Towards a just, equitable, humane and sustainable society

என்னைப் பற்றி

0
No votes yet
0
Post a comment

வகுப்பு: இரண்டாம் வகுப்பு

பாடம் : தமிழ்                                                    

தலைப்பு : என்னைப் பற்றி

முதல் நாள்: முன் ஆயத்தம்

முதலில் பாடப்பகுதியைக் கதையாகக் கூறினேன். கதை கூறும்பொழுதே முக்கியச் சொற்களைக் கரும்பலகையில் எழுதி, குழந்தைகளையும் எழுத வைத்தேன். ஒவ்வொரு முறையும் கேள்விகள் பல எழுப்பிக் குழந்தைகளுடன் கலந்துரையாடினேன். (உ.ம்) “கபிலனின்  அப்பா மாற்றலாகி வேறு ஊருக்குப் போகிறான் என்றால், கபிலனுக்கு எப்படி இருந்திருக்கும்?” என்றதற்குக் கஷ்டமாக இருந்திருக்கும் என்றனர். “ஏன் கஷ்டமாக இருக்கும்?” என்றதற்குச்  ‘சிலரை விட்டுட்டு போவனும்.  அந்த ஊரில் நண்பர்கள் இல்ல, புது ஸ்கூல், பணம் கட்டனும்னு கஷ்டப்படுவாங்க, அம்மா வேலைக்குப் போவனும்’ போன்ற பதில்களை அளித்தனர். குழந்தைகள் தாங்கள் கஷ்டமாக நினைத்ததைக் கோர்வையாக்கி பதில்களை அளித்தது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. குழந்தைகளின் எதிர்பார்ப்புகளை இதன்மூலம் நாம் அறிந்துகொள்ள முடியும்.

கோடைவிடுமுறை:

‘கோடைவிடுமுறை’ என்ற வார்த்தையைக் குழந்தைகள் வாயிலிருந்து வரவழைக்க நான் பெரும்பாடுபட்டேன். ‘எப்பொழுதெல்லாம் நமக்கு விடுமுறை  கிடைக்கும்? அதிகமான விடுமுறை நாட்கள் எப்பொழுது கிடைக்கும்?’ போன்ற கேள்விகளை எழுப்பியும்  ‘விடுமுறை’  என்ற சொல்லைக் கூறாமல் Leave என்றே குழந்தைகள் கூறுகின்றனர்.   சரி அந்த leave - ல் எப்படி இருக்கும்? வெயில் எப்படி இருக்கும்? – என்று வினாக்கள் கேட்க ‘ஜாலியா,  ‘செம வெயிலா’ என்றான் அயன்.  ‘கத்திரி வெயில், செம வெயில். வெளியில் வந்தால் ‘மஞ்சள் காமாலை’ வரும் போன்ற பதில்களைக் கூறினான். அவன் கூறிய அனைத்தையும் கரும்பலகையில் எழுதிப் போட்டு, இப்படி இருக்கும் காலத்தை என்ன சொல்வர்? எனக் கேட்டதும் ‘வெயில் காலம்’ என்றனர். செம வெயில், கத்திரி வெயில், மஞ்சள் காமாலை வரும், அது வெயில் காலம் என்று கூறினோமே அதைக்  ‘கோடைகாலம்’ என்பர் என்று விளக்கி ஆண்டுத் தேர்வு விடுமுறை, கோடை விடுமுறை என்று கூறினேன்.

எழுத்துக்களை மனப்பாடம் செய்வதால் வரும் சிக்கல்கள்:

‘கத்திரி வெயில்’ என்ற சொல்லைக் கரும்பலகையில் எழுதச் சொன்ன போது ஒரு மாணவன் எழுதவில்லை. ‘சரி’,’கரி’ என்று எழுதிக் காண்பித்து ‘ரி’ என்ற எழுத்தை எழுத வைத்தேன். அதோடு நிறுத்தியிருக்கலாம். ‘ரீ’ எப்படி எழுதலாம் என்று கேள்வி எழுப்ப, அக்குழந்தை நெடிலுக்குத் துணைக்கால் போட வேண்டும் என்பதைத் தவறாகப் புரிந்து கொண்டதால் ‘ரீர்’ என்று எழுதினான்.  என் நிலையை நினைத்துப் பாருங்கள். என்ன செய்வேன்?! மீண்டும் திருத்தம் செய்து ‘ரீ’ என்று எழுத வைத்தேன். இதே போல் ‘சின்னு’ என்ற நாய்க்குட்டியின் பெயரைச் ‘சின்னு’ என்று எழுதுவதா இல்லை ‘ச்சின்னு’ என்று எழுதுவதா என்று மாணவர்களிடையே ஒரு குழப்பம் நிலவியதற்குக் காரணம் எழுத்துக்களை மனப்பாடம் செய்வதால்தான்.

