Towards a just, equitable, humane and sustainable society

துரை. மாலிறையனின் சிறுவர் இலக்கியங்களில் மொழி

புதுவைக் கவிஞர் துரை. மாலிறையன் சிறுவர் இலக்கியங்கள் சிறுவர்களின் மொழிப் புலமையை வளர்க்கும் வகையில் இயற்றப்பட்டுள்ளன. பாடல்களின் மூலம் அவர் எடுத்துச் சொல்லும் விதம் ஆசிரியர்களின் கற்பித்தலை கனிவானதாக ஆக்குகிறது

உலகில் வாழ்கின்ற உயிரினங்கள் தம் உணர்ச்சியை வெளிப்படுத்த ஒலியெழுப்புகின்றன. மயில் அகவுகிறது குயில் கூவுகிறது என்று நாம் வேறுபட்ட வினைச்சொற்களால் குறிக்கின்றோம். ஆனால் மனிதர்கள் மட்டும் பேசுகின்றனர் கூறுகிறோம். ஒருவர் தம் உணர்ச்சியையோ கருத்தையோ மற்றவருக்கு வெளிப்படுத்த கருவியாய் இருக்கும் எதனையும் நாம் மொழியென்று கூறுதல் பொருந்தும். எந்த ஒரு மொழியாக இருந்தாலும் அந்த மொழி தனக்கு உரித்தான இலக்கண வரையறைகளையும் உச்சரிப்பு முறைகளையும் பண்புகளையும் பெற்றிருக்கிறது. அதனால்தான் அது இனிமையானதாகவும் பொருள் பொதிந்ததாகவும் விளங்குகிறது.

புலன்களால் உணரப்படும் குறியீடுகளைக் கொண்டது மொழி. பொருள்களுக்குரிய ஒலி வடிவமான குறியீடுகளைக் கொண்டது பேச்சு மொழி.  ஒலிகளுக்கு வரி வடிவான குறியீடுகளைக் கொண்டது எழுத்து மொழி (நற்றமிழ் கற்பிக்கும் முறைகள் ப.2)

விலங்குகளும் பறவைகளும் எழுப்பிய ஒலிகள் பண்டைக் காலந்தொட்டு இன்றுவரை அப்படியே உள்ளன.  ஆனால் மக்கள் தாங்கள் எழுப்பிய ஒலியினைச் சிறிது சிறிதாகப் பொருள் தரும் ஒன்றாகச் செய்து வாழ்க்கையில் அனைத்து அலுவல்களிலும் பயன்படும் வண்ணம் மொழி வளர்க்கப்பட்டுள்ளது. மொழியானது நம் உணர்ச்சிகளையும் எண்ணத்தையும் வெளியிடும் கருவியாக இருப்பது மட்டுமின்றி அறிவைப் பெருக்கவும் சிந்தனையை வளர்க்கவும் பயன்படுகிறது. எனவே சிறுவயதிலேயே மொழித்திறன்களை வளர்ப்பது மக்கள் கடமையாகும். குழந்தைகள் பிறந்தது முதல் அவர்களின் குடும்பத்திலிருந்தும் வளரும் சூழல்களில் இருந்தும் மொழியைப் பெறுகின்றனர். பொதுவாக மொழி வளர்ச்சி இயல்பான சூழல்களில் நடைபெறுகிறது. அதனால் தான் பள்ளிகளில் கூட ஆரம்ப நிலையில் மொழி கற்பித்தலுக்கு இயற்கையான உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. சிறுவர்களின் மொழியையும் மொழித்திறன்களையும் வளர்ப்பதில் பாடல்கள் முக்கிய இடம் பெறுகின்றன. பாடல்கள் தாளத்துடனும் ஓசைநயத்துடனும் இருப்பதால் சிறுவர்களின் மனதிற்கு மகிழ்ச்சியைத் தருவதாகவும் மனதில் நிலைத்தும் அமைகின்றன. செய்யுள் மூலம் வரலாறு, மருத்துவம், வாழ்க்கைமுறை, நீதி நெறிகள் நமக்கு வழிவழியாகக் கடத்தப்பட்டதின் காரணம் அது எளிதில் மறக்கப்படாமல் இருப்பதற்கே என்று சிறுவர் இலக்கியத்திற்கான விளக்கத்தினை அளிக்கிறார் விழியன்.

