு வர பேருதவியாக அமைகிறது, கதைகளை உரிய பாவனைகளோடு வாழ்ந்து காட்டும் போதும் பாடல்களை உரிய எளிய இராகத்தோடு பாடிக் காட்டும்போதும் மாணவச் செல்வங்கள் என்னோடு ஒன்றிப் போவது உண்மையிலும் உண்மை.

சின்னஞ்சிறு பிள்ளைகள் நாம் எதைச் சொன்னாலும் ஏற்றுக் கொள்வார்கள். யானைக்கு இறக்கை முளைத்து பறந்தது என்று சொன்னோம் என்றால் அதிசயமாய் உற்று கேட்பார்களே தவிர யானைக்கு இறக்கை இல்லை என்றோ யானை பறக்காது என்றோ சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் கதை கேட்கும் ஆர்வம், சிறுபிள்ளைகளிடம் அதிகம் உள்ளதைக் காண்கிறேன்.

முதல் வகுப்பு பிள்ளைகளைப் பொறுத்த வரையில் Repetition அதாவது ஒரு காரியத்தை ஒரு முறை கூறுவதோடு நின்று விடாது பல முறை திரும்பத் திரும்ப கூறுதல் அவசியம் என்று நினைக்கிறேன்.

முதல் மூன்று மாத காலங்களில் நேரத்திற்கு பள்ளி வருவது, உணவு கூடைகளை வரிசையாக வைத்தல், புத்தகப் பையை அவரவர் இடத்தில் வைத்தல் . குப்பையை குப்பைத்தொட்டியில் போடுதல், பென்சில், இரப்பரை நோட்டை தவறாமல் எடுத்து வருதல், எங்கு சென்றாலும் வரிசையாக செல்லுதல், காலணிகளை வரிசையாக விடுதல் எந்த ஆசிரியர் வந்தாலும் எழுந்து வணக்கம் செய்தல், கை கழுவி விட்டு உணவு உண்ணுதல் போன்ற பழக்கங்களை சொல்லி சொல்லி பழக்கி விட்டோமென்றால் பின்வரும் 7 மாதங்கள் ஸ்கூல் அம்மாவாய் இல்லாமல் நல்ல ஆசிரியராய் பரிமளிக்கவும் முடியும்.

பிறருக்கு கொடுத்து உதவும் பண்பை மாணவரிடம் வளர்ப்பது பெரிய கடமையாகிப் போனது எனக்கு, கல்வி செயல்பாடுகளில் இந்த நற்பண்பு அவசியமான ஒன்றாக விளங்குகிறது. பாட வேளைகளில் பணித்தாள்களை மாணவரைக் கொண்டு செய்ய வைப்பது என்பது பொறுமையின் உச்சத்தை சோதிக்கும் காலமாக அமைகிறது. அந்த வேளைகளைகளில் இந்த நற்பண்பு நன்கு பயன்படும். உதாரணமாக, கணிதத்தில் எங்களுக்கு பொட்டு ஒட்டுகின்ற செயலில் வசதி படைத்த மாணவர்கள் உடனடியாக சொன்னதை சொன்னபடி வாங்கி வருவார்கள். படிப்பில் அரைகுறை ஆர்வமுள்ளவர்கள் சில நாள் கழித்து வாங்கிவருவார்கள். கூலி வேலை செய்யும் பெற்றோரால் வாங்கிக் கொடுக்க இயலாமல்  போகிறது. அப்படிப்பட்ட ஏக்கத்தை களைய இறுதியாக நானும் கொஞ்சம் பொட்டுக்களை வாங்கி மற்ற மாணவர்களின் பொட்டுக்களோடு சேர்த்து இல்லாத மாணவர்களுக்கும் கொடுத்து செயல்வழியை முடிப்போம். இந்த விஷயத்தில் நான் பெருமிதம் கொண்ட விஷயம் யாதெனின் உணவு விடுதியில் வேலை செய்யும் ஆகாஷின் அம்மா 3 பொட்டு பாக்கெட் வாங்கி வந்தார்கள். நான் 2 தானே கேட்டேன். ஒன்றை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்ற போது “இல்லை மிஸ், இல்லாத புள்ளைகளுக்கு கொடுங்கள் என்றதும் கொடுத்துச்  சென்றார்கள். இப்படிப்பட்ட மனங்களை காண்பது அரிதல்லவா?