முதல் நாள்:

தொடர்ந்து கதையைக் கூறினேன்.  கபிலனைப் புதுப்பள்ளியில் சேர்த்து விட்டனர். அன்று அவன் அம்மாவுடனும், சின்னுவுடனும் பள்ளிக்குச் சென்றான். ‘அங்குப் பார்த்தால் தோரணம் கட்டி அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. கோலம் போடப்பட்டிருந்தது. ஏன்?’ என்ற வினாவை நான் எழுப்ப “exhibition அதனால் DIS வருகிறார். ஜாலி, dance நடக்குது சுத்தம் செய்யனும். புதுப்பசங்க சேர்வாங்க” போன்ற பல பதில்கள் வந்தன. ‘முதல்நாள்’ என்ற வார்த்தையைக் குழந்தைகளிடம் இருந்து பெற முடியவில்லை. பின்னர் “சனி ஞாயிறு முடிந்து  monday school போவோம் இல்லையா அது எந்த நாள்?” என்ற கேள்விக்கு school நாள் என்ற பதில் தான் கிடைத்தது. பின் நானே ‘முதல்நாள்’ என்று கூறிக் கரும்பலகையில் எழுதிப் போட்டு வாசிக்கப் பயிற்சிகள் அளித்தேன்.

ஆங்கில வார்த்தைகள் அதிகம் தெரிந்திருந்தன:

‘மகிழ்ச்சி’ என்ற வார்த்தையை வரவழைக்கக் கபாலி படத்தை மாணவர்களிடையே நினைவுகூர்ந்து “ரஜினி அடிக்கடி ஒரு வார்த்தை சொல்வாரே” என்று நான் கூறிமுடிக்கும் முன்னரே ‘நெருப்புடா’ என்று கூறி பாடலைப்பாடினர். பின் நானே ‘மகிழ்ச்சி’ என்ற சொல்லைக் கரும்பலகையில் எழுதினேன். ‘மகிழ்ச்சி’ எனும் சொல் தெரியாவிட்டாலும் Happy, Jolly போன்ற ஆங்கிலச் சொற்கள் மாணவர்களுக்குத் தெரிந்திருந்தன. இதேபோல ஆசிரியருக்குப் பதிலாக teacher, மணிக்குப் பதிலாக bell, வகுப்புக்குப் பதிலாக class என ஆங்கிலச் சொற்களையே அதிகம் அறிந்திருந்தனர்.

வாசிப்புப் பயிற்சி:

மாதிரிப்படித்தல் முறையில் நான் படிக்க, பின் மாணவர்கள் படித்தனர். இருவர் இருவராகவும் குழுவாகவும்  முக்கியச் சொற்களை வட்டமிடவைத்தும் வாசிக்கப் பயிற்சிகள் கொடுத்தேன். அன்பரசன் எனும் மாணவர் ‘’யோ“ வை வட்டமிட்டு ‘எனக்கு அந்த எழுத்துதான் தெரியவில்லை. அப்புறம் எப்படி நான் அந்த வார்த்தையைப் படிப்பேன்?’ என்று கேட்டு என்னை அதிரவைத்தான். (உ.ம்) ‘மகிழ்ச்சியோடு’ என்ற அந்த வார்த்தையை மிகச் சரியாகப் படித்தான். ஆனால் ‘யோ’ என்ற எழுத்து மட்டும் தெரியவில்லை. மாணவர்களுக்கு என்ன தேவை என்பதை  இதன் வாயிலாக எனக்கு உணர்த்திய அன்பரசனுக்கு நன்றி.

