Towards a just, equitable, humane and sustainable society

பசுவும் கன்றும்

 பசுவும் கன்றும்

சமச்சீர் கல்வி, தமிழ்,வகுப்பு 2, பாடம் 1

ர.நாகம்மா,ர.புஷ்பவல்லி,ச.நிர்மலா

  1. குறிக்கோள்கள்:

இயற்கை சார்ந்த பாடல்களைக் கேட்டறிதல் (கேட்டல்)

படங்களோடு கூடிய சொற்களை அறிதல் மற்றும் படக்கதையைப் பார்த்து நிகழ்வைக் கூறுதல்.

விலங்குகளின் இளமைப் பெயர்களை அறிதல் (எழுதுதல்)

ஈடுபடுதல்:

செயல்: 1

ஆசிரியர் செயல்பாடு: மாணவர்கள் முதல் வகுப்பில் பாடிய சின்னச் சின்ன நாய்க்குட்டிப் பாடலை ஆசிரியர் மாணவர்கள் அனைவரும் பாடுதல்.

மதிப்பீடு: மாணவர்களின் உற்சாக பங்கேற்பினை ஆசிரியர் பாராட்டுதல். பாட்டில் பங்கேற்காத மாணவர்களை நன்றாக பாடும் மாணவர்களோடு அமர வைத்து, நன்கு பாடத் தெரிந்த மாணவர்கள் ஒவ்வொரு வரியாக பாட, மற்ற மாணவர்கள் பின் தொடர்ந்து பாடுதல். ஆசிரியர் கூர்ந்து கவனித்து, சேர்ந்து பாடுதல்.

செயல்: 2

ஆசிரியர் செயல்பாடு: ஆசிரியர் மாணவர்களிடம் விலங்குகள் பற்றிய வினாக்கள் கேட்டல்.

  1. உனக்கு பிடித்த விலங்கு எது?
  2. உன் வீட்டைச் சுற்றி என்னென்ன விலங்குகள் பார்த்திருக்கிறீர்கள்?

மாணவர் செயல்பாடு: மாணவர்கள் பின்வரும் பதில்களை அளிக்கலாம்.

  1. பிடித்த விலங்கு நாய், பூனை, கிளி, மாடு, யானை
  2. நாய், பூனை, பன்றி, மாடு,கோழி,முயல்…

மதிப்பீடு:

மாணவர்கள் சரியான விடையை அளிக்கிறார்களா என்பதைக் கவனித்தல். சரியான விடை அளிக்கவில்லை.என்றால் அவர்களை விடை அளிக்க உந்துதல்.

ஆசிரியர் செயல்பாடு: இவற்றின் குட்டிகளை எவ்வாறு அழைப்பாய்?

மாணவர் செயல்பாடு: ஆட்டுக்குட்டி, மாட்டுக்குட்டி, யானைக்குட்டி, பூனைக்குட்டி, கோழிக்குஞ்சு, கிளிக்ககுஞ்சி, அணில் பிள்ளை, எலிக்குட்டி.

மதிப்பீடு: மாணவர்கள் குட்டி, குஞ்சு போன்ற சொற்களைச் சேர்த்து விலங்குகளின் குட்டிகளின் பெயர்களை சொல்லத் தெரிகிறதா என்பதைக் கவனித்தல்.

ஆராய்தல்:

செயல்: 1

ஆசிரியர் செயல்பாடு: வீட்டின் அருகில் மாணவர்கள் காணும் விலங்குகள் பற்றிய செய்திகளைக் சேகரித்து வரச் செய்தல், பின் ஆசிரியர் ஒவ்வொரு குழுவிற்கும் ஒவ்வொரு தலைப்பு கொடுத்து (விலங்குகளின் படங்கள்/பெயர்கள்), அத்தலைப்பில் (குழுவாக) 10 நிமிடங்கள் கலந்துரையாடியபின், பின்வரும் கேள்விகளுக்குப் பதிலளிக்கச் செய்தல்.

  1. உனக்கு கொடுக்கப்பட்ட விலங்கு என்னென்ன செய்யும்? எங்கு வாழும்?
  2. என்னென்ன உண்ணும்?
  3. அது தன் குட்டியை எவ்வாறு பராமரிக்கும்/பாதுகாக்கும்?
  4. அது தன் குட்டிக்கு என்னென்ன செய்யும்?

