Towards a just, equitable, humane and sustainable society

வீடு எங்கே?

0
No votes yet
0
Post a comment

வகுப்பு: இரண்டாம் வகுப்பு            

பாடம்: தமிழ்

தலைப்பு: வீடு எங்கே?

பருவம்:  1

மாணவர்கள் அவர்தம் தாய்மொழியில் வாசிக்க இயலாமல் தவிக்கிறார்கள் என்பது ஆசிரியர் அனைவருக்கும் தெரிந்த ஒரு முக்கியமான வகுப்பறைச் சிக்கல். பல குழந்தைகளின் இடைநிறுத்தத்திற்கு இதுவே ஒரு முக்கிய காரணமாகவும் அமைகிறது. என் குழந்தைகள் வாசிக்கச் சிரமப்படக் கூடாது என்பதற்காகப் பல  முயற்சிகளை எடுத்து வருகிறேன். அவ்வகையில், வகுப்பில் நடந்த சுவாரஸ்யமான சில உரையாடல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

வகுப்பறைக்கு வெளியே: ‘மாலை மணியடித்ததும் எங்கு செல்வோம்?’ என நான் வினா எழுப்பியதும் குழந்தைகள் ‘வீட்டுக்கு’ என்றனர். உடனே நான், ‘எல்லோரும் ஒரே வீட்டிற்குப் போகிறோமா?’ என்றதும், ‘இல்லை’ என்ற பதில் அளித்ததுடன் கீர்த்தி ‘’எங்கள் வீடு கூரை வீடு’’ என்றான், உடனே நான் கரும்பலகையில் ‘கூரை வீடு’ என எழுதினேன்,   பின்னர் ‘ஓட்டு வீடு, மெத்தை வீடு, பெரிய வீடு’ போன்றவற்றைக் குழந்தைகள் பட்டியலிட நான் அவற்றைக்  கரும்பலகையில் எழுதிப் படித்துக் காட்டினேன்.

  

பள்ளிக்கு வெளியே குழந்தைகளை வீதிக்கு  அழைத்துச் சென்று ஒவ்வொரு வீட்டின் அமைப்பையும் உற்றுநோக்கச் செய்த பின்,  நேரடி அனுபவத்தைப் பெற்ற குழந்தைகள் ஆர்வமுடன் என்னிடம் வினாக்கள் எழுப்பி பல தகவல்களைத் தெரிந்துகொண்டனர்.

வீடு- வகுப்பறை உரையாடல்: பின்னர் ‘ஒரு வீடு என்றால் என்னென்ன முக்கியமானவைகளாக இருக்கும்?’ என்று நான் எழுப்ப, குழந்தைகள் ஜாமான்கள், துணி, அடுப்பு, காய்கறி, பிரிட்ஜ், எனப் பட்டியலிட்டனர். நான் கேட்ட  கேள்வி சரியில்லை என்பதை உடனே உணர்ந்தேன் என்றாலும் குழந்தைகள் மனதைப் புண்படுத்த விரும்பாது அவர்கள் கூறியவற்றைக் கரும்பலகையில் எழுதினேன். பின்னர் மழை வெயில் வந்தால் வீட்டில் நனைகிறோமா? வெயில் வீட்டினுள் அடிக்கிறதா?  போன்ற தொடர்புடைய கேள்விகள் பலவற்றை எழுப்பி ‘கூரை மேலே இருக்கனும்’ என்று நான் எதிர்பார்த்தப் பதில் வரும்வரை குழந்தைகளுடன் கலந்துரையாடினேன். அதன் பின் கரும்பலகையில் எழுதிய அனைத்தையும் வாசிக்கப் பயிற்சி அளித்தேன்.

சகமாணவரிடமிருந்து கற்றல்:

குட்டிக்குரங்கின் படத்தைக் காண்பித்து ‘இது என்ன?’ என்று நான் கேட்டதும்  மாணவர்கள் ‘குட்டிக் குரங்கு’ என்றனர். மாணவி கேசவர்த்தினியைக் ‘குட்டிக்குரங்கு’ என்று எழுதச் சொன்னேன். அவள் எழுதும் போது ‘ங்’ என்ற எழுத்துத் தெரியவில்லை. உடனே சக மாணவி ஷாலினி அவளிடம் “சிங்கத்தில் வருமே, யோசிச்சி போடு” என்றாள். நான் குழந்தைகளின் மொழியை அங்கு உணர்ந்தேன்.