மொழி வளர்ச்சியில் பாடல்களின் அத்தகைய முக்கியத்துவத்தை உணர்ந்தே புதுவைக் கவிஞர் துரை. மாலிறையன் பாடல் வடிவில் சிறுவர் இலக்கியங்களை இயற்றியுள்ளார்.  இவருடைய சிறுவர் இலக்கியங்கள் அனைத்தும் சிறுவர்களின் சொற்களஞ்சியத்தை வளர்ப்பதாகவும் மொழியைச் சரியாக உச்சரிக்கக் கற்றுத்தருவதாகவும் அமைந்துள்ளன. துரை.  மாலிறையனின் சிறுவர் இலக்கியங்களில் மொழி குறித்து விரிவாகக் காண்போம்.

துரை. மாலிறையனின் சிறுவர் இலக்கியங்கள்

மேலை நாடுகளில் சிறுவர் இலக்கியம் நன்கு வளர்ச்சி பெற்றிருந்தாலும் தமிழ் இலக்கிய வரலாற்றைப் பொறுத்தவரை பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் தான் சிறுவர்களை வாசகர்களாகக் கொண்ட நூல்கள் இயற்றப்பட்டன. பெரியவர்களுக்கு நம்மால் என்ன கூறிவிட முடியும்? சிறுவர்களுக்கு மட்டுமே நாம் எதையும் கூற முடியும்; கூறவும் வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் கவிஞர் துரை. மாலிறையன். இவரின் இளங்குருத்துகள்,    பசுமையின் கண்ணீர், சிரிக்கும் இளம்பிறை, கணக்குப்பயிற்சிப்பாடல்கள்,   மொழிப் பயிற்சிப்பாடல்கள், தேன்பூக்கள், முத்தமிழ்ச்சோலை, பாடி விளையாடு பாப்பா, அறிவூட்டும் கதைப்பாடல்கள், கதைகளில் அறிவியல் புதிர், அறிவியல் விடுகதைகள், அறிவியல் வானிலே, குழந்தைகள் விரும்பும் நேரு காவியம், தீண்டாமை ஒழித்த அம்பேத்கர் காவியம், கல்வி வள்ளல் காமராசர் காவியம் என மொத்தம் 17 சிறுவர் இலக்கியங்களை இயற்றியுள்ளார். ஆசிரியர் இலக்கியங்களைப் படைக்கும் போது இருபெரும் கூறுகளைச் சவாலாகக் கொண்டார். ஒன்று சிறுவர் இலக்கியங்கள் மற்றொன்று காப்பிய இலக்கியங்கள். சிறுவர் இலக்கியத்திற்கு எண்ணற்ற விருதுகளும் பரிசுகளும் பெற்று அதில் வெற்றியும் கண்டுள்ளார் என்பது பாராட்டுக்குரியது. சிறுவர் இலக்கியம் படைப்பது எளிதில்லை. இதற்குப் பொறுப்பும் பட்டறிவும் குழந்தை உணர்வும் வேண்டும். எதையாவது எழுதி சிறுவர் இலக்கியம் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை என்று துரை. மாலிறையன் கூறியுள்ளார்.  இதன்மூலம் சிறுவர் இலக்கியங்கள் இயற்றுவதில் எவ்வளவு அக்கறையுடனும் கவனமாகவும் செயல்பட்டுள்ளார் என்பதை நம்மால் அறியமுடிகிறது.

தேசத்தலைவர்களான நேரு, அம்பேத்கர், காமராசர் முதலானவர்களைப் பற்றிச் சிறுவர்களுக்கான காப்பியங்களாக எளிய நடையில் இயற்றியுள்ளமை கவிஞரைச் சமூக அக்கறையுள்ள படைப்பாளராக அடையாளம் காட்டுகின்றது.

சிறுவர் இலக்கிய மொழிநடை

கவிஞர் துரை. மாலிறையனின் சிறுவர் இலக்கியங்கள் சிறுவர்களின் பிஞ்சு உள்ளத்திற்கு ஏற்ற எளிய பாடல்களாக உள்ளன. சிறுவர் இலக்கியங்களின் மொழிநடை மிகமுக்கியமானது.