மாணவர் செயல்பாடு: நாய் என்ற தலைப்பில் பேசும் மாணவர்கள் அளிக்கும் பதில்கள்.

  1. நாய் வீட்டைக் காக்கும்
  2. வீட்டினும் தெருவினும் வாழும்
  3. சோறு, முட்டை, கறி, மீன் உண்ணும்
  4. நாய் குட்டுகளுக்குப் பாலூட்டும்

செயல்:2

ஆசிரியர் செயல்பாடு:

ஆசிரியர் தன்னிடம் இருக்கும் பட அட்டைகளைக் காட்டுதல், நிகழ்வை கூறச் செய்தல். மாணவர் கூறும் நிகழ்வை கரும்பலகையில் ஆசிரியர் தொகுத்து எழுதுதல், படத்தை தனித்தனியாக காட்டி பாடல் வரிகளோடு தொடர்புபடுத்துதல், பாடலை வரைபடத்தில் எழுதி கரும்பலகையில் ஒட்டுதல்.

மாணவர் செயல்பாடு:

மாணவர்கள் பட அட்டையில் காண்பதைக் கூறுதல்.

எ.கா:

1. மாடு புல் மேய்கிறது.

2. கன்னுக்குட்டி துள்ளிக் குதிக்குது.

மதிப்பீடு: மாணவர்களின் ஈடுபாட்டைக் கவனித்தல்.

விளக்குதல்

செயல்:1

ஆசிரியர்  செயல்பாடு: பசுவும் கன்றும் பாடலை அறிமுகப்படுத்துதல் – பதிவு செய்த பாடலை ஒலிக்கச் செய்தல்- (பதிவு செய்ய வில்லையென்றால் பாடலைப் பாடிக்காட்டுதல்)

மாணவர் செயல்பாடு: மாணவர்கள் பாடலைக் கேட்டுக் கொண்டே புத்தகத்தில் பாடல் வரிகளை விரல் வைத்து கவனித்தல் பிறகு சேர்ந்து பாடுதல்.

மதிப்பீடு: மாணவர்கள் அனைவரும் ஒலிக்கும் வரிகளுக்கு விரல் வைக்கின்றனரா என்பதைக் கவனித்தல்.

செயல்:2

ஆசிரியர் செயல்பாடு: மாணவர்களின் வாசித்தலை மேம்படுத்த ஆசிரியர் மாணவர்களை நான்கு குழுக்காளாகப் பிரித்து ஒவ்வொரு குழுவிடமும் பாடல் பத்திகளை கொடுத்தல். பின் ஒவ்வொரு குழுவும் பாடல் வரிகளைச் சொல்லிக் கொண்டே பத்திகளை வரிசைப்படுத்திக் கூறுதல். (படம் அடுத்த பக்கத்தில் உள்ளது)

மாணவர் செயல்பாடு: மாணவர்கள் பாடல் வரிகளைச் சொல்லிக் கொண்டே வரிசைப்படுத்துதல்.

மதிப்பீடு: சரியாக வரிசைப்படுத்த குழுவிற்கு ஆசிரியர் வழிகாட்டுதல்.

செயல்:3

ஆசிரியர் செயல்பாடு: ஆசிரியர் மாணவர்கள் குழுக்களில் பாடல் வரிகளைத் தனித்தனியாக கொடுத்து அவற்றை பத்திகளாக வரிசைப்படுத்தக் கூறுதல்.

மாணவர் செயல்பாடு: மாணவர்கள் பாடல் வரகளைப் பத்திகளாக உருவாக்குதல்.

செயல்:4 மாணவர்களுக்கு விலங்குகளின் இளமைப் பெயர்களை விளக்குதல்.

ஆசிரியர் செயல்பாடு: முன்னே கேட்டிருந்த கேள்விக்கு மாணவர் அளித்த பதில்களை நினைவு கூறி ஆசிரியர் மாட்டுக்குட்டி, யானைக்குட்டி, எலிக்குட்டி என்பதை பசுக்கன்று, யானைக்கன்று, எலிக்குஞ்சு என்று கூறுவோம் என்று விளக்குவார். பிறகு கரும்பலகையில்,

நாய்-நாய்க்குட்டி

யானை – யானைக்கன்று

பசு – பசுக்கன்று

கோழி – கோழிக்குஞ்சு என்று எழுதுவார்.

