Towards a just, equitable, humane and sustainable society

நாட்டுப்புறப் பாடல்கள்– பயிற்சிப்பட்டறை

0
No votes yet
0
Post a comment

நாள்: 31.12.2018

நேரம்: 10 முதல் 2 மணிவரை

இடம்: வில்லியனூர், கல்வி வள மையம்

பயிற்சியாளர்கள்: திரு. பிரகாஷ் மற்றும் ஷகிலா.    

பங்கு பெற்றோர்: கவிதா, ராஜதிலகம் மற்றும் மகேஸ்வரி.

 

நோக்கம்:

சிறுவர் பாடல்களை நாமே உருவாக்கி இசை அமைத்துப்  பாடலாம். நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் வகுப்பறையில் தமிழ் மொழிப்பாடம் கற்பதில் ஆர்வத்தைக் கூட்டலாம் என்ற நோக்கத்துடன் பயிற்சிப்பட்டறைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

நாட்டுப்புறப் பாடல்கள் என்பது நாட்டுப்புறங்களில் வாழும் மக்கள் தங்கள் அன்றாட வாழ்விலும், பணியிடங்களிலும் சோர்வையும் களைப்பையும் குறைக்கும் வகையிலும், விழாக்களிலும் பாடும் பாடல்களைக் குறிக்கும். அவை மக்களால் மக்களுக்காக நமது கலாச்சாரத்தைத் தழுவி பாடப்படுவதாலும், நம் பாரம்பரியத்தை எளிய வட்டார வழக்கில் நகைச்சுவை கலந்து கொடுக்கும் தன்மையுடனும் இயற்கை மணத்துடன் கருத்து வளம் நிறைந்தும் காணப்படுவதால் மாணவர்களுக்குத் தமிழ் மொழியைக் கற்பது ஆர்வமாகவும், எளிமையாகவும் அமையப்பெறும்.    

அறிமுக உரையாடல்: நாட்டுப்புறப் பாடல்கள் எவ்வாறு சூழலுக்கு ஏற்ப குழந்தைகள் புரிந்துகொள்ளும் வகையில் எளிய வட்டார வழக்கில் அமைந்துள்ளது என்பதைப் பற்றிய கலந்துரையாடல் நிகழ்ந்தது. உதாரணமாக,சில பாடல்களைப் பிரகாஷ் மற்றும் ஷகிலா அவர்கள் பாடிக்காட்டினர். திரு.பிரகாஷ் அவர்கள்  இசைக்கு மெருகூட்ட மத்தளத்தின் உதவியுடன்  பாடலுக்கேற்ற சூழலை உருவாக்கி ஆசிரியர்களைக் கவர்ந்து ஒருங்கிணைத்தார்.

சிறுவர் பாடல்களுக்கு இசையமைத்தல்: ‘காயா பழமா சொல்லு – உன் கவலையை விட்டுத் தள்ளு’ - என்ற பாடலைப் பாடிக்காட்டினார். பிறகு ‘தவளையண்ணன்’ என்ற பாடலைக் குழுவாக இணைந்து அனைவரும் பாடிப் பழகினோம். பாடலைத் திரும்பத் திரும்பப் பாடி பாடலின் இசைக்குப் பழக்கப்படுத்திக் கொண்டனர். சில இடங்களில் பாடலின் மெட்டை மாற்றிப் பாடிய பொழுது திருமதி.ஷகிலா அவர்கள், ஆசிரியர்களுக்கு உதவி செய்து பாடலின் மெட்டுக்குப் பழக்கினார்.

பாடலின் மூலம் உணர்த்தப்படும் கருத்து: தன்னடக்கம் வேண்டும் தற்பெருமை கூடாது என்ற கருத்தை மாணவர்களிடையே வலியுறுத்த இப்பாடல் பெரிதும் துணை புரியும் என்ற கருத்து உரையாடப்பட்டது.