சிறுவர் இலக்கியம் மொழிநடையிலும் பொருளிலும் நூல் அமைப்பிலும் வளர்ந்தோர் இலக்கியத்திலிருந்து வேறுபட்டது வயதைப் பொறுத்து எளிமையாக அமைய வேண்டும்.

இளங்குருத்துக்கள், தேன்பூக்கள், பசுமையின் கண்ணீர், அறிவூட்டும் கதைப்பாடல்கள் முதலான அனைத்து நூல்களிலும் மொழிக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளார்.  சிறுவர்களுக்கு ‘ழ’ உச்சரிப்புப்பயிற்சி, லகர  ளகர வேறுபாடு, ரகர றகர வேறுபாடு, னகர ணகர வேறுபாடு இவற்றைச் சரியாகப் புரிந்து கொள்வதற்குச் சற்றுக் கூடுதல் பயிற்சி தேவைப்படுகிறது என்று அறிந்த கவிஞர். துரை. மாலிறையன், மொழிப்பயிற்சிப் பாடல்கள் என்ற நூலை இயற்றியுள்ளார்.

ஒலிப்பயிற்சி

சிறுவர்களின் உச்சரிப்பில் ஏற்படும் பிழை எழுத்துப்பிழையாவதைத் தவிர்க்கும் வகையில் ழகர ஒலியைப் பயிற்சி செய்வதற்கான பாடல்கள் சிலவற்றைப் படைத்துள்ளார் ஆசிரியர்.

“ இது என்ன பழம் ?

பழம் பழம்

முந்திரிப்பழம்

முறைத்துப்பார்த்தால்

முலாம்பழம்..........” (மொழிப்பயிற்சிப் பாடல்கள், ப.4) – என்ற பாடலில் பழம் என்ற சொல் பலமுறை பயின்று வந்தும் “காலை மாலைப் பொழுது.... “ (சிரிக்கும் இளம்பிறை ப. 45) என்ற பாடலில் பொழுது தொழுது அழுது ஆகிய சொற்களில் ழகரம் பயின்று வந்தும் ஒலிப்புப்பயிற்சிக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது. இப்பாடல்களைச் சிறுவர்கள் மீண்டும் மீண்டும் பாடும் பொழுது ழகரத்தை உச்சரிக்கும் பயிற்சி கிட்டுகிறது.   

“தகர ஒலிப்பயிற்சி

தாத்தாகையில் குடை.....” (மொ.பா.ப.21)மேற்கண்ட பாடலின் குடை, நடை, கிடை, ஆடை, பிடி, அடி, கொடு, அது, உடு ஆகிய சொற்களில் டகரம் பயின்று வந்துள்ளது. சில குழந்தைகள் டகரத்தைத் தகரமாகவும் தகரத்தை மகரமாகவும் உச்சரிப்பார்கள்.

ழகர மகர ஒலிகள் மட்டுமின்றி, ளகர லகர னகர   ணகரம் முதலான ஒலிகளைச் சரியாக உச்சரிப்பதற்கு மட்டுமின்றி இருவேறு ஒலிகளால் ஏற்படும் பொருள் வேறுபாட்டை உணர்த்தவும் பல பாடல்களை இயற்றியுள்ளார்.

“கோயில் இருக்கும் இறை

கோழிகள் பொறுக்கும் இரை....” (மெ.பா.ப.15)

பலரும் ளகரம் லகரம் இரண்டையும் ஒன்று போல் உச்சரிக்கின்றனர். அதன் காரணமாக எழுத்துப் பிழைகளும் தோன்றுகின்றன.

“எலியும் மண்ணல் வளை தோண்டும்

எந்த நண்டும் வளை தோண்டும்.....”(மொ.பா.ப. 24)இப்பாடல் ளகர – லகர ஒலிகளால் ஏற்படும் பொருள் மாறுபாட்டை விளக்குவதாக அமைகின்றது. வளை – வலை களை – கலை முதலான சொற்கள் இதற்குச் சான்றாக அமைகின்றன.

சொற்களஞ்சியம் :

சிறுவர்களின் மொழி வளர்ச்சியில் சொற்களஞ்சியப்பெருக்கம் முக்கியப்பங்கு வகிக்கிறது. மொழியைச் சரளமாகப் பயன்படுத்துவதற்குச் சொற்களஞ்சியம் மிகவும் அவசியம். துரை. மாலிறையனின் சிறுவர் இலக்கியங்களில் சொற்களஞ்சிய வளர்ச்சிக்குப் பயன்படும் வகையில் பல பாடல்கள் அமைந்துள்ளன.