மாணவர் செயல்பாடு: மாணவர்கள் ஆசிரியர் விளக்குவதை கூர்ந்து கவனித்தல் அவர் எழுதுவதை அவரவர் நகலில் எழுதி கொள்ளுதல்.

மதீப்பீடு: மாணவர்கள் இளமைப் பெயர்களை புரிந்து கொள்கிறார்களா என்பதை கவனித்தல்

செயல்:5 புதிய சொற்களை அறிமுகப்படுத்துதல்

ஆசிரியர் செயல்பாடு: ஆசிரியர் கீழ்க்காணும் சொற்களுக்கு வினாக்கள் மூலம் பொருள் புரியச் செய்தல்

பசு தோட்டத்தில் மேயுது – “மேயுது என்றால் என்னவாக இருக்கும்?”

-தின்னுது, சாப்பிடறது – போன்ற பதில்.

மேயுது என்றால் உண்ணுதல் என்பதை விளக்குதல்.

அதைப்போல் நாவு என்ற சொல்லை அறிமுகப்படுத்த ஆசிரியர், “பசு எதன் மூலம் கன்றை நக்குகிறது?” என்று கேட்பார்.

-நாக்கு என்ற பதில் வரலாம்.

அப்பொழுது ஆசிரியர் பாடலில் எதனால் நக்குதல் என்று கொடுக்கப்பட்டிருக்கிறது? என்று கேட்டு, நாக்கு என்பதையே நாவு என்போம் என்பதை விளக்குதல்.

ஆசிரியர் அண்டை என்ற சொல்லை அறிமுகப்படுத்த, உன் அண்டையில் உட்கார்ந்திருக்கும் மாணவனின் பெயர் என்ன என்று கேட்கும் பொழுது அந்த மாணவன் அவன் அருகில் இருக்கும் மஆணவனின் பெயரைச் சொல்லுவான். அப்பொழுது அண்டை என்றால் ‘அருகில்’ என்பதை விளக்குவார்.

செயல்: 6 ஒத்த ஓசையில் முடியும் சொற்களை மாணவர்களுக்குப் புரிய வைத்தல்.

ஆசிரியர் செயல்பாடு: ஆசிரியர் ‘ து என முடியும் சொற்களைப் பாடலில் அடிக்கோடிட்டுக் காட்டச் செய்தல்.

அடிக்கோடிட்ட சொற்களைச் செய்கை மூலம் மாணவர்களைச் செய்து காட்டச் செய்தல் – எ.கா. மேயுது, குதிக்குது, கொடுக்குது.

மாணவர் செயல்பாடு: மாணவர்கள் ‘து’ என முடியும் சொற்களுக்கு அடிக்கோடிட்டு காட்டுதல். மற்றும் சொற்களுக்கான செய்கைகளைச் செய்து காட்டுதல்.

விரிவாக்குதல்:

செயல்: 1

ஆசிரியர் செயல்பாடு: மாணவர்களின் கற்பனைத் திறனை மேம்படுத்தவும் எழுதும் திறனை மேம்படுத்தவும் பிவரும் செயல்பாட்டைச் செய்தல்.

ஆசிரியர் மாணவர்களை அவர்களுக்கு எந்த விலங்கு மிகவும் பிடிக்கும் என்று கேட்பார். பிறகு, பின்வரும் கேள்விகளைக் கேட்பார்.

  1. உன்னிடம் ஒரு செல்ல பிராணி / விலங்கு இருக்கிறதா?
  2. உனக்கு ஒரு செல்ல பிராணி வளர்க்க இடம் கொடுத்தால் எந்த விலங்கை வளர்ப்பாய்?
  3. அதன் பெயர் என்ன?
  4. உன்னுடைய செல்ல பிராணி என்னென்ன செய்யும்?
  5. நீ உன் செல்லப் பிராணியை எவ்வாறு பராமரிப்பாய்?