இதில் நெஞ்சுருக வைக்கும் சம்பவம் யாதெனில், இல்லாத மாணவன் தனக்கு கொடுத்து உதவிய மாணவனிடம் ‘thanks டா’ என்று சொல்லும் போதும், அப்பாடா நானும்  project முடித்துவிட்டேன் என்று நிம்மதி பெருமூச்சு விடும்போதும் இனம் புரியாத வார்த்தைகளால், சொல்ல இயலாத ஒரு மகிழ்ச்சி அவன் முகத்தில் அதனைக் காணும் போது ஆனந்தம் ஆனந்தமே!

2014-15 ஆம் கல்வி ஆண்டில் நான் ஸ்கூல் அம்மாவாய் பெரிய வெற்றி கண்டிருக்கிறேன் என்பதை பெருமையாய் கூறிக் கொள்கிறேன். ஆரம்பத்தில் அழுது வந்த பிள்ளைகளை முடிவில் மிஸ் லீவு வேண்டாம், பள்ளிக்கூடமே இருக்கட்டுமே” என்ற முருகனை, என் முந்தானையின் முகம் துடைத்த எனது மதுமிதாவையும், “அடுத்த வருடமும் நீங்களே எங்களுக்கு வாங்களேன்” என்ற தேவியையும், பள்ளி வந்தவுடன் எனக்கு ஸ்னாக்ஸ் தரும் அண்ணாமலையையும் விடுப்பிலே இருந்தாலும் என் நினைவு விட்டு நீங்காத என் பிள்ளைகளுக்கு நான் ஸ்கூல் அம்மாவாய் இருந்திருக்கிறேன் அல்லவா!

இதே மன் நெகிழ்வோடு எனது பகிர்வை முடிக்கிறேன்.

பின்குறிப்பு:

இவையாவும் பெண் ஆசிரியர்களால் மட்டும் தான் முடியுமா என்றால் இல்லை. ஏனென்றால் இறைவன் உலகை படைக்கும் போதே ஆண் பெண் இருவருக்குள்ளும் எல்லா குணங்களையும் கொடுத்திருக்கிறார். அந்த நல்ல குணங்கள் வெளிப்படும் சமயத்தில் ஆண்களும் அன்னையராய் வாழ முடியும்.

கற்பித்தலில் ஆர்வமிருக்கும் இக்கால ஆண் ஆசிரியர்கள் நவீன யுக்திகளைக் கையாண்டு ஆடல் பாடலோடும் கணினியோடும் நடத்தும் போதும் மாணவர்கள் ஒன்றிப் போய்விடுகிறார்கள். இந்தச் சகிப்புத் தன்மை, பொறுமை, அன்பு, கற்பித்தல் திறன் அனைத்தும் அர்த்தனாரீசுவரராய் விளங்கும் ஒன்றாம் வகுப்பு எடுக்கும் ஆண் பெண் ஆசிரியர்கள் அனைவருக்கும் அவசியம்.

இந்தப் பகிர்வு எனது அனுபவம் மட்டுமே! மிகைப்படுத்தவோ சுயவிளம்பரமோ அல்ல. இதனைக் கண்ணுறும் ஆசிரியர் பெருமக்களுக்கு எனது பகிர்வில் இப்படி செய்திருக்கலாமே, இன்னமும் கூட நன்றாயிருந்திருக்கலாமே என்று நினைத்தால் உங்கள் பகிர்வை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். என்னுடையது ஏற்புடையதாயிருப்பின் உங்கள் செயல்பாடுகளோடு சேர்த்துச் கொள்ளுங்கள். ஏதேனும் குறைகள் இருப்பின் உங்கள் கருத்துக்களை இட்டு நிறைவாக்குங்கள் என்று கூறி பகிர்வதனை முடிக்கிறேன்.

Grade: 
1

Subject: 
Tamil

Term: Term 1