அடுத்து “தோசைக் கணக்கு தான்” என்ற பாடல், தோசை எவ்வளவு சத்தான உணவு, அம்மா எவ்வாறு அன்பாக அதைச் செய்து குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கிறார். அவ்வாறு பரிமாறும் போது ஆண்களுக்குஅதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆனால், அது தவறானது. ஆண்-பெண் இருவருமே சமமாக வேலைப்பளுவைச் சுமக்கும் போது உணவிலிருந்து கூலி வரை வித்தியாசப்படுத்துவது தவறு போன்ற கருத்துக்களை வெளிப்படுத்தும் இந்தப் பாடலை மிக அழகாகப் பாடிப் பழகினோம். மேலும் தோசையை அனைவருக்கும் பகிர்ந்தளிக்கும் படி அமைந்த வரிகளில் மாணவர்கள்  எண் கணிதம் பயில வாய்ப்பாகவும் இப்பாடல் அமைந்துள்ளது என்பதும் விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து ஆசிரியர்கள் பாடநூலில் உள்ள பாடலுக்கு இசையமைத்துப் பாடிப் பழகவேண்டும் என்று கேட்டனர். இரண்டாம் வகுப்புப்  பாடநூலில் உள்ள “விரைவில் வருவோம் உன்னிடம்” என்ற பாடலைப் புதிய மெட்டில் இனிமையாகப் பாடிப் பழகினோம். இந்தப் புதிய மெட்டை  வகுப்பறையில் மாணவர்களிடம் கொண்டு செல்லலாம் என்று கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும் பயிற்சிப்பட்டறையில் பாடிய பாடல்கள் வகுப்பறைக்கு எடுத்துச் செல்வதற்காகப் பதிவு செய்யப்பட்டன.

இறுதியாக அனைவராலும் பாடல் இயற்ற முடியும் என்பதை ஊக்குவிக்கும் வகையில் அனைவருக்கும் பாடல் எழுத வாய்ப்பளிக்கப்பட்டது. “ஆசிரியர்” என்ற தலைப்பில் பாடல் எழுதுமாறு பணிக்கப்பட்டது. பாடல்கள் இவ்வாறு தான் உருவாகின்றன, அவற்றில் சிறு மாறுதலுக்குப் பிறகு இசையுடன் கலந்து முழுமையான பாடலாக உருவாகிறது. எனவே பாடல் எழுதத் தயங்க வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டது. பயிற்சிப்பட்டறையில் பங்கேற்ற ஒவ்வொருவரும் தனது ஆசிரியரைப் பற்றிய கருத்தை  உணர்வு பூர்வமாகப்  பாடலாக எழுதினர். இச்செயல்பாட்டின் மூலம் வகுப்பறைப் பாடங்களைப் பாடல்களாக மாற்றிக் கொண்டு சென்றால் மாணவர்கள் ஆர்வமுடன் பயில்வர் என்ற கருத்து கலந்தாலோசிக்கப்பட்டது.

ஆசிரியர் பிரதிபலிப்பு: ஆசிரியர்கள் அனைவரும் பாடல்கள் பாடுவதில் மகிழ்ச்சியாகப் பங்குபெற்றனர். பயிற்சிப்பட்டறைக்கான நேரம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், புத்தாண்டிற்கு முதல் நாள் என்பதால், வருவதாகக் கூறிய ஆசிரியர்கள்  பலர்  வர முடியாமல் போனதால்  பங்கேற்றோர்  எண்ணிக்கை குறைவாக இருந்தது.

 

பயிற்சிப்பட்டறையில் பாடிய பாடல்கள்

1) காயா? பழமா?

காயா? பழமா? சொல்லு – உன்

கவலையை விட்டுத் தள்ளு

நீயே இப்படி உம்முன்னு இருப்பது

நியாயம்  தானா? பழமுன்னு சொல்லு

வேணாம் எட்டியே நில்லு – உன்

பேச்செல்லாம் தில்லுமுல்லு

வீணா என்கிட்ட வம்படிக்காதே – நீ

மனசிலே குத்தின முள்ளு

ஆயா வீட்டுக்குப் போனா அதிரச மாவை எடுத்துத் தாரேன்

ஆட்டுப் பாலுலே ஈச்சம் பழத்தை ஊரப் போட்டுத் தாரேன்

யாருக்கு வேணும் அதிரச மாவும் ஆட்டுப்  பாலும் பழமும்

ஏரிக்குப் போனாக்  கெடைக்கும் எனக்குக் கொட்டிக்  கிடக்கு தினமும் (காயா )