இரண்டாம் நாள்: முன் ஆயத்தம்

நினைவு கூறும் வகையில் குழந்தைகளிடம் கதையைக் கூறச் சொன்னேன். குழந்தைகள் மிக அழகாகத் தெளிவாகக் கதையைக் கூறியது ஆச்சரியமாகவும்  மகிழ்ச்சியாகவும் இருந்தது. நாய்க்கு என்ன பிடிக்கும்? என்றதற்கு ‘ரொட்டி’ என்று உடனே குழந்தைகள் பதில் கூறியது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பின்னர் அனைவரையும் புத்தகத்தை எடுக்கச் செய்து (பக்கம் – 23) கபிலன் தன்னைப்பற்றிக் கூறியதைப் படிக்கச் செய்தேன். ஒருவரைத் தவிர மற்ற குழந்தைகள் அனைவரும் படித்தது எனக்குத்  திருப்தியைத் தந்தது. கபிலன் கூறியதைப் போல் ஒவ்வொருவரையும் முன்வந்து அவர்களைப் பற்றிக் கூறச் சொன்னேன். உடனே ஷாலினி முன் வந்து தன்னைப்பற்றி அழகாகத் தன்னைப்  பற்றிப்பேசினாள்.  முதலில் பேசிய மூன்று பேருக்கும் ஒவ்வொரு முறையும் நானே  கேள்விகள் கேட்க வேண்டியதாக இருந்தது,  அதன்பிறகு குழந்தைகளே கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர் (உ.ம்) எனக்கு என்ன விளையாடப் பிடிக்கும்? ‘எனக்கு என்ன கலர் பிடிக்கும்?’, போன்ற கேள்விகளைக் கேட்டனர். என் பணியை எளிதாக்கியதுடன் எதிர்பார்க்கப்பட்ட கற்றல் விளைவுகளை இங்கே வெளிக்கொணர்ந்தனர்.  அவை, குழுவில் அறிமுக உரையாடலைக் கேட்டறிதல், மாணவர்கள் சொந்த மொழியில் உரையாடுதல், தகவல் திரட்டும் பொருட்டு வினா எழுப்புதல், சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல், கவனமுடன் கேட்டவற்றைத் தன் சொந்த மொழியில் மறு உருவாக்கம் செய்தல், தாம் பார்த்த / கேட்ட கதையைப்  பற்றிப் பேசுதல்.

கரும்பலகையில் என் பெயர் ………………… என் ஊர் ……………………… நான் …………………..படிக்கிறேன் எனக்கு ………………… விளையாடப் பிடிக்கும் என்று எழுதிப்போட்டு  குழந்தைகளை எழுதச் சொல்லி எழுதுதல் பயிற்சிகள் அளித்தேன்.

மூன்றாம் நாள்: முன் ஆயத்தம்

பின்னர் கபிலனுடன் மற்றொரு மாணவி புதிதாகச் சேர்ந்தாரே அவள்  பெயர் என்ன? என்ற வினா எழுப்பியதும் குழந்தைகள் அனைவருமே மிக்க ஆர்வத்துடன் ‘எழிலரசி’ என்று கூறினர். பின்னர் எழிலரசி என்ன சொல்லி இருப்பார்  என்ற கேள்வி எழுப்பியவுடன் “என் பெயர் எழிலரசி,  என் ஊர் ……… “ என்று தொடர்ந்து கூற, நான் கரும்பலகையில் எழுதிப்போட்டு வாசிக்க வைத்தேன்.

நான்காம் நாள்: முன் ஆயத்தம்

இன்று வகுப்பில் குழந்தைகளிடம் “மாம்பழம்” தன்னைப்  பற்றிப் பேசினால்  என்ன பேசும்” என்ற வினாவை எழுப்பினேன். பின் குழந்தைகள் கூறிய பதில்களைக் கரும்பலகையில் பட்டியலிட்டேன்(உ.ம்)

“என் பெயர் …………………

நான் ………………… நிறத்தில் இருப்பேன்

நான் ……………….. மரத்தில் காய்ப்பேன்

நான் …………………. இருப்பேன்”

போன்றவற்றை எழுதி குழந்தைகளையும்  எழுதவைத்துச்  சொந்த நடையில் எழுதப் பயிற்சிகள் அளித்தேன்.

வகுப்பறை என்பது ஆசிரியருக்கும் கற்றலுக்குமான இடம் என்பதையும்  ‘எனக்கு எல்லாம் தெரியும்’ என்ற  எண்ணத்துடன் நிற்கும்பொழுது தான், நான் ஒன்றுமேயில்லை என்பதையும் மாணவர்கள் எனக்குக் கற்றுத்தருகின்றனர். என்னுடைய கற்பித்தல் எவ்வாறுள்ளது என்பதைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக என் மாணவர்கள் உள்ளனர்.  என்னதான் திட்டமிட்டாலும் வகுப்பில் குழந்தைகள் அதை அப்படியே மாற்றி விடுகின்றனர். “உன் விருப்பத்திற்குச் சொல்லிக் கொடுக்காதே என் விருப்பதிற்குச் சொல்லிக்கொடு சொல்லிக் கொடு” என்று மாணவர்கள் என்னிடம் கூறுவது போல் ஒவ்வொரு வகுப்பிலும்  உணர்ந்து வருகிறேன். அனைத்துக் குழந்தைகளும் உயிரோட்டமான வகுப்பறையில்  ஆர்வத்துடன் மிக்க மகிழ்ச்சியுடன் ஈடுபட்டது எனக்கு மனநிறைவைத் தந்தது.

Grade: 
2

Subject: 
Tamil

Term: Term 2

0
No votes yet
0
Post a comment