“காக்கைத் தான் கறுப்பு

காட்டுவதா வெறுப்பு?....” (மொ.பா.ப.30)என்ற பாடலின் வாயிலாகக் காக்கை, கொக்கு, கிளி முதலான பறவைகளின் பெயர்களையும் கறுப்பு, வெள்ளை, பச்சை முதலான நிறங்களின் பெயர்களையும் அறிமுகம் செய்கிறார்.

“மலையில் தோன்றி வருகின்றாய்!

மணலை அரித்துத் தருகின்றாய்!.....” (தேன்பூக்கள் ப.44). இயற்கையோடு தொடர்புடைய மலை, மணல் முதலான வார்த்தைகளைச் சிறுவர்களுக்கு இப்பாடல் மூலம் அறிமுகம் செய்கிறார் ஆசிரியர். இது போல ஒரு பாடலில் ஒரு சொல் பலமுறை வரும் வண்ணம் பல பாடல்களை ஆசிரியர் சிறுவர்களுக்காக இயற்றியுள்ளார்.  இதன்மூலம் அவர்கள் ஒரு குறிப்பிட்ட சொல்லை நன்றாக அறிந்து கொள்ள முடியும்.

“ஊரை வளர்க்கும் செடி

உணவைக் கொடுக்கும் செடி.....” (ப.க.ப.19)  என்ற பாடலில் செடி என்ற சொல் மீண்டும் மீண்டும் வந்துள்ளது.  மேலும் செடியின் பயன்கள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.

சில பாடல்களில் ஒரு சிறிய வாக்கியம் மீண்டும் மீண்டும் வரும்படி அமைத்துள்ளார். சான்றாக,

“சின்னஞ்சிறிய முள்ளும் குத்தி

சீழ்ப்பிடித்துக் கொல்லுதே!

சீழ்பிடித்துக் கொல்லுதே!.....” (முத்தமிழ்ச்சோலை ப. 36) என்ற பாடலில் இரண்டாம் மூன்றாம் அடிகள் திருப்புரையாக வந்துள்ளன இத்தன்மையை மடக்கு என்று இலக்கணம் கூறுவர். சிறுவர்கள் இரண்டு அல்லது மூன்று வார்த்தைகளைச் சேர்த்துச் சரியாக உச்சரிக்க இது போன்ற பாடல்கள் சிறுவர்களுக்குத் தேவைப்படுகின்றன என்ற எதிர்பார்ப்பினை நிறைவு செய்யும் வகையில் கவிஞர் பாடல்களைப் படைத்தளித்துள்ளார்.

மேற்கண்டவற்றால் துரை. மாலிறையன் சிறுவர்களுக்குத் தெளிவாக மொழியைக் கற்பிக்கும் வகையில் மொழிநடை வாயிலாகவே கற்பிக்க அவர் மேற்கொண்டுள்ள முயற்சி பாராட்டுக்குரியதாக அமைகின்றது. எனவே பாடல்களின் மொழிநடையும் தமிழ்மொழி மற்றும் கவிதைக்குரிய கூறுகளும் தனித்தனியாய் தனித்தன்மையா கவிளங்குகிறது.

மொழியைப் பிழையின்றி பேசுவதற்கும் எழுதுவதற்கும் பயன்படுவது இலக்கணம். சிறுவர்களுக்கு இலக்கணத்தை நேரடியாகக் கற்பித்தால் வெறுப்பை உண்டாக்கும். அடுத்த பதிவில் இலக்கணத்தையும் மேலும் மொழியின் பல்வேறு கூறுகளையும்கற்பிக்க கவிஞர். மாலிறையன் படைத்துள்ள பாடல்களைப் பற்றி உரையாடலாம்.

தொடரும்...........

Teacher: ஸ்ரீ. ஜெயஸ்ரீ, பயிற்சிப்பெற்ற பட்டதாரி ஆசிரியை, ஆனந்த ரங்கப்பிள்ளை அரசு சிறப்பு மேல்நிலைப்பள்ளி, பிள்ளைச்சாவடி, புதுச்சேரி.

Rate: 
0
No votes yet
Perspective Type: 
General Perspectives