2) தவளையண்ணன் பாட்டு

தத்தித் தத்தி ஓடும்போது- அவர்

என்ன சொல்லுவாராம் தவளையண்ணன்

தங்கப்பதக்கம் வாங்கப் போறேன்னுத்

தடுக்கி விழுவாராம் தவளையண்ணன்

 

தாவி குளத்தில் குதிக்கும்போது  - அவர்

          என்ன சொல்லுவாராம் தவளையண்ணன்

ஆவி பிடிக்கப் போறேன்னுச் சொல்லி

            அலட்டிகொள்ளுவாராம்  தவளையண்ணன்

 

கருத்த மேகம்  சுழக்கண்டா - அவர்

என்ன செய்வாராம் தவளையண்ணன்

கத்திக்கிட்டே  வெளியே துள்ளிக்

             குதித்து ஆட்டம் போடுவாராம் தவளையண்ணன்

 

கனத்த மழையும் பெய்யும்போது

               என்ன செய்வாராம் தவளையண்ணன்

பெருத்த குரலில் அழைத்தாலே – மழையும்

                   வலுத்ததென் பாராம் தவளையண்ணன்

 

உரக்கக் கத்தி ஓயும்போது  அவர்

                 என்ன செய்வாராம் தவளையண்ணன் – தான்

இருக்குமிடத்தைப் பாம்புக்குச் சொல்லி

                 இரையாகிப் போவாராம் தவளையண்ணன்.

 

3) தோசைக் கணக்கு தான்

தோசையம்மா தோசை

அம்மா சுட்ட தோசை

அரிசிமாவும் உளுந்து மாவும்

கலந்து சுட்ட தோசை

அப்பாவுக்கு நான்கு

அம்மாவுக்கு மூன்று

அண்ணனுக்கு ரெண்டு

பாப்பாவுக்கு ஒண்ணு

ஆக மொத்தம் பத்து அடுக்கியாச்சு சுட்டு

தோசைக்குள்ளே இப்படியொரு கணக்கிருக்குது – இந்த

தேசத்தோட நிலமையதிலே மறைஞ்சிருக்குது (தோசை)

 

அம்மாவுக்கும்  அப்பாவுக்கும்  ஒரேசாணு வயிறுதான்

அண்ணன்போலப் பாப்பாகூட அதே உசரம்தான்

அடுப்படியில் கிடப்பதாலே அம்மா, பாப்பா இளப்பமா?

ஆம்பிளையா பிறந்துவிட்டாக் கூட ஒண்ணு கிடைக்குமா ? (தோசை)

ஒரே அளவு சட்டியில மண்ணு சுமக்கிறா

ஒரே அளவு  மெனைபிடிச்சு அறுப்பறுக்கிறா

ஆம்பிளைக்குக் கிடைக்கிறது ஆளுங்ககூலி – எங்க

அம்மாவுக்குக் கிடைக்கிறது சித்தாளுக்கூலி (தோசை)    

 

முப்பத்திமூணு சதமானம் சித்தாளுக்கூலி

மீதமறுபத்தேழு சதமானம்  ஆளுங்ககூலி

ஆணும்பெண்ணும் சமமுன்னு சொல்லுது நீதி

ஆபத்தான கணக்கு இது புரிஞ்சுதா சேதி  ( தோசை )

 

(தோசை கணக்கை இப்படி கொஞ்சம் மாத்திப் போடலாமா ?)      

 

தோசையம்மா தோசை

அம்மா சுட்ட தோசை

அரிசிமாவும் உளுந்து மாவும்

கலந்து சுட்ட தோசை

அப்பாவுக்கு மூன்று

அம்மாவுக்கு மூன்று

அண்ணனுக்கு ரெண்டு

பாப்பாவுக்கு ரெண்டு

ஆக மொத்தம் பத்து

காலியாச்சி  தட்டு. ( தோசை )

ஒலிப்பாடல்களைக்கேட்க

Grade: 
1, Pre-Primary, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12

Term:

Subject: 
Tamil

0
No votes yet
0
Post a comment