பாடல் கதையாக:

நான் கதையைக் கூறினேன்,  குழந்தைகள் மிக ஆர்வமாகக்  கேட்டனர். “குட்டிக்குரங்கு வீடு இல்லாமல் தவிக்கிறது, குரங்கிடம் காசு இல்லை, குரங்குக்குப் பிடித்தவற்றையும் அதற்கு எளிதில் கிடைப்பதையும் கொண்டு வீடு கட்டித்தரலாமா?” என்று நான்  கேட்டேன்.

உடனே ஒரு மாணவன்  (அயன்) ‘அப்பளம்’ என்றான் (புத்தகத்தை முன்பே பிரித்துப் பார்த்த அனுபவமாக இருக்கலாம்).  முறுக்கு, வடை, தோசை, பூரி, திராட்சை, ஆப்பிள், ஆரஞ்சு எனக் குழந்தைகள் குரங்குக்குப் பிடித்தப் பலவற்றைப்  பட்டியலிட, அனைத்தையும் கரும்பலகையில் எழுதினேன்.

பாடல் ஓவியமாக:

“உணவுப் பொருட்களைக் கொண்டு வீடு வரைந்து காட்டுங்கள்” என்று கூறிவிட்டு நானும் மாணவர்களோடு சேர்ந்து வரைய ஆரம்பித்தேன்.  பின்னர் குழந்தைகள்  அனைவரையும் அருகே அழைத்து நான் வரைந்த வீட்டைக் காண்பித்து, நான் பயன்படுத்திய உணவுப்  பொருட்களைக் கரும்பலகையில் பட்டியலிட்டுப் பின்  குழந்தைகளையும் வீடு வரைந்து  அதே போல் பட்டியலிட்டு வரச் சொன்னேன்.

  

குழந்தைகள் கதை கூறினர்:

நேற்று வகுப்பில் என்னென்ன செய்தோம்? என்ற வினாவை எழுப்பி, நேற்றைய செயல்பாடுகளைப் பற்றிக்  குழந்தைகளை  நினைவுகூற வைத்தேன். குழந்தைகள் ஒவ்வொருவராகக் கதையையும்  நேற்றைய செயல்பாடுகளையும் அழகாக எடுத்துக் கூறினர்.

வகுப்பறையில் வீடு கட்டினோம்:

வீடு எங்கே போனது என நான் கேட்டதும்  குழந்தைகள், “எலி சாப்பிட்டு விட்டது” என்றனர். “யார் யார் என்னென்ன சாப்பிட்டார்கள்?” என்று கேட்டதும் மாணவர்கள் ‘அப்பளம், காகம், தோசை, பூனை, எலி, முறுக்கு வாழைப்பழம்‘ என்று கூறினர்.

“உங்களுக்குப் பிடித்த பொருட்களைக் கொண்டு ஒரு வீடு கட்டலாமா?” என நான் கேட்டவுடன் குழந்தைகள் மிக்க ஆர்வத்துடன் ‘‘தயார்’’ என்றனர். பின் குழந்தைகள் அனைவரையும் கைகளைச் சுத்தமாகக் கழுவச் செய்து வீடு கட்ட ஆயத்தப்படுத்தினேன். பிரட், நீட்டு வத்தல், சக்கர வத்தல், பிஸ்கட்,  மிட்டாய், தோசை, அப்பளம், முறுக்கு போன்ற உணவுப் பொருட்களை அடுக்கி வைத்தேன்.