மாணவர்கள் செயல்பாடு: மாணவர்கள் விலங்குகளைப் பற்றி பேசுதல். எ-கா

1.ஆம் / இல்லை

2.என் செல்லப் பிராணி பூனை

3. அதன் பெயர் சாமி

4. அது பாலைக்குடிக்கும், மரத்தில் ஏறும்.

5. நான் அதற்கு குளிப்பாட்டுவேன். மீன் தருவேன், விளையாடுவேன்.

பிறகு ‘மடிப்புப் புத்தகத்தை’ தயாரிப்பர். மடிப்புப் புத்தகக் கதையில் மாணவர்கள் படம் வரைந்து செல்லப்பிராணியைப் பற்றி ஓரிரு வரிகளில் எழுதுவார்கள்.

மதிப்பீடு: மாணவர்கள் எழுதும் பெயர்களில் எழுத்துப்பிழை இருந்தால் ஆசிரியர் அதை சரியாக எழுதிக்காட்டுதல். அதை உள்வாங்கச் செய்தல்.

செயல்: 2

ஆசிரியர் செயல்பாடு: மாணவர்கள் கைவிரலில் மை தொட்டு அவர்களுக்குப் பிடித்த உருவங்களை உருவாக்கி அதன் பெயரைக் கீழே எழுதக் கூறுதல், எழுதத் தெரியாத மாணவர்களுக்கு ஆசிரியரே எழுதிக் கொடுத்து அந்த சொல்லின் மேல்விரல் வைத்து உள்வாங்கச் செய்தல்.

மாணவர் செயல்பாடு: மாணவர்கள் மையினால் உருவங்களை வடிவமைத்துப் பெயரை எழுதுதல்.

மதிப்பிடல்

செயல்:1

ஆசிரியர் செயல்பாடு: மாணவர்கள் அனைவரும் பாடலைச் செய்கைகளுடன் குரல் ஏற்றத் தாழ்வுடன் பாடக் கூறுதல்.

மாணவர் செயல்பாடு: மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பாடுதல்.

மதிப்பீடு: ஆசிரியர் மாணவர்களோடு முதலில் பாடி, பிறகு அவர்களையே பாடச் செய்து உற்சாகப்படுத்துதல்.

செயல்:2

ஆசிரியர் செயல்பாடு: ஆசிரியர் பாடலோடு பொருந்திய பட அட்டைகளைக் கொடுத்து பாடலை வரிசையாக பாடிக்கொண்டு வந்து நிற்கும் படி கூறுதல்.

ஆசிரியர் ஒவ்வொரு குழுவிலும் ஆறு பேர் இருக்கச் செய்து, அவர்களிடம் அட்டைகளைக் கொடுப்பார். அவர்கள் பாடலின் வரிசைப்படி தங்களை வரிசைப்படுத்திக் கொள்வார்கள். அவர்கள் வரிசைப்படுத்தியது சரியா என மற்ற மாணவர்கள் கூறுவர்.

மாணவர் செயல்பாடு: மாணவர்கள் பாடலை சரியாக் பாடிவரிசையாக நிற்றல்.

மதிப்பீடு: ஆசிரியர் வரிகளைச் சரியாக கவனித்தல்.

செயல்:3

ஆசிரியர் செயல்பாடு: மாணவர்களால் வாசிக்க முடிகிறதா என்பதை மதிப்பிட ஆசிரியர் பாடலில் உள்ள சொற்களைத் தனித்தனியாக வெட்டி, ஒரு பெட்டியில் போட்டு மாணவர்களை ஒவ்வொரு குழுவாகக் கூப்பிட்டு, அந்த சொற்களைப் பாடலின் படி முறைப்படுத்திச் சொல்லுவார்.

மாணவர் செயல்பாடு: மாணவர்கள் ஆர்வமுடன் சொற்களை படித்து, பாடலின் படி வரிசைப்படுத்துவர்.

மதிப்பீடு: ஆசிரியர் மாணவர்களுக்கு சொற்களை வாசிக்க தெரிகிறதா என்று கூர்ந்து கவனித்தல், சரியாக அடுக்குவற்கு வழிகாட்டுதல்.

To Download the Teaching Learning Material(TLM), Please click the link:கற்றல் கற்பித்தல் பொருள்கள்

 

Grade: 
2

Subject: 
Tamil

Term: Term 1