  

முதலில் எதை எதை  என்னென்னவாக  வைக்கலாம் என்று விவாதித்து ஒருமித்த கருத்துடன் அவற்றைக் கரும்பலகையில் எழுதினேன். (உ.தா) பிஸ்கட், பிரட், கவர். இங்கு குழந்தைகள் ‘ரொட்டி’ என்று பொதுவான மிகவும் எளிய சொல்லைத் தொடர்புபடுத்திக் கூறியது என்னை மிகவும்  வியப்புக்குள்ளாக்கியது. இதைச் செல்வகணபதி என்ற மாணவன் கூறினான். உடனே நான் முன் எழுதியதை மாற்றி ‘ரொட்டி’ என்று எழுதியதைப் பார்த்ததும் அவன் முகத்தில் தான் எத்தனைப் பெருமிதம்! குழந்தைகளின் கருத்துக்களுக்கு நாம் மதிப்பளிக்கும் பொழுது நமது வார்த்தைகளையும், நமது கோரிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் குழந்தைகள் நிறைவேற்றுவர் என்பதில் துளியும் ஐயமில்லை என்பதை நிரூபித்தனர்.

நீட்டு வத்தல் - தூண்,

அப்பளம் -  கூரை,

முறுக்கு, சக்கரவத்தல் – சன்னல்

மிட்டாய் - வாயில்படி

என நானும் குழந்தைகளும் ஒருசேர ஒருமித்தக் கருத்துடன் ஓர் அழகிய வீட்டை உருவாக்கி மகிழ்ந்தோம்.

“இப்பொழுது யார் வருவது?” என நான் வினா எழுப்பியதும் குழந்தைகள்    “நான் எறும்பு, நான் எலி” என்று கைகளைத்  தூக்கினர். மாணவர்களை அழைத்து  அவர்களின் பெயர்களையும் அவர்கள் ஏற்கும் பாத்திரங்களின் பெயர்களையும் எழுதவைத்தேன்.

புதிய பாடல் உருவானது:

குரங்கு எழுதிய பாட்டை மாற்றி எழுத வைத்தேன். இதற்கு முந்தைய செயல்பாட்டில் தயாரான வீட்டின் பொருட்களைப் பட்டியலிட்டுப் பாடலாக எழுதி மாணவர்களைப் படிக்கச் செய்தேன். (உ.ம்) ரொட்டிதான் வீட்டின் சுவர், வத்தல்தான் வீட்டின் தூண் என்று புதிய பாடலை எழுதிப் படிக்கச் செய்தேன்.

தொடர்பணி :

  1. குரங்கு அமைத்த வீட்டை வரைந்து வண்ணம் தீட்டுதல்
  2. பாடப் பகுதியில் வரும் பிடித்த வார்த்தைகளை எழுதிப் படித்து வருதல்.
  3. வேறு உணவுப் பொருட்களைக் கொண்டு விருப்பம் போல் வீடு வரைந்து வண்ணம் தீட்டுதல்
  4. தான் உருவாக்கிய வீட்டைப் பற்றி எழுதுதல்,     புதிய பாடல் உருவாக்குதல்

இறுதியில், ‘’பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்” எனும் திருக்குறளுக்கு ஏற்ப  உணவுப் பொருட்களைப் பகிர்ந்து மாணவர்கள் அனைவரையும் உண்ணச் செய்தேன்.

அனைத்துக் குழந்தைகளும் மிக்க ஆர்வத்துடன் பங்கேற்றது என் மனதிற்கு மகிழ்ச்சியையும், மன நிறைவையும் நீண்ட நாட்களுக்குப் பிறகு புத்துணர்வையும் தந்தது.

குழந்தைகளுடன்  வகுப்பறையில் இருப்பதை மிகப்பெரிய வரமாகக் கருதுகிறேன். உண்மையிலேயே வகுப்பறைதான்  என்னை  உண்மையான ஆசிரியராக்கியது. ஒவ்வொரு ஆசிரியரும் தன் வகுப்பறையில் மாணவராகவே உள்ளனர். வகுப்பறையில் உருவாகும் அத்தனைச் சவால்களையும் திறம்பட சமாளித்து மாணவர்களை வெற்றிபெறச் செய்யும்பொழுது ஒரு பூரிப்பு ஏற்படுமே அதை என்னால் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.

Grade: 
2

Subject: 
Tamil

Term: Term 2

0
No votes yet
0
